தமிழ்நாடு என்றாலே வலதுசாரிகள் அனைவருக்குமே ஒரு வெறுப்பு. இந்தப் பெயர் வைத்த காலத்தில் இருந்தே இந்த வெறுப்பு அவர்களின் உள்ளே ஊறிக்கிடக்கிறது.
அவ்வப்போது அதை தங்களின் மூலம் அல்லாமல் வேறு நபர்களின் மூலம் வெளிப்படுத்திக்கொள்கின்றனர்.
எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டிற்கு தொடர்பே இல்லாத ஆளுநர் தமிழ்நாடு தமிழ்த்தாய் வாழ்த்து என்றாலே வெறுக்கிறார். இதை அவரது நடவடிக்கைகளே உறுதி செய்கிறது. அதாவது தமிழ்நாட்டை தமிழர்களை வெறுப்பவர்கள் நேரடியாக சொல்லாமல் ஆளுநர் மூலம் தங்களின் வெறுப்பை வெளிப்படுத்திக்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு என்ற பெயரை மாற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பது அவர்களுக்கு நன்கு தெரியும், ஆகையால் தமிழ்நாடே இல்லாமல் ஆக்கிவிட்டால் அதாவது தமிழ்நாட்டை கூறுபோட்டுவிட்டால், வரலாற்றில் தமிழ்நாடு என்று ஒன்று இருந்தது, இந்தியாவிலேயே அதன் இலட்சினையில் சமஸ்கிருத சுலோகமான ‘சத்யமேவ ஜெயதே’ அல்லாமல் ‘வாய்மையே வெல்லும்’ என்ற தூய தமிழ் மிளிர்கிறது. இது எல்லாம் அவர்களுக்கு வெறுப்பை உருவாக்கத்தானே செய்யும்.
அதுதான் அவர்களின் மறைமுக மோசடி நடவடிக்கையான தமிழ்நட்டைக் கூறுபோடுவது – இது ஒன்றும் கற்பனையான அல்லது போகிறபோக்கில் கூறப்படும் குற்றச்சாட்டு அல்ல.
2019ஆம் ஆண்டு மீண்டும் பாஜக தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கிறது. இந்த முறை தமிழ் நாட்டில் இருந்து அமைச்சர்கள் ஒருவர் கூட இல்லை. நிர்மலாசீதாராமனையும் ஜெய்சங்கரையும் கொண்டுவந்து இதோ தமிழர்களை அமைச்சர்களாகி விட்டோம் என்று கதைவிட்டார்கள்.
ஆனால், தமிழர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் 2021 தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்து 4 இடங்களை வெல்கிறது. இதனை அடுத்து தமிழர்களிடையே பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்துகொண்டு இருக்கிறது என்ற பிம்பத்தை உருவாக்க 2021 ஜூலை மாதம் ஒன்றிய அமைச்சரவை மறுசீரமைப்பின் போது எல். முருகனை ஒன்றிய இணை அமைச்சராக்குகிறது மோடி அரசு.
ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராக எல்.முருகன் பதவியேற்றுக் கொண்டபோது, அவரது சுயவிவர குறிப்பில், அவர் தமிழ்நாட்டின் கொங்கு நாடு பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழர்கள் உலகின் எந்தப்பகுதியில் இருந்தாலும் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்றுதான் கூறுவார்கள் யாருமே வெளிநாடுகளில் நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன், நான் பல்லவ நாட்டைச் சேர்ந்தவன், நாம் சோழ மண்டலத்தைச் சேர்ந்தவன் என்று கூறியது கிடையாது.
அப்படி கூறுவது அவர்கள் தமிழ் மண்ணிற்குச் செய்யும் துரோகம் என்று அவர்களுக்கே தெரியும். காரணம் தமிழ்மண் இன்றல்ல நேற்றல்ல, 5000 ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண வளம் நிரம்பிய மொழியாக தமிழ்த்தாய் வேங்கடம் முதல் குமரிவரை பரவிக் கிடந்தாள்.
அப்படி இருந்த நிலையில் திடீரென ஒன்றிய இணை அமைச்சர் நான் கொங்கு நாட்டைச் சேர்ந்தவன் என்று கூறியது, அரசியல் வட்டாரத்தில், பெரும் பேசுபொருளாக மாறியது.
பிரதமர் அலுவலகம் மூலம்தான் எல். முருகன் குறித்த சுய குறிப்பு தயாரிக்கப்பட்டு இருக்கும். எந்த ஒரு தமிழனும் தான் பாண்டி நாடு கொங்குநாடு என்று கூறியதில்லை அப்படி இருக்க எல்.முருகனின் சுயவிபரக் குறிப்பை யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்ததன் அடிப்படையிலேயே, அது தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இதனடிப்படையில் கொங்கு நாடு என்று பிரிவினைச் சிந்தனையுள்ள சக்திகள் எழுதிக் கொடுத்ததை அப்படியே குறிப்பிட்டிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழ்நாட்டில் கொங்கு நாடு என்கிறபோது அங்கு வேறு சில நாடுகளும் உள்ளன என்று பொருளாகிறது. தமிழ்நாட்டில் நாடு என்ற பெயரில் ஏராளமான ஊர்கள் உள்ளன. அதனால் கொங்கு நாடு என்பதை ஒரு ஊர் என்று எடுத்துக்கொள்ள முடியாது. எனவே கொங்கு மண்டலம் என்பதுதான் கொங்கு நாடு எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது, என்பது தெளிவாகிறது. அது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் வேறு எந்தெந்த நாடுகள் உள்ளன என்றொரு பூடகமான கேள்வியும் இதில் எழுகிறது.
இது போகிறபோக்கில் எழுதுவது போன்று தெரியவில்லை. 7.07.2021 அன்று எல்.முருகன் பதவி ஏற்றார். 13.07.2021 அன்று கோவை மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
13.07.2024 அன்றைய தினமலர் நாளேட்டின் செய்தியை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
“கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., செயற் குழு கூட்டம், கோவை அருகே அன்னூரில் நடந்தது. வடக்கு மாவட்டத் தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கனகசபாபதி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஒன்றிய அரசு, தமிழ்நாட்டின் மேற்கு மண்டல மக்களின் சுய கவுரவத்தை பாதுகாக்கவும், வாழ்வாதாரங்களை பாது காக்கவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும், அரசியல் சட்டத்தை பயன்படுத்தி, நிர்வாக ரீதியாக மாநில மறுசீரமைப்பு செய்து, மேற்கு மண்டலத்தை கொங்குநாடு என்ற புதிய மாநிலமாக உருவாக்க வேண்டும்.”
இதுதான் அவர்களின் தீர்மானம் – இதிலிருந்து என்ன புரிகிறது தமிழ்நாட்டை துண்டாட நன்கு திட்டம் தீட்டி வைத் துள்ளனர்.
இது மட்டுமா கொங்கு நாட்டு தீர்மானம் இயற்றி சரியாக ஓராண்டு கழித்து 05.07.2022 அன்று நெல்லையில் நெல்லை பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஒரு கூட்டத்தில் பேசும் போது “தமிழ்நாட்டை 2 ஆக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால், நாங்கள் பிரித்து விடுவோம்” என்று பேசி உள்ளார்.
இதோ அவரது பேச்சு ”இங்கு பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும், தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் என்றும், இரண்டாக பிரிக்கக் கோரி தமிழ்நாட்டில் இனி வரும் காலங்களில் போராட்டம் நடைபெறலாம்” என்றும் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க முடியாது என்று மட்டும் நினைக்காதீர்கள். 117 தொகுதிகளிலும் பாஜக வெல்லும். எங்களது கூட்டணிக் கட்சியினர் முதலமைச்சராக வருவர். அவ்வாறு செய்ய முடியாது என்று நினைத்துவிடாதீர்கள், செய்யக்கூடிய இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் முடியும்” என்று அவர் கூறினார். நயினார் நாகேந்திரன், வெளிப்படையாகவே பேசினார்.
ஒன்றிய அரசு ஒரு மாநிலத்தை பிரித்து ஒன்றிரண்டு மாநிலங்களை உருவாக்க முயன்றால் அதை தடுப்பது கடினம். இதற்காக உள்ளூர் மட்டத்தில் மக்களின் விருப்பம் என்ற பெயரில் பாஜகவினர் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கின்றனர். அதை நிறைவேற்ற ஒன்றிய அரசு முன்னுரிமை அளித்து மக்கள் தொகையின் அடிப்படையிலும், நிர்வாக வசதிக்காகவும் மாநிலத்தை இரண்டாகவும், மூன்றாகவும் பிரிக்கிறோம் என்று மோடி அரசால் காரணம் கூற முடியும்.
இவர்களின் மறைமுக திட்டம் தமிழ் நாட்டை மூன்றாகப் பிரிக்கவேண்டும் என்பதுதான் அதைத்தான் ஒரு மாநில துணைத் தலைவரான கனகசபாபதி கொங்கு நாடு தீர்மானம் போடுகிறார். மற்றொரு துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தென் தமிழ்நாடு என்று என்று பேசுகின்றார்.
2002 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த வாழ்வுரிமை மாநாடு என்ற பெயரில் நடந்த ஒரு கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசும் போது, `வட தமிழ்நாட்டில் அதிகமாக வாழும் வன்னியர் சமூகத்தினரின் வாழ்வுரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், வடதமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்கூட இதுவரை முதலமைச்சராக ஆக முடியவில்லை. எனவே, தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும்! என்று கூறினார் அதாவது வட தமிழ்நாட்டு மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களை தனி மாநிலமாக பிரிக்கவேண்டும் என்று பேசினார்.
அதன்படி கோவையை தலைநகராகக் கொண்ட புதிய கொங்கு நாடு மாநிலத்தில் கோவை, சேலம், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஆகிய 10 மாவட்டங்கள் இடம் பெறக்கூடும்.
சென்னையை தலைநகராக கொண்டு வட தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்கள் ஒரு மாநிலமாம்.
மதுரையை தலைநகராக கொண்டு அமையும் தென் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்கள் ஒரு மாநிலம் என்கிறார்கள்.
இங்கு பிரிவினையைப் பேசுகிறவர்கள் முழுவதும் பாஜக மற்றும் ஜாதிய அமைப்பின் பின்னால் நிற்பவர்கள் – ஹிந்துத்துவ மதவெறியர்கள். இதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு – அர்ஜுன் சம்பத் 31.03.2023 அன்று பேசும் போது.
எனவே கல்வி, தொழில் வாய்ப்புகளில் பின் தங்கி இருக்கக்கூடிய தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்துத் தனி மாநிலமாக உருவாக வேண்டும். அதோடு மட்டுமல்ல தென் மாவட்டத்தில் வெகு வேகமாக ஹிந்து தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹிந்துக்கள் சிறுபான்மை ஆகிவிட்டார்கள். மேலும் ஹிந்துக்கள் மதமாற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நிர்வாக வசதிக்காக புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும். 100 சட்டமன்றத் தொகுதி என்றால் ஒரு மாநிலம் உருவாகும். இப்போது பாண்டிச்சேரி ஒரு சிறிய மாநிலம், உத்தரப்பிரதேசத்தை பிரித்ததால் உத்தராகண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. பீகாரை பிரித்து ஜார்க்கண்ட் உருவாக்கப் பட்டது. ஆந்திராவை பிரித்து தெலங்கானா உருவாக்கப்பட்டது. மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப கொங்கு மாநிலம் உருவானால் இன்னும் நன்றாக வளர்ச்சி அடையும்” என்று கூறினார்.
“தமிழ்நாட்டை துண்டாடுவது என்பது, ஒரே மொழிபேசும் மக்களை, தங்களுக்குள்ளாகவே பிரிவினைகொண்டு ஒருவொருக்கொருவர் எதிரிகளாக நிறுத்தப் படும் சூழல் உருவாகும் எடுத்துக்காட்டாக ஒரே மொழி பேசும் தெலுங்கு தேசிய இனமக்கள் ஆந்திரா, தெலங்கானா எனப் பிரிந்திருப்பதால் கிருஷ்ணா-கோதாவரி நீர் பங்கீட்டு பிரச்சினை பெருமளவில் வெடித்திருக்கிறது. ஒரே மொழிபேசும் மக்கள், ஆனால் நிலவியலாகப் பிரிந்திருப்பதால், `தண்ணீர் வேண்டும்’ என ஒரு மாநிலத்தவரும், `தரக் கூடாது’ என மற்றொரு மாநிலத்தவரும் சண்டையிட்டுக்கொள்வது கண்கூடு. இந்தநிலை தமிழ்நாட்டில் கொங்கு நாட்டுக்காரர் டெல்டாவிற்கு காவிரி நீரைக் கொண்டு செல்வதை தடுக்க முனைந்து மேட்டூர் அணையை இழுத்து மூடுவார்கள்.
இது ஆர்.எஸ் எஸ் அமைப்பின் சூழ்ச்சியும் கூட – ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மாநிலங்களை எல்லாம் ஒழித்துவிட்டு `ஜன்பத் மண்டலங்கள்’ என்ற பெயரில் தனித்தனி மாவட்டங்களாகப் பிரிப்பது, இதன் மூலம் மொழிவழி மாநிலங்களை ஒழித்துக் கட்டுவது மட்டுமல்லாமல் தேசிய இன உணர்வை சிதறடித்து ஹிந்துத்துவ வலைக்குள் மக்களைக் கொண்டு வந்து அடிமைகளாக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்-இன் திட்டங்கள் தான் இவர்களின் பேச்சு எல்லாம் – தமிழர் என்று இருக்கும் ஒரு தேசிய இனத்தின் அடையாளமாக இருக்கும் தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும்” என்ற சிந்தனையே தமிழர் நலனுக்கு விரோதமானது.
தேசிய இனத்திற்கு ஆபத்து என்பது ஒருபுறமிருக்க மற்றொரு பக்கம் தமிழ்நாட்டு மண்ணை சுரண்டி தமிழர்களை சியோரா லியோன் நாட்டுக் குடிமக்கள் போல் ஒட்டு மொத்த மக்களையுமே கூலித்தொழிலாளர்களாக மாற்றும் ஒரு பெரும் ஆபத்தும் உள்ளது. இதற்கு நம் கண் எதிரே உள்ள எடுத்துக்காட்டு லடாக் பகுதி.
லடாக் பகுதியை ஜம்மு – காஷ்மிரி லிருந்து பிரித்து தனி மாநிலமாக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை ஆகும்.
ஜம்மு – காஷ்மிரில் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் அங்கு பிரிவு 370 அகற்றப்பட்டது, அதுமட்டுமல்ல, லடாக் யூனியன் பகுதியாக அறிவிக்கப்பட்டது. அங்கு இதற்கு முன்பு மக்களின் குரலை எடுத்துச் சொல்ல 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால் இப்போது அங்கு நடக்கும் அநீதிகளை வெளிக்கொண்டு வர யாருமில்லாத சூழல் உருவாக்கவே அங்கு கார்ப்பரேட்டுகள் அம்மண்ணைச் சுரண்டும் பணியில் இறங்கிவிட்டனர். இதனை எதிர்த்து பேரணி, பட்டினிப் போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டங்கள் என சோனம் வாங்சூக் நீண்ட நாட்களாக பட்டினிப் போராட்டம் இருந்து வருகிறார். ஆனால் நாளிதழ்களில் ஒரு சிறிய செய்தி கூட வெளிவரவில்லை. சமூகவலைதளங்கள் மூலமாக அங்கு நடப்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது.,
இப்போது தமிழ்நாட்டிற்கு வருவோம்.
இந்திய துணைக்கட்டம் கண்ட பிரி வினையின் போது பாஞ்சியான் என்ற பெருங்கண்டத்தில் இருந்து விலகி மெல்ல மெல்ல இந்தியப் பெருங்கடலில் நகர்ந்து ஆசியாவோடு மோதி நின்றுள்ளது, இந்தப் பயணம் சுமார் 80 கோடி ஆண்டுகளாக நடபெற்றுள்ளது என்றும் 20 கோடி ஆண்டுகளாக நடைபெற்றிருக்கலாம் என்றும் இரண்டு கருத்துக்கள் கூறப்படுகிறது.
அப்படி நகரும் போது குறிப்பாக தென் இந்தியா பகுதி பல்வேறு வளங்களை கொண்ட மண் ஆகையால் தான், இங்கு கவனிக்க வேண்டியது, கொங்கு நாடு, பாண்டிநாடு, பல்லவ நாடு(வடதமிழ்நாடு) என்று உருவானால் டெல்டா பகுதி என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறதா?
அம்பானியும் – அதானியும் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு சதுர அடியிலும் என்ன வளம் உள்ளது என்பதை தோண்டித்தோண்டிக்கொண்டே இருக்கிறது. மத்திய தமிழ்நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகள் அள்ளினாலும் தீராத இரும்புத்தாதும் மேற்குதொடர்ச்சி மலையில் தமிழ்நாட்டுப் பகுதியில் கொட்டிக்கிடக்கும் கிரனைட் கற்கள் தென்கிழக்கு தமிழ் நாட்டில் அரிதான கனிம வள மண்கள், டெல்டாவில் கொட்டிக்கிடக்கும் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் போன்றவை கார்ப்பரேட்டுகளின் கண்களை உறுத்திக் கொண்டே உள்ளது.
இந்த நிலையில் திமுக தலைமையிலான அரசு டெல்டா பகுதியை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளதால் கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்காமல் போய்விட்டதே என்ற ஒரு கடுங்கோபம் கார்ப்பரேட்டுகளுக்கு. மாநிலத்தில் அரசுகள் இயங்கும் வரை தமிழ்நாட்டைக் கொள்ளை அடிக்க முடியாது.
அதற்கான அச்சாரமாக முதலில் பிரிவினை பேசுபவர்களை தூண்டிவிட்டு தமிழ்நாட்டை சிதறடிக்கவேண்டும், அதன் பிறகு பிரிக்கப்பட்ட பகுதிகளை லடாக் போன்று யூனியன் பிரதேசமாக மாற்றி ஒட்டு மொத்த அதிகாரத்தையும் ஒன்றிய அரசின் கைகளுக்குக் கொண்டு சென்ற பிறகு நன்கு விளைந்த நெல்மணிகள் கொண்ட வயலைச் சூறையாட கால்நடைகளை அவிழ்த்துவிடுவது போன்று பிரிக்கப்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகளை எவ்வித எதிர்ப்பும் இன்றி சூறையாட இவர்கள் போடும் திட்டத்திற்கு அச்சாரமாகத்தான் மேலே கூறிய பிரிவினைவாத பேச்சுக்கள்.
டாக்டர் ராமதாஸ் பாஜகவோடு கூட்டணி சேருவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு கூட அதிமுகவோடு பா.ம.க. சேலம் சட்டமன்ற உறுப்பினர் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தொலைக்காட்சியில் செய்திகள் ஓடிக்கொண்டு இருந்தது,
இந்த நிலையில் அந்தக்கட்சியினரே அதிர்ச்சி அடையும் வண்ணம் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்தார்.
இதற்குப் பின்னால் ராமதாசின் வடதமிழ்நாடு தனி மாநிலம் என்ற பிரிவினைவாத திட்டம் கைகொடுத்தது. ஆக தமிழ்நாட்டில் பாஜகவோடு இணையும் அனைவருமே பிரிவினை என்ற ஒரே நேர்கோட்டில் இணைந்து தமிழ்நாட்டைக் கூறுபோடக் காத்திருக்கின்றனர்.
இதற்கு எதிராக நம் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து இந்த பிரிவினைவாத கூட்டத்தை ஓடஓடவிரட்டவேண்டும்.