தொகுப்பு : மின்சாரம்
நடக்கவிருப்பது 18ஆவது மக்களவைத் தேர்தல். மோடி தலைமையிலான பிஜேபி (என்.டி.ஏ) ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த பிஜேபியின் கருப்பை ஆர்.எஸ்.எஸ்.. ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவமே பிஜேபி.
ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்று செயல்பாட்டில் இருந்தவர்கள்தான் பிஜேபியின் அகில இந்திய பொதுச் செயலாளராக வரமுடியும் என்று விதிக்கப்பட்டுள்ளது.
பிஜேபி சார்பில் யாரை வேட்பாளராகத் தேர்வு செய்வது என்ற குழுவில் கண்டிப்பாக ஆர்.எஸ்.எஸின் முக்கிய பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும்.
ஆர்.எஸ்.எசுக்கு தலைவராக வரக் (சர் சங் சாலக்) கூடியவர்கள் பார்ப்பனர்களே – விதிவிலக்கு ஒரே ஒரு முறை ராஜேந்திர சிங் என்பவர்.
மாநிலங்களே கூடாது என்பது பிஜேபியின் நிலைப்பாடு. 1952 ஜனசங்கத்தின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆட்சி மொழிக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதமே என்று கூறுகிறார் ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ்.கோல்வால்கர்.
அந்த அடிப்படையில்தான் தேசிய புதிய கல்வி என்ற பெயரால் இந்திய அளவில் கல்வித் திட்டத்தில் ஹிந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது. (1937இல் சென்னை மாநில பிரதமராக இருந்த ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) “சமஸ்கிருதத்தைப் படிப்படியாகச் கொண்டு வரத்தான் ஹிந்தியைக் முதற்கட்டமாக கொண்டு வந்துள்ளேன் என்று. சென்னை லயோலா கல்லூரியில் பேசியதையும் இந்த இடத்தில் நினைவூட்டுவது பொருத்த மானதாகும்.
ஆர்.எஸ்.எஸின் முக்கிய மூன்று திட்டங்களான காஷ்மீருக்கான தனி தகுதி சட்டம் 370ஆவது பிரிவை நீக்குவது, ஒரே மாதிரியான சிவில் சட்டம் (Uniform Civil Code) கொண்டு வருவது, அயோத்தியில் ராமன் கோயிலைக் கட்டுவது.
ஆர்.எஸ்.எஸின் இந்த மூன்றையும் அதன் அரசியல் வடிவமான பிஜேபி ஆட்சி மோடி தலைமையில் நிறைவேற்றி மகிழ்ச்சிக் கடலில் குதித்துவிட்டது.
இடஒதுக்கீடு கூடாது என்பது ஆர்.எஸ்.எஸின் உறுதியான நிலைப்பாடு. இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைத் (EWS) திணித்தது – கூடாரத்தில் ஒட்டகம் நுழைந்த கதைதான்! மதச் சார்பின்மை கூடாது என்பதன் அடையாளமாகத்தான் சுதந்திர நாள் அரசு விளம்பரத்தில் ‘செக்குலர்’ என்ற அரசமைப்புச் சட்ட முகவுரையில் உள்ள அடிப்படைக் கொள்கையை நீக்கியது ஒன்று போதாதா?
அடுத்து ஒரே மதம், ராமராஜ்ஜியம், ஒரே கலாச்சாரம் என்ற காலடிகளைப் பதிப்பது! அவர்கள் வளர்ச்சி என்பதெல்லாம் – மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதல்ல – பொருளாதார வளர்ச்சியை நோக்கியல்ல. சமூகநீதியையோ, மதச் சார்பின்மையையோ காப்பாற்றுவது அல்ல என்பது நினைவிருக்கட்டும்!
பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் போக்கும் நோக்கும் – மயக்கும் மாய்மாலங்களும் எத்தகையன?
அவர்களின் பார்ப்பனீய ஹிந்துத்துவக் கொள்கைக்கு எதிர்ப்புயல் வீசுவது தந்தை பெரியார் பிறந்த இந்தத் திராவிட பூமியில்தான். அதன் மீது தாக்குதல் தொடுப்பதை இந்த அடிப்படையில் புரிந்து கொள்ளலாம்.
கோமாதா பாதுகாப்பு – பசுவதைத் தடை சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரால் இஸ்லாமியர்களை வெளி யேற்றுவது – பாபர் மசூதியை இடித்தது; அடுத்து காசி, மதுரா, மசூதிகளைக் குறிவைப்பது – இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கிடைக்கும் ஒரே விடை ஹிந்து ராஜ்ஜியம்தான்.
ஒவ்வொரு காயாக நகர்த்துகிறார்கள்.
* * *
இத்தகு பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியே தீர வேண்டும் – ஏன்? இதோ சில எடுத்துக்காட்டுகள்:
தமிழுக்கு என்ன செய்தது
ஒன்றிய பிஜேபி அரசு?
தமிழுக்கு ரூ.74 கோடி.. யாரும் பேசாத சமஸ்கிருதத்துக்கு ரூ.1,488 கோடி.. ஒன்றிய அரசு ஒதுக்கீடு
தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பேர் பேசும் தமிழ் மொழியை ஆராய்ச்சி செய்யும் ஒன்றிய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ரூ.74.1 கோடி ஒதுக்கி இருக்கும் ஒன்றிய அரசு, யாராலும் பேசப்படாத சமஸ்கிருத மொழிக்கு ரூ.1,487.9 கோடியை ஒதுக்கீடு செய்து இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப் பினர் ஜோதிமணி, சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதில், கோடிக்கணக்கான மக்களால் பேசப்பட்டு வரும் தமிழை விட மக்களிடம் பேச்சு வழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதத்திற்கு பன்மடங்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது தெரியவந்துள்ளது.
ஒன்றிய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார், கரூர் எம்.பி. ஜோதிமணிக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த – கடந்த 2014 – 2015 கல்வியாண்டு முதல் கடந்த 2021 – 2022 கல்வியாண்டு வரை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கும், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கும் ஒதுக்கிய நிதி விவரங்கள் இடம்பெற்று உள்ளன.
அதில், கடந்த 2014 ஆண்டு முதல் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கும் ஒன்றிய அரசு ரூ.74.1 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்து இருக்கிறது. ஆனால், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு ரூ.1,487.9 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது. தமிழ்நாடு மாநிலம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆங்காங்கே பேசப்பட்டு வரும் தமிழை விட வழக்கொழிந்த சமஸ்கிருதத்துக்கு கூடுதல் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கி இருப்பது… எதைக் காட்டுகிறது?
* * *
சினிமா எ(கெ)டுக்கிறார்கள்
அயோத்தியில் ராமர் கோயில் திறந்தமைக்கு எப்படி எல்லாம் கதை சொல்ல முடியுமோ, எப்படி எல்லாம் நியாயம் கற்பிக்க முடியுமோ அதையெல்லாம் செய்கிறது இந்த பிஜேபி சினிமாட்டிக் யுனிவர்ஸ்.
இது போதாதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி இவர்கள் எடுத்த நடவடிக்கைகள் சரி எனக் காட்ட ‘வாஜ்பாய்’, ‘நரேந்திர மோடி’, ‘ஆர்டிக்கிள் 370’, ‘ஃபைட்டர்’ போன்ற படங்கள். அடுத்த பிஜேபி சினிமாட்டிக் விங்கின் வேலை இஸ்லாமியர்கள் நமக்கு ஆற்றியக் கொடுமைகள், அதனால் அனுபவித்த இன்னல்கள் மற்றும் கதைகளை பொய்யாக உருவாக்குவது எனக் கொண்டால் ‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘ஹிந்துத்துவா’, ‘த கேரளா ஸ்டோரி’, ‘72 ஹூரெய்ன்’ என நீளும் பட்டியலைக் குறிப்பிடலாம்.
புல்வாமா தாக்குதலை மய்யமாக வைத்தே கமர்ஷியல் கொத்து பரோட்டாவான ‘ஃபைட்டர்’ முதல் ‘ஆர்டிக்கிள் 370’ வரை திரையரங்கை ஆக்கிரமித்திருக்கின்றன என்பதை மறுக்க முடியுமா?
‘ரோஜா’, ‘துப்பாக்கி’, ‘எப்அய்ஆர்’, தெலுங்கில் ‘கார்த்திகேயா’, ‘கார்த்திகேயா 2’, ‘ஆதிபுருஷ்’, ‘ரஸாக்கர்’ என தென்னிந்தியாவையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. வலதுசாரி ஆதர வாளரான ஒரு தமிழ் எழுத்தாளரின் சினிமா பிரவேசத்துக்குப் பின்பே தமிழ் படங்களிலும் நஞ்சு கருத்துகள் விதைக் கப்பட்டு வருகின்றன.
ஹிந்து மகாசபையை சவார்க்கர் உருவாக்கும்போதே, இங்கிருந்து புறப்படும் ஒவ்வொரு இளைஞனும் ஒவ்வொரு துறைக்குள் நுழைந்து நமது சித்தாந்தத்தை அங்கு பரப்பி, அந்தந்த துறையை நம் வசப்படுத்த வேண்டும் என்றுதான் திட்டமிட்டார். அந்த துறைகளில் சக்தி வாய்ந்த சினிமா என்ற ஊடகமும் ஒன்று. இப்படித்தான் சங்கிகள் தங்களது சந்ததியினரை சினிமா படிப்புகளை படிக்க வைத்து, இந்தத் துறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஆங்காங்கே வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
இப்போது கடந்த 10 ஆண்டுகளில் புற்றீசல் போல பெருகி வெளியே வந்துவிட்டார்கள். விளைவு, இப்போதெல்லாம் மாதத்துக்கு ஒரு படம் அல்ல, வாரத்துக்கு ஒரு படம் இஸ்லாமிய வெறுப்பைக் கொண்டு வெளியாகி வருகிறது. கடந்த வாரத்தில் ‘ரஸாக்கர்’ வந்தது. இந்த வாரத்தில் ‘ஜெஎன்யூ’ வருகிறது. இதையடுத்து ‘1947 கொல்கத்தா’ என்ற படம் பிரிவினையை பற்றிய கதையாக வெளியாகிறது. ஆனால் இந்த சம்பவங்களுக்கு நடுவேதான் ‘முல்க்’, ‘ஜனகண மன’, ‘ஜெய் பீம்’, ‘அசுரன்’, ‘அஃப்வா’, ‘பிகே’ உள்ளிட்ட சில படங்கள் நமது ஜனநாயகத்தின் மற்றொரு முகத்தை பிரதிபலிக்கின்றன. இந்த நாட்டின் நிஜ அடையாளம், மதச்சார்பற்ற நாடு என்பதுதான். அதை கலை மூலம் பாஜ சிதைக்க நினைத்தால் அதற்கு தகுந்த விலை தர வேண்டிய தருணமும் வரும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
– ‘தினகரன்’, 20.3.2024
* * *
வழக்குகளை தள்ளிப்போடும் புதிய மெஷின் பாஜக
பாஜகவில் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் ஊழல் வழக்கு நிறுத்தி வைப்பு!
கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில், ஊழல் வழக்குகளை எதிர்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேர் பாஜகவில் சேர்ந்துள்ளனர்.
பாஜகவில் சேர்ந்த 25 பேரில் 3 பேருக்கு எதிரான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், 20 பேருக்கு எதிரான ஊழல் வழக்கில் விசாரணை ஏதுமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஊழல் வழக்குகளுக்கு பயந்து அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 10 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவில் இருந்து தலா 4 பேரும், திரிணாமுல் காங்கிரசில் இருந்து 3 பேரும் பாஜகவில் சேர்ந்துள்ளனர்.
தெலுங்கு தேசம் கட்சியில் 2 பேரும், சமாஜ்வாதி, ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இருந்து தலா ஒருவரும் விலகி பாஜகவில் சேர்ந்தனர்.
பாஜகவுடன் சேர்ந்ததால் ஆதாய மடைந்த 25 பேரில் அஜித் பவார், பிரபுல் பட்டேல் உள்ளிட்ட 12 பேர் மகாராட்டிராவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பாசிச பிஜேபி ஆட்சியைத் தொடர விடலாமா? இவர்களை வீட்டுக்கு அனுப்பாவிட்டால் நம் வீட்டுக்கு நாமே தீயை வைத்துக் கொள்வதற்கு ஒப்பமாகும்.