லஞ்சம் – விலைவாசி உயர்வு – வேலையின்மை – பங்குபத்திர ஊழல் இவற்றைத் திசை திருப்பத்தான்
50 ஆண்டுகளுக்குமுன் நடந்த கச்சத்தீவுப் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கிறார் மோடி!
தென்காசி, ஏப்.2 லஞ்சம், விலைவாசி ஏற்றம், வேலை வாய்ப்பின்மை, பங்கு பத்திர ஊழல், மீனவர் பிரச்சினைகளில் பி.ஜே.பி. ஆட்சியின்மீது குற்றச்சாட்டுகள் மிகப்பெரிய அளவில் எழுந்து நிற்கும் சூழலில், அவற்றிற்கு நியாயமான பதில் சொல்ல முடியாத காரணத்தால், இவற்றிலிருந்து மக்களைத் திசை திருப்பவே பிரதமர் மோடியும், பி.ஜே.பி.,யும் (கச்சத்தீவு முன்பே முடிந்துபோன பிரச்சினை என்று சொன்ன பி.ஜே.பி. ஆட்சி) இப்பொழுது கையில் எடுத் துள்ளது – இவையெல்லாம் மக்களிடத்தில் எடுபடாது. வெல்லப் போவது இந்தியா கூட்டணிதான் என்று செய்தியாளர்களிடம் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று (2-4-2024) தென்காசிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
தென்காசியிலிருந்து
திராவிடர் கழகப் பரப்புரை தொடக்கம்!
ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1 ஆம் தேதி வரையில் நடைபெறக்கூடிய 18 ஆவது மக்களவைத் தேர்தல் என்பது மிகமிக முக்கியம் பெற்ற ஒன்று என்கிற காரணத்தினால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர்தலில், இன்றைக்குத் தென்காசித் தொகுதியிலிருந்து திராவிடர் கழகப் பரப்புரைப் பயணம் புறப்படுகிறது.
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கின்ற இந்தியா கூட்டணி – இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தக்கூடிய வாய்ப்பில் இருக்கிறார்கள்.
எங்களைப் பொறுத்தவரையில் இன்றைக்கு (2-4-2024) தென்காசியில் பிரச்சாரத்தைத் தொடங்கு கின்றோம். பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி, மக்களுக்கு விளக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்க மாகும். இரண்டாவது கூட்டம் இரவு 8 மணியளவில் திருநெல்வேலியில் நடைபெறவிருக்கிறது.
தொடர் பிரச்சாரமாக நடைபெற்று,
17 ஆம் தேதி மாலை தஞ்சையில் பிரச்சாரம் நிறைவடையவிருக்கிறது
ஒவ்வொரு நாளும், இரண்டு தொகுதிகள் என்று வரையறுக்கப்பட்டு, தொடர் பிரச்சாரமாக நடைபெற்று, 17 ஆம் தேதி மாலை தஞ்சையில் பிரச்சாரம் நிறைவடையவிருக்கிறது.
ஏறத்தாழ 28 தொகுதிகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கின்றோம்.
இந்தத் தேர்தலுக்கும், மற்ற தேர்தலுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இந்தத் தேர்தலில் மீண்டும் மோடி தலைமையில் இருக்கக்கூடிய பா.ஜ.க. அரசு அமைந்தால், ஜனநாயகத்தினுடைய கடைசித் தேர்தலாக இந்தத் தேர்தல்தான் இருக்கும் என்பது நாடறிந்த ஓர் உண்மையாகிவிட்டது.
உச்சநீதிமன்றத்தினுடைய அண்மைக்காலத் தீர்ப்புகள் அதனை வலியுறுத்தக் கூடியனவாகவும், அதற்கு ஆதாரமான சான்றாவணமாகவும் இருக்கக் கூடிய நிலைகள் இருக்கின்றன.
பா.ஜ.க.வின் பொய்யை அம்பலப்படுத்தும் விதத்தில்தான் உள்ளன!
தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் நியமனம் உள்பட, தேர்தல் பத்திரத் திட்டமாக இருந்தாலும், மற்ற எல்லா விஷயங்களாக இருந்தாலும், அவை அனைத்தும் பா.ஜ.க.வின் பொய்யை அம்பலப் படுத்தும் விதத்தில்தான் உள்ளன. அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சிகளை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு நேற்றுகூட உச்சநீதிமன்றம் தெளிவான ஒன்றைச் சொல்லியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியி னுடைய வங்கிக் கணக்கை முடக்குவது, அபராதம் போடுவது போன்றவற்றையெல்லாம் தேர்தல் நேரத்தில் செய்யக்கூடாது என்று சொல்லி யிருக்கிறது உச்சநீதிமன்றம். அதேபோன்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெளியிடங்களில் உரையாற்றும்பொழுதுகூட, தலை வர்களைக் கைது செய்வது, எதிர்க்கட்சிகளைப் பழி வாங்கும் போன்ற நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
18 தேர்தல்களில் இரண்டு தேர்தல்கள்
மிகவும் முக்கியமானதாகும்!
ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் இந்தத் தேர்தல். இந்த 18 தேர்தல்களில் இரண்டு தேர்தல்கள் மிகவும் முக்கியமானதாகும்.
ஒன்று, நெருக்கடி காலம் (மிசா) முடிந்து, இந்திரா காந்தி அம்மையார் நடத்திய தேர்தல். அதற்கடுத்து இப்பொழுது நடைபெறக்கூடிய தேர்தல். அந்தத் தேர்தலில், இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், தேர்தல் ஆணையத்தைத் தன்வயப்படுத்தவில்லை. ஆனால், இன்றைக்குத் தேர்தல் ஆணையம் என்பதே, ஒன்றிய ஆட்சியாளர்களின் கைகளில் இருக்கின்றது என்பது வெளிப்படையாகத் தெரியக்கூடிய சூழ்நிலை. ஆகவேதான், ஒப்புகைச் சீட்டினை முழுமையாக எண்ணவேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந் துள்ளது.
தேர்தல் ஆணையம் – சி.பி.அய். – அமலாக்கப் பிரிவு – வருமான வரித் துறையோடுதான் பா.ஜ.க. கூட்டணி!
அவர்கள் நடத்துவதும் கூட்டணி என்று சொன்னா லும், மோடியினுடைய உண்மையான கூட்டணி எங்கே இருக்கிறது என்றால், தேர்தல் ஆணையம் – சி.பி.அய். – அமலாக்கப் பிரிவு – வருமான வரித் துறை.
இவற்றோடு கூட்டணி சேர்ந்திருக்கிறார் மோடி.
எதிர்க்கட்சிகள், மக்களோடு கூட்டணி சேர்ந்திருக் கிறார்கள்; கட்சிகளோடு கூட்டணி வைத்திருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகளிலே பல வகையில் இருக்கின்றன. சில பேர், ”கடவுளுடன்” நாங்கள் கூட்டு சேர்ந்திருக் கின்றோம் என்று சொல்வார்கள்; சில பேர், வேறு வேறு வகையிலே கூட்டணி சேர்ந்திருக்கின்றோம் என்று சொல்வார்கள். அது அவரவர்களுடைய சிந்தனை போக்காகும். ஆனால், அதேநேரத்தில், இப்பொழுது அவர்கள், ”ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்று சொல்கிறார்கள். அந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அஜெண்டாவை நிறைவேற்றித் தயாராக வைத்திருக்கிறார்கள்.
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,
இது மக்கள் நாடாக இருக்காது!
ஒரே தேர்தல் என்பது, அதற்கு என்ன பொருள் என்றால், மக்களே, இந்தத் தேர்தல்தான் நீங்கள் சந்திக் கின்ற கடைசித் தேர்தல். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாடு, எங்கள் நாடாக இருக்குமே தவிர, மக்கள் நாடாக இருக்காது. குறிப்பிட்ட மதம், குறிப்பிட்ட ஜாதி இந்த அளவிற்குத்தான் இருக்கும் என்று சொல்வதற்காகத்தான், மறைமுகமாக ”ஒரே தேர்தல், ஒரே நாடு” என்று சொல்கிறார்கள்.
மனித உரிமைகளுக்காக
நடைபெறுகின்ற அறப்போர்!
எனவேதான், ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால், இரண்டாவது சுதந்திரப்போர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இந்தத் தேர்தல் ஓர் அறப்போர் – மக்கள் நடத்தவேண்டிய அறப்போர் -மனித உரிமைகளுக்காக நடைபெறுகின்ற அறப்போர் என்ற அளவிற்கு இருக்கிறது. ஆகவேதான், இந்தத் தேர்தல் பிரச்சாரத்தை நாங்கள் இன்றைக்குத் தொடங் குகின்றோம். என்னிடம்கூட, ”இந்த வயதிலே நீங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யவேண்டுமா?” என்று முக்கியமான நண்பர்களும், மற்றவர்களும் கேட்டார்கள்.
இந்தியாவைக் காப்பாற்றவேண்டும்; மக்களைக் காப்பாற்றவேண்டும் என்கிற நோக்கில்தான் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கின்றோம்!
அப்படியிருந்தும், இந்தத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டதற்கு என்ன காரணம் என்றால், இப் பொழுது இல்லாவிட்டால், எப்பொழுதும் இந்தியாவைக் காப்பாற்ற முடியாது; ஆகவேதான், இந்தியாவைக் காப்பாற்றவேண்டும்; நம்முடைய நாட்டைக் காப் பாற்றவேண்டும்; மக்களைக் காப்பாற்றவேண்டும் என்கிற நோக்கில்தான் தேர்தல் பிரச்சாரத்தை மேற் கொண்டிருக்கின்றோம்.
நான்கு சிறிய வெளியீடுகள்
உரையாற்றுகின்ற நேரம் மிகக் குறைவாக இருக்கும் என்பதினால், மக்களுக்கு விளங்குவதற்காக, நான்கு சிறிய வெளியீடுகளை வெளியிட்டு இருக்கின்றோம்.
1. ”மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டி யடிப்போம்!”
2. ”பா.ஜ.க.வின் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ஊழல்கள்- தேர்தல் பத்திர முறைகேடுகள்”
3. ”2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட் டணியை (தி.மு.க. அணியை) ஆதரிக்கவேண்டும் – ஏன்?”
4 ”பிரதமர் மோடிக்கு கருஞ்சட்டைக்காரனின் திறந்த மடல்!”
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி எப்படி நாட்டை ஆண்டு இருக்கிறார்? ஜனநாயகம் எப் படியெல்லாம் வதைபட்டுக் கொண்டிருக்கிறது என்பதையெல்லாம்பற்றி அவருக்கே ஒரு பகிரங்க மடல் போன்று, மக்களுக்கு விளங்குவதற்காக வெளி யிட்டு இருக்கின்றோம்.
கச்சத்தீவு பிரச்சினையை இப்பொழுது கையிலெடுப்பதற்கு என்ன காரணம்?
செய்தியாளர்: கச்சத்தீவு விவகாரத்தை இப்பொழுது பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: 50 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்வை, இப்போது தேடித் துருவி அலசி ஆராய்ந்து இப்பொழுது வெளியிடுகிறார் நம்முடைய பிரதமர் மோடி அவர்கள்.
தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள்மீது குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவும், இரண்டு கட்சிகளையும் பிரிக்கவேண்டும்; அல்லது இரண்டு கட்சிகள்மீதும் கோபம் வரவேண்டும் மக்களுக்கு என்பதற்காகவும் தேர்தல் நேரத்தில் சொல்லியிருக்கிறார்.
இது ஏன் என்பதற்காக நிறைய காரணங்களைச் சொல்லலாம்.
முதல் காரணம், தேர்தல் பத்திர ஊழல், இரண்டாவது எதிர்க்கட்சித் தலைவர்களையெல்லாம் கைது செய்வது.
சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆண்டு ஒன்றிற்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுப்போம் என்று சொன்னார். ஆனால், வேலை வாய்ப்பின்மை இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது. விலைவாசியைக் குறைப்போம் என்றார்கள், ஆனால், விலைவாசி விண்ணை முட்டக்கூடிய அளவிற்கு இருக்கிறது. இதையெல்லாம் மக்கள் மத்தியிலே எதிர்க்கட்சிகள் எடுத்துச் சொல்கிறார்கள். இந்தப் பிரச்சினை மிக விரிவாக மக்களிடையே விவா திக்கப்படுகிறது. இதை எப்படியாவது நிறுத்தவேண்டும்; திசை திருப்பவேண்டும். மக்கள் மத்தியில், இவை தேர்தல் நேரத்தில் ஒரு பேசு பொருளாக இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால், அதுபற்றித்தான் எதிர்க்கட்சிகள் பேசுகிறார்கள் என்றவுடன், குறிப்பாக நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கேள்விக் கணைகளைத் தொடர்ச்சியாக தொடுத்து வருகிறார்.
அவருடைய பிரச்சாரக் கூட்டங்களுக்கு ஏராளமான மக்கள் திரளுகிறார்கள்.
அவர்கள் சொல்லும் கச்சத்தீவு பிரச்சினை -உண்மைக்கு மாறான விஷயம்!
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அதனை எப்படி யாவது திசை திருப்பவேண்டும் என்பதற்காக – வேறு பிரச்சினையைக் கிளப்பவேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கச்சத்தீவு பிரச்சினை – உண்மைக்கு மாறான விஷயம் அது.
கச்சத்தீவைப் பொறுத்தவரையில், தி.மு.க. ஆட்சி யில், சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்கள். கண்டன நாள் கூட்டங்களையும் நடத்தினார்கள்.
அந்தக் கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டவர் களில் நானும் ஒருவன். அதுமட்டுமல்ல, திராவிடர் கழகத்தின் சார்பாக வழக்கும் போட்டோம்.
அன்றைக்கு அதை நியாயப்படுத்தியவர்; வெளி யுறவுத் துறை செயலாளராக இருந்தவர் ஜெய்சங்கர். இன்றைக்கு அவர் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சராக இருப்பவர். அவரே இன்றைக்கு மாற்றிப் பேசுகிறார்.
மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என்றார்களே, செய்தார்களா?
ஆகவே, கச்சத்தீவு பிரச்சினையை அவர்கள் கையிலெடுத்திருப்பது உண்மையாகவே மீட்டெடுக்கவேண்டும் என்பதற்காக அல்ல. மீனவர்களின் பிரச் சினைகளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தீர்ப்போம் என்று சொன்னார்களே, அப்படி செய்தார்களா? ஆனால், மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள்; மீனவர்களுடைய வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது; படகுகள் பறிமுதல் செய் யப்படுகின்றன. நம்முடைய மீனவர்கள் இலங்கைச் சிறைச்சாலையில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்காக, நீங்கள் ஆட்சிக்கு வந்து என்ன செய்தீர்கள்? என்று கேட்கக்கூடாது என்பதற்காகத்தான், இப்பொழுது கச்சத்தீவு பிரச் சினையை பிரதமர் மோடி கையிலெடுத்திருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகாலமாக
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி என்ன செய்தது?
அதைவிட மிக முக்கியமான ஒரு கேள்வி என்னவென்றால், அந்தப் பிரச்சினையில், காங்கிரசு தவறு செய்தது; தி.மு.க. தவறு செய்தது என்று ஒரு வாதத்திற்காக வைத்துக்கொண்டாலும், அது உண்மையில்லை என்றாலும், ஒன்றியத்தில், கடந்த 10 ஆண்டுகாலமாக மோடி பிரதமராக இருந்த பா.ஜ.க. ஆட்சி என்ன செய்தது?
இவர் ஏன் கச்சத்தீவை மீட்கவில்லை?
இலங்கைக்குப் பா.ஜ.க. ஒன்றிய ஆட்சிதான் கடன் கொடுத்தது.
இலங்கை நாடு பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டு, இலங்கை நாடே இல்லை என்று ஆனபொழுது, அதற்கு உதவியது மோடி அரசுதான். அப்படியென்றால், இவருக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு இருந்தது – கச்சத்தீவை ஏன் மீட்டெடுக்கவில்லை?
கொடுத்த வாக்குறுதிகளை
நிறைவேற்றினார்களா?
இப்பொழுது ஏன் கச்சத்தீவு பிரச்சினையை எடுத்திருக்கின்றார் என்றால், இதைப்பற்றி அதிகமாகப் பேசினால், பா.ஜ.க. ஆட்சியில் நடந்த தேர்தல் பத்திர திட்ட ஊழலைப்பற்றி பேசமாட்டார்கள்; வேலை வாய்ப்பின்மையைப்பற்றி பேசமாட்டார்கள்; ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை என்று சொன்னால், 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை வந்திருக்கவேண்டுமே, ஏன் வரவில்லை? என்று கேட்கமாட்டார்கள். அதேபோன்று, ஒவ் வொரு குடிமகன் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பொத்தென்று விழும் என்று சொன்னதைப்பற்றியும் கேட்கமாட்டார்கள்.
அதற்குப் பதிலாக கச்சத்தீவு பிரச்சினையைப்பற்றி அனைவரும் பேசவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி திசை திருப்புகின்றார்கள். ஆனால், கச்சத்தீவு அரசியல் இன்றைக்கு எடுபடாது. ஏனென்றால், தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள மக்கள் எல்லோரும் கடந்த 10 ஆண்டுகாலங்களில் பா.ஜ.க. என்ன செய்திருக்கிறது? என்று கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டார்கள். அதெல்லாம் ஊடகங்களிலும் வெளிவந்திருக்கிறது.
ஆகவேதான், பிரச்சினைகளைத் திசை திருப்பு வதற்காகத்தான் கச்சத்தீவு பிரச்சினை. இரண்டாவதாக, இதில் பிரதமர் மோடி அவர்களுக்குக் குற்றம் சாட்ட எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது. இவர் என்ன செய்திருக்க வேண்டும்?
பிரதமர் மோடி ஹீரோவாக இல்லை – ஜீரோவாகத்தான் இருக்கிறார்!
நீங்கள் செய்யவில்லை; நான் கச்சத்தீவை மீட்டெடுத்துவிட்டேன், பாருங்கள் என்று கச்சத்தீவு பிரச்சினையில் ஒரு ஹீரோ போன்று செய்திருந்தால், பாராட்டலாம்; ஆனால், அவர் ஹீரோவாக இல்லையே! அவர் ஜீரோவாகத்தான் இருக்கிறார். அவர் செய்கின்ற காரியங்கள் ஜீரோதானே! ஆகவேதான், ஹீரோவாக வந்து கேள்வி கேட்கக்கூடிய தகுதி அவருக்கு இல்லை.
அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கு வரும்பொழு தெல்லாம், தி.மு.க.மீது ஊழல் குற்றம் சாட்டினார். போதை மருந்து ஊழல் என்று சொன்னார். ஆனால், பா.ஜ.க. ஆட்சியின்மீது தேர்தல் பத்திர ஊழல் மிகப்பெரிய அளவிற்கு வந்தவுடன், அவர் சொல்வது மக்களிடம் எடுபடவில்லை. ஆகவே, புதிதாக எதை யாவது சொல்லவேண்டும்; அதை வைத்து கொஞ்ச நாள்கள் ஓட்டலாம் என்று நினைக்கிறார்.
”பொய் நெல்லைக் குத்தி பொங்கிலிட்டுக் காட்டுகின்ற” வேலைதான் மோடியினுடைய வேலை.
செய்தியாளர்: கச்சத்தீவினை இலங்கைக்கு 1974 ஆம் ஆண்டு கொடுத்திருக்கிறார்கள். 1976 இல் மீன் பிடிக்கும் உரிமையையும் கொடுத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு காங்கிரஸ் ஒன்றியத்திலும், தமிழ்நாட்டில் தி.மு.க.வும் ஆட்சியில் இருந்திருக்கின்றன; பல போராட்டங்களையும் தி.மு.க. நடத்தியிருக்கிறது. அப்பொழுதெல்லாம் மீட்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியை மட்டும் குற்றம் சொல்வதற்கான காரணம் என்ன?
முடிந்துபோன விஷயம் என்று சொன்ன பிறகு, மீண்டும் அதனை எடுக்க முடியாது!
தமிழர் தலைவர்: நீங்கள் கேட்கின்ற கேள்வியிலேயே பதில் இருக்கிறதே. அந்தப் பிரச்சினை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அது முடிந்துபோன விஷயம் என்று அவர்களே சொன்ன பிறகு, மீண்டும் அதனை எடுக்க முடியாது.
செய்தியாளர்: நீதிமன்றத்தில் வழக்கு நடந்திருப்பதால், அது தொடர்பாக எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று சொல்கிறீர்கள்; ஆனால், பா.ஜ.க. ஆட்சி கடந்த 10 ஆண்டுகளில் மீட்டெடுக்க எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஏன் சொல்லுகிறீர்கள்?
அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி, மிகப்பெரிய அளவிற்கு நான் வாய்ப்பினைக் கொண்டு வருகிறேன் என்பவர் மோடி!
தமிழர் தலைவர்: நீதிமன்றத்தை நான் மதிக்காமல், நீதிமன்றத்தைத் தாண்டி நாங்கள் சட்டம் செய்வோம் என்று சொல்வார். அப்படியும் செய்திருக்கிறார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக – அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி, மிகப்பெரிய அளவிற்கு நான் வாய்ப்பினைக் கொண்டு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார் மோடி. அதேபோன்று, உயர்ஜாதி ஏழைகள் என்று சொல்லி, அவர்களுக்காக 10 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக 50 சதவிகித இட ஒதுக்கீட்டைத் தாண்டி இருக்கிறார்.
காரணம் என்ன?
இவர்களிடம் இருக்கின்ற ‘ரோடு ரோலர்’ மெஜாரிட்டிதான்.
அவர் நினைத்திருந்தால், ஒரே வாரத்திற்குள் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி, குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் வாங்கியிருக்கலாமே! அந்த வாய்ப்பு அவருக்கு இருந்ததே.
எதற்காக காங்கிரஸ் கட்சியை
எதிர்க்கட்சியாக்கினார்கள் மக்கள்?
இன்னொன்று, காங்கிரஸ் ஆட்சி செய்யவில்லை என்பதற்காகத்தானே, அவர்களை மக்கள் எதிர்க்கட்சியாக்கினார்கள். மோடி அவர்கள் 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருகின்றபொழுது என்ன சொன்னார், ”60 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்யாத காரியங்களை, நான் ஆறே மாதங்களில் செய்து முடிப்பேன்” என்றார்.
காங்கிரஸ் கட்சிக்கு இல்லாத சக்தி தனக்கு இருக்கிறது என்று காட்டக்கூடிய அளவிற்குத்தானே அவர் விளம்பரப்படுத்துகிறார். அரசமைப்புச் சட்டத்தினை திருத்துகின்றார். சட்டங்களை நொடிப் பொழுதில் நிறைவேற்றுகிறார். எதிர்ப்பவர்களை நாடாளுமன்றத்தின் உள்ளேயே இருக்கக்கூடாத அளவிற்குச் செய்கின்றார்.
சர்வ வல்லமை படைத்தவராகக் காட்டிக் கொள்ளக்கூடிய மோடி – ”விஸ்வகுரு” என்றும் சொல்லிக் கொள்கிறார்.
‘விஸ்வ குரு’ என்றால் என்ன அர்த்தம் என்றால், ”உலகத்திற்கே குரு” என்பதுதான்.
நான் சொல்வதைத்தான் பின்பற்றி எல்லோரும் நடக்கவேண்டும் என்று சொல்கிறார்.
சரி, காங்கிரஸ் ஆட்சிக்கு சக்தி இல்லை. நீங்கள்தான் சக்தியில் உச்சகட்டத்திற்குப் போனவர்கள் ஆயிற்றே! ஆகவேதான், நீங்கள் செய்திருக்கலாமே என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.
பன்னாட்டளவில் கச்சத்தீவு பிரச்சினையை
எடுத்துச் செல்லவேண்டும்!
செய்தியாளர்: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால், கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
தமிழர் தலைவர்: கச்சத்தீவு பிரச்சினையில் ஆழமாகச் சிந்தித்து மீட்டெடுக்க முடியும். எப்பொழுது செய்ய முடியும் என்று கேட்டால், பெரும்பான்மையான ஆதரவுச் சூழ்நிலையை உருவாக்கி, பன்னாட்டளவில் அந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்லவேண்டும்.
நல்ல வாய்ப்பு, பிரதமர் மோடி அவர்களுக்கு இருந்தது. அந்த வாய்ப்பு என்னவென்றால், இலங்கை நாடு, பொருளாதாரத்தில் நலிவுற்று இருந்த நேரத்தில், இந்தியாதான் உதவி செய்தது. அதுபோன்ற ஒரு வாய்ப்பில், இதனையும் செய்திருக்கலாம்.
”குதிரை போன பிறகு, லாயத்தைப் பூட்டி வைப்பது போன்றது”
அடுத்ததாக, யூகங்களுக்குப் பதில் சொல்ல நான் தயாராக இல்லை. உங்கள் கேள்வி யூகம்தான்.
செய்தியாளர்: கச்சத்தீவு பிரச்சினையில், ஆர்.டி.அய். ஆதாரங்களையெல்லாம் அண்ணாமலை பிரச்சாரத் தின்போது காட்டியிருக்கிறார். தி.மு.க. அரசும், காங்கிரஸ் அரசும் கச்சத்தீவு தாரை வார்ப்பதற்குத் துணை போனதற்கான ஆதாரங்களையும் காட்டியி ருக்கிறார். பா.ஜ.க. மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தவுடன், கச்சத்தீவை மீட்டெடுப்போம் என்று உறுதிமொழி கொடுக்கிறார்களே?
அண்ணாமலை சொல்வது முழுவதும், தேவையில்லாத
கற்பனையான விஷயங்கள்!
தமிழர் தலைவர்: ஒரு ஆதாரத்தையும் அவர் காட்ட முடியாது. அப்போதே தமிழ்நாடு சட்டமன்றத்திலே சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நாடு முழுவதும் கண்டன நாள் கூட்டங்களை நடத்தியிருக்கின்றோம்.
அண்ணாமலை அவர்கள் சொல்வது முழுவதும், தேவையில்லாத கற்பனையான விஷயங்களாகும்.
அவர் சொல்வதற்கு ஆதாரமே இல்லை. பொய் போன்றதுதான். நிதானமில்லாத விஷயங்கள். அண்ணா மலைக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை.
செய்தியாளர்: தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைவர்கள், வேட்பாளர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள் என்றால், தமிழ்ந £ட்டில் திராவிட கட்சிகளுக்கு மாற்று தேவை – அவசியம் தேவை என்று தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்கிறார்களே, அதுபற்றி நீங்கள் சொல்லுகிறீர்கள்?
ஜனநாயகம் என்பதே, மாற்றம் வருவதுதான். சர்வாதிகாரம் என்பது மாற்றமே இல்லாததுதான்!
தமிழர் தலைவர்: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஜனநாயகம் என்பதே, மாற்றம் வருவதுதான். சர்வாதிகாரம் என்பது மாற்றமே இல்லாததுதான்.
மக்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் மாற்றலாம். அது மக்களுடைய கைகளில்தான் இருக்கிறது. ஆனால், மாற்றம் தேவைதான்; ஏமாற்று தேவை இல்லை. மாற்றம் தேவை என்றால், எப்பொழுது வேண்டுமானாலும் மக்கள் மாற்றிக் கொள்வார்கள்.
1967 ஆம் ஆண்டு எப்படி மக்கள் மாற்றினார்கள்? இறுதி முடிவு மக்கள் கைகளில்தான் இருக்கிறதே தவிர, எந்தத் தலைவர்களின் கைகளிலும் இல்லை.
செய்தியாளர்: பா.ஜ.க. தலைமையில் கூட்டணி அமைந்திருக்கிறது. 40 இடங்களில் அந்தக் கூட்டணி எத்தனை இடங்களைப் பிடிக்கும்?
தமிழர் தலைவர்: அவர்களுடைய முயற்சியெல்லாம், எப்படி நோட்டாவை தாண்டுவது என்பதுதான். அதற்காகத்தான் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து வருகிறார். அதற்காகத்தான் அண்ணாமலை எங்கே பார்த்தாலும் அலைந்துகொண்டிருக்கின்றார்.
பா.ஜ.க.விற்குப் போட்டி உண்மையில் நோட்டாவை தாண்டவேண்டும் என்பதுதான்!
அவர்களுக்குப் போட்டி என்பது உண்மையில் நோட்டாவை தாண்ட வேண்டும் என்பதுதான். ஆனால், இரண்டாவது கட்சியாக வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அ.தி.மு.க. தரப்பில் என்ன சொல்லப்படுகிறது என்றால், தேர்தலில் போட்டி என்பது எங்களுக்கும் – தி.மு.க.வுக்கும்தான் என்று விடாமல் சொல்கிறார்கள்.
அதுபோன்று பா.ஜ.க. சொல்வதற்குத் தயாராக இல்லை. ”நான் தி.மு.க.வை அழிப்பேன், ஒழிப்பேன்” என்று பிரதமராக இருக்கக்கூடிய ஒருவர் சொல்கிறார்.
தனிப்பட்ட முறையில், அந்தப் பதவியில் இதற்கு முன் இருந்தவர்கள் யாரும் இவ்வளவு தரம்தாழ்ந்து பேசியதில்லை.
”கொள்ளையடிக்க விடமாட்டோம்,
எங்களைத் தவிர!”
நான், யாரையும் கொள்ளையடிக்க விடமாட்டேன் என்று பிரதமர் மோடி சொல்லி முடித்த பிறகுதான், தேர்தல் பத்திரத் திட்டத்தை வெளிப்படையாக வெளி யிடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
அப்படியென்றால் என்ன வார்த்தை போட வேண்டும் என்றால், ”கொள்ளையடிக்க விடமாட்டோம், எங்களைத் தவிர!” என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.
செய்தியாளர்: இந்தியா கூட்டணியில், பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லையே?
இந்தியா கூட்டணி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது!
தமிழர் தலைவர்: பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியமே கிடையாது. நெருக்கடி காலத்திற்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில், யார் பிரதமர் என்று சொல்லி, தேர்தல் நடைபெறவில்லை.
உண்மையான ஜனநாயகம் என்னவென்று சொன் னால், மக்கள் வாக்களித்து, அதில் வெற்றி பெற்று, அந்த வெற்றியாளர்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ, அதுதான் நூற்றுக்கு நூறு சரியான ஜனநாயகமாகும்.
அந்த வகையில், இந்தியா கூட்டணி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடையே கூறினார்.