நான் முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன், சென்னை யில் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்குக் காலையில் சென்றிருந்தேன்.
ஒரு குழந்தையைப் பார்த்து, “என்னம்மா சாப்பிட்டீர்களா?” என்று கேட்டேன். அந்தக் குழந்தை எதார்த்தமாக, “வீட்டில் அப்பா – அம்மா வேலைக்குச் செல்கிறார்கள். காலையில் டிபன் செய்ய மாட்டார்கள். அதனால் சாப்பிடவில்லை” என்று கூறியது முதல், எனக்கு மனதே சரியில்லை! அதிகாரிகளை அழைத்தேன். பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டம் கொண்டு வர வேண்டும், திட்டத்தைத் தயார் செய்யுங்கள் – என்று கூறினேன்.
அதிகாரிகள் என்னிடம் மிகவும் பணிவாக, “சார், நம்முடைய நிதிநிலை மோசமாக இருக்கிறது. அது மட்டுமல்ல, இது நம்முடைய தேர்தல் அறிக்கையில்கூட கூறவில்லை – என்று கூறினார்கள்” உடனே பதில் கூறினேன். வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால் என்ன? நம்முடைய எதிர்கால தலைமுறையான குழந் தைகள் காலையில் நன்றாகச் சாப்பிட்டு, நல்ல உடல் நலத்துடன் இருந்தால்தான் அவர்கள் படிப்பது மனதில் பதியும், இதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும். நிதிநிலை சரி செய்யவும் திட்டம் போடுவோம். நீங்கள் கோப்பினைத் தயார் செய்யுங்கள்” என்று உத்தர விட்டேன்.
வரலாறும் – மக்களான நீங்களும் இந்த ஸ்டாலினுக்குக் கொடுத்த வாய்ப்பால், இன்றைக்கு, தமிழ்நாடு முழுவதும் 16 லட்சம் குழந்தைகள் வயிறார உண்ணும் காலை உணவுத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுகிறது.
இதுதான் உங்கள் ‘கேரண்டியா’ மிஸ்டர் மோடி?
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடலாம் என்று சொன்னாரே? 15 லட்சம் இல்லை, 15 ஆயிரமாவது மக்களுக்கு கொடுத்தாரா? 15 ரூபாயாவது கொடுத்தாரா? அது மாதிரியான கேரண்டியா? இல்லை, ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று சொன்னாரே, என்ன ஆனது? உலகத் தொழிலாளர் அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்தி யாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தால் 83 விழுக் காடு இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இதுதான் மோடி சொல்லும், கேரண்டியின் லட்சணம்! புதிது புதிதாக வாக்குறுதி கொடுத்தால், நிறைவேற்றாத பழைய வாக்குறுதியெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று பிரதமர் மோடி தப்புக் கணக்கு போடுகிறார்.
(கிருஷ்ணன்கோயில் பொதுக்கூட்டத்தில் முதலமைச் சரின் உரையிலிருந்து…)