தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு!

Viduthalai
4 Min Read

 குலக்கல்வித் திட்டம்தான் ஆச்சாரியாரை ஆட்சியிலிருந்து விரட்டியது! அதேபோல, ‘விஸ்வகர்மா யோஜனா’ என்கிற குலக்கல்வித் திட்டம்தான் மோடி அரசையும் ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப் போகிறது!

‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தை எதிர்த்து,போராட்டம் அறிவிக்கப்படும்!

சென்னை, செப்.20  குலக்கல்வித் திட்டம்தான் ஆச்சாரி யாரை ஆட்சியிலிருந்து விரட்டியது. அதேபோல, விஸ்வகர்மா யோஜனா என்கிற குலக்கல்வித் திட்டம் தான் மோடி அரசையும் ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப் போகிறது; விரைவில் ஒத்த கருத்துள்ளவர்களோடு கலந்தாலோசித்து தீவிரமான போராட்டத்தை அறிவிப் போம்! விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து, ஒன்றிய அரசினை எதிர்த்து மிகப்பெரிய அளவிற்குப் போராட்டம் நடைபெறும் என்பதுதான் பெரியார் பிறந்த நாள் விழா செய்தி!  என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

கடந்த 17.9.2023 அன்று மாலை சென்னை பெரியார் திடலில்  உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பேருரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

விழாப் பேருரையில் தமிழர் தலைவர் அவர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:

ஒன்றிய அரசின் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தினை பிரதமர் மோடி 

தொடங்கி வைத்திருக்கிறார்!

மீண்டும் குலத் தொழிலைக் கொண்டுவரவேண்டும் என்பதற்கான முயற்சிதான் ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டம்.

இதனைக் கண்டித்து கடந்த 12 ஆம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே அனைத்துக் கட்சியி னரையும் ஒருங்கிணைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

இன்று (17.9.2023) அந்தத் திட்டத்தினை பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்திருக்கிறார்.

மீண்டும் குலத்தொழில் – விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரால், ஜாதித் தொழிலை, குலத்தொழிலை கொண்டுவருகிறார்கள். 18 வயதிற்குப் பிறகு இளைஞர் களே கல்லூரிக்குப் போகாதீர்கள், பல்கலைக் கழகத் திற்குப் போகாதீர்கள் – முழுக்க முழுக்க நீங்கள் உங்களுடைய ஜாதித் தொழிலையே செய்யுங்கள் என்கிறார்கள்!

தொழிலுக்காக இந்தத் திட்டத்தினை ஒன்றிய அரசு பா.ஜ.க. அரசு கொண்டுவரவில்லை. பாரம்பரியமிக்க, அவரவர் பெற்றோர் செய்யும் தொழிலை, 18 வயதானவுடன் யார் செய்கிறார்களோ, அவர்களுக்குக் கடன் உதவி தருகிறோம் என்று சொல்கிறார்கள்.

இராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தைவிட, மோசமான திட்டம்தான் விஸ்வகர்மா யோஜனா திட்டம்.

‘திராவிட மாடல்’ ஆட்சியில் கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்!

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் ‘திராவிட மாடல்’ ஆட்சியில், கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.

ஆனால், ஒன்றிய அரசு என்ன சொல்லுகிறது? ‘‘18 வயதானவுடன் நீ கல்லூரிக்குப் போகவேண்டாம்; உன்னுடைய குலத்தொழிலை செய்; அதற்காக உனக்குக் கடன் வழங்குகிறோம்” என்று சொல்கிறார்கள்.

முதல்கட்டப் போராட்டம்!

இதனைக் கண்டித்துத்தான் தமிழ்நாட்டில் அத்துணைக் கட்சித் தலைவர்களையும் ஒன்று சேர்த்தோம்; முற்போக்குச் சிந்தனையுள்ள அனைவரும் வந்து முதல்கட்டமாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு எச்சரிக்கை விடுத்தோம் ஒன்றிய அரசுக்கு.

அடுத்தகட்டம், மிகப்பெரிய அளவில் ஒரு பெரிய தொடர் போராட்டத்தைத் திராவிடர் கழகம் அறிவிக்கும். ஒத்தக் கருத்துள்ளவர்களோடு கலந்து பேசி அறிவிப்போம்.

பெரியாருடைய பிறந்த நாளான இன்று 

மீண்டும் நாம் உறுதியெடுப்போம்!

ஆகவேதான், பெரியாருடைய பிறந்த நாளான இன்று மீண்டும் நாம் உறுதியெடுத்துக் கொள்வது – மீண்டும் குலக்கல்வித் திட்டம் – மீண்டும் ஜாதித் தொழில் செய்யவேண்டும் என்று இருப்பதை – கடைசிவரையில் வேரறுத்து விரட்டியடித்து அனுப்புவதற்கு உறுதியேற்போம்!

இராஜகோபாலாச்சாரியாரைவிட, புத்திசாலியல்ல மோடி.

இராஜகோபாலாச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் 1953 ஆம் ஆண்டு ஈரோட்டில் ஒரு மாநாட்டினையே நடத்தினார்.

குலக்கல்வித் திட்டம்தான் மோடி அரசையும் ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப் போகிறது!

குலக்கல்வித் திட்டம்தான் ஆச்சாரியாரை ஆட்சியிலிருந்து விரட்டியது. அதேபோல, இந்த விஸ்வகர்மா யோஜனா என்கிற குலக்கல்வித் திட்டம்தான் மோடி அரசையும் ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப் போகிறது. அதற்குப் பல காரணங்கள் உண்டு.

எனவேதான், கொள்ளிக்கட்டையை நீங்கள் கையில் எடுத்திருக்கிறீர்கள்; அந்தக் கொள்ளிக் கட்டையை எடுத்து மக்களே உங்கள் தலையை சொறிந்து கொள்ளாதீர்கள். அந்த ஆபத்தைத் தடுப்பதற்காக உதவக் கூடிய கைகள்தான் கருப்புச் சட்டைக்காரர்களின் கைகள்.

அதற்கான ஆக்கத்தை உருவாக்குவதுதான் அனைத்து முற்போக்குவாதிகளின் கடமை. அதற்காகத்தான் இங்கே நடைபெற்ற பட்டிமன்றம்; அதற்குத்தான் பெரியார் பிறந்த நாள் விழா – இது ஏதோ வெளிச்சத்திற்காக அல்ல; மகிழ்ச்சிக்காக அல்ல!

வருங்கால சமுதாயத்தை காப்பாற்றுவதற்காக – வருங்காலச சந்ததியை வாழ வைப்பதற்காக பெரியார் வாழ்க!

பெரியார் தத்துவம் வருக!

பெரியார் என்ற ஆயுதம் என்பது அது முனைமழுங்காத ஆயுதம்!

ஒத்த கருத்துள்ளவர்களோடு கலந்தாலோசித்து தீவிரமான போராட்டத்தை அறிவிப்போம்!

அந்த ஆயுதத்தை எடுத்து, நவீன குலத்தொழில் திட்டத்தை ஓட ஓட விரட்டுவோம். மீண்டும் குலத்தொழிலுக்கு இடமில்லை என்பதற்கு, விரைவில் ஒத்த கருத்துள்ளவர்களோடு கலந்தாலோசித்து தீவிரமான போராட்டத்தை அறிவிப்போம்!

பெரியார் பிறந்த நாள் விழா செய்தி!

குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து, ஒன்றிய அரசினை எதிர்த்து மிகப்பெரிய அளவிற்குப் போராட்டம் நடைபெறும் என்பதுதான் பெரியார் பிறந்த நாள் விழா செய்தி!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *