மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தினால் தண்டனையா?

Viduthalai
3 Min Read

மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதில்  நாட்டிலேயே முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டிற்கு 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய அதிர்ச்சி கிடைக்கப் போகிறது.

குடும்பக் கட்டுப்பாடு அவசியம் தேவை என்ற ஒன்றிய அரசின் கொள்கை முடிவை ஏற்று சரியாக செயல்பட்டதால் நமக்குத் தண்டனையா?

இந்தியாவிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளை இழக்க போகும் மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். அதேநேரம் இந்தியாவிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளை கூடுதலாக பெறப்போகும் மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாறப்போகிறது.

2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்களவை தொகுதி எல்லை வரையறையில், அதிக மக்களவைத் தொகுதிகளை பெறும் இந்திய மாநிலமாக உத்தரப்பிரதேசம் உருவெடுக்க வாய்ப்பு உள்ளது.  

சட்டமன்ற மற்றும் மக்களவைத் தொகுதி எல்லை நிர்ணயம் என்பது மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தொகு திகளின் எல்லைகளை மறுவடிவமைக்கும் செயலாகும்.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் 800 இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பதால், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு நாடாளுமன்றத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் படலாம் என்ற நிலை உள்ளது.

தற்போதைய நிலையில், இந்தியாவில் சில வட மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி தென்னிந்தியாவை விட வேகமாக உள்ளது. குடும்பக் கட்டுப்பாடு என்னும் ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்தாததே இதற்குக் காரணம். ஒப்பீட்டளவில் குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி காரணமாக, மக்களவை மறுவரையறைக்குப் பின்னர், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கேரளா ஆகியவை கணிசமான அளவில் மக்களவைத் தொகுதிகளை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, பொறுப்புடன் செயல்பட்ட தற்காக தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட போகின்றன என்பதே எதார்த்தம். நாட்டிலேயே அதிக மக்கள் தொகை உள்ள உத்தரப் பிரதேசத்தில் தற்போது 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

ஆனால், அதன் நாடாளுமன்றத் தொகுதிகள், மக்க ளவைத் தொகுதி மறுவரையறைக்குப் பின்னர் 11 இடங்கள் அதிகரித்து 91 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை தற்போது உள்ள 39இல் இருந்து 31 ஆகக் குறையக்கூடும்.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய இரண்டும் சேர்ந்து 42 இடங்களைக் கொண்டுள்ளன. இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து 34 ஆக குறையப் போகிறது. கேரளாவின் மக்களவை பலம் 20-இல் இருந்து 12 ஆகக் குறையும்.

தமிழ்நாட்டைப் போல் கேரளாவும் எட்டு மக்களவைத் தொகுதிகளை இழக்க வாய்ப்பு உள்ளது. கருநாடகாவும் தற்போதைய 28-இல் இருந்து 26 ஆக குறைந்து, 2 இடங்களை இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மொத் தமாக பார்த்தால் அதிக தொகுதிகளைப் பெறப் போகும் மாநிலங்களை இப்படிப் பார்க்கலாம்.

உத்தரப் பிரதேசம் (11), பீகார் (10), ராஜஸ்தான் (6), மற்றும் மத்தியப் பிரதேசம் (4) ஆகியவை முக்கியமான மாநிலங்கள் ஆகும். குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், டில்லி மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களிலும் 2026-ஆம் ஆண்டு மக்களவை மறுவரையறைக்குப் பிறகு தலா ஒரு தொகுதி அதிகமாக வாய்ப்பு உள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி நிர்ணயம் என்பதை மாற்றி மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் எல்லா மாநிலங்களுக்கும் சமமாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும். 

மாறாக வட மாநிலங்களில் உறுப்பினர்கள் அதிகமாகி தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டால் யுகப் பிரளயமே ஏற்படும்  – எச்சரிக்கை!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *