கவிஞர் கனிமொழியின் கணீர் குரல்!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண் களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட முன் வடிவு மக் களவையில் நேற்று முன்தினம் (20.9.2023) நிறைவேற்றப்பட்டது.

பொதுவாக இதற்கு எல்லாக் கட்சிகளும் தம் ஆதரவுக் கரத்தை உயர்த்தின.

அதே நேரத்தில் இது 2029இல் தான் நடைமுறைக்கு வரும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருப்பது – அசல் ஏமாற்று வேலை – தேர்தல் கண்ணோட்டத்தில் மக்களை மயக்கும் ‘மாயாஜாலம்’ என்பதில் எள் மூக்கு முனை அளவும் அய்யம் இல்லை.

2010ஆம் ஆண்டில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது இதற்கான சட்டமுன் வடிவு மாநிலங் களவையில் நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை. பொதுவாக கட்சி சார்பற்ற முறையில் ஆண்களுக்கு இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு, உள்ளார்ந்த ஈடுபாடு கிடையாது என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாகும்.

இது குறித்து தி.மு.க. மக்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்கள் மக்களவையில் தந்தை பெரியாரின் கூர்மையான கருத்தைக் கணீர் என்று பொருத்தமாகச் சுட்டிக் காட்டினார்.

“இந்த விவாதத்தில் நான் பேசத் தொடங்கிய போதே எதிர்ப்புக் குரல் எழுப்புகிற பிஜேபியினருக்கு தந்தை பெரியார் சொன்னதை நினைவுப்படுத்துகிறேன். “பெண் களை மதிக்கிறோம், அவர்களின் சுதந்திரத்துக்காகப் பாடு படுகிறோம் என்ற ஆண்களின் பேச்சுக்கள் பெண்களை ஏமாற்றும் சூழ்ச்சி மட்டுமே” என்று தந்தை பெரியார் கூறி யதை இந்த அவையில் நினைவுபடுத்துகிறேன்!” என்று எடுத்துக்காட்டியது பொன் எழுத்துகளால் பொறிக்கத் தகுந்ததாகும்.

2010இல் இதற்கான சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட்ட போது – இன்றைய உ.பி. முதல் அமைச்சரும், அன்றைய பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினருமான யோகி ஆதித்யநாத் கூறியது என்ன?

இது சட்டமாக்கப்பட்டால் எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன் என்று ஆவேசமாகப் பேசவில்லையா?

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும், பெண்கள் உரிமைப் பிரச்சினையில் எவ்வளவுக் காலமாக அக்கறை செலுத்தி வருகிறது என்பதையும் கவிஞர் கனிமொழி சுட்டிக் காட்டத் தவறவில்லை.

நீதிக்கட்சி 1921ஆம் ஆண்டு மே 10ஆம் நாள் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் தீர்மானத்தை இந்தியாவிலேயே முதன் முதலாக நிறைவேற்றியது!

1927ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் முறையாக தனது முதல் சட்டமன்ற பெண் உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது. அவர்தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி; தேவதாசி என்னும் பெண்களுக்கு எதிரான கொடுமையை ஒழித்தவர் அவர்தான்.

1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த முதல் சுய மரியாதை மாகாண மாநாட்டில், தந்தை பெரியார்  நிறைவேற்றிய பெண்களுக்குக் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு மற்றும் அரசியலில் இடஒதுக்கீடு வேண்டும் என்ற தீர்மானத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை கவிஞர் கனிமொழி. இதற்காக மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் இவர் ஆவார்.

விவாதத்தைத் தொடங்கிய மக்களவையின் காங்கிரஸ் குழுத் தலைவர் திருமதி சோனியா காந்தி சட்டமுன் வடிவை வரவேற்றதுடன், இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.

2014ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே பெண் களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை செயல்படுத்துவோம் என்று கூறிய பிஜேபி கிட்டதட்ட 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், அதற்கான சட்டத்தை நிறைவேற்றி, செயல்படுத்தாதது ஏன்? ஏன்?

2024ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கும் நேரத்தில் 2029இல் செயல்படுத்தப்படும் என்பதெல்லாம் போகாத ஊருக்கு வழிகாட்டுவது தானே!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நேற்றைய (21.9.2023) ‘விடுதலை’ அறிக்கையில் முக்கியமான ஒன்றைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

சமூகநீதியை உள்ளடக்கிய பாலின நீதி என்பதுதான் முக்கியம் என்பது தான் அந்த முக்கிய கருத்தாகும்.

பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு இருப்பது போல பிற் படுத்தப்பட்டவர்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் இதில் இடஒதுக்கீடு உள்ளடக்கமாக இருப்பது மிகவும் அவசியமாகும்.

மக்கள் தொகையில் 50 விழுக்காடு உடைய பெண்கள் – நடக்கவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் கட்டுப்பாடாக நின்று, ஒன்றிய பிஜேபி ஆட்சியை வீழ்த்துவதுதான் சமூக நீதியை உள்ளடக்கமாகக் கொண்ட பெண்களுக்கான இடஒதுக்கீடு செயல் பாட்டுக்கு வருவதற்கான ஒரே வழியாகும்! மகளிர் சிந்திப்பார்களாக! செயல்படுவார்களாக!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *