தேர்தலில் போட்டி போடுகின்ற வேட்பாளரைவிட, அரசியல் கட்சிகளைவிட, நமக்குத்தான் பொறுப்பு அதிகம்!
அரசியல் கட்சியில் ஒருவர் தோற்றால், அடுத்த வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பார்; அல்லது வேறு கட்சிக்குப் போய்விடுவார்!
நமக்கு அப்படி இல்லை – நம் மக்களுடைய வாழ்வை –
அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும்!
தஞ்சை: திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில்
தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!
தஞ்சை, மார்ச் 31 தேர்தலில் போட்டி போடுகின்ற வேட் பாளரைவிட, போட்டி போடுகின்ற அரசியல் கட்சிகளை விட, நமக்குத்தான் பொறுப்பு அதிகம் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். அரசியல் கட்சியில் ஒருவர் தோற்றால், அடுத்த வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பார்; அல்லது வேறு கட்சிக்குப் போய்விடுவார். நமக்கு அப்படி இல்லை. நம்முடைய மக்களுடைய வாழ்வு – அடுத்த தலைமுறையினரின் வாழ்வு எங்கேயோ போய்விடும். அந்தத் தலைமுறையைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும். இதனால் நமக்கு ஓர் அவலம், ஒரு பழி ஏற்பட்டுவிடும். அந்தக் கவலைதான் நமக்கு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தஞ்சை: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
கடந்த 25-3-2024 அன்று மாலை தஞ்சாவூர் இராமசாமி திருமண மண்டபத்தில் திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு ஆ.வீரமர்த்தினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
இன்றைக்கு வந்திருக்கின்ற சிக்கல் என்பது சாதாரணமானதல்ல. இப்பொழுது ஒன்றியத்தில் இருக்கின்ற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மோடி அரசு, எல்லாவற்றிற்கும் சமாதி கட்டவேண்டும் என்று நினைக்கிறார்கள்; எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். தாங்கள்தான் எதிலும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். எல்லாத் துறைகளிலும், அரசியலிலும் எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் வகையில் அவர்கள் சாம, பேத, தான, தண்டம் என்று சொல்லக்கூடிய எல்லா முறைகளையும் அதிகார வெறித் திமிரோடு கையாளுவோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.
‘‘இந்தியா கூட்டணி’’யை வெற்றி பெற செய்வதுதான் நம்முடைய அடிப்படைப் பணி!
இந்தச் சூழ்நிலையை, மக்களுக்கு எடுத்துக் காட்டி, கொஞ்சம்கூட அச்சமின்றி, ‘‘இந்தியா கூட்டணி”யை வெற்றி பெற செய்வதுதான் நம் முடைய அடிப்படைப் பணி. அது – யாரோ சிலருக்குப் பதவி கொடுப்பதற்காக அல்ல.
நம்மால் முடிந்த அளவிற்குச் செய்யவேண்டும்!
நம்முடைய நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க,
சமூகநீதியைப் பாதுகாக்க,
சம தர்மத்தைப் பாதுகாக்க,
சம வாய்ப்பை உறுதி செய்ய –
இப்படி ஒவ்வொரு துறையிலும் அது நமக்குத் தேவை.
ஆகவேதான், நம்முடைய தேர்தல் பிரச்சாரத்தை நம்மால் முடிந்த அளவிற்குச் செய்யவேண்டும்.
தோழர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால்,
கழகப் பொறுப்பாளர்கள் எல்லாம் இங்கே இருக் கிறீர்கள்; ‘‘கூட்டணி கட்சியினர், நம்மை மதிக்கவில்லை, அவர்கள் நம்மைக் கூப்பிடவில்லை; நம்மை அலட்சியப்படுத்துகிறார்கள்” என்று சொல்கிறார்கள்.
எங்கே இயக்கம் பலமாக இருக்கிறதோ, அங்கே அலட்சியமாக அவர்கள் இருக்க முடியாது. எங்கே இயக்கம் கொஞ்சம் குறைவாக இருக்கிறதோ, அங்கே அவர்கள் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கலாம்.
அரசியல் கட்சிகளைவிட,
நமக்குத்தான் பொறுப்பு அதிகம் உள்ளது!
எப்படி இருந்தாலும், யார் அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் – ஒன்றியத்தில் இருக்கின்ற மோடி ஆட்சியை மாற்றவேண்டும் என்பதில், போட்டி போடுகின்ற வேட்பாளரைவிட, போட்டி போடுகின்ற அரசியல் கட்சிகளைவிட, நமக்குத்தான் பொறுப்பு அதிகம் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.
அரசியல் கட்சியில் ஒருவர் தோற்றால், அடுத்த வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பார்; அல்லது வேறு கட்சிக்குப் போய்விடுவார். நமக்கு அப்படி இல்லை. நம்முடைய மக்களுடைய வாழ்வு – அடுத்த தலை முறையினரின் வாழ்வு எங்கேயோ போய்விடும். அந்தத் தலைமுறையைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும். இதனால் நமக்கு ஓர் அவலம், ஒரு பழி ஏற்பட்டுவிடும். அந்தக் கவலைதான் நமக்கு.
நமக்கும், நம் தோழர்களுக்கும்
பழி ஏற்பட்டுவிடக் கூடாது!
என்ன பழி வரும்?
பெரியார் காலத்தில், அன்னை மணியம்மையார் அவர்கள் காலத்தில் எல்லாம் எவ்வளவோ எதிர்ப்பை, எவ்வளவோ நெருக்கடிகளைத் தாண்டி இயக்கத்தைக் காப்பாற்றினார்கள். ஆனால், இவர்கள் காப்பாற்றத் தவறிவிட்டார்களே என்கிற பழி, நமக்கும், நம் பரம்பரையாக இருக்கக்கூடியவர்களுக்கும், நம்முடைய தோழர்களுக்கும் ஏற்படக்கூடாது.
தோழர்கள் மான, அவமானம்
பார்க்கக் கூடாது!
ஆகவேதான், வாழ்வா? சாவா? என்பதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. அந்த நிலையில், நம்மை நாம் முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு செய்வது அரசியலுக்காக அல்ல – தேர்தல் என்பது நமக்குக் கொள்கைப் பயணத்திற்கு வரக்கூடிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது என்பது தான்.
ஆகவேதான், தோழர்கள் மான, அவமானம் பார்க்கக் கூடாது.
அய்யா சொல்வார் பாருங்கள்,
‘‘குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்”
பொதுவாழ்க்கைக்கு எப்பொழுது வந்துவிட்டீர் களோ, அதற்குப் பிறகு எதற்குக் கவுரவும்? மானம் பார்ப்பது; என்னை அழைத்தார்களா? என்னை மதித்தார்களா? என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
நாம் வேட்பாளருக்காக பணி செய்யவில்லை – கொள்கைக்காக அல்லவா பணி செய்கிறோம்!
மதித்தார்களா, அழைத்தார்களா? என்றால், நாம் அவரிடம் எதையாவது எதிர்பார்த்தால், அந்த வார்த் தையை சொல்லலாம். நாம் அவருக்காக பணி செய்ய வில்லையே! நம்முடைய கொள்கைக்காக அல்லவா பணி செய்கிறோம். அவர் தோற்றால், நம்முடைய கொள்கை அல்லவா தோற்றுப் போய்விடும். அந்தக் கவலை, அந்தப் பொறுப்புணர்ச்சி நமக்கு இருக்கிறது.
எல்லா பொறுப்பாளர்களும் இங்கே வந்திருக்கிறீர்கள். நான் உற்சாகமாக இருப்பதற்குக் காரணம், உங்களை யெல்லாம் பார்த்ததினால்தான்.
மூன்று நாள்களுக்கு முன்பு, கழகப் பொதுக்குழு வினை தஞ்சையில் நடத்தலாம் என்று முடிவெடுத்தோம். அதற்கு ஒரு மறுப்பையும் தஞ்சை தோழர்கள் சொல்ல வில்லை. தஞ்சை மாவட்டத் தலைவர் அவர்களானாலும், மாநில ஒருங்கிணைப்பாளர்களாக இருந்தாலும் சரி – வானவில்லைப் பிடித்துக் கொண்டுவரவேண்டும் என்று சொன்னால், ‘‘சரிங்க, பிடிக்கலாம்” என்றுதான் சொல் வார்களே தவிர, ‘‘வானவில் கொஞ்ச நேரம்தான் இருக் கும்; பிறகு மறைந்துவிடுமே” என்று சொல்லமாட்டார்கள்.
கொள்கை வளம் உள்ள தஞ்சை தோழர்கள்!
அதுபோன்ற ஒரு ஆற்றல், நம்முடைய தோழர் களுக்கு, அதிலும் குறிப்பாக கொள்கை வளம் உள்ள தஞ்சை தோழர்கள் இந்த ஏற்பாடுகளைச் செய்திருக் றார்கள்.
தஞ்சை தோழர்களை மட்டுமே சொல்கிறாரே, நம்மை விட்டுவிட்டாரே, என்று மற்ற தோழர்கள் நினைக்கவேண்டாம்.
14 நூற்றாண்டு விழாக்களை
நாம் கொண்டாடி இருக்கின்றோம்!
பொதுச்செயலாளரும், மற்ற பொறுப்பாளர் களும் உரையாற்றும்பொழுது சொன்னார்கள். 14 நூற்றாண்டு விழாக்களை நாம் கொண்டாடி இருக்கின்றோம்.
நூற்றாண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை அந் தந்த மாவட்டங்களில் ஏற்பாடு செய்யவேண்டும் என்று சொல்லும்பொழுது, ஒருவரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
அரியலூரில் நடைபெற்ற நூற்றாண்டு விழா விற்குத்தான் கடைசியாக நான் சென்று வந்தேன். அந்த மாவட்டத் தலைவர், தோழர்கள், பகுத்தறி வாளர் கழகப் புரவலர் தங்க.சிவமூர்த்தி, நீலமேகம், சிந்தனைச் செல்வன் போன்ற தோழர்கள் எல்லோரும் இங்கே இருக்கிறார்கள்.
உடையார்பாளையத்தில் நான் உரையாற்றி
25 ஆண்டுகளுக்குமேல் ஆயிற்று!
அவர்களிடமும் நான்கைந்து நாள்கள் அவகாசத்தில் தான் நூற்றாண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்யச் சொன்னோம். உடையார்பாளையம் வேலாயுதம், தமிழ்மறவர் வை.பொன்னம்பலனார் தொண்டறப் பணிகளைப் பாராட்டி உடையார்பாளையத்தில் பொதுக் கூட்டம் நடத்தினோம். உடையார்பாளையத்தில் நான் உரையாற்றி 25 ஆண்டுகளுக்குமேல் ஆயிற்று.
வேடிக்கையாக நான் சொல்வேன், சில கூட்டங்களை வெள்ளி விழா கூட்டம் என்று. ஏனென்றால், 25 ஆண்டுகளாகப் போகாத ஊருக்குப் போகிறோம் என்று அர்த்தம்.
அந்த ஊர் மக்களே, கட்சி வேறுபாடில்லாமல், அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். மிகப்பெரிய அளவிற்குப் பாராட்டினார்கள்.
நம்முடைய தோழர்கள் நாணயம், கட்டுப்பாடு கொண்டவர்கள். அவர்களை மட்டும் சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கவேண்டாம்.
சுயநலத்தை, தன்னலத்தைத் துறந்த
ஓர் இயக்கம்!
இந்த இயக்கம் எவ்வளவு பரிசுத்தமான ஓர் இயக்கம் – தூய்மையான ஓர் இயக்கம் – தன்னுடைய சுயநலம் மறந்த ஓர் இயக்கம். சுயநலத்தை, தன்னலத்தைத் துறந்த ஓர் இயக்கம் என்பதற்கு அடையாளம் என்னவென்றால், நம்முடைய நீலமகேம் அவர்களும், சிவமூர்த்தி அவர் களும் கூட்டம் முடிந்ததும் என்னை வழியனுப்புவதற்கு முன், இரவு உணவுக்குச் செல்வதற்குமுன் – இரண்டு பேரும் வந்து என்னிடம் ஒரு கவரைக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு ஒரு வாரத்திற்குமேல் கால அவகாசம் இல்லை. நம்முடைய கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள்தான், அவர்களுக்கு வழிகாட்டி – அவர்களை உற்சாகப்படுத்துபவர்.
அந்தக் கூட்டத்தின் முடிவில், ‘‘அய்யா, எல்லா செலவும் செய்த பிறகு, 50 ஆயிரம் ரூபாய் மீதமிருக்கிறது. அதனைத் தலைமைக் கழகத்திடம் கொடுக்கிறோம்” என்று சொன்னார்கள்.
அந்தப் பணத்தை அவர்கள் வைத்திருந்தார்கள் என்றால், அந்த ஊரில் நம்முடைய இயக்கம் இல்லை என்று அர்த்தம். இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய்விடும். ஏனென்றால், அதுபோன்ற சிலரும் வருவார்கள்; அந்த சூழலுக்கே இடமில்லாத அளவிற்கு நடந்துகொண்டனர் நம்முடைய தோழர்கள்.
‘‘அய்யா, ஏற்கெனவே நாங்கள் மூன்றரை லட்சம் ரூபாய்க்குமேல் கொடுத்திருக்கின்றோம். இங்கே ஒரு படிப்பகத்திற்காக இடத்தினை ஏற்பாடு செய்கிறோம். அதுவரையில் இந்தப் பணம் எங்களிடம் இருக்க வேண்டாம்; தலைமைக் கழகத்திடமே இருக்கட்டும்” என்றனர்.
ஆகவே, இவ்வளவு பரிசுத்தமாக, யோக்கியப் பொறுப்போடு, ஒருவிதமான தவறுமில்லாமல் நடக்கக் கூடிய இயக்கம்தான் நம்முடைய இயக்கம்.
ரூ.10 கணக்கில் வரவில்லை என்பதினால் மாவட்டச் செயலாளரை நீக்கியவர் தந்தை பெரியார்!
தந்தை பெரியார் அவர்கள், 10 ரூபாய் கணக்கில் வரவில்லை என்பதற்காக மதுரையில், ஒரு மாவட்டச் செயலாளரையே நீக்கினார்.
ஒரு டாக்டர் அய்யாவிடம், ‘‘அய்யா, நான் 10 ரூபாய் பணம் கொடுத்தேன். அது ‘விடுதலை’யில் வரவில்லை” என்றார்.
அய்யா அவர்கள் விசாரித்தார். நீண்ட காலமாக இருக்கின்ற மாவட்டச் செயலாளரை இயக்கத்தை விட்டு நீக்கினார்.
இயக்கத்தில் நீண்ட காலம் இருப்பவரா, இல் லையா என்பது முக்கியமல்ல; பொதுவாழ்க்கையில் நாணயமும், ஒழுக்கமும்தான் மிக முக்கியம் என்றார்.
எண்ணிக்கையைவிட, கட்டுப்பாடு என்பதுதான் மிகவும் முக்கியம்
எண்ணிக்கை நமக்கு முக்கியமல்ல; எண்ணிக்கை யினால் எதுவும் நடந்ததில்லை. எண்ணிக்கையைவிட, கட்டுப்பாடு என்பதுதான் மிகவும் முக்கியம். அந்தக் கட்டுப்பாடு ஏற்பாடுகளின்படி இப்போதுவரை இந்த இயக்கம் நடந்திருக்கிறது.
என்னுடைய சுற்றுப்பயணம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கும்
ஆகவே, இந்தத் தேர்தலுக்காக என்னுடைய சுற்றுப் பயணத்தைப்பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கின் றோம். என்னுடைய சுற்றுப்பயணம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கும். அநேகமாக தென்காசியில் தொடங்கும். சுற்றுப்பயணக் குழுவினர் அதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறார்கள். என்னு டைய சுற்றுப்பயணம் வழக்கம்போல, இதே தஞ்சை யில்தான் ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை நிறைவடைகிறது.
என்னுடைய சுற்றுப்பயணத்தில் நம்முடைய கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரனும் வருவார்.
‘‘தோழர்களே, யார் உங்களை அழைத்தாலும், தாராளமாக நீங்கள் சென்று நம்முடைய பிரச்சாரத்தை செய்யலாம்!’’
நம்முடைய பேச்சாளர்களை பிரச்சாரம் செய்வதற் காக, தி.மு.க. தோழர்கள், தேர்தல் அணியில் இருப் பவர்கள் அழைத்திருக்கிறார்கள். உங்களுடைய அனுமதி வேண்டும் என்று மதிவதனி போன்றவர்கள் தலைமைக் கழகத்திடம் கேட்ட பிறகு, தலைமைக் கழகம், ‘‘யார் உங்களை அழைத்தாலும், தாராளமாக நீங்கள் சென்று நம்முடைய பிரச்சாரத்தை செய்யலாம்” என்று அனுமதி வழங்கியிருக்கிறது.
‘விடுதலை’யில் என்ன செய்திகள் வருகின்றனவோ அதனை எடுத்து விளக்கினால் போதும்!
ஆனால், நம்முடைய பிரச்சாரத்தை செய்கின்ற நேரத்தில், கட்டுப்பாடாக இருக்கவேண்டும். ஒரு சிறிய குறைபாடுகூட நம்மால் ஏற்பட்டு விடக்கூடாது. கூட் டணி வேட்பாளர்களின் நூறு வாக்குகளை, நூற்றி ரெண்டாக ஆக்குவதற்காகத்தான் நாம் போகின்றோம். அதனை 98 ஆக ஆக்குவதற்காக நாம் போகவில்லை. ‘விடுதலை’யில் என்ன செய்திகள் வருகின்றனவோ அதனை எடுத்து விளக்கினால் போதும்.
(தொடரும்)