புதுடில்லி, செப்.21 காவிரி மேலாண்மை ஆணைய உத்தர வுக்கு தடை விதிக்கக் கோரிய கருநாடகாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்துமாறு கருநாடகாவுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23 ஆவது கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட கருநாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு அரசு பிரநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளியேறினர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி காவிரி மேலாண்மை கூட்டம் நடந்தது. அப்போது தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பாசனத்திற்கு கருநாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கருநாடகா அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கருநாடகா அரசு திடீரென தண்ணீர் திறப்பதை நிறுத்தியது. இந்த நிலையில் 2 ஆவது கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழுவானது காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருநாடகாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மேலும் கருநாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. அதில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத வறட்சி கருநாடகாவில் நிலவுவதால் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடக் கூடாது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. இதனிடையே ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த பிறகும் கருநாடகா அரசு தண்ணீர் திறந்துவிட மறுப்பது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவது தான் கடைசி முடிவு என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடந்தது. அப்போது காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி தமிழ்நாட்டிற்கு மேலும் 15 நாட்களுக்கு 5000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கருநாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் தமிழகத்தை சேர்ந்த 12 எம்.பி.க்கள் காவிரி நீர் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினர்.
இந்த நிலையில் கருநாடகா அரசு சார்பில் மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு டில்லியில் நேற்று (20.9.2023) ஆலோ சனை கூட்டம் நடத்தி காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக விவாதித்தனர். இந்த நிலையில் போதிய நீர் இல்லாததால் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி நீர் திறக்க இயலாது என்றும் காவிரியிலிருந்து 5000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும் கருநாடகா அரசு சார்பில் நேற்று (20.9.2023) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதனிடையே நேற்றைய தினம் (20.9.2023) காவிரி வழக்கு தொடர்பாக மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகியுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு இன்று (21.9.2023) உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கவாய், பிஎஸ் நரசிம்மா, பிகே மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான அமர்வில் விசாரணை தொடங்கியது.
தமிழ்நாடு அரசு சார்பில் வழக்குரைஞர்கள் முகுல் ரோத்தகி, வில்சன், உமாபதி ஆகியோர் ஆஜராகினர். அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் காவிரியில் சொற்ப நீரைத்தான் கருநாடகா திறந்து விடுகிறது. 12,500 கன அடிநீரை கருநாடகா திறக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
அப்போது கருநாடகா அரசு வழக்குரைஞர், கருநாட காவில் மழை இல்லை, காவிரியில் நீரும் குறைவாக இருக்கிறது என்றார். அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான ரோத்தகி, கருநாடகாவில் மழை குறைவுதான் என்பதை ஏற்கிறோம். மழை குறைவான காலத்துக்கான நீர் பகிர்வு விவரம் ஏற்கெனவே உள்ளது. அதை நீதிமன்றமும் வரையறுத்துள்ளது. அந்த நீரை கூட திறக்கவில்லையே என தமிழ்நாடு அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தனர். அதேபோல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க கருநாடகா அரசின் கோரிக்கையும் நிராகரித்தனர். வறட்சி கால அட்டவணைப்படி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட கருநாடகாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.