ஜனநாயகத்தில் முக்கிய அங்கமான எதிர்க்கட்சிகள் அனைத்தையும் முடக்கும்படியாக, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும் ஆளுநர்கள் மூலம் தொல்லை கொடுத்தபடியிருப்பதால்!
எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்கும் விதமாக, அவர்களை மட்டும் குறிவைத்து அமலாக்கத்துறை, சி.பி.அய்., வருமான வரித்துறை மூலமாகக் கைது செய்வதால்!
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை புலனாய்வு அமைப்புகள் மூலமாக மிரட்டி, கட்சி மாற வைப்பதால்!
எதிர்க்கட்சியினர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி மிரட்டி, மிரட்டலுக்கு அடிபணிந்தவர்கள் மீதான விசாரணையை மட்டும் கைவிடுவதால்!
நாட்டிலுள்ள புலனாய்வு அமைப்புகளின் மூலம் தொழில் முனைவோர்களை மிரட்டி, அவர்களிடமிருந்து தங்கள் கட்சிக்கான நன்கொடையை வசூலிப்பதால்!
ஜனநாயகத்தின் அடுத்த அங்கமான நீதித்துறையில் நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்காமல், தங்கள் கொள்கைகளுக்கு ஒத்துவருபவர்களை மட்டுமே நீதிபதியாக நியமித்து, நீதித்துறையையே கேள்விக் குறியாக்குவதால்!
நீதிபதிகளாக இருப்பவர்கள் தங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளிப்பதை வைத்து, அவர்களுக்கு பணி ஓய்வுக்குப்பின் ஆளுநர், மாநிலங்களவை உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புக்களை வழங்குவதால்!
ஜனநாயகத்தின் முக்கிய தூணான தேர்தல் ஆணையத் துக்கான ஆணையர்களை நியமிப்பதில் இருந்த நடை முறையை மாற்றி, தாங்கள் விரும்பியவரை ஆணையராகக் கொண்டுவருவதுபோல் தேர்வுக்குழுவை மாற்றிய மைத்ததால்!
அரசின் செயல்பாட்டை விமர்சிக்கும் எழுத்துரிமையை, கருத்துரிமையை ஊடகங்களிலும், சமூக வலைத்தளங் களிலும் முடக்குவதால்!
அரசின் செயல்பாட்டிலுள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுவோரை தேச விரோதிகளென்று அடையாளப்படுத் துவதால்… தேசப்பாதுகாப்பு சட்டத்தால் கைது செய்வதால்… சிறைச்சாலையில் கொடுமைப்படுத்துவதால்!
ஜனநாயக நாட்டின் அரசமைப்புச் சட்டத்துக்கு மாற்றாக, பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டும் மனு நீதிக் கோட் பாட்டைத் திணிக்க முற்படுவதால்!
சகோதரத்துவமான சமூகச் சூழலைக் கெடுத்து, பெரும்பான்மை மதத்தினரின் மத உணர்வைத் தூண்டி விட்டு, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை, படுகொலைகளை வேடிக்கை பார்ப்பதால்!
மதச் சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களால் அச்ச உணர்வைத் தூண்டுவதால்!
பன்மொழிக் கலாச்சாரமுள்ள நாட்டில், ஒற்றை மொழியாக ஹிந்தியை மட்டுமே திணிப்பதன் மூலம், மற்ற மொழியினரின் கல்வி வாய்ப்பை, வேலைவாய்ப்பைப் பறிப்பதால்!
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், மாநிலங் களின் உரிமைகளைப் பறித்து, மாநிலங்களை டம்மியாக மாற்ற நினைப்பதால்!
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுவதும், அவர்கள் பேரிடரில் சிக்கினால் நிதியுதவி வழங்காமல் பரிதவிக்க விடுவதால்!
நடுத்தர, அடித்தட்டு மக்களை வரிகளால், கட்டணங் களால் வாட்டிவதைப்பதும், சலுகைகளைப் பிடுங்குவதுமான செயல்பாடுகளால்!
தங்களுக்கு ‘கமிஷன்’ தரும் பெருந்தொழிலதிபர்களின் ஊழல்களுக்கு சாமரம் வீசி, நாட்டின் வளங்களைச் சுரண்ட அனுமதிப்பதால்!
– வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்