நமது வாழ்வின் முக்கிய பயணம் இதோ (1)
வாழ்க்கையில் நாம் பலவித பயணங்களை வெளியில் மேற்கொண்டு மகிழ்கிறோம்; இளைப் பாற்றிக் கொள்கிறோம். ஆனால் நமது புறத்தை முதன்மையாக்கி இப்படிப்பட்ட அனுபவங்களைத் தேடும் நாம், நமது அகத்தை – மனதில் நிரந்தர மகிழ்ச்சியை, களைப்பறியா இளைப்பாற்றலைப் பெறுவதில் பல பயணங்களைப்பற்றி எண்ணி யிருக்கிறோமா?
பலரின் விடை ‘இல்லை’ என்பது தானே!
இந்தக் கேள்வியை நாம் ஒவ்வொருவரும் கேட்டு விடை தேடுதல் என்பது வாழ்வில் பல பிரச்சினைகளுக்கு விடைகளைக் கொண்டு வந்து குவிக்கும்!
அதில் ஒன்று மன்னிக்கும் பண்பை நமது வாழ் வின் ஒரு முக்கிய பயணமாக ஆக்கிக் கொள்ளல்.
அண்மையில் ஒரே வகை நூல்களைப் படிக்காமல் புதுப்புது தலைப்புகளில் வெளி வந்துள்ள நூல்களைத் தேடிப் பிடித்துப் படித்தேன். அதில் ஒன்று “The Things you can see only when you slow down” How to be Calm in a Busy World” என்ற தலைப்பில் ஹேமின் சுனீம் என்ற ஒரு ஜென் புத்த தத்துவவாதியால் எழுதப்பட்டுள்ள நூல். அமெரிக்காவின் பிரபல பல்கலைக் கழகங் களான பெர்க்லி, ஹார்வேர்டு, பிரின்ஸ்டன் போன்றவைகளில் படித்ததோடு, கொரியாவில் புத்த நெறி பயிற்சியும் பெற்று, தற்போது மஸாசுசெட்ஸில் உள்ள ஹாம்ஹர்ஸ்ட் கல்லூரியில் பவுத்தம் போதிக்கிறார்!
மேற்காட்டிய நூல் “வேகத்தைக் குறையுங்கள்; அப்போது தான் பலவற்றை முழுமையாகப் பார்க்க முடியும்” என்கிறது.
ஏதோ எனக்கே சொல்வதைப் போல இருந்தது; படித்தேன்; சுவைத்தேன் – உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்க்கையில் நமக்குத் துரோகம் இழைத்து நம்மை விட்டுப் போனவர்கள், நம்மிடம் பழகிக் கொண்டிருந்தபோதே நமது பொருளை கவர்ந்து எடுத்துச் சென்றவர்கள், அத்தோடு அதை மறைத்துக் கொண்டு பழகுபவர்கள், முதுகில் குத்திவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் பாசாங்கு செய்து பழகுபவர்கள்.
இவர்களை மன்னிக்கப் பழகிக் கொள்வதே மன்னிக்கக் கற்றுக் கொள்ளும் பயணத்தில் அடுத்தடுத்த பல மைல் கற்கள்!
அது அவ்வளவு எளிதில் வராது. சற்று நின்று நிதானமாக யோசித்தால் மட்டுமே படிப்படியாகக் கற்றுக் கொள்ள முடியும்.
அப்படி கற்கும்போதுகூட நூற்றுக்கு நூறு மார்க் வாங்குவது கடினம் – மிகக் கடினம். காரணம் மனம் பக்குவப்பட வேண்டும். நமது சிந்தனை அலைகள் மிக உயரத்திற்கு எழும்பினால் மட்டுமே அது சாத்தியப்படும்!
நாம் ஏன், துரோகம் செய்து நம்முடன் பழகிய வர்களை மன்னிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு முதல் சரியான விடை என்ன தெரியுமா?
நாம் அத்தகையவர்களை மன்னிக்க வேண்டும்; மன்னிக்கப் பழக வேண்டும் என்பது அவர்களுக்காக அல்ல – நமக்காக நமது நலனுக்கு – உண்மையாகவே முழுவதும் நமக்காகவே.
“அவர்கள் அதற்குத் தகுதியானவர்களா?” என்ற கேள்வியைக் கேட்காதீர்கள். மாறாக, “நான் அதற்குத் தகுதியானவன், காரணம் நான் மனிதத்தை ஏற்றவன் – உண்மை மானுடப் பண்பு எனக்குள்ளதா இல்லையா என்ற சோதனையில் நான் வெற்றி பெற வேண்டாமா? தோல்வி யடைந்தால் நான் சராசரி என்ற பள்ளத்தில் வீழ்ந்தவன் ஆவேன்!” என்ற உணர்வினைப் பெறுங்கள்.
மன்னித்து விட்டதால் ஏற்படும் மிகப் பெரிய லாபம் நமக்கு என்ன தெரியுமா? மகிழ்ச்சி – மட்டிலா மகிழ்ச்சி – லேசான இதயம் – பயணத்தில் சுமையில்லா பயணம் – Less Luggage more Comfort – என்பது ரயில் பயணம் செய்யும்போது தூக்கிச் சுமக்கும் சாமான்களுக்கு மட்டுமா? மனதில் தேவையற்று தூக்கிச் சுமந்து, துன்ப அலைகளுக்கிடையே சிக்கிச் சீரழிந்து, சின்னா பின்னப்பட்டு ‘நொந்து நூலாகி’ வாழ்வதிலிருந்து விடை – ‘மன்னித்தோம்’ என்பதில்தானே கிடைக்கும் இல்லையா? மேலும், இந்தப் பயணம் எப்படிப்பட்ட நன்மைகளை நமக்கு ஈட்டித் தரும் என்பதை நாளை பார்ப்போமே!
(தொடரும்)