கூடலூர், ஏப். 7- கூடலூர் நகரில் மேட்டுப்பாளையம் கழக மாவட்டம் சார்பில் 6.4,.2024 அன்று நடைபெற்ற மாபெரும் இந்தியா கூட்டணி மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் உரையாற்றினார். அவரது தொடக்க உரையில்…:
தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தலைமையிலான இந்திய கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு பல்லாயிரக்கணக்கில் கூடக் கூடிய மக்களே சாட்சி – சொன்னதைச் செய்தார் கலைஞர் சொல்லாததையும் செய்தார் தளபதி ஸ்டாலின் – சொன்னதை செய்யாதவர் மோடி வெற்று வாக்குறுதிகள் பொய்யான உறுதி மொழிகள் மோடிக்கு வழமையானவை.
ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார் போட்டாரா? நாமத்தை தான் மக்களுக்கு போட்டார். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக சொன்னார் – வேலையில்லாத இளைஞர்கள் கோடிக் கணக்கில் தவிக்கிறார்கள் – இருந்த வேலையையும் காலி செய்தார் மோடி – 23க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை மூடி அதில் பணியாற்றிய பல்லாயிரம் பேர்களை வீட்டுக்கு அனுப்பினார். ஆனால் பொய்யாய் பழங்கதையாய் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்றார். பத்தாண்டு காலத்தில் 20 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருக்க வேண்டும் கொடுத்தாரா பிரதமராக இருக்கக்கூடிய ஒருவர் இப்படி பொய் பேசலாமா? செய்ய முடியாததை செய்வேன் என்று வாய்ஜாலம் ஆடலாமா? விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இரு மடங்காக உயர்த்திக் காட்டுவேன் என்றார். அவரின் ஆட்சியில் தான் கடந்த பத்தாண்டுகளுக்கு உள்ளாக ஒரு லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நியாயமாக மோடி – இந்த மோசமான நிலைமைக்கு பொறுப்பேற்று இருக்க வேண்டும் ஆனால் பொறுப்பை தட்டிக் கழிப்பார் மோடி – இல்லாததை நடக்காததை நடத்துவேன் என்று சொல்லுவார் மோடி – அவரை வீட்டுக்கு அனுப்பக்கூடிய துருப்பு சீட்டு தான் வாக்குச்சீட்டு!
வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக காவி கும்பலை பதவியை விட்டுத் துரத்த மோடியையும் அவரது அமைச்சர்களையும் நாட்டை விட்டு அகற்ற கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள்.
2ஜி பிரச்சனையில் ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி லாபம் அடைந்ததாக பொய் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் இன்று 5 லட்சம் கோடி 5ஜி பிரச்சனையில் ஊழல் செய்திருக்கிறது மோடி தலைமையிலான பாஜக அரசு – இத்தனை பெரிய ஊழலை செய்துவிட்டு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போல் மறைக்க முயல்கிறார்கள் – எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாக்கு கேட்டு வருகிறார்கள் வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும் – பாஜக ஊழல் செய்யாத கட்சியாம் கருநாடகாவில் நாறுகிறது பல மாநிலங்களிலே அவர்கள் ஆட்சி செய்யக்கூடிய சூழலில் மிக மோசமான ஊழல் பட்டியலில் திளைத்திருக்கிறார்கள் அவரின் கட்சியினர் இப்படிப்பட்ட ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப நல்லவர்கள் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சி மலர கிடைத்திருக்கும் அரிய வாய்ப்புதான் இந்த நாடாளுமன்றத் தேர்தல் கவனம் தேவை – எச்சரிக்கை தேவை. நம்முடைய கடமையை உணர்ந்து உரிமையை பெறுவதற்கு வாய்ப்பை பயன்படுத்துங்கள் வெற்றி இந்தியா கூட்டணிக்கே. நாளை நமதே நாடும் நமதே நாற்பதும் நமதே என்று தமது தொடக்க உரையில் முனைவர் துரை சந்திரசேகரன் குறிப்பிட்டார்.