காஞ்சிபுரம், மார்ச் 29- மாநில அரசு திட்டங்கள் , ஒன்றிய அரசு திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மோடியை அழைத்து வருவாரா அண்ணாமலை நாங்கள் தயார் என சவால் விட்டுள்ளார் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம் மற்றும் காஞ்சிபுரம், சிறீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் படப்பையை அடுத்த கரசங்கால் பகுதியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட அனைத்து இந்திய கூட் டணி கட்சி மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறீபெரும்புதூர் நாடாளு மன்ற தொகுதி வேட்பாளர் டி ஆர் பாலு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வம் ஆகியோர் அறிமுகப் படுத்தப்பட்டு அவர்கள் அனைவரிடமும் வாக்குகள் கோரினர்.
இக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தேர்தல் நேரத்தில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதும் , அளிக்காத வாக்குறுதியான காலை உணவுத் திட்டம் நான் முதல்வன், இன்னுயிர் காக்கும் 24 மணி நேரம் என பல எண்ணற்ற திட்டங்களை வாக் குறுதிகள் அளிக்காமல் தமிழ்நாடு மக்களுக்கு செயல் படுத்திய அரசு இந்த கூட்டணி அரசு.
இரண்டரை ஆண்டுகளில் மாநில அரசு செயல்படுத்திய திட்டங்கள் , பத்து ஆண்டுகளாக ஒன்றிய அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து ஒரே மேடையில் அண்ணாமலையுடன் விவாதிக்க தயாராக உள்ளதாகவும், வேண்டுமென்றால் மோடியை கூட அண்ணாமலை அழைத்து வரட்டும் விவாதிக்க நாங்கள் தயார் என சவால் விடுவதாக செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.
மேலும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி, எடப்பாடி பழனிச்சாமி எனவும் , இரண்டரை ஆண்டுகளில் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றியதுடன் அளிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய அரசு இந்த அரசு எனவே இதைக் கூறி மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, கருணாநிதி, வரலட்சுமி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.