தமிழ்நாட்டில் 28.03.2024 அன்று வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. இந்த தேர்தலில் சில அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பல அங்கீகரிக்கப்படாத கட்சிகள் களத்தில் நிற்கின்றனர்.
இதில் அங்கீகரிக்கப்பட்ட திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளோடு அங்கீ கரிக்கப்படாத மதிமுக, விடுதலைச் சிறுத் தைகள், தேமுதிக, பாமக, அமமுக உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன.
தேர்தல் விதிகளின்படி அங்கீகரிக் கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. இதற்கு தேர்தல் ஆணையம் விதிகளின்படியே நாங்கள் செயல்படுகிறோம் என்று நீதிமன்றத்தில் கூறி மதிமுக மற்றும் வி.சி.க. கோரிக்கைகளை நிராகரித்துள்ளது.
அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பாஜகவோடு கூட்டணி வைத்த அன்றே அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டில்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத் திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண் டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின் பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழ்நாட்டில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.
அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தர விட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டி யிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி யில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது.
6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில தகுதியை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக.
ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
அதாவது விடுதலை சிறுத்தைகள் கட்சி தாங்கள் இரண்டு இடங்களில் போட்டி இடுகிறோம் என்று கூறியும் சதவீதம் குறைவு என்கிறது.
மதிமுக 5 சதவீதத்திற்கும் மேலாக பெற்ற நிலையில் ஒரு தொகுதியில் போட்டி யிடுவதால் விருப்பச்சின்னம் ஒதுக்க முடியாது என்கிறது.
சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்?
ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்கு களையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற தகுதியை இழக்கும். அதன் அங்கீ காரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின் னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும்.
இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4ஆம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு – செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல் பாட்டுக்கு வந்துவிட்டன.
சரி இந்த விதி எல்லாம் எதிரணிக்கு மட்டும் தானா? என்றால் ஆம். பல தேர்தல் களில் பங்கெடுக்காத தமிழ் மாநில காங்கிரஸ், தொடர் தோல்வியைத் தழுவி அங்கீகாரம் இழந்த பாமக, குக்கர், பரிசுப்பெட்டி என பல சின்னங்களில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்ற அமமுக ஆகிய கட்சிகளுக்கு பாஜகவோடு கூட்டணி வைத்த உடனேயே சைக்கிள், மாம்பழம், குக்கர், சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இங்குதான் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேள்விக்குரியதாக மாறுகிறது.
இது தொடர்பாக விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கூறும் போது, “விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பி.க்களும் உள்ளனர். திருமா வளவன் பானை சின்னத்தில் தான் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப் பட்ட சைக்கிள் சின்னம் இந்தியாவின் முக்கிய கட்சியாக கருதப்படும் சமாஜ்வாடி கட்சியின் சின்னம் ஆகும்.
அப்படி இருந்தும் சைக்கிள் சின்னத்தை பொது சின்னமாக மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர்.
“பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற அய்யம் இருக்கிறது” என்றார்.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, “சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்” என்றார்.
“சின்னம் முக்கியம் தான்”
தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க் கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே காரணம் “குக்கர் சின்னத்தில் போட்டியிடா மல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர்.
த.மா.கா. பல தேர்தல்களில் பங்கெடுக்காமல் இருந்துவிட்டது. ஆனால், அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். அதுவும் பாஜக கூட்டணியில் இணைந்த உடனேயே கிடைக்கிறது என்பதுதான் இங்கே குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் இந்தியா கூட்டணி யில் தொய்வில்லாமல் கூட்டணிப் பேச்சு வார்த்தை முடிந்து சுமூகமாக தொகுதிப் பங்கீடு என அனைத்தும் முடிந்து தமிழ்நாட்டின் “இந்தியா” கூட்டணித் தலைவர்கள் தொடர் பரப்புரையில் இறங்கி விட்டனர்.
அவர்களின் தொடர்பணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த பாஜகவிற்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.
தமிழ்நாட்டின் இந்தியா கூட்டணியின் பெரிய கட்சியாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் புதிய சின்னத்தை மக்களிடையே கொண்டுசென்றுவிடும். அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் ஏன் இந்த இரட்டை நிலைப்பட்டை எடுக்கிறது? நடுநிலையாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் சின்னம் தொடர்பான விவகாரத்தில் அதன் செயல்பாடு கேள்விக்குரியதாகி விட்டதுதான் இங்கே பேசும் பொருளாக உள்ளது.