விருதுநகர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நையாண்டி
கிருஷ்ணன்கோயில், மார்ச் 28- இந்தியா கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச் சருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
நேற்று (27-03-2024) விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோயிலில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், தென்காசி மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருத்துவர் ராணி சிறீகுமார், விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகி யோரை ஆதரித்து வாக்கு கேட்டு எழுச்சியுரை ஆற்றினார்.
அதன் விவரம் வருமாறு:
திருச்சியில் தொடங்கிய என்னுடைய பயணத்தில், இன்றோடு பத்து நாடாளுமன்றத் தொகுதிகளைக் கடக்கி றேன். இந்தப் பத்து தொகுதிகளிலும், நான் பயணம் செய்யும்போது, மக்களிடம் மாபெரும் எழுச்சியைப் பார்க்கிறேன்! முக்கியமாக, தாய்மார்களின் முகங்களில் மகிழ்ச்சியைப் பார்க்கிறேன்!
நான் முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன், சென்னை யில் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்குக் காலையில் சென்றிருந்தேன். ஒரு குழந்தையைப் பார்த்து, “என்னம்மா சாப்பிட்டீர்களா” என்று கேட்டேன். அந்தக் குழந்தை எதார்த்தமாக, ”வீட்டில் அப்பா அம்மா வேலைக்குச் செல்கிறார்கள். காலையில் டிபன் செய்ய மாட்டார்கள். அதனால் சாப்பிடவில்லை” என்று கூறியது முதல், எனக்கு மனதே சரியில்லை! அதிகாரிகளை அழைத்தேன். பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவு திட்டம் கொண்டு வர வேண்டும், திட்டத்தைத் தயார் செய்யுங்கள் என்று கூறினேன்.
அதிகாரிகள் என்னிடம் மிகவும் பணிவாக, ”சார், நம்முடைய நிதிநிலை மோசமாக இருக்கிறது. அது மட்டுமல்ல, இது நம்முடைய தேர்தல் அறிக்கையில்கூட கூறவில்லை – என்று கூறினார்கள்” உடனே பதில் கூறி னேன். வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால் என்ன? நம்முடைய எதிர்கால தலைமுறையான குழந்தைகள் காலையில் நன்றாகச் சாப்பிட்டு, நல்ல உடல் நலத்துடன் இருந்தால்தான் அவர்கள் படிப்பது மனதில் பதியும், இதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும். நிதிநிலையை சரி செய்யவும் திட்டம் போடுவோம். நீங்கள் கோப்பினைத் தயார் செய்யுங்கள்” என்று உத்தர விட்டேன்.
வரலாறும் – மக்களான நீங்களும் இந்த ஸ்டாலினுக்குக் கொடுத்த வாய்ப்பால், இன்றைக்கு, தமிழ்நாடு முழுவதும் 16 இலட்சம் குழந்தைகள் வயிறார உண்ணும் காலை உணவுத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுகிறது.
அடிப்படைக் கொள்கையே சமூகநீதிதான்
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு வந்தபோது, சீர்மரபின மக்கள் என்னிடம் ஒரு முக்கிய கோரிக்கையை வைத்தார்கள். சீர்மரபினர் வகுப்பினர் களுக்கு DNC மற்றும் DNT- என்று இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தது. இது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது என்று என்னிடம் கூறினார்கள். ‘இந்தக் குழப்பத்தை நீக்க நடவடிக்கை எடுப்போம்’ என்று நான் வாக்குறுதி கொடுத்தேன். அந்த இரட்டைச் சான்றிதழ் குழப்பத்திற்குக் கூறியபடியே முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். இனி ஒற்றைச் சான்றிதழ் பெற்றால்போதும் என்று உத்தரவிட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது!
சொன்னதைச் செய்துவிட்டுத்தான் உங்கள் முன் னால் வந்து தெம்போடு துணிவோடு நிற்கிறேன். ஒன்றிய – மாநில அரசுகளின் அனைத்துச் சலுகைகளையும் பெறுவதற்கு, இந்த ஒற்றைச் சான்றிதழ் வழிவகுக்கும்.
அதுமட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டோர் சமுதாய மக்களின் நலனுக்காக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக – ஆதிதிராவிட சமுதாய மக்கள் நலனுக்காக சமூக கல்வி முன்னேற்றத்துக்காகப் – பல்வேறு திட்டங் களை செய்து கொடுத்தது மட்டுமல்ல, செய்யும் அரசும் நாங்கள்தான்! செய்ய இருக்கும் அரசும் நம்முடைய திராவிட மாடல் அரசுதான்.
வகுப்புவாரி உரிமைச் சட்டம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கொள்கையே சமூகநீதிதான். திராவிட இயக்கம் உருவானதே அனைத்துச் சமூகங்களுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்றுதான். இன் றைக்குத் தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்று, முன்னேறி இருக் கிறார்கள் என்றால், 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்ட வகுப்புவாரி உரிமைச் சட்டம்தான் காரணம்! இதை அடுத்தடுத்து வந்த கட்சிகளும் அமல்படுத்தினார்கள்.
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் ஆட்சி, சமூகநீதியை நிலைநாட்டும் ஆட்சியாக இருந்தது. சமூகநீதிக்கு ஆபத்து வந்தபோது, தந்தை பெரியாரும் – பேரறிஞர் அண்ணாவும் போராட்டம் நடத்தினார்கள். இதை, அன்றைய பிரதமர் நேரு அவர்களுக்கு எடுத்துக் கூறி, முதல் அரசியல் சட்டத் திருத்தம் உருவாகக் காரணமாக இருந்தவர் பெருந்தலைவர் காமராசர். சட்ட மாக உருவாக்கிக் கொடுத்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். இப்படி பெருந்தலைவர்களால் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு – சமூகநீதிக்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் கட்சிதான் பா.ஜ.க.
மண்டல் பரிந்துரை அடிப்படையில்…
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து என்ன செய் கிறார்கள்? ஒன்றிய அரசு பணிகளில் மண்டல் பரிந்துரை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது இல்லை! ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும் வழங் குவது இல்லை!
நாம் கூறும் இதை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் பேசும்போது புள்ளிவிவரத்துடன் கூறினார்! ஒன்றிய அரசின் மிக உயர் பொறுப்பில் இருக்கும், அதாவது நம் நாட்டையே நிர்வகிக்கும் 90 செயலாளர்களில் வெறும் 3 பேர்தான், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர் கள்! பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் குறைவுதான்.
இது நாட்டிலேயே பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா? ஒடுக்கப்பட்ட மக்கள் படிப்பதை பெரிய பொறுப்புகளுக்குச் செல்வதை – காலம் காலமாகத் தடுத்த இவர்கள் இப்போதும் தங்கள் கையில் ஆட்சியை வைத்திருப்பதால் தடுக்கிறார்கள். அதுக்கு என்னென்ன புதிய சட்டங்கள் வருகிறது?
குலக்கல்வியை ஊக்குவிக்கும்
புதிய கல்விக் கொள்கை!
ஏழை நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வு. ஒன்றிய பணிக்கான தேர்வுகளில் தமிழைப் புறக்கணித்து, ஹிந்தித் திணிப்பு – சமஸ்கிருதத் திணிப்பு செய்து, நம்முடைய பிள்ளைகளின் வேலை களைப் பறிக்கிறார்கள். பொருளாதார அடிப்படையில், இடஒதுக்கீடு என்று ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் ஒடுக்கப் பார்க்கிறார்கள். இப்படி அநியாயமாக நம்முடைய உரிமைகளை பறிக்கும் கூட்டம்தான் பா.ஜ.க.! அதனால் தான் கூறுகிறோம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத் தப்பட்டோர் முன்னேறுவதை பா.ஜ.க. எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளாது.
பெரும்பான்மை மக்களுக்கும்
எதிரி பா.ஜ.க.
இதனால்தான் ஒன்றிய அளவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன், ஜாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கேட்கிறோம், போராடுகிறோம். அதையாவது செய்கிறார்களா? அதை யும் மறுக்கிறார்கள். இதனால்தான் கூறுகிறோம், நாட்டின் சிறுபான்மையினருக்கும் மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கும் எதிரி பா.ஜ.க.தான் என்று மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறேன்!
இதுமட்டுமா, வரலாறு காணாத ஊழல்களைச் செய்து விட்டு, அதை மூடி மறைக்க E.D. I.T. C.B.I. போன்ற அமைப்புகளைக் கூட்டணியாகச் சேர்த்துக் கொண்டார் கள். இப்போது பா.ஜ.க.வை ஆட்டம் காண வைக்கும் ’இமாலய ஊழலான’ தேர்தல் பத்திர ஊழல் வெளியாகி இருக்கிறது.
பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல்
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில், இந்தத் தேர்தல் பத்திர ஊழல் என்பது, இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் என்று கூறியுள்ளார். ஏற்கெனவே அவர், பா.ஜ.க. ஆட்சி நம்முடைய நாட்டை எப்படியெல்லாம் சீரழித் திருக்கிறது என்று – ”புதிய இந்தியா எனும் கோணல் மரம்” என்ற புத்தகத்தில் கவலையுடன் எழுதியிருக்கிறார். ”புதிய இந்தியா பிறந்துவிட்டது” என்று பா.ஜ.க. கட்டமைக்கும் பிம்பம் எப்படி மோசமானது என்று நாளுக்கு நாள் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.
நாட்டின் தன்னாட்சி அமைப்புகளைக்கூட, பா.ஜ.க. வின் ஆதரவு கட்சிகள்போல் செயல்பட வைத்து, அரசியல் சட்டப்படிதான் ஆட்சி நடக்கின்றதா என்ற சந்தேகத்தை பா.ஜ.க. ஆட்சி உருவாக்கிவிட்டார்கள்.
இது பற்றி, ஆங்கில இந்து நாளேடு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது. அதில், ‘‘E.D. I.T. ரெய்டுகள் நடந்த நிறுவனங்கள் வாங்கிய, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை, ஆளும் பா.ஜ.க. பணமாக்கியிருக்கிறது” என்று எழுதியிருக்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சியால் இந்திய நாட்டு மக்களுக்கு நடந்த நன்மை என்று ஒன்றாவது இருக்கிறதா?
சமூகநீதியை சகோதரத்துவத்தை சமதர்மத்தை நிலைநாட்டவேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சி இந்தியாவில் உருவாகியே ஆக வேண்டும்.
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும், தமிழுக்கும் துரோகம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், வாக்கு கேட்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார். பிரதமர் ஆவதற்கு முன்னால் தமிழ்நாட்டிற்கு வாக்கு கேட்டு வந்தபோது பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தாரே? அதில் எதையாவது செய்தாரா? இல்லையே!
கேரண்டியும் இல்லை வாரண்டியும் இல்லை
இந்தியா கூட்டணியை பார்த்து பயந்து, பிரதமர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார்.
தேர்தல் வந்துவிட்டால், கூடவே மக்கள் மேல் அவருக்கு கரிசனமும் பொங்கி வரும். திடீரென்று விலையெல்லாம் குறைப்பார். இப்போதுகூட சமையல் எரிவாயு உருளை விலையை – பெட்ரோல் விலையை – டீசல் விலையைக் குறைத்திருக்கிறார்.
மோடி பிரதமராகப் பொறுப்பேற்பதற்கு, 2013-க்கு முன்னால், சமையல் எரிவாயு உருளை விலை எவ்வளவு? 410 ரூபாய்! பத்து ஆண்டுகள் கழித்து, 2023 இல் சமையல் எரிவாயு உருளை விலை எவ்வளவு? 1103 ரூபாய்! அய்ந்து மாநில தேர்தல் வந்துவந்தது! கூடவே மோடிக்கு இரக்கமும் வந்தது! சமையல் எரிவாயு உருளை விலை குறைந்தது! இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது, அதனால் 100 ரூபாய் குறைத்திருக் கிறார். தேர்தலுக்கு தேர்தல் மட்டும் விலை குறைப்பு செய்வது ’பச்சோந்தி அரசியல்’ இல்லையா? 410 ரூபாய் இருந்த சமையல் எரிவாயு உருளையை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்த்தியதுதான் உங்களின் சாதனை! தேர்தல் வந்ததால் சமையல் எரிவாயு உருளை விலையை மட்டுமல்ல, பெட்ரோல் – டீசல் விலையையும் குறைக்கிறார். விலைக்குறைப்பு என்பது மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி நடத்தும் நாடகம்!
இப்படிப்பட்ட பிரதமர் மோடியை நீங்கள் நம்புகிறீர் களா? மக்கள் யாருமே அவரை நம்பவில்லை! உடனே மக்களை நம்ப வைக்க இப்போது புதிய விளம்பரம் ஒன்று செய்கிறார்! “இது மோடியின் கேரண்டி” என்ற புதிய விளம்பரத்துடன் வந்திருக்கிறார். உண்மையில அவரின் வாக்குறுதிகளுக்கு, கேரண்டியும் இல்லை! வாரண்டியும் இல்லை!
கருப்புப் பணத்தை மீட்டு…
பிரதமராக நாட்டு மக்களுக்கு நல்லது செய்யச் சொன்னால், பத்தாண்டுகளாகச் சொன்ன எதையுமே செய்யாமல், ‘சேல்ஸ்மேன்’ மாதிரி கேரண்டி என்று விளம்பரம் செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லை? அவரின் கேரண்டிகளின் லட்சணம் என்ன?
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு அனைவரின் வங்கிக் கணக் கிலும் ரூ.15 இலட்சம் போடலாம் என்று சொன்னாரே? 15 இலட்சம் இல்லை, ரூ.15 ஆயிரமாவது மக்களுக்கு கொடுத்தாரா? 15 ரூபாயாவது கொடுத்தாரா? அதுமாதிரி யான கேரண்டியா? இல்லை, ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று சொன்னாரே, என்ன ஆனது? உலகத் தொழிலாளர் அமைப்பு ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இன்றைக்கு ஒரு செய்தி வந்திருக்கிறதுஞ் இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தால் 83 விழுக்காடு இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இதுதான் மோடி சொல்லும், கேரண்டியின் லட்சணம்!
தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. – தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. இரண்டையும் ஒரு சேர வீழ்த்துங்கள்.
தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர் டாக்டர் ராணி சிறீகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் – விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அவர் களுக்குக் கை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் அளிக்கும் வாக்குதான் இந்தியாவைக் காப் பாற்றும்! தமிழ்நாட்டைக் காப்பாற்றும்! எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்றும்! பாசிசத்தை வீழ்த்த இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன் நாற்பதும் நமதே! நாடும் நமதே! நாற்பதும் நமதே! நாடும் நமதே!
-இவ்வாறு தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச் சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.
சாதனைகளாக மாறப் போகும் வாக்குறுதிகள்!
நம்முடைய இந்தியா கூட்டணி, ஒன்றிய அரசாக வந்ததும் தமிழ்நாட்டிற்குச் செய்ய இருக்கும் நன்மை களை, திட்டங்களாக -வாக்குறுதிகளாகத் தேர்தல் அறிக்கையில் வழங்கியிருக்கிறோம் சாதனைகளாக மாறப்போகும் அந்த வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்திகளாகச் சொல்ல விரும்பு கிறேன்
பத்தாண்டுகளாக சாமானிய மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று சிறிதும் நினைத்துப் பார்க்காமல், மக்கள் விரோத பா.ஜ.க. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை குறைக்கப்படும்!
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்!
தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து, 150 நாட்களாவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப் படும்.
மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்.
விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளிலும், வங்கி களிலும் வாங்கியிருக்கும் கடனும் வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்.
வங்கிகளில் ‘மினிமம் பேலன்ஸ்’ இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.
ராபர்ட் கால்டுவெல் மொழி ஆராய்ச்சி மய்யம் உருவாக்கப்படும்.
திருநெல்வேலி, சங்கரன்கோவில் ரயில் நிலையங் களை இணைக்கும் வகையில் ஆலங்குளம், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாக சங்கரன்கோவிலை இணைக்கும் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
கேரளா, கோவை மற்றும் சென்னை செல்லும் ரயில்கள் கடையம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வழிவகை செய்யப்படும்.
காரியாப்பட்டி ரயில் நிலையம் அமைக்கப்படும்.
எல்லாவற்றிற்கும் மேல், இந்தப் பகுதியில் இருக்கும் சிவகாசி பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கச் சீனப் பட்டாசு இறக்குமதி தடை செய்யப்படும்.