கேள்வி 1: ஸநாதனத்தைப்பற்றி பேசுவதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனவா தி.க.வும், தி.மு.க.வும்?
– பா.முகிலன், சென்னை-14
பதில் 1: இல்லை. ‘செமிகோலன்’ – போட்டுள்ளன! இவ்வளவு அக்கறை காட்டும் உங்களைப் போன்றோரின் பங்கு அதில் என்ன?
—
கேள்வி 2: குடியரசு தினத்தன்றாவது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை கொடியேற்ற விடுவார்களா?
– மீ.வேழவேந்தன், வடலூர்
பதில் 2: எந்த வித்தைகளையும் – இந்த ஆட்சியில் – எப்போதும் அவர்கள் நினைத்தால் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படும்.
—
கேள்வி 3: சிறார்கள் மற்றும் முதியவர்களுக்கான ரயில்வே சலுகை ரத்து செய்யப்பட்டதால் 10,000 கோடி ரூபாய் வரை மிச்சப்படுத்தி உள்ளதாக ஒன்றிய அரசு கூறுகிறதே?
– ம.மணி, திருவள்ளூர்
பதில் 3: சமூக நலனை ‘பலி கொடுத்து’ மிச்சப்படுத்துதல் – சரியான – பொறுப்பான – செயலாக இருக்க முடியாது! சீனியர் சிட்டிசன் சலுகை, சிறார் சலுகை – உலகம் முழுவதிலும் பற்பல நாடுகளின் மனிதநேயம் பொதிந்த சலுகைகளாகும். அவற்றை மறுத்து இப்படி ‘மிச்சமா?’ பெருந்தவறான பொருளாதாரக் கணக்கீடு!
—
கேள்வி 4: கனடா – இந்தியா சிக்கலால் பாதிக்கப்படுபவர்கள் வேலை தேடி மற்றும் கல்விக்காக சென்ற நடுத்தர மக்கள்தானே? அவர்களுக்கு மோடி என்ன பதில் வைத்துள்ளார்?
– க.பழனி, செஞ்சி
பதில் 4: அவர் சொல்ல வேண்டிய பதிலை – எம்மிடம் கேட்பது நியாயமா?
—
கேள்வி 5: அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்கிறார்; செல்லூர் ராஜூவோ கூட்டணி இருக்கிறது என்கிறார்; யார் சொல்வது உண்மை?
– ந.இளங்கோ, கன்னியாகுமரி
பதில் 5: எல்லோரையும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமியார் வாய்மூடச் சொல்லிவிட்டாரே! – லேட்டஸ்ட் செய்தி தெரியாதா?
—
கேள்வி 6: பல லட்சக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்டு, விநாயகன் பொம்மைகள் வைக்கப்படுகின்றன; பிறகு அவை தண்ணீரில் கரைக்கப்படுகின்றனவே, இதனால் யாருக்கு, என்ன லாபம்?
– எ.ரமேஷ், திருவண்ணாமலை
பதில் 6: கடவுளைச் “செய்து” கரைக்கும் மதம் இந்த மதம் அல்லாமல் உலகில் எந்த மதம்? என்று கேட்காதீர்கள் – பா.ஜ.க. பாய்ந்து பிராண்டிட மேலே விழும். எல்லாம் வள்ளலார் கூற்றுப்படி ‘பிள்ளை விளையாட்டு!’
—
கேள்வி 7: இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அரசு (கருநாடக மாநிலம்) தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீரைத் தர மறுக்கிறதே, ஏன்?
– சே.செல்வம், கள்ளக்குறிச்சி
பதில் 7: கூட்டணிக்கும், அவர்களது நிலைப்பாட்டிற்கும் என்ன சம்பந்தம்? புரியாமல் கேட்காதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமை – ஒருங்கிணைப்புதான் ‘இந்தியா’ கூட்டணி – ஒரே பொதுநோக்கு, பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதே!
—
கேள்வி 8: ஸநாதனம் என்றாலும் சரி, நீட் பிரச்சினை என்றாலும் சரி உடனுக்குடன் அமைச்சர் உதயநிதி கருத்து தெரிவிப்பது எதைக் காட்டுகிறது?
– த.வெங்கடேஷ், திருச்சி
பதில் 8: அவரது ஆற்றலையும், கொள்கைத் துடிப்பையும், சரக்குள்ளவர் என்பதையும் காட்டுகிறது!
—
கேள்வி 9: மாநில அமைச்சருக்கே கேரளாவில் உள்ள கோவிலில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டுள்ளதே?
– ப.கன்னியப்பன், மாமல்லபுரம்
பதில் 9: ஸநாதனம் எங்கே என்று கேட்பவர்களுக்குக் கேரள ஸநாதனிகளின் அழுத்தமான பதில் அங்கே!