ஓர் ஆட்சிக்கே மதவெறி பிடித்தால், அது நாட்டு மக்களையே துவம்சம் செய்யும்!
மதச்சார்பற்ற இந்தியா கூட்டணிக்கே வாக்களிப்பீர்!
கோத்தகிரியில் தமிழர் தலைவர் ஆசிரியர் தேர்தல் பரப்புரை
கோத்தகிரி, ஏப்.8 மதம் கொண்ட யானை, பாகனை தூக்கியடிக்கும். மதவெறி பிடித்த ஆட்சி என்ன செய்யும்? ஓர் ஆட்சிக்கே மதவெறி பிடித்தால், அது நாட்டு மக்களையே துவம்சம் செய்யும். மதச்சார்பற்ற ஆட்சிதான், ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றியத்தில் – இந்தியா கூட்டணி அமைக்கப் போகின்ற ஆட்சி என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி
தி.மு.க. வேட்பாளர் ஆ.இராசா
நேற்று (7.4.2024) மாலை 7 மணியளவில் நீலகிரி நாடா ளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஆ.இராசா அவர்களை ஆதரித்து கோத்தகிரியில் நடைபெற்ற தேர்தல் பரப் புரையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
இந்தியா மட்டுமல்ல, வெளிநாடுகளாலும் போற்றப்படக் கூடிய ‘திராவிட மாடல்’ ஆட்சி!
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியினுடைய வேட் பாளர் – தி.மு.க. வேட்பாளர் நமது ஆ.இராசா அவர்கள். நம்முடைய ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய தலைவராக இருந்து, இந்தியா முழுவதும் மட்டுமல்ல, வெளிநாடுகளாலும் போற்றப்படக் கூடிய அளவிற்கு எடுத்துக்காட்டான ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தலை வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் அமைந்த, ஒரு சிறந்த மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான ஒரு கூட்டணிதான், இந்தியா கூட்டணி. ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு ஒரு புதிய இந்தியாவை நீங்கள் காணப் போகிறீர்கள் என்பது உறுதி என்று சொல்லுகின்ற அளவிற்கு, இப்போது ஒன்றியத்தில் இருக்கின்ற கொடுமை மிகுந்த ஓர் ஆட்சிக்கு விடை கொடுக்கின்ற தேர்தல்தான் இந்தத் தேர்தல்.
மதவெறி இந்தியாவாக மாற்ற முயற்சிக்கிறார்கள் – ஜாதி வெறி இந்தியாவாக ஆக்கி வைத்திருக்கிறார்கள்!
ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நடைபெறக்கூடிய மிக முக்கியமான பொதுத் தேர்தல்! நம்முடைய எதிர்கால இந்தியாவை, மதவெறி இந்தியாவாக மாற்ற முயற்சிக்கிறார்கள் – ஜாதி வெறி இந்தியாவாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு அந்த நிலை நிச்சயமாக மாறும்.நம்மைப் பொறுத்தவரையில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இது ஒரு திருப்பு முனையைத் தரப் போகின்ற தேர்தல். இதுவரையில் நடைபெற்ற 17 தேர்தல்களைவிட, ஓர் அற்பதமான, சிறப்பான தேர்தலு மாகும்.
நம்முடைய வாழ்க்கையை மட்டுமல்ல, நம்முடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையையும், எதிர்கால சந்ததிகளுடைய வாழ்க்கையையும் நிர்ணயிக்கக் கூடிய ஒரு தேர்தலாகும்.
திராவிடர் இயக்கப் பாசறையின் பல்வேறு அறிவாயுதங்களில் ஓர் ஆயுதம்!
எந்தப் பதவிப் பொறுப்பு என்றாலும் சரி, தனது கடமையை சரி வர செய்து முடித்து, அந்தப் பதவியைப் பறிப்பதற்காக எத்தனை சூழ்ச்சி நிறைந்த அபவாதங் களை, பொய் வழக்குகளைப் போட்டாலும், அந்த நெருப்பாற்றில் நீந்தி நாங்கள் வெளியே வருவோம் என்று சொல்லக்கூடிய தமிழ்நாட்டின் மிக முக்கியமான வேட்பாளராக, திராவிடர் இயக்கத்தினுடைய பாசறை யின் பல்வேறு அறிவாயுதங்களில் ஓர் ஆயுதமாக, முன்னணி ஆயுதமாக இருக்கக்கூடிய நம்முடைய அருமைச் சகோதரர், வெற்றி வேட்பாளர் தோழர் ஆ.இராசா அவர்களே,
‘திராவிட மாடல்’ ஆட்சி செய்த
சாதனைகளைப் பட்டியலிட்டார்!
இங்கே நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர் கள், இந்த மண்ணுக்கு உரியவர்கள் – அப்படிப்பட்டவர் அருமையாக இங்கே சொன்னார், ‘‘நாங்கள், உங்களிடம் வாக்குப் போடுங்கள் என்ற வெறுமனே கேட்கவில்லை. இன்னின்ன காரியங்களை ‘திராவிட மாடல்’ ஆட்சி செய்திருக்கிறது” என்று ஒரு பெரிய பட்டியலையே போட்டார்.
இன்னுங்கேட்டால், நாங்கள் எல்லாம் இங்கே வந்து சொல்லவேண்டிய அவசியமே இல்லை. திராவிட மாடல் ஆட்சி செய்த சாதனைப் பட்டியலே போதும். ‘‘சொன் னதை செய்வோம் – செய்வதை சொல்வோம்” என்பது இந்த ஆட்சி. இன்னும் ஒருபடி மேலேபோய், ‘‘சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்” என்பதுதான் இந்த ஆட்சி! மக்களுக்கு என்ன நன்மை தேவை என்பதை உணர்த்துவதற்காக இந்த அற்புதமான தேர்தல் பிரச்சாரம்.
செயல்வீரர்களுக்கெல்லாம் வழிகாட்டக் கூடியவர் மாவட்ட தி.மு.க. செயலாளர்!
இதற்கெல்லாம் அடித்தளமாக இருக்கக்கூடியவர் நம்முடைய ஒப்பற்ற நீலகிரி மாவட்டச் செயலாளர். செயல் வீரர்களுக்கெல்லாம் வழிகாட்டக் கூடியவர் அவர்.
இந்தக் கோத்தரியில் நடைபெறக்கூடிய தேர்தல் பரப் புரையில் கலந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
தேர்தல் பரப்புரைக்காக நான்கு சிறிய புத்தகங்களை வெளியிட்டிருக்கின்றோம்!
இந்தத் தேர்தலைப்பற்றி சொன்னேன். சுருக்கமான நேரத்தில் எல்லா செய்திகளையும் சொல்ல முடியாது. அவ் வளவு கொடுமைகள் இன்றைய ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் இருக்கின்றன என்பதற்காகத்தான் நான்கு சிறிய புத்தகங்களை நாங்கள் வெளியிட்டு இருக்கின்றோம்.
அதனைப் படித்து, மக்கள் மத்தியில் பரப்பவேண்டும். இந்த புத்தகத்தில் உள்ள தகவல்கள் எல்லாம் ஆதாரப் பூர்வமானதாகும்.
இரண்டு தத்துவங்களுக்கிடையே நடைபெறக்கூடிய தேர்தல்!
இந்தத் தேர்தல் ஏன் என்று சொன்னால், இது ஏதோ இரண்டு அரசியல் அணிகளுக்கிடையே நடைபெறக் கூடிய தேர்தல் அல்ல. இரண்டு தத்துவங்களுக்கிடையே நடைபெறக்கூடிய தேர்தலாகும். நம்முடைய முதலமைச் சர் அவர்கள் சொன்னதைப்போல, இது ஓர் அறப்போர், லட்சியப் போர், கருத்துப் போர் ஆகும்.
தேர்தல்களே வராமல் செய்வதுதான் எதேச்சதிகாரம். ‘‘எந்தத் தேர்தலும் நடைபெறக்கூடாது. நானே ராஜா, நானே அதிபர்” என்று சொல்லக்கூடிய ஒரு நிலையைக் கொண்டு வரவேண்டும் என்றுதான் ஒன்றியத்தில் மோடி அவர்களுடைய தலைமையில் நடைபெறக்கூடிய ஆட்சி கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு முறையும் முயற்சி செய்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று சொல்கிறார்கள்.
மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், நாட்டையே சிறைச்சாலையாக மாற்றிவிடுவார்கள்!
காஷ்மீர்முதல் கன்னியாகுமரி வரையில் இருக்கின்ற எல்லா மாநிலங்களும் சேர்ந்ததுதான் இந்தியா. மாநிலங் களே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களுடைய ஆசை. மீண்டும் மூன்றாவது முறை அவர்கள் ஒன்றி யத்தில் ஆட்சிக்கு வந்தால், மாநிலங்கள் இருக்காது; எது திறந்திருக்கும் என்றால், சிறைச்சாலைதான் திறந்திருக் கும். ஆனால், அந்த சிறைச்சாலை தனியாக இருக்காது – நாட்டையே சிறைச்சாலையாக ஆக்கவேண்டும் என்பதற்காகத்தான், மோடி அவர்கள், காவி ஆட்சியை நிலைநாட்டவேண்டும் என்று நினைக்கின்றார்.
அதைக் காப்பாற்றக்கூடிய ஜனநாயகம், நம்முடைய குடியரசு. புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்துத் தந்த இந் திய அரசமைப்புச் சட்டம் என்பது. பஞ்சாயத்துத் தலை வரிலிருந்து குடியரசுத் தலைவர் வரையில், அதன்மீது தான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
அந்த உறுதி மொழியின் தொடக்கத்தில், ‘‘மக்களாகிய நாம்” என்றுதான் தொடங்கும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்
5 அம்சங்கள்!
நமக்கு, நாமே வழங்கிக் கொள்கிறோம். உலகத்தில் வேறு எங்கேயும், எந்த நாட்டின் சட்டத்திலும் இப்படிப் பட்ட வார்த்தை கிடையாது. ‘‘நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்” என்ற அந்த உரிமைப் படைத்த அரசமைப்புச் சட்டத்தில், ‘‘இறையாண்மைமிக்க, சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு” என்கிற அய்ந்து அம்சங்கள் உள்ளன.
மேற்சொன்ன அய்ந்து அம்சங்களையும் கடந்த 10 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சால் நடத்தப்படுகின்ற ஒன்றியத்தில் உள்ள பா.ஜ.க. ஆட்சி சிதைத்து வரும் கொடுமை நடந்து வருகின்றது. அதன் தலைவர் மோடி, ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதைச் செய்வோம், இதைச் செய்வோம்” என்கிற வாக்குறுதியைக் கொடுத் தார்.
மாற்றம் வேண்டும் என்பவர்களுக்கு
மிஞ்சியது ஏமாற்றமே!
இளைஞர்களும், மற்றவர்களும் என்ன நினைத் தார்கள் என்றால், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி யினர்தான் இவ்வளவு நாள் ஆட்சியில் இருந்தார்களே – இதற்குப் பிறகு ஒரு மாற்றம் வரட்டுமே என்று நினைத்தார்கள்.
ஜனநாயகம் என்றாலே மாற்றம்தான், அதிலொன்றும் சந்தேகமேயில்லை. அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வருவதே மாற்றத்திற்காகத்தான்.
மாற்றம் வந்தால் நல்லது; உண்மையான வளர்ச்சிக் குரிய மாற்றம் வந்தால் நல்லதுதான். ஆனால், உண்மை யான வளர்ச்சிக்குரிய மாற்றம் வரவில்லை. அதற்குப் பதில் என்ன வந்தது? கடந்த 10 ஆண்டுகளாக ஏமாற்றம்தான் வந்தது.
கலைஞருடைய கண்டுபிடிப்பு – பெரியாருடைய பாசறையில் வளர்ந்தவர் வேட்பாளர் ஆ.இராசா
நூறாண்டு கால திராவிட இயக்க ஆட்சியின் தன்மை யால் இளைஞர்கள் நன்றாகப் படித்திருக்கிறார்கள். இங்கே சொன்னார் பாருங்கள் நம்முடைய வேட்பாளர் ஆ.இராசா அவர்கள், அவரைப் போன்ற ஒரு வேட்பாளர் வேறு எந்தத் தொகுதிக்கும் கிடைக்கவில்லை. கலைஞருடைய கண்டுபிடிப்பு அவர். பெரியாருடைய பாசறையில் வளர்ந்தவர் அவர்.
மக்களாகிய நீங்கள் காட்டுகின்ற ஆர்வத்தைப் பார்க்கின்றபொழுது நிச்சயம் வெற்றி பெறப் போவது ஆ.இராசா அவர்கள்தான் – உதயசூரியன் சின்னம்தான்.
‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளைச் சொல் லித் தானே வாக்குக் கேட்கிறோம்; அதற்காகத்தானே நான்கு சிறிய புத்தகங்களை வெளியிட்டு இருக்கின்றோம்.
146 ஆண்டுகளாக பெய்யாத மழை,
புயல் வெள்ளம்!
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற பகுதிகளிலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் 146 ஆண்டு களாக பெய்யாத மழை பெய்து, மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாயினர்.
‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தோழர்கள், பாதிக்கப்பட்ட மக்களை நேரிடையாகச் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர்.
ஆனால், ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி,பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக இரண்டு குழுக்களை அனுப்பி வைத்தது. அந்தக் குழுவும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, அறிக்கையை ஒன்றிய அரசிடம் கொடுத்தது. மேலும், பாதுகாப்புத் துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரும் வந்து பார்வை யிட்டுச் சென்றனர்.
தேசிய பேரிடராகவும் அறிவிக்கவில்லை – நிவாரண நிதியாக ஒரு பைசாவையும் தரவில்லை ஒன்றிய அரசு!
பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பதற்காக 37 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கேட்டால், இதுவரை ஒரு பைசா கூட தரவில்லை. தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தது ஒன்றிய அரசு.
நிவாரண நிதிதான் தரவில்லை – மழை, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல்கூட சொல்ல வரவில்லை பிரத மர் மோடி அவர்கள். ஆனால், தேர்தல் வரப் போகிறது என்றவுடன், அடிக்கடி வருகிறார் தமிழ்நாட்டிற்கு. இவர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் அவரைத் திரும்பிப் பார்ப்பதற்குக்கூட தயாராக இல்லை.
அவர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்து ரோடு ஷோ நடத்தினாலும், இந்தத் தேர்தல் அவர்களுக்கும் நோட்டாவிற்கும்தான் போட்டியாக இருக்கும்.
மக்களுடைய துன்பம் தம்முடைய துன்பமாகக் கருதுகின்ற ஆட்சி திராவிட மாடல் ஆட்சி!
மக்களுடைய துன்பம் தம்முடைய துன்பமாகக் கருதுகின்ற ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய ‘திராவிட மாடல்’ ஆட்சியாகும். அதன் வளர்ச்சிதான் இந்தியா கூட்டணி.
எனவேதான், நீங்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும். எங்களுக்கு இல்லாத வாய்ப்பு உங்களுக்கெல்லாம் இருக் கிறது. காரணம் என்னவென்றால், புதிய தொழிற்சாலை கள் அமைக்கப்படுவதற்கு, உரிமையோடு வாதாடி, போராடி கொண்டுவரக்கூடிய அளவிற்கு செயல்படக் கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நமது ஆ.இராசா அவர்கள், அமைச்சர், மாவட்டச் செயலாளர் இவ்வளவு பேர் இந்தத் தொகுதியைச் சார்ந்து இருக்கிறார்கள்.
திராவிடர் இயக்கம் என்றால், மனிதநேயம்!
அனைவருக்கும் அனைத்தும் – சமூகநீதி என்றால் அதுதான்.
பெரியார் பிறந்த நாளை – சமூகநீதி நாளாக
அறிவித்தார் முதலமைச்சர்!
பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாள் என்று அறிவித்த நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அந்த வார்த்தையையே உறுதிமொழியாக எடுக்க வைத்தார்.
இங்கே நம்முடைய வேட்பாளர் இராசா அவர்கள், மூன்று விஷயங்களைச் சொன்னார்.
கரோனா காலகட்டத்திலும், மழை, புயல் வெள்ளத் தினால் பாதிக்கப்பட்ட காலகட்டத்திலும் எப்படி நடந்துகொண்டார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்?
கரோனா தொற்றினால் எத்தனை ஆயிரம் பேரை நாம் இழந்திருக்கின்றோம், எவ்வளவு தொழில்கள் நலிவுற்றன, எத்தனைப் பேர் பாதிக்கப்பட்டார்கள் என்பதை நாமெல்லாம் நன்றாக அறிவோம்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களை நேரிடையாக சென்று சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கரோனா கால நெருக்கடியில், எந்த மாநில முதல மைச்சராவது, கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் பகுதிக்குச் சென்று நேரிடையாகப் பார்த்ததுண்டா? ஆனால், நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், நேரிடையாகச் சென்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினார்.
பிரதமர் மோடியின் நடவடிக்கையும் – வெளிநாட்டவர்களின் கேலியும்!
ஆனால், ஒன்றிய ஆட்சியில் இருக்கக்கூடிய பா.ஜ.க. – பிரதமர் மோடி என்ன சொன்னார்? ‘‘கரோனாவா கைதட்டுங்கள் கரோனா ஓடிவிடும்; வீட்டில் விளக்கேற்றுங்கள், பூபோடுங்கள்” என்றார்.
வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் கேலி பேசினார்கள்; கைதட்டினால் நோய் போய்விடுமா? விளக்கேற்றினால் நோய் போய்விடுமா? என்று, பிரதமர் மோடியைப் பார்த்து கேட்டார்கள்.
மோடியினுடைய ஆட்சியைப்பற்றி வெளிநாட்டு ஆய்வாளர் லண்டனிலிருந்து ஒரு புத்தகத்தை எழுதி யிருக்கிறார். அதில் பல விஷயங்களைச் சொல்லியி ருக்கிறார்.
அதேபோன்று, இங்கே ஒன்றிய ஆட்சியில் நிதிய மைச்சராக இருக்கக்கூடிய நிர்மலா சீதாராமன் அம்மை யாருடைய கணவர், பர்காலா பிரபாகர் எழுதிய புத்தகத் தில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் அலங்கோலத்தை அலசி ஆராய்ந்திருக்கிறார்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்ட காலகட்டத்தில், பிழைப்புத் தேடி வந்த மாநிலத்திலிருந்து சொந்த மாநிலத்திற்கு நடந்து சென்றார்கள்; அப்படி சென்ற வர்கள் வழியில் பலரும் பரிதாபமாக இறந்தார்கள். அந்தக் காலகட்டத்திலும் களத்தில் நின்றவர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
ஆக்சிஜனை தயாரித்து நாடு முழுவதும்
அனுப்பிய அரசு திராவிட மாடல் அரசு!
தமிழ்நாட்டில் ஒரே ஒரு தொழிற்சாலையையாவது தொடங்கியிருக்கிறதா ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஆனால், இப்பொழுது ஓட்டுக் கேட்டுப் படையெடுக்கிறார்கள்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் ஆக்சிஜனை, ஏற்கெனவே தமிழ்நாட்டில், ஒன்றிய அரசின் பராமரிப்பின்றி இருக்கும் தொழிற்சாலை யைப் பயன்படுத்தி, தேவைப்படும் ஆக்சிஜனைத் தயாரித்து நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது.
பிரதமர் மோடியின்
இரண்டு தொழிற்சாலைகள்!
ஆனால், பிரதமர் மோடி அவர்கள் இப்பொழுது இரண்டு தொழிற்சாலைகளை நடத்திக் கொண்டிருக் கின்றார்.
ஒன்று, பொய்யை உற்பத்தி செய்யும் பொய்த் தொழிற்சாலை. அதற்காக 20 ஆயிரம் பேரைப் பிடித்து அவர்களுக்கு சம்பளம் கொடுத்து வைத்திருக்கிறார்கள்.
இதனை நான் கற்பனையாகச் சொல்லவில்லை. தகவல் தொழில்நுட்பம் படித்த இளைஞர்கள் இங்கே இருப்பீர்கள் – அவர்களுக்கெல்லாம் தெரியும் – ஆங்கிலத்தில், ஜிக்ஷீஷீறீறீs என்று சொல்வார்கள். அதன்மூலம் அவர்கள் எதை வேண்டுமானாலும் பரப்புவார்கள்; தமிழ்நாட்டில், பீகார் இளைஞர்கள் அடித்து விரட்டப்படு கிறார்கள் என்கிற செய்தி பரப்பப்பட்டபொழுது, அதன் உண்மைத் தன்மையை வெட்ட வெளிச்சமாக்கியது திராவிட மாடல் அரசு.
இரண்டாவது தொழிற்சாலை, கிரிமினல்களையும், ஊழல்வாதிகளையும் தூய்மைப்படுத்தும் தொழிற்சாலை.
ஹிந்தி தெரிந்த வடநாட்டவர்கள் தமிழ்நாட்டை நோக்கி ஏன் வருகிறார்கள்?
ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும், அதனால் ஹிந்தி படியுங்கள் என்று உண்மை புரியாமல் இருக்கும் சிலர் சொன்னார்கள்.
அப்பொழுது, நம்முடைய இராசா போன்றவர்கள் கேட்டார்கள், ‘‘ஏண்டா, ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வட மாநிலங்களிருந்து ஹிந்தி தெரிந்தவர்கள் தமிழ்நாட்டை நோக்கி ஏன் வரு கிறார்கள்?” என்று கேட்டார்கள்.
‘‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு” அல்லவா நம்முடைய தமிழ்நாடு.
ஒன்றிய ஆட்சியில் மக்களுக்கு மிஞ்சியது வேதனைதான்!
ஒன்றிய பா.ஜ.க. அரசின் சாதனையை சொல்லி வாக்குக் கேளுங்களேன்; அதை அவர்களால் செய்ய முடியாது. ஏனென்றால், அவர்களுடைய ஆட்சியில் வேதனைதானே மிஞ்சியது மக்களுக்கு.
சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா பிரதமர் மோடி?
ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என்றார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்கவேண்டும் அல்லவா! கிடைத்ததா, என்றால், இல்லை என்பதுதான் பதில்.
‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்றார். வளர்ச்சி, வளர்ச்சி, குஜராத் மாடல் என்றார். வளர்ச்சி வந்ததா?
உலகத்திற்கே நாங்கள்தான் வழிகாட்டி என்பார். விஸ்வகுரு என்பார். அந்த விஸ்வகுருவிடம் வாக்காளர் கள் கேள்வி கேட்டால், மவுனகுருவாகி விடுவார்.
இரண்டு தேர்தல் அறிக்கைகள்தான் கதாநாயகன்!
இரண்டு தேர்தல் அறிக்கைகள்தான் இப்பொழுது இந்தத் தேர்தல் கதாநாயகன். ஒன்று திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை.
இரண்டாவது, அகில இந்திய காங்கிரஸ் கட்சி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் இரண்டு நாள்களுக்கு முன்பு வெளியிட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையாகும்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்னென்ன வாக் குறுதிகளைக் கொடுத்திருக்கிறார்களோ அவை அத்த னையையும் நிறைவேற்றுவோம் – ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் என்று சொல்லப்பட்டுள்ள அறிக்கை.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக்கின் முத்திரையாம்: பிரதமர் மோடி
இன்றைக்குக்கூட மோடி அவர்கள் அலறிப் போய், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும், ராகுல் காந்தி அவர்களையும் தாக்கி இருக்கிறார். தி.மு.க. தேர் தல் அறிக்கையும், ‘‘காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை – அது முஸ்லிம் லீக்கினுடைய முத்திரையே யாகும்” என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, இராஜஸ்தானில் பேசுகிறார். அவர் எங்கே சென்றாலும், தி.மு.க.வையோ, மு.க.ஸ்டாலின் அவர்களையோ அவரால் மறக்க முடியவில்லை.
இரண்டு பேரைப் பார்த்துதான் பிரதமர் மோடி அலறிப் போயிருக்கிறார், வெறுப்படைந்திருக்கிறார், நிதானமிழந்திருக்கிறார்.
இரண்டு பேரின் பெயரைக் கேட்டாலே
அலறும் மோடி!
ஒருவர், இந்தியா கூட்டணி உருவாவதற்கான அடித்தளமான நம்மு டைய ஒப்பற்ற திராவிட நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
இரண்டாவது, ஒப்பற்ற இளந்தலைவராக இருக்கக் கூடிய ராகுல் காந்தி அவர்கள்.
இந்த இரண்டு பேரின் குரல்களைக் கேட்டாலே அலறுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது, முஸ்லிம் லீக் கட்சியின் முத்திரையாகும் என்கிறாரே, பிரதமர்.
முஸ்லிம் லீக் என்ன தடை செய்யப்பட்ட கட்சியா?
ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.
முஸ்லிம் லீக் இந்தியா கூட்டணியில் இருக்கின்ற கட்சியாகும்.
இதுபோன்று ஒரு பிரதமர் பேசலாமா? தேர்தல் ஆணையம் அதனை அனுமதிக்கலாமா?
மதத்தைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், பிரதமர் மோடி பேசுவது மதத்தைப்பற்றித்தான்.
இங்கே வரும்பொழுது எங்கள் வாகனங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் வழக்கம்போல் பரி சோதனை செய்துவிட்டு, ‘‘நீங்கள் செல்லும்பொழுது கொஞ்சம் எச்சரிக்கையாக செல்லுங்கள்; யானைகள் வரும்” என்று.
யானைக்கு மதம் பிடித்தால், உயிருக்கு ஆபத்து! ஓர் ஆட்சிக்கே மதவெறி பிடித்தால், நாட்டு மக்களுக்கு பெரிய ஆபத்து!
கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற கோவில் விழாவில், யானை ஒன்று போய்க்கொண்டிருக்கிறது. திடீரென்று அதற்கு மதம் பிடித்தவுடன், பாகனை தூக் கிப் போட்டு மிதித்தது. அந்தக் காட்சியைத் தொலைக் காட்சியில் பார்த்தபொழுது வேதனையாக இருந்தது.
மதம் கொண்ட யானை, பாகனை தூக்கியடிக்கும்.
மதவெறி பிடித்த ஆட்சி என்ன செய்யும்?
யானைக்கு மதம் பிடித்தாலே, உயிருக்கு ஆபத்து.
ஆனால், ஓர் ஆட்சிக்கே மதவெறி பிடித்தால், அது நாட்டு மக்களுக்கே பெரிய ஆபத்தாகும் – நாட்டையே துவம்சம் செய்யும்!
மதவெறி பிடிக்காத ஓர் ஆட்சிதான், இந்தியா கூட்டணி அமைக்கப் போகின்ற ஆட்சி.
ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று சொன்னவர்கள் கொடுத்தார்களா?
வேலை கேட்டால், இளைஞர்களின் கையில்
‘வேல்’ கொடுக்கிறார்கள்!
வேலை எங்கே? வேலை எங்கே? என்று கேட்டவர் களுக்கு – இங்கே பா.ஜ.க. வேட்பாளராக நிற்கிறாரே அன்பிற்குரிய நம்முடைய சகோதரர் எல்.முருகன் அவர்கள், ‘‘இளைஞர்களின் கையில் வேல் கொடுத்தாரே தவிர, வேலையைக் கொடுக்கவில்லை.”
‘‘வேல் கொடுத்துவிட்டு, வேலை கொடுத்துவிட்டோம், வேலை கொடுத்துவிட்டோம்” என்று சொல்கிறார்கள்.
50 சதவிகித இட ஒதுக்கீட்டை கொடுத்து பெண்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைத்திருப்பது நம்முடைய திராவிட மாடல் அரசு. பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டித் திட்டம் அளித்து தாய்மார்களை மேலும் மகிழ்ச்சியாக இருக்கச் செய்தது இவ்வாட்சி.
எங்களுக்கும் பெருமை –
எங்கள் கொள்கைக்கும் வெற்றி!
நான், நிறைய தேர்தல்களைப் பார்த்திருக்கிறேன். எனக்கு 91 வயது என்று சொன்னார்கள். ஆனால், உங்களையெல்லாம் பார்த்துவிட்டுத் திரும்பும்பொழுது எனக்கு 19 வயது.
இங்கே நிறைய ஆண்கள் நின்றுகொண்டிருக்கின் றார்கள். தாய்மார்கள் எல்லாம் நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்கள். அதுதான் எங்களுக்கும் பெருமை – இந்தக் கொள்கையினுடைய வெற்றி அதுதான்.
ஆனால், நூறாண்டுகளுக்கு முன்பு நாற்காலிகள் இருந்தன. ஆனால், அதில் உட்காருகின்ற தைரியம் பெண்களுக்கு இருந்ததா? அந்த வாய்ப்புக் கிடைத்ததா?
இந்தியா முழுவதும் கிடைக்கவேண்டும் என்றால்…
அந்த வாய்ப்பைக் கொடுத்ததுதான் திராவிடர் இயக்கம். அந்த வாய்ப்பு இந்தியா முழுவதும் கிடைக்க வேண்டும். அப்படி இந்தியா முழுவதும் கிடைக்க வேண்டும் என்றால், நம்முடைய இராசா போன்றவர் களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால், அந்த வாய்ப்புக் கிடைக்கும்.
தாய்மார்கள் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றீர்கள். காரணம், மாதம் பிறந்தவுடன், ஆயிரம் ரூபாய் உங்கள் வங்கிக் கணக்கில் வருகிறது. தாய்வீட்டுச் சீதனம்கூட இதுபோன்று வந்ததில்லை.
தாயை மட்டுமல்ல, தந்தையையும்
மகிழ்ச்சியடையச் செய்த ஆட்சி!
கவலையோடு அமர்ந்திருக்கின்றார் வீட்டில் அப்பா. நம் பெண்ணைப் படிக்கவேண்டுமே, அதற்கு நிறைய செலவாகுமே என்று நினைத்துக்கொண்டு. கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து, அப்பாவையும் மகிழ்ச்சியடைய செய்திருக் கின்ற ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி!
‘‘நான் முதல் தலைமுறை பட்டதாரி. இந்த இயக்கம் இல்லையென்றால், எனக்கு அந்த வாய்ப்புக் கிடைத் திருக்காது. எங்கள் வீட்டில் நான், கல்லூரிக்குப் போய் படிக்கவேண்டும் என்கிறபொழுது, வேலை ஏதாவது பார் என்றார்கள். காரணம், வசதியில்லாத குடும்பம் என்பதால்.
ஆனால், திராவிட இயக்கத்தினுடைய வகுப்புரிமை, சமூகநீதி, இட ஒதுக்கீட்டினால், எங்களைப் போன்றவர் கள் கல்லூரிக்குச் சென்று படித்தோம்” என்று பெண்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றார்கள்.
கல்லூரி செல்லும் பெண் பிள்ளைகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் அரசுதான் திராவிட மாடல் அரசு.
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில்
ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல்!
ஊழலை ஒழிப்போம் என்று சொல்லித்தான் ஒன்றி யத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால், சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கை என்ன சொல்லியிருக்கிறது என்றால், ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக் கிறது பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியில் என்கிறது.
ஒரு கிலோ மீட்டர் சாலை போடுவதற்கு 18 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள் நியாயமாக. ஆனால், 18 கோடி ரூபாய்க்குப் பதிலாக 250 கோடியை கொள்ளை யடித்திருக்கிறார்கள்.
இதை யார் சொல்வது?
நாம் சொல்லவில்லை; தி.மு.க. சொல்லவில்லை; இந்தியா கூட்டணியினர் சொல்லவில்லை. ஒன்றிய அரசாங்கத்தினுடைய தணிக்கை அறிக்கை சொல்கிறது.
அதற்கடுத்து, தேர்தல் பத்திர திட்ட ஊழல் என்பது சாதாரணமானதல்ல.
நட்டத்தில் இயங்கிய 33 நிறுவனங்களிடமிருந்து அடித்துப் பிடுங்கிய பா.ஜ.க. ஆட்சி!
நாமெல்லாம் கவலைப்படுவது ‘‘தேர்தல் பத்திரமாக நடக்கவேண்டும்” என்பதுதான். ஆனால், அவர்கள் தேர்தல் பத்திரமாக நன்கொடையை வாங்கியது 6 ஆயிரத்து 610 கோடி ரூபாய். இதுவரை வெளிவந்து இருப்பது. வெளியில் வராததை – இந்து பத்திரிகையும், இன்னொரு அமைப்பும் ஆய்வு செய்திருக்கிறது. அதில், 45 நிறுவனங்களில், 33 நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கியது. அப்படி நட்டத்தில் இயங்கினாலும், ஆளும் பா.ஜ.க. கட்சிக்கு நன்கொடைகள் கொடுத்திருக்கின்றன.
நன்கொடையல்ல – வன்கொடைதான்!
ஏனென்றால், திரிசூலம் என்கிற சி.பி.அய்., வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றை ஏவி மிரட்டி, அடித்துப் பிடுங்கியது இந்த நன்கொடை. அவர் கள் வாங்கியது நன்கொடையல்ல – வன்கொடைதான்!
ஆகவேதான் நண்பர்களே, வருகின்ற தேர்தலில் மிக முக்கியமாக நாம் ஜனநாயகத்தைக் காப்பாற்றவேண்டும். ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது. அங்கே நன்றாக மருத்துவம் பார்க்கக்கூடிய மருத்துவர் கள் இருக்கிறார்கள். அந்த டாக்டர்களின் பெயர்தான் இந்தியா கூட்டணி தலைவர்கள்.
ஆதாரப்பூர்வமாக ‘விடுதலை’யில் எழுதியிருக்கின்றோம்!
பூஜ்ஜியம் பூஜ்ஜியம் என்று போட்டு 2ஜி வழக்கில் ஆ.இராசாமீது வழக்குப் போட்டீர்களே, இப்பொழுது 5ஜி என்று கொண்டு வந்திருக்கிறீர்களே, 2ஜியைவிட வேகமான 5ஜியை பெருமுதலாளிகளுக்கு வசதியாகக் கொடுத்திருக்கிறீர்களே, அதை நாங்கள் ஆதாரப்பூர்வ மாக ‘விடுதலை’யில் எழுதியிருக்கின்றோம்.
ராகுல் காந்தி அவர்கள் நாடாளுமன்றத்திலேயே, ‘‘தமிழ்நாட்டில் நீங்கள் எத்தனை முறை சென்றாலும், நூறாண்டுகள் ஆனாலும், அங்கே உங்களால் காலூன்ற முடியாது மோடி ஜி – ஏனென்றால், அது பெரியார் மண், சமூகநீதி மண்” என்றார்
அதற்குப் பதில் சொல்ல முடியாமல், நாடாளுமன்றத் திற்குள் அவரை வரவிடக் கூடாது என்பதற்காக, எங்கேயோ, எப்பொழுதோ பேசினார் என்பதற்காக அவர்மீது வழக்குப் போட்டு, உடனே தண்டனை கொடுத்தனர். உடனடியாக அவர் தங்கியிருந்த வீட்டை காலி செய்யச் சொன்னார்கள். நல்ல வாய்ப்பாக உச்சநீதிமன்றம் அதனை தடை செய்தது.
146 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட்!
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டார்கள் என்பதற் காக 146 எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஒரு தொடர் முழுவதும் மட்டுமல்லாமல், அடுத்தத் தொடருக்கும் சேர்த்து சஸ்பெண்ட் செய்தனர்.
இது என்ன ஜனநாயகமா? காட்டாட்சியா?
ஆகவேதான் நண்பர்களே, எங்களுக்காக அல்ல – உங்களுக்காக – உங்கள் பிள்ளைகளுக்காக – ஜனநாய கத்திற்காக நாங்கள் கேட்கின்றோம்.
நம்முடைய முதலமைச்சர் கொண்டு வந்த காலைச் சிற்றுண்டி திட்டத்தைப் பார்த்து கனடா நாட்டுக்காரன் நாங்களும் அதனைப் பின்பற்றுவோம் என்று சொல் கிறான்.
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் நடவடிக்கைக்கு
உலக நாடுகள் கண்டிப்பு!
ஆனால், அதேநேரத்தில், ஒன்றிய பா.ஜக.. ஆட்சியைப் பார்த்து, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற உலக நாடுகள் ஜனநாயகத்தை இப்படி கொல்லுகின்ற சூழல் இருக்கிறதே என்று சொல்கின்றன. அதற்கு உங்களால் பதில் சொல்ல முடியாத சூழல்.
ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி வந்தவர்கள் செய்திருக்கின்ற ஊழலுக்கு அடையாளம்தான் தேர்தல் பத்திரத் திட்ட மெகா ஊழல். இதைச் சொல்வது நாங்கள் அல்ல – உச்சநீதிமன்றம் அவர்களின் காதைப் பிடித்துத் திருகி சொல்லியிருக்கிறது.
எனவேதான், நீங்கள் ‘‘பொய் நெல்லைக் குத்தி பொங்கலிடலாம்” என்று நினைக்காதீர்கள்.
பொய்த் தொழிற்சாலை என்று முன்பு சொன்னேன் அல்லவா – அதோடு இன்னொரு தொழிற்சாலையையும் பிரதமர் வைத்திருக்கிறார்.
வாசிங் மிஷின் தொழிற்சாலை!
கிரிமினல் குற்றவாளிகள், ஊழல் செய்தவர்கள் எல் லாம் பா.ஜ.க.வில் சேர்ந்தவுடன் தூய்மைப்படுத்தப்படு வார்கள். வாசிங் மிஷின் என்கிற தூய்மைத் தொழிற்சாலையை நடத்துகிறார்.
ஆகவேதான், வருங்கால சந்ததினருக்கு வாழ்க்கை உரிமை வேண்டும் என்றால்,
ஜனநாயகமா? சர்வாதிகாரமா?
அனைவருக்கும் அனைத்துமா?
இன்னாருக்கு இன்னதா?
ஒன்றிய ஆட்சி என்பது அதானிக்கும், அம்பானிக்கும், டாட்டாவுக்கும், பிர்லாவுக்கு மட்டுமா? அல்லது ஏழை, எளிய மக்களுக்கா?
மணிப்பூர் இந்தியாவில் இல்லையா?
பிரதமர் மோடி சொல்கிறார், ‘‘140 கோடி மக்களும் என் குடும்பம்” என்கிறார். அவர் சொல்வது உண்மையாக இருந்தால், மணிப்பூரில் எங்கள் பழங்குடியின சகோதரி களை நிர்வாணப்படுத்தி தெருத்தெருவாக ஓடவிட் டார்களே சங்கிகள் – அதனைக் கண்டித்து ஒரு வார்த்தையையாவது பிரதமர் மோடி சொன்னதுண்டா?
மணிப்பூர் இந்தியாவில் இல்லையா? 140 கோடி மக்களில் மணிப்பூர் மக்கள் இல்லையா?
இதற்கெல்லாம் தீர்வு நாள்தான் ஏப்ரல் 19 ஆம் தேதி. நம்முடைய அருமை வேட்பாளர் ஆ.இராசா அவர்களு டைய சின்னம் உதயசூரியன்.
எங்கும் ஒளிமயமாக இருக்கும் –
இருட்டு விடைபெறும்!
வாக்குப் பெட்டி இயந்திரத்தில், உதயசூரியன் சின் னத்திற்கு நேரே உள்ள பொத்தானை நன்றாக அழுத் தினால், பச்சை விளக்கு எரியும். அந்தப் பச்சை விளக்கு எரிந்தால், அங்கே மட்டும் விளக்கு எரியாது – உங்கள் வீட்டில் விளக்கு எரியும் – நாட்டில் விளக்கு எரியும் – எங்கும் ஒளிமயமாக இருக்கும் – இருட்டு விடைபெறும்.
வெற்றி நமதே!
ஏமாறாதீர்! ஏமாறாதீர்!
நிச்சயமாக ஜூன் 3 ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் – நூற்றாண்டு விழா நிறைவு நாள். கலைஞருக்குப் பரிசாக இந்த மக்கள், இந்த நாடு அந்தப் பரிசை கொடுத்தது என்கிற வரலாற்றை உருவாக்கவேண்டும்.
மறவாதீர் உதயசூரியன் – ஒன்றியத்தில்
இந்தியா கூட்டணி ஆட்சிதான்!
ஜூன் 5 ஆம் தேதி மலரப் போவது இந்தியா கூட்டணி ஆட்சிதான்!
மறவாதீர் உதயசூரியன்! உங்கள் வீட்டுத் தோழனாக இருப்பவர் எங்கள் சகோதரர் இராசா அவர்கள்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
குற்றமற்றவர் என்று கம்பீரமாக வெளியே வந்தவர் நமது ஆ.இராசா
இராசா அவர்கள் என்ன ஆங்கில மீடியத்திலா படித்தார்? இராசவைப்பற்றி சில செய்திகளை நீங்கள் தெரிந்து வைத் திருப்பீர்கள். அவர் வழக்குரைஞர் என்று தெரிந்து வைத்திருப்பீர்கள். வழக்குரை ஞர் படிப்பில் எம்.எல். (மாஸ்டர் ஆஃப் லா) டிகிரியை பெரும்பாலும் பார்ப்பனர் கள் தான் படிப்பார்கள். பார்ப்பனரல்லாதார் அந்தப் படிப்பைப் படிப்பது மிகமிகக் கடினமாக இருந்தது. திருநெல்வேலியில் சைவ பிள்ளை ஒருவர் இருந்தார். அவ ருடைய பெயர் சுப்பிரமணிய பிள்ளை என்பது. மக்கள் அவரை அழைத்தது எம்.எல்.பிள்ளை என்றுதான். ஒடுக்கப் பட்ட சமுதாயத்தில் எம்.எல். படித்த பிள்ளையாக இருக்கக்கூடியவர் நம்மு டைய வேட்பாளர் ஆ.இராசா அவர்கள்.
அவர்மீது 2ஜி என்ற பொய் வழக்குப் போட்டார்கள். நாங்கள் எல்லாம் அதைக் கண்டித்து நாடு முழுவதும் கூட்டம் போட்டுப் பேசினோம். அந்த வழக்கில், எங்கள் இராசாவே வாதாடக் கூடிய அளவிற்கு, சட்ட நுணுக்கங்களை அத்தனையையும் எடுத்து வைத்தார்.
எங்கள் அருமை இராசாமீது பொய் வழக்குப் போட்டீர்கள். அந்த வழக்குப் பொய்யானது என்று நிரூபித்து வழக்கி லிருந்து விடுதலை பெற்று வந்திருக்கிறார்.
‘‘காத்திருந்தேன், காத்திருந்தேன், காலமெல்லாம் காத்திருந்தேன்” என்றார் நீதிபதி!
2ஜி வழக்கினை விசாரித்த நீதிபதி அவர்கள், வழக்கின் முடிவில் தீர்ப்பு எழுதும்பொழுது, ‘‘ஆதாரம் கொடுப் போம், ஆதாரம் கொடுப்போம் என்று அவர்கள் சொல்லும்பொழுதெல்லாம், நான் வாய்தா கொடுத்துக் கொண்டே இருந்தேன். காத்திருந்தேன், காத்திருந் தேன், காலமெல்லாம் காத்திருந்தேன் என்று சொல்வது போன்று, கடைசி வரையில் ஓர் ஆதாரத்தைக்கூட யாரும் காட்டவில்லை’’ என்று குறிப்பிட்டார்.