வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி – வாக்களிக்கின்ற நாள் வரையில் தோழர்களே உங்களுக்கு வேறு பணியே இருக்கக்கூடாது!
‘‘கருப்புச் சட்டைக்காரன் – காவலுக்குக் கெட்டிக்காரன்’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு
அப்பணியை கண்துஞ்சாமல் செய்யவேண்டும்!
தஞ்சை, ஏப்.1 வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி – வாக் களிக்கின்ற நாள் வரையில் தோழர்களே உங்களுக்கு வேறு பணியே இருக்கக்கூடாது. ‘‘கருப்புச் சட்டைக்காரன் – காவலுக்குக் கெட்டிக்காரன்’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு அந்தப் பணியை கண்துஞ்சாமல் செய்ய வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தஞ்சை: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
கடந்த 25-3-2024 அன்று மாலை தஞ்சாவூர் இராம சாமி திருமண மண்டபத்தில் திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு ஆ.வீரமர்த்தினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
என்னுடைய தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடர்ச்சியாக இருக்கும்!
என்னுடைய தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடர்ச்சியாக இருக்கும். தோழர்களுக்கு நான் சொல்கிறேன், திடீரென்று நீங்கள் அங்கே வர வேண்டும், இங்கே வரவேண்டும்; கொடியேற்ற வேண்டும் என்று தயவு செய்து எந்த நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யாதீர்கள்.
என்னுடைய வயது, என்னுடைய உடல்நலம் இவை அத்தனையும் நீங்கள் யோசித்து செயல் படுங்கள்.
நான் ஓய்வெடுத்துப் படுத்துத் தூங்குபவன் அல்ல. அப்பொழுதுகூட நான் அறிக்கையை எழுதிக் கொண்டிருப்பேன். ஓடிக்கொண்டிருக்கின்ற வாகனத்திலும் எழுதிக்கொண்டு செல்பவன் நான்.
எனவே, ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை தேர்தல் பிரச்சாரம் முடிவடையவிருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும், ஒரு தொகுதி என்று சொன்னால், ஒரு கூட்டத்தில்தான் பங்கேற்க முடியும் என்று நான் சொல்லியிருக்கிறேன்.
கட்டுப்பாட்டிற்கிணங்க
நாம் பணியாற்றவேண்டும்!
ஒரு நாளில் இரண்டு கூட்டம்; பயணங்கள் ஒரு மணிநேரம் அல்லது ஒன்றரை மணிநேரம் இருக்கும். இரவு 10 மணிக்குள் தேர்தல் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும். அந்தக் கட்டுப்பாட்டிற்கிணங்க நாம் பணி யாற்றவேண்டும்.
இரவு தேர்தல் பிரச்சாரம் முடித்துவிட்டு, அங்கேயே தங்கிவிட்டு, கூடுமானவரையில் இரவு பயணத்தைத் தவிர்க்கவேண்டும்.
ஒவ்வொரு தொகுதியிலும் நாமே நிற்பதுபோன்று பணியாற்றவேண்டும்!
எல்லோரிடமும் மரியாதை, அன்பு இருக்கிறது; அவர்களுடைய அன்பை நாம் என்றைக்கும் பெற்றிருக்கின்றோம். ஒவ்வொருவரும் நம்முடைய பங்களிப்பு என்னவென்று சொல்லி, ஒவ்வொரு தொகுதியிலும் நாமே நிற்பதுபோன்று பணியாற்ற வேண்டும்.
இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கின்ற ஆட்சி இருக்கிறதே, அது சாதாரணமான ஆட்சியல்ல. ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சி- நம்முடைய முதலமைச்சருடைய ஆட்சி என்பது இந்தியா விற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
நம்முடைய முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார்!
இந்தியாவில் வேறு எங்கேயும் இதுபோன்ற ஒரு வாய்ப்பு இல்லை. எதைப்பற்றியும் முதலமைச்சர் அவர் கள் கவலைப்படாமல், தேர்தல் பிரச்சாரப் பயணத் திட்டத்தை வகுத்து, அதன்படி செயல்பட்டு வருகிறார்.
இன்னுங்கேட்டால், கூட்டணி கட்சி வேட்பாளர்களின் பெயர்களே அறிவிக்காத நிலையிலும், ஏற்கெனவே பெயர் அறிவிக்கப்பட்டவர்களுக்கான சின்னம் இன்னும் ஒதுக்கப்படாமல் இருந்தாலும், நம்முடைய முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார்.
மோடி ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்ற ஒரே இலக்குடன்தான் பயணிக்கிறார் நம் முதலமைச்சர்!
அந்த சின்னம், இந்த சின்னம் என்பதல்லாமல், ஒரே இலக்குடன் – அதாவது மோடி ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்ற ஒரே இலக்குடன்தான் பயணிக்கிறார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
செய்தியாளர்கள் என்னிடம் கேட்டனர், ‘‘என்னங்க, உங்களுடைய கூட்டணியில் அவர் அங்கே போய் விட்டாரே, இவர் இங்கே போய்விட்டாரே” என்று.
எங்கே போனாலும், தலைவர்களால் இந்த வெற்றி வரப் போவதில்லை. மக்களால்தான் வெற்றி பெறுவோம்.
கருத்துக் கணிப்புகளை நாங்கள் ஒப்புக்கொள் வதில்லை. அது கருத்துத் திணிப்புதான்.
நாம் என்றைக்கும் மக்களோடு பயணித்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள்!
ஆனால், மக்கள் கணிப்பை நம்மால் உணர முடிகிறது. காரணம், நாம் என்றைக்கும் மக்களோடு பயணித்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள்.
ஆகவே, அந்தப் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். நீங்கள் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் – மீண்டும் ஜூன் 4 ஆம் தேதியன்று – கலைஞருடைய நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு அடுத்த நாள் தேர்தல் முடிவு வரவிருக்கின்றது. அந்த முடிவில், ஓட்டுப் பெட்டி திடீரென்று கருத்தரிக்காவிட்டால், ஓட்டுப் பெட்டி திடீரென்று கருத்தரிக்கக் கூடாது. அது அவ்வளவு சுலபத்தில் நடக்கும் என்று நீங்கள் நினைக்காதீர்கள். நடக்கவும் விடமாட்டோம்.
இப்போது அரசு அதிகாரிகளுக்கும் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று நன்றாகப் புரிந்துவிட்டது.
சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் முரண் பாடுகள் எப்படி நடந்தன? உச்சநீதிமன்றம் அந்தத் தேர்தல் அதிகாரியைக் கண்டித்து, என்ன முடிவு சொன் னது என்று உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.
இந்தியா முழுக்கப் பார்த்தீர்களேயானால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை – 2014 ஆம் ஆண்டு மோடி அவர்கள் பெற்ற ஆதரவு- 2019 ஆம் ஆண்டு அவர்கள் செய்த வித்தைகள் எல்லாம் – வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மத்தியில் எடுபடாது.
அவர்கள் வித்தைகளைக் காட்டலாம்; பணத்தை நிறைய செலவு செய்யலாம்; ஊடகங்களை அவர்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள்.
இங்கே ஊடக நண்பர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். இவர்கள் ஒருவரை பேட்டி எடுத்தால், அந்தப் பேட்டி அப்படியே ஊடகத்தில் வரவேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. ஏனென்றால், பெருமுதலாளிகள், கார்ப்ப ரேட் முதலாளிகளின் கைகளில்தான் அந்தப் பிரச்சார கருவிகள் இருக்கின்றன.
ஆகவே, இவற்றையெல்லாம் தாண்டி முடியுமா? என்று கேட்டார்கள்.
முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்கள்தான் நாங்கள்.
எப்பொழுது?
நெருக்கடி காலகட்டத்தில் – மிசாவின்போது.
‘‘சிறைச்சாலையிலேயே நாங்கள் இறந்தாலும் பரவாயில்லை!”
‘மிசா’வில் கைதாகி, நாங்கள் எல்லாம் சிறைச் சாலையில் இருந்தபொழுது, சிறை அதிகாரியாக இருந்த ஒருவர், என்னையும், முரசொலி மாறனை யும் அழைத்து, ‘‘நாளைக்கு உங்கள் இயக்கத்தைத் தடை செய்யப் போகிறார்கள். வேறு எந்த இயக் கமும் இருக்காது. நீங்கள் இனிமேல் வெளியில் போக முடியாது. சிறைச்சாலையில் நாங்கள் என்ன சொல்கிறோமே, அதற்குக் கட்டுப்பட்டுத்தான் நீங்கள் நடக்கவேண்டும்” என்றார்.
உடனே நாங்கள், ‘‘மிக்க மகிழ்ச்சி. இங்கே நாங்கள் இறந்தாலும் பரவாயில்லை. ஆனால், ஒன்றே ஒன்று, அரசியல் என்பது நீங்கள் நினைப்பது போன்று கிடையாது. இரண்டும் இரண்டும் நான்கு அல்ல. இரண்டும் இரண்டும் பூஜ்ஜியமாகலாம்; இரண்டும் இரண்டும் இரு நூறாகலாம்; இரண்டும் இரண்டும் 14 ஆகலாம். நாளை காலையில் என்ன செய்தி என்று தெரியாத தற்குப் பெயர்தான் அரசியல்” என்றோம்.
இன்னும் ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்.
பங்களாதேசை, ‘தங்க வங்கம்’ என்று சொல்கிறார்களே, அந்த பங்களாதேசில், முஜ்புர் ரகுமான் அவர் களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. என்றைக்கு அவர் தூக்கில் போடவேண்டும் என்று நிர்ணயித்தார்களோ, அன்றைக்குத்தான் அவர் ‘‘சோனார் பங்களா” என்று அந்த நாட்டின் அதிபராக மாறினார் என்பது பழைய வரலாறு.
ஆகவே, அச்சுறுத்தல் எல்லாம் எங்களை ஒன்றும் செய்யாது.
இயற்கையின் விதி
இயற்கையில் ஒரு தத்துவம் உண்டு – ‘‘ஒரு பொருளை இழுத்துக்கொண்டே போனால், ரப்பர் துண்டைக்கூட இழுத்துக்கொண்டே போனால், ஒரு குறிப்பிட்ட அள விற்குமேல், அது தானாக அறுந்துபோகும்.” இதுதான் இயற்கையின் விதி.
மோடி தமிழ்நாட்டிற்கு வந்து எவ்வளவுக்கெவ்வளவு பேசுகிறாரோ –
நமக்கு வாக்கு வங்கி பெருகும்!
ஒன்றிய ஆட்சியான பா.ஜ.க. மோடி ஆட்சியைப்பற்றி இந்தியா முழுவதும் உள்ளவர்கள் தெரிந்துகொண்டனர். கடந்த முறை வடபுலத்தில் இவர்களை நம்பினார்கள். அப்பொழுதும் தென்னாடு அவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை. ஆனால், இப்பொழுது வடமாநிலங் களில் அவர்களுக்கு ஆதரவான சூழல் இல்லை என்பதைப் புரிந்துகொண்டதினால்தான், தென்னாட்டில், ‘‘மோடி வருகிறார், ஓடி வருகிறார், தேடிவருகிறார், மீண்டும் வருகிறார்” என்றெல்லாம் சொன்னாலும், அவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழ்நாட்டிற்கு வந்தாலும், அப்படி வருகின்றபொழுது அவர் நிறைய பேசவேண்டும்; அவருடைய கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்; அவர் எவ்வளவுக்கெவ்வளவு பேசுகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு நமக்கு வாக்கு வங்கி பெருகும். அதனை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள்.
‘‘சுயமரியாதை’’ என்ற வார்த்தையைக்
கண்டுபிடித்தவர் தந்தை பெரியார்!
தோழர்கள், தம்முடைய கடமையில் தெளிவாக இருக்கவேண்டும். அதற்கடுத்ததாக சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு விழா வரவிருக் கிறது. ‘‘சுயமரியாதை” என்கிற வார்த்தையைக் கண்டுபிடித்தவர் தந்தை பெரியார் அவர்கள்தான். அதனை ஓர் இயக்கத்திற்குப் பயன்படுத்தினார்.
அமெரிக்காவில் அண்மையில் ஓர் இயக்கத் தைத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த இயக்கத் திற்கு என்ன பெயர் என்றால், ‘‘சுயமரியாதை இயக்கம்” என்பதுதான். எல்லோருக்கும் சுயமரியா தையை உண்டாக்கவேண்டும் என்று டாக்டர் ஒருவர் புத்தகம் எழுதியிருக்கிறார்.
ஆனால், இதை நூறு ஆண்டுகளுக்குமுன்பு தந்தை பெரியார் அவர்கள் சொல்லியிருக்கிறார். நீங்கள் எத்தனை அகராதிகளைப் புரட்டிப் பார்த்தாலும், சுயமரியாதை என்கிற வார்த்தைக்கு ஈடான ஒரு வார்த்தை கிடையாது. அப்படிப்பட்ட சுயமரியாதை இயக்கத்திற்குத்தான் நூற்றாண்டு விழா!
அந்த இயக்கத்தினால்தான், சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. அந்த நூற் றாண்டு விழாவினைக் கொண்டாடவிருக்கின் றோம்.
திராவிடத்தை ஒருபோதும்
எவராலும் ஒழிக்க முடியாது!
அதற்கடுத்து நண்பர்களே, ‘‘திராவிடத்தை ஒழிப் போம்” என்று ஒரு சிலர் புரியாமல் சொல்கிறார்கள்.
திராவிடத்தை ஒருபோதும் எவராலும் ஒழிக்க முடியாது. திராவிடம் என்பது, அதனுடைய தத்துவம் மனிதநேயம். திராவிடம் என்பது, ரத்தப் பரிசோதனை செய்து பார்ப்பது அல்ல.
திராவிடம் என்பது உலக நாகரிகத்தில் எவ்வளவு முக்கியம் பெற்றது என்று சொல்லுகின்ற நேரத்தில், ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்லவேண்டும். சர்ஜான் மார்ஷல் என்கிற ஒரு தொல்லியல் ஆய்வாளர் – வெளிநாட்டிலிருந்து வந்தவர்.
1917 ஆம் ஆண்டு அவர் எழுதுகிறார், ‘‘சிந்துவெளி நாகரிகத்தில் கண்டெடுத்ததையெல்லாம் பார்த்தால், இதுவரையில் எங்கும் இல்லாத வாய்ப்பைப் அந்நாகரிகத் தில் பெற்றிருக்கிறார்கள். அதனுடைய தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம்” என்று கூறுகிறார் – அதனுடைய நூற்றாண்டு விழா!
எனவே, மிக முக்கியமான இரண்டு நூற்றாண்டு விழாக்களை நாம் நடத்தவிருக்கின்றோம்.
எனவே, திராவிடம் என்பது இருக்கிறதே, அது வெறும் இடத்தைக் குறிப்பதல்ல. அது முழுக்க முழுக்க பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுப்பதாகும்.
எனவே, அதைப்பற்றி நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும், தேர்தல் முடிந்த பிறகு.
‘‘மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப்போம்!’’
தோழர்களே, இந்தத் திட்டங்களையெல்லாம் தீர்மானமாக இங்கே நிறைவேற்றி இருக்கின்றோம். இங்கே வெளியிடப்பட்ட புத்தகங்களை வீடுதோறும் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும்.
‘‘மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப்போம்” – இதில் உள்ள ஒரு வரியைக்கூட மறுக்க முடியாது. அவ்வளவும் ஆதாரப்பூர்வமான செய்திகளாகும்.
ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி வந்தவர்கள் செய்த ஊழலைப்பற்றி உச்சநீதிமன்றமே சொல்லியிருக் கிறது ஒன்றிய அரசின் தேர்தல் பத்திரத் திட்டத்தைப்பற்றி.
குப்பையைக் கிளறக் கிளற வரும் என்று சொல் வார்கள் பாருங்கள், அதுபோன்று, ஒவ்வொரு நாளும் அவர்கள் செய்த ஊழல்பற்றிய செய்திகள் வெளி வந்துகொண்டிருக்கின்றன.
மற்ற தேர்தலின்போது என்ன பேசவேண்டும் என்று யோசிப்பார்கள். ஆனால், இந்தத் தேர்தலில், எதைப் பேசுவது? எதை விடுவது? என்று தெரியவில்லை. அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.
‘‘ஊழல், தேர்தல் பத்திரம்!”
‘‘தேர்தல் பத்திர ஊழல்” – ‘‘ஊழல், தேர்தல் பத்திரம்” என்று சொல்லவேண்டும். நடக்கவிருக்கின்ற தேர்தல் பத்திரமாக இருக்கவேண்டும்.
இப்பொதுக்குழுக் கூட்டம் முடிந்தவுடன், வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி – வாக்களிக்கின்ற நாள் வரையில் தோழர்களே உங்களுக்கு வேறு பணியே இருக்கக்கூடாது. ‘‘கருப்புச் சட்டைக்காரன் – காவலுக்குக் கெட்டிக்காரன்” என்று சொல்லக்கூடிய அளவிற்கு அந்தப் பணியை கண்துஞ்சாமல் செய்யவேண்டும்.
இந்த வேட்பாளர், அந்த வேட்பாளர், அவர் அழைத் தாரா?, இவர் மதித்தாரா? என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது. காரணம், நம்முடைய தலை முறைகளைக் காப்பாற்றியாகவேண்டும்.
நம்முடைய தலைமுறையினரின் படிப்பு, உத்தி யோகம், சமூகநீதி அவற்றைப் பாதுகாக்கவேண்டும்.
இப்பொதுக்குழுவினை குறுகிய காலத்தில் சிறப்பாக செய்தவர்களுக்குப் பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுவரெழுத்துப் பிரச்சாரத்தை எழுதுங்கள்!
2025 ஆம் ஆண்டு ஒரு பெரிய வாய்ப்பு என்ன வென்றால், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – திராவிட சிந்துவெளி நாகரிகப் பிரகடன நூற்றாண்டு விழா நடைபெறவிருக்கிறது.
அதுகுறித்து தேர்தல் முடிந்தவுடன் எல்லா இடங்களிலும் சுவரெழுத்துப் பிரச்சாரத்தை எழுதுங்கள் தோழர்களே!
சுயமரியாதை இயக்கப் பொன்விழா தஞ்சை திலகர் திடலில் பெரிய அளவில் நடைபெற்றது. அதனுடைய நூற்றாண்டு விழா நாடெங்கும், உலகெங்கும் நடைபெற விருக்கிறது. காரணம், பெரியார் உலகமயமாகி இருக்கிறார் என்பது மிகவும் முக்கியம்.
தந்தை பெரியாரின் பெயரைக் குறிப்பிட்டு, அவதூறு செய்திருக்கிறார்கள்!
பார்ப்பனர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். நாம் இங்கே நிறைவேற்றிய தீர்மானங் களில் ஒன்றான டி.எம்.கிருஷ்ணாவிற்கு, ‘சங்கீதா கலாநிதி’ விருது கொடுக்கவிருக்கிறார்கள் என்றவுடன், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், தந்தை பெரியாரின் பெயரைக் குறிப்பிட்டு, அவதூறு செய்திருக்கிறார்கள் சிலர் திட்டமிட்டு. அதில் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி.யினுடைய பின்னணி இருக்கிறது. அவர்களையும், தேர்தல் முடிந்தவுடன் அவர்களை மக்கள் மன்றத்திலும் நிறுத்தவேண்டும்; நீதிமன்றத்திலும் நிறுத்தவேண்டும். இப்பொழுது நம்முடைய கவனம் முழுவதும் ஒரே இலக்கில்தான் இருக்கவேண்டும் – அது இந்தியா கூட் டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்பதுதான்!
மக்கள் மத்தியில் சொல்லவேண்டியது
நமது கடமை!
உங்கள் அனைவருக்கும் நன்றி!
நாம் உற்சாகத்தோடு சொல்லவேண்டும் –
நாம் வெற்றிக் கனி பறிப்போம்!
வெற்றி என்பது நம்முடைய உரிமை!
வெற்றி என்பது மக்கள் மத்தியில் சொல்லவேண்டியது நமது கடமை.
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.