திருத்தணி, மார்ச் 28- திருத்தணி பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் அரக்கோணம் தொகுதியின் “இந்தியா” கூட்டணி சார்பில், திமுகவை சேர்ந்த தற்போதைய மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மீண்டும் போட்டியிடுகிறார். இந் நிலையில், திருத்தணியில் அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது, மக்கள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் உதயசூரியன் சின்னத்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மோடியின் தலையில் கொட்டும் கொட்டு. மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் அரக்கோணம் தொகுதியில் ஜெகத் ரட்சகனை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும்.
அவ்வாறு வெற்றி பெறச் செய்தால் மாதத்துக்கு இரு முறை நான் அரக்கோணம் மக்களவை தொகுதிக்கு வந்து, ஜெகத் ரட்சகன், அமைச்சர் காந்தி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் உள்ளிட்டோருடன் இணைந்து, அரக்கோணம் தொகுதி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவேன். திருத்தணி பகுதியில் ஜவுளி பூங்கா, சிப்காட் தொழிற் பூங்கா,அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
“இந்தியா” கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம்
சென்னை, மார்ச் 28- இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்கள் தமிழ் நாட்டில் தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர்.
சீதாராம் யெச்சூரி-பிரகாஷ் காரத்
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் வேட் பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அடுத்த மாதம் (ஏப்ரல்) 11ஆம் தேதி சென்னையிலும், 12ஆம் தேதி திண்டுகல்லிலும், 13ஆம் தேதி மதுரையிலும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் 6ஆம் தேதி மதுரையிலும், 7ஆம் தேதி திண்டுக்கல்லிலும், 8ஆம் தேதி திருப்பூர், கோவையிலும் பிரச்சாரம் செய்கின்றனர்.
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நாளை முதல் 31ஆம் தேதி வரை சென்னையிலும், அடுத்த மாதம் 1ஆம் தேதி மதுரையிலும், 2ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை சென்னையிலும், 4ஆம் தேதி கள்ளக்குறிச்சியிலும், 5ஆம் தேதி வேலூரிலும், 6ஆம் தேதி திருவள்ளூரிலும், 7ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூரிலும், 8ஆம் தேதி கடலூரிலும், 10ஆம் தேதி ஓசூர். கிருஷ்ணகிரியிலும், 11ஆம் தேதி தருமபுரி, சேலத்திலும், 13ஆம் தேதி விழுப்புரத்திலும் வாக்கு சேகரிக்கிறார்.
டி.கே.ரங்கராஜன்-சவுந்தரராஜன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் அடுத்த மாதம் 2ஆம் தேதி கோவில்பட்டி, தூத்துக்குடியிலும், 3ஆம் தேதி திண்டுகல்லிலும், 4ஆம் தேதி மதுரையிலும் பிரசாரம் செய்கிறார்.
மூத்த தலைவர் அ.சவுந்தரராஜன் வருகிற 30ஆம் தேதி காஞ்சிபுரத்திலும், 31ஆம் தேதி செங்கல்பட்டிலும், அடுத்த மாதம் 4ஆம் தேதி புதுச்சேரியிலும், 5ஆம் தேதி சிறீபெரும்புதூரிலும், 6ஆம் தேதி வேலூரிலும், 8, 9ஆம் தேதிகளில் சென்னையிலும், 13ஆம் தேதி நாகப்பட்டினத்திலும், 14ஆம் தேதி தஞ்சாவூர், திருச்சியிலும், 15ஆம் தேதி மதுரையிலும், 16, 17ஆம் தேதி களில் திண்டுக்கல்லிலும் வாக்கு சேகரிக்கிறார்.
உ.வாசுகி-நாகை மாலி
மத்தியக் குழு உறுப்பினர் உவாசுகி வருகிற 30ஆம் தேதி சிதம்பரத்திலும், 31ஆம் தேதி. அடுத்த மாதம் 9, 10ஆம் தேதிகளில் திண்டுகல்லிலும், அடுத்த மாதம் 1, 2,5,6ஆம் தேதிகளில் மதுரையிலும், 3ஆம் தேதி திருச்சியிலும், 4ஆம் தேதி தஞ்சாவூரிலும், 7, 8ஆம் தேதிகளில் விருதுநகரிலும் வாக்கு சேகரிக்க உள்ளார்.
இதேபோல நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரியிலும், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சியி லும், சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சியிலும், சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை திருச்சி, பெரம்பலூர், கரூரிலும் ஆதரவு திரட்டுகிறார்கள்.