‘ஹிந்து மதம்’ என்ற சொல்லே வேதத்தில் கிடையாது!
கீதை – இராமாயணம் – புராணங்களை நாங்கள் படித்த அளவிற்கு மற்றவர்கள் படித்தது கிடையாது!
சென்னை, செப்.20 ‘ஹிந்து மதம்‘ என்ற சொல்லே வேதத்தில் கிடையாது! கீதை – இராமாயணம் – புராணங்களை நாங்கள் படித்த அளவிற்கு மற்றவர்கள் படித்தது கிடையாது! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஸநாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப் பிடிக்கும் ரகசியம் என்ன? சிறப்புக் கூட்டம்!
கடந்த 12.9.2023 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘ஸநாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப் பிடிக்கும் ரகசியம் என்ன?’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
ஹிந்து மதம் என்ற சொல்லே
வேதத்தில் கிடையாது
ஹிந்து மதம் என்ற சொல்லே வேதத்தில் கிடையாது. சங்கராச்சாரியார் சரியாகச் சொன்னார், ‘‘ஹிந்து மதம் என்பது அந்நியர்கள் நமக்கு வைத்த பெயர்” என்றார்.
அதேபோன்று ஸநாதனம் என்பது ஹிந்து மதத்தினுடைய ஒரு கோட்பாடு; அது ஒரு அவியல். உதாரணம் வாஞ்சி அய்யர் – ஹிந்து தீவிரவாதமும்கூட!
ஆதாரத்தை எதிலிருந்து தெரிந்துகொள்ளலாம் என்றால்,
இப்போது 2023 ஆம் ஆண்டு – 1907 ஆம் ஆண்டு, ஸநாதனத்தைப்பற்றி காசி ஹிந்துப் பல்கலைக் கழகம் என்பது பின்னாளில், முதலில் கல்லூரியாக இருந்த பொழுது, மாளவியா அவர்களால் தொகுத்து வெளிவந்த நூல். ஹிந்துத்துவாவாதிகளால், ஹிந்துத்துவா என்பது கூட தவறு; அது பின்னாளில் வந்த வார்த்தைதான். அந்த மதத்தைப் பரப்புவதற்காகத்தான் ஸநாதனம் என்பதை பரப்புவதற்காக வந்தார்கள். அந்த நூலில் என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டால், ஸநாதனம் என்ற வார்த்தைக்கு என்ன வயது என்றால், நூற்று சொச்சம்.
நீதிமன்றத்தில் ஆதாரத்தோடு சொல்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பு!
இந்தத் தகவலே பல பேருக்குத் தெரியாது. ஆதாரத் தோடு நான் சொல்கிறேன். யாருக்காவது சந்தேகம் இருந்தால் கேட்கட்டும்; வழக்குத் தொடுத்தாலும் பரவா யில்லை. நீதிமன்றத்தில் ஆதாரத்தோடு சொல்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கும்.
ஆங்கில புத்தகமும் இருக்கிறது; தமிழ் மொழியிலும் மொழி பெயர்த்திருக்கிறார்கள். அதிகாரப்பூர்வமான புத்தகம் இது.
இந்தப் புத்தகத்தை நாம் மொழி பெயர்க்கவில்லை. எப்படி நாம் மனுதர்மத்தைப்பற்றி சொல்லுகிறோமோ, அதுபோன்றதுதான் இந்தப் புத்தகம். மதுரையைச் சேர்ந்த ஒரு வழக்குரைஞர்தான் இந்தப் புத்தகத்தை மொழி பெயர்த்திருக்கிறார்.
ப.நாராயண அய்யர்
‘‘ஹைகோர்டு வக்கீலும், மதுரை பிரஹ்மஞானசபை பிரஸிடெண்டுமாகிய ப.நாராயண அய்யரால் மொழி பெயர்க்கப்பட்டது.
1905 ஆம் ஆண்டு முதலில் அச்சாகி இருக்கிறது. அதற்குப் பிறகு 1907 இல் இரண்டாம் பதிப்பு வந்திருக் கிறது. அது மூன்று தொகுதிகளாக இருக்கின்றன.
முதல் தொகுதியில் உள்ள முகவுரையில், என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
இப்பொழுது ஸநாதனத்தைப்பற்றி பேசுகிறவர்களுக் குத் தெரியாது. இன்னுங்கேட்டால், பெரியார் அவர்கள் இராமயணத்தைப் படித்ததுபோன்று, இராமன் பக்தர் களே படித்திருக்கமாட்டார்கள். ஏனென்றால், அவ்வளவு ஆராய்ச்சிகளை செய்திருக்கிறார் தந்தை பெரியார்.
புராணங்களை நாங்கள் படித்த அளவிற்கு, மற்றவர்கள் படித்தது இல்லை!
இதுவரையில், புராணங்களை நாங்கள் படித்த அள விற்கு, மற்றவர்கள் படித்தது இல்லை. அதேபோன்றுதான் மனுதர்மம், வேதங்கள் எல்லாம்.
ஏனென்றால் ஆய்வுக் கண்ணோட்டம் எங்களுக்கு. அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்கள் நாங்கள்.
நாங்கள் ஒன்றும், தலையை வெட்டு, காலை வெட்டு, கண்களைப் பிடுங்கு என்றெல்லாம் சொல்லமாட்டோம்.
‘‘திருந்து அல்லது திருத்து” என்பதுதான்.
நாங்கள் தவறாகச் சொல்லியிருந்தால், எங்களைத் திருத்துங்கள்; அல்லது நீங்கள் இதுவரை தவறாக நினைத்திருந்தால், திருந்துங்கள்.
இரண்டே வார்த்தையில், பெரியார் முடித்தார் – ‘‘திருந்து அல்லது திருத்து” என்று.
ஸநாதனத்தில் அப்படி இருக்கிறதா?
நம்பு! நம்பவில்லையென்றால், உனக்கு மிகப்பெரிய அளவிற்கு ஆபத்து என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தானே வந்திருக்கிறார்கள்.
முகவுரை
அந்தப் புத்தகத்தில் உள்ள முகவுரையை அப்படியே படிக்கிறேன் கேளுங்கள்.
‘‘காசிப் பிரதான ஹிந்து வித்தியாசாலை ஸ்தா பனத்தின் கருத்தாவது, சிறுவர்க்கு இக்காலத்தில் அவசியமான மேற்றிசையாரின் படிப்போடு, ஹிந்துக்களின் மதம், நீதி இவற்றையும் சேர்த்துக் கற்பித்தலேயாதலால், இவ்வித மத நீதி விஷயங்கள், புற மதக் கொள்கைகளை நீக்கிக் கேவலம் ஹிந்து மதத்தை மட்டும் சேர்ந்தனவாகியும், இவ்ஹிந்துச் சிறுவர்களுள் யாவரும் கற்றுப் பயனடையுமாறு ஹிந்து மதத்தின் கணக்கற்ற ஷண்மத வித்தி யாசங்களைச் சம்பந்தியாமல், விசாலமும், சமரஸ மும் பொருந்தினவாகியு மிருத்தல் வேண்டு மென்பதுடன், ஹிந்து மதத்திற்கு உட்பட்ட எச்சார்பிலுமுள்ள விஷயங்களையும் பொதுவாய் விளக்கிக் கொண்டும், ஏனையவாகிய புற மதங்களைச் சேர்ந்த வியவஹாரங்களைச் சிறிதும் சம்பந்தியாமலும், நிற்றலும் வேண்டுமென்பதாம்.
பிரசித்தமான உட்சமயங்களிலுள்ளார் ஒரு வருக்கொருவர் வாதம் புரிந்துவரும் பல வேற் றுமைகளையுடைய கொள்கைகள் அனைத்தையும் விலக்கி நிற்றல் வேண்டும்.
இந்நாட்டில், தற்காலம் நடைபெற்றுவரும் ராஜரீக சம்பந்தமானதும், வருணாசிரம தர்மங் களைப்பற்றியதுமான, வியவகாரங்களில் சம்பத்தித் தலு முதலாவது, பின்னை. ஹிந்து மத, நீதி விஷயங்களில் சிறுவர் இவ்விளமைப் பருவத்தில் ஆழ்ந்து அகன்ற அஸ்திவாரமெனக் கூறத்தகும் ஆஸ்திகாபிமானத்தைப் பெறும்படி செய்வித்தலே இவ்வித மத விஷயப் பயிற்சியின் பயனாகும்.
இவ்வஸ்திவாரத்தின்மீது இச்சிறுவர் பருவம் வந்த பின் தமது மானசிக காமிக சுவபாவங் களுக்கேற்ப மேம்பட்ட பதவிகளுக்குரிய தனி லக்ஷணங்கள் கற்கவும், அவ்வவ்வியவஹாரங் களை யனுசரிக்கவும் தகுதியடைவரன்றோ! இன்னும் இச்சிறுவர்க்காம் பயிற்சி, இவரிடம் ஒழுங்காய் நடத்தையை ஸ்தாபித்து! இவரை பக்தி, விநயம், பலம், உறுதி, ருஜுதை, சத்தியம், அமைதி, சாந்தி இவை முதலிய சகல நற்குணங்களை யுமடைந்து விளங்கும்படி செய்விக்கவேண்டும். இவ்வித நன்னடத்தை நற்குணம் வாய்ந்த சிறுவர் தக்க காலத்தில் நற்குண நற்சீலமுடைய குடும் பஸ்தராகவும், நகர வாஸியுமாவதற்குத் தடை யேது? நமதுவாழ்வுயாது, அதன் பயன் யாது, நாம் பிறர்மாட்டுச் செயத்தகும் கடமைகள் யாவை, இவை முதலிய மதத்தின் மூலாதார விஷயங்களைக் கற்பித்தலே மேற்கூறிய நற்குண நற்சீலத்தை வரு வித்தற்கு போதுமானதாகும். ஹிந்துக்களனை வரையும் (ஒன்று சேர்ப்பிக்கும்) ஏக மதஸ்தராகும் சகல பொதுவான கொள்கைகள் யாவும், மிச்சிறு வர்க்குத் தெளிவாயும், சுலபமாயும் போதிக்கப்படல் வேண்டும்.
அன்றியும் முடிவில், அம்மதத்தின் உட்பிரி வினரது கொள்கை, ஆசார முதலியவற்றில் போல் சகல அன்னிய மஸ்தரின் வியவஹாரங்களிலும் மதிப்பு, கவுரவம் இவற்றோடும் நடந்துகொள்ளவும், உலகின்பல மதங்களும் பரப்பொருளாகிய கடவுளையடைவதற்கு ஏற்பட்டிருக்கும் பல வழி களே எனப் பாவிக்கவும் வேண்டிய சமரஸ்புத்தி இச்சிறுவர்க்குண்டாகும் வண்ணம் இப்பயிற்சி நடைபெற.
(1) இம்மத நீதிப் பயிற்சியில் சிறுவர்க்குக் கூறப் படும் விஷயங்கள் யாவும் ஹிந்துக்களுள் சகலரும் ஒப்புக்கொள்ளக் கூடியனவாயிருத்தல் வேண்டு மெனவும்.
(2) புறமதங்களி னின்றும் ஹிந்து மதத்தை வேறு படுத்திக் காட்டும் தனி விஷயங்களனைத்தையும் சிறுவர்க் குபதேசித்தல் வேண்டுமெனவும்,
(3) ஹிந்து மதத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட வகுப்பு அல்லது உட்பிரிவைச் சேர்ந்த தனி விஷ யங்களை முற்றிலும் இப்பயிற்சியில் ஒத்திருக்க வேண்டுமெனவும்,
ஆகிய மேற்கூறிய லக்ஷணங்களுக்கிணங்க வியற்றப்பட்டிருக்கும் இம்முதற்புத்த கம் இவ் விந்திய நாட்டின் கண்ணுள்ள ‘ஹைஸ்கூல்’ பாடசாலைகளில் பிற்பாதி, மத்திம வகுப்புகளில் கல்வி கற்கும் சிறுவர்க்குபயோகமாம்படியமைக் கப்பட்டிருக்கிறது. இம்மகா மதத்தின் பொதுவான தத்துவங்களைத் தெளிவுடனிச் சிறுவர்க்கு விளக்குவிக்க இது போதுமானது. இதில் கூறப்படும் விஷயங்கள் மேம்பட்ட காலேஜ் முதலிய கலா சாலைகளில் பிற்காலத்தில் ஏற்படும் கல்வியால் மிக விசேஷத்துடன் விருத்தி பண்ணிக் கொள்ள ஏதுவுண்டேயன்றி, ஏதேனும் முக்கியமான பாகத் தில் பிசகானவற்றைத் திருத்தி நூதனமாய் வேறு கொள்கைகளை ஸ்தாபித்துக் கொள்ளவேண்டிய அவசியமிராது.”
ஆகவே, இது ஒரு நூற்றி பத்தாண்டுகளுக்கு முன் னால் உருவாக்கப்பட்டதுதான். அதற்கு முன்னால் இல்லை.
இதற்கு இன்னொரு ஆதாரத்தையும் சொல்லவேண்டு மானால், இதற்கு முன்னோடியாக உருவாக்கப்பட்ட ஹிந்துத்துவா என்ற பெயரைக் கொடுத்து, ஹிந்து மதம் வேறு என்று சொன்னவர் வி.டி.சவர்க்கார்.
அவருடைய புத்தகம், இது பழைய பதிப்பு. 1800 ஆம் ஆண்டு சொச்சம். ஆறாவது பதிப்பு.
பாரதிய சதன் என்று சொல்லக்கூடிய நூலில் தெளிவாக ஒன்றைச் சொல்லியிருக்கிறார்.
ஆகவேதான், ஸநாதனம் என்ற பெயர் புராதன காலத்திலிருந்து இருக்கிறது என்று சொல்கிறார்களே, அதுவே பித்தலாட்டம்தான்.
இது உருவானது 150 ஆண்டுகளுக்குள்தான். அதற்கு முன்பு கிடையாது.
வேதம் – வைதீகம்;
புரானிக் – புரோகிதம்!
வைதீகம் என்ற வார்த்தை எங்கே இருந்து வந்தது தெரியுமா?
வேதம் – வைதீகம்
புரோகிதம் என்ற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா?
புரானிக் – புரோகிதம்.
வேதம் என்பதை உயர்ந்த ஜாதிக்காரர்கள் மட்டும்தான் படிக்கவேண்டும். கீழ்ஜாதிக்காரனுக் குத்தான் புராணம்.
மேல்ஜாதிக்காரர்களைச் சேர்ந்தவர்கள் சடங்கு செய்பவர்களுக்குப் பெயர் வைதீகர்.
கீழ்ஜாதிக்காரர்களைச் சேர்ந்தவர்கள் சடங்கு செய்பவர்களுக்கு புரோகிதர் என்று பெயர்.
‘‘Essential of Hindutva’’
அப்படிப்பட்ட சூழ்நிலையில், சவார்க்கர் புத்தகம்-
‘‘Essential of Hindutva’’ வில் சவார்க்கர் எழுதுகிறார்.
Therefore the Vaidik or the Sanatan Dharma itself is merely a sect of Hinduism
ஒரு பிரிவு – நாங்கள் உண்டாக்கிய புது பிரிவு – நிறைய நிறைய பிரிவை உண்டாக்குவோம். ஆறு மதங்களையும் சேர்த்து, நாங்கள் கூட்டாஞ்சோறு உண் டாக்கி, அதிலிருந்து சிலவற்றை எடுத்து, மாணவர்களுக்கு எதைச் சொல்லவேண்டும்; வருணாசிரம தர்மத்தை எப்படி உயர்த்தவேண்டும் என்று வருகின்ற நேரத்தில்,
Therefore the Vaidik or the Sanatan Dharma itself is merely a sect of Hinduism
என்று சொல்லிவிட்டார். அப்படியென்றால், தேர்தல் பிரச்சாரத்திற்கே அடிபட்டுப் போய்விட்டதே!
ஆகா, அடிப்படையில் எங்களுடைய ஹிந்து மதத் தையே அழிக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்களே என்று கூப்பாடு போடுகிறார்கள். ஸநாதனம் ஒழிப்பு என்பது ஹிந்து மதத்தை அழிக்கவேண்டும் என்பதற்கு இல்லை.
‘‘மொட்டைப் பாப்பாத்தி” அம்மாவை இன்றைக்கு எங்கேயாவது
பார்க்க முடியுமா?
இங்கே உரையாற்றிய நம்முடைய அருள் மொழி சொன்னார்களே, மொட்டைப் பாப்பாத்தி அம்மாவை இன்றைக்கு எங்கேயாவது பார்க்க முடியுமா?
நாங்கள் சவால் விட்டுச் சொல்லியிருக்கின்றோம் பல கூட்டங்களிலும் – ஒரு லட்சம் ரூபாய் தருகி றோம் என்று.
பழைய காலத்தில் உள்ளதுபோன்று கணவரை இழந்தவுடன், மொட்டையடித்து, வெள்ளை சேலை உடுத்திக்கொண்டு இருக்கின்ற பார்ப்பன அம்மையாரை இன்றைய காலத்தில் கண்டு பிடித்துச் சொல்ல முடியுமா? அப்படி கண்டுபிடித்து சொல் பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறோம் என்று ஏற்கெனவே சவால் விட்டு சொல்லியிருக் கின்றோம்.
நண்பர் கமலஹாசன் எடுத்த ‘தசாவதாரம்’ திரைப்படத்தில்தான் அதுபோன்று பார்க்க முடியுமே தவிர, வேறு எங்கேயும் பார்க்க முடியாது. அவ தாரத்தில் ஒரு அவதாரமாக, அதுவும் இல்லாத அவதாரத்தைக் காட்டியிருக்கிறார் அவர்.
ஆகவே, அன்றைக்கு இருந்த மொட்டைப் பாப்பாத்தி போன்று இன்றைக்கு இல்லை. உன் னுடைய ஸநாதனம் நிலைத்திருந்தால், மற்றவர் களை விட்டுவிடுங்கள்; உயர்ஜாதி என்று சொல்லக் கூடிய பெண்கள் – ஏன் அந்தப் பெண்களுக்கும்கூட சடங்கு வைத்தானே!
எந்த ஜாதிப் பெண்களாக இருந்தாலும்
‘‘நமோ சூத்திரர்கள்”தான்
ஆரியர்கள் வரும்பொழுது பெண்களை அழைத்து வரவில்லை. ஆகவே, பெண்களுக்கு எந்த உரிமையும் கிடையாது, மனுதர்மப்படி. காரணம், ஸநாதனப்படி அவர்கள் ‘‘நமோ சூத்திரர்கள்” – எந்த ஜாதிப் பெண்களாக இருந்தாலும் – அவர்கள் அக்கிரகாரப் பெண்களாக இருந்தாலும், அவர்களையும் கொடுமைப்படுத்தி, கேவலப்படுத்தி வைத்திருந்தார்கள்.
வடபுலத்தில் சதிமாதா கோவில்கள் இருக்கின்றனவே – இன்றைக்கு சதிமாதா கோவில்களை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
சட்டம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்குமா?
கணவன் இறந்தவுடன், அந்தப் பெண்ணை நெருப்பில் தூக்கிப் போடுகிறோம் என்றால், சட்டம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்குமா?
இராமன், சீதையைப் பார்த்து, நீ நெருப்பில் குதித்து வெளியே வா என்று சொன்னால், அது கதைக்கு வேண்டுமானால் நன்றாக இருக்குமே தவிர, ரசிப்பதற்கு வேண்டுமானாலும் நன்றாக இருக்குமே தவிர, நடை முறையில் சீதை நெருப்பில் இறங்குவதை காவல்துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்குமா?
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குமுன் போராட் டம் நடத்துகிறோம் என்று சொல்லி, மண்ணெண்ணெய் பாட்டிலோடு செல்கிறார்கள்; எப்படியும் காவல் துறையினர் தடுத்துவிடுவார்கள் என்று அவர்களுக்கும் தெரியும். அவர்களைக் கொச்சைப்படுத்துவதற்காக சொல்லவில்லை – உதாரணத்திற்காகச் சொல்கிறேன்.
ஆகவே நண்பர்களே, இன்றைக்கு என்ன சூழ்நிலை என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?
(தொடரும்)