மன்னார்குடி அடுத்த செருமங்கலம் உடையார் தெருவில் கடந்த 1990 ஆம் ஆண்டு தமிழர் தலைவர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார்.
தற்போது, சென்னை – கன்னியாகுமரி தொழிற் தடச் சாலை விரிவாக்கப் பணி காரணமாக செருமங்கலம் உடையார் தெருவில் உள்ள தந்தை பெரியார் சிலையை வேறு இடத்திற்கு மாற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை பரிந்துரை செய்தது.
இதனை அடுத்து, அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நுழைவாயில் அருகே இடது புறம் இடம் தேர்வு செய்யப்பட்டு சிலை பீடம் அமைக்கப்பட்டு அறிவு ஆசான் தந்தை பெரியார் சிலை அந்த இடத்திலேயே நிறுவப்பட்டு அய்யா அவர்களின் 145ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 17.9.2023 ,ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சீரமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கள் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி, இளைஞரணி, மாணவர் கழகம், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் திக, திமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உரையாற்றி முடித்தனர். நிகழ்ச்சியில் நன்றி உரை கூறிய நிலையில் அங்கு கூடியிருந்த பொது மக்களில் ஒருவர் – தான் ஒரு சில நிமிடம் பேச வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அதற்கு, தி.க. மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், சிலை சீரமைப்பு குழுத் தலைவர் க.ராமலிங்கம் ஆகியோர் அவரை பேசுமாறு கூறினர். ஒலி வாங்கியை வாங்கிய அந்த பிரமுகர் தனது பெயர் க.ராஜேந்திரன் என்றும் செருமங்கலம் உடையார் தெருவை சேர்ந்தவர் என்றும் கட்டட தொழிலாளி எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினார்,
பல ஆண்டுகளுக்கு முன் கட்டுமான தொழிலில் உதவியாளராக இருந்த நான் மேலவாசலில் உள்ள மன்னார்குடி ஒன்றிய தி.க. தலைவர் மு.தமிழ்செல்வம் புது இல்ல கட்டுமானப் பணிக்கு சென்றிருந்தேன். அப்பொழுது, அங்கு வீட்டின் முன்பக்க பிரதான கதவின் நிலையை தூக்கி வைப்பதற்காக வீட்டின் உரிமையாளர் தமிழ் செல்வமோ அவரது மனைவியோ அங்கு இல்லை. சற்று தூரத்தில் உள்ள அவரது தேநீர் கடைக்கு சென்று அவர்களை அழைத்து வருமாறு கொத்தனார் என்னிடம் கூறினார் .அதன்படி நான் அங்கு சென்று, நிலை தூக்கி வைக்க வேண்டும் வீட்டுக்கு வாருங்கள் என்று தமிழ்செல்வத்தையும் அவர் மனைவியும் அழைத்தேன். அதற்கு அவர்கள் நிலை தானே நீங்களே தூக்கி வச்சுக்கோங்க – சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் நாங்கள் பார்க்க மாட்டோம் என்று தெரிவித்து விட்டார்கள். அவர்கள் சொன்னதை வந்து நான் கொத்தனாரிடம் தெரிவித்தேன். அவரும் சரி என்று கூறிவிட்டு நாங்களே நிலையை தூக்கி வைத்து மற்ற வேலைகளை செய்யத் தொடங்கினோம். அப்பொழுது எனக்கு மனதில் பொறி ஒன்று பட்டது இதற்கு மற்றவர்களெல்லாம் ஒரு விழா நடத்தும் பொழுது பெரியார் கொள்கையை பின்பற்றும் இவர்கள் எதுவுமே இல்லையே என சொல்லிவிட்டார்களே என்று. இப்பொழுதும், புதிய வீட்டுக்கு நிலை தூக்கி வைக்கும் போதும் அந்த சம்பவம் தான் நினைவு வருகிறது.
கடந்த 1990ஆம் ஆண்டு எங்களது ஊரான செருமங்கலம் உடையார் தெருவில் தந்தை பெரியார் சிலை வைக்கப் போவதாக முடிவெடுத்து அதற்கான பணிகள் தொடங்கியது. அப்பொழுது வேறொருவரிடம் கட்டு மான தொழிலாளியாக பணியாற்றிக் கொண்டிருந்த நான் சிலை பீடம் அமைக்கும் பணி, சிலை அமைக்கும் பணி உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் உடனிருந்து பணியாற்றினேன். சிலை திறப்பு விழாவின் பொழுது தி.க. தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பெரிய தலைவர்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டு பேசிய பொழுது, நான் மிகப்பெரிய தலைவரின் சிலையை அமைப்பதற்கு உதவியாக இருந்துள்ளேன் என எண்ணி பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.
எங்கள் ஊருக்கு ,தந்தை பெரியார் சிலை ஒரு அடையாளமாகவே இருந்து வந்தது .யார் வெளியூரில் இருந்து வந்தாலும் அவர்கள் பேருந்திலோ வேறு வாகனத்திலோ வந்து எங்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு நான் பெரியார் சிலை அருகே இருக்கிறேன் என்று கூறுவார்கள். அல்லது நாங்களே பேருந்திலிருந்து இறங்கி பெரியார் சிலை அருகே நில்லுங்கள் வந்து அழைத்துச் செல்கிறோம் என்று கூறுவோம். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பெரியார் பெயரை உச்சரிக்காதவர்கள் இங்கு யாரும் இல்லை . பெரியாரை எங்கள் ஊரின் அடையாளமாகவே கொண்டிருந்தோம்.
தற்போது, சாலை விரிவாக்கப் பணி காரணமாக பெரியார் சிலையை எடுக்கப் போகிறார்கள் என்றவுடன் மனது மிகுந்த கஷ்டப்பட்டது. சிலையை இனிமேல் இங்கே வைக்க மாட்டார்கள் என்று தான் முதலிலே கூறினார்கள்.பிறகு சிலை வைப்பதற்கு வேறு இடம் தரப் போவதாகவும் கூறினார்கள். அதே போல் இரண்டு இடங்களைப் பார்த்து அந்த இடம் தேர்வாகவில்லை, மூன்றாவது இடம் பார்த்து பீடமும் அமைத்த நிலையில் என்ன காரணத்தினாலோ திடீரென அந்த இடத்தில் சிலை வைக்க அனுமதி இல்லை என கூறி பீடத்தையும் அகற்றி விட்டார்கள். காலம் கடந்து கொண்டே இருந்தது.
எங்களுக்கும், செருமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஒவ்வொருவருக்கும் உள்ளத்தில் ஒரு எண்ண ஓட்டம் ஓடிக் கொண்டே இருந்தது. அது என்னவென்றால், தந்தை பெரியார் எங்கள் ஊரை விட்டு போய்விடுவாரோ என்ற வேதனைதான். நல்ல வாய்ப்பாக நெடுஞ்சாலைத்துறையினரே செருமங்கலம் உடையார் தெரு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அருகே இடத்தை தேர்வு செய்து தந்த பிறகு தான் மனது நிம்மதி அடைந்தது.மகிழ்ச்சியாவும் இருந்தது. இருந்தாலும் இந்த இடமும் இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையும் எங்களுக்கு இருந்தது. இந்த இடம் உறுதியாகப்பட்டு விட்ட தகவல் வந்த பின்னர்தான் மன நிம்மதி அடைந்தோம்.
நான் எப்படி 1990 ஆம் ஆண்டு முதல் முறையாக பெரியார் சிலை வைக்கப்பட்டபோது பணியாற்றினேனோ அதேபோல் தற்போதும் சிலை அமைக்கப்படும் இடத்தில் நானும் முழுமையாக இணைந்து பணியாற்றி இந்த கட்டுமானப் பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வந்தேன்.
இதில் பெரிய மகிழ்ச்சி என்ன வென்றால் தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டு முதலமைச்சரான பெருந் தலைவர் காமராஜரால் கொண்டுவரப்பட்ட அரசு பள்ளிக்கூட நுழைவாயில் அருகிலேயே தந்தை பெரியார் சிலை அமைந்திருப்பது பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது. தந்தை பெரியாரையும் பெருந்தலைவர் காமராஜரையும் தற்போது உள்ளவர்களும் வருங்கால தலைமுறையினரும் அவர்களுடைய கொள்கைகளையும் தியாகத்தையும் தொண்டினையும் நினைவு கூர்வதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இந்த சிலையும் இந்த பள்ளிக்கூடமும் அருகருகே அமைந்திருப்பது மிகப் பொருத்தமாக இருக்கிறது என கூறி பேச்சை நிறைவு செய்தார்.
அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் கட்டட தொழிலாளி ராஜேந்திரனின் பேச்சை பாராட்டி கை தட்டி வரவேற்றனர்.
ஒரு சிறிய கிராமத்தில் வாழும் திராவிடர் கழகத்தில் உறுப்பினராக இல்லாத ஆன்மிகவாதிகள்கூட எந்தளவுக்கு தந்தை பெரியார் அவர்களை நேசிக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது பெரு மகிழ்ச்சியும் அகமகிழ்வும் அடைய வைத்தது.
தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறுவது போல் தந்தை பெரியார் நமக்கு படம் அல்ல பாடம் என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியது.
– மன்னை சித்து , மன்னார்குடி – 1.