கர்நாடக சங்கீதம் என்றாலே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் நினைவுக்கு வருவார்கள். அத் தகைய கர்நாடக சங்கீதத்துக்கு மெருகூட்டும் இசைக் கருவிகள் பல்வேறு சமூகத்தினரின் பங்களிப்போடு தயாரிக்கப்படுபவை. கர்நாடக சங்கீதத்தில் வீணை, வயலின், புல்லாங்குழல், நாதஸ்வரம், கடம் என பல்வேறு வாத்தியங்கள் இருந்தாலும், மிருதங்கம் தனிச்சிறப்புடையது. காரணம், அது தோல் வாத்தியம். மாட்டுத்தோல், ஆட்டுத்தோல் என இதன் மூலப்பொருட்கள் அனைத்தும் பார்ப்பனர்களால் தீண்டப்படாத பொருட்கள்.
மிருதங்கம் தயாரிப்பவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள், பின்னாளில் இவர்கள் காலனிய ஆதிக்கத்தின் காரணமாகவும். ஜாதிய ஒடுக்கு முறையின் காரணமாகவும் கிறிஸ்துவ மதத்துக்கு மாறினார்கள். அதில் ஒருவர்தான் செபாஸ்ட்டியன். அவரது குடும்பம் தஞ்சாவூரைப் பின்புலமாகக் கொண்டது. பின்னாளில் அவரது குடும்பம் மிருதங்கத் தயாரிப்பு சாம்ராஜ்ஜியமாக உருமாறியதால், இந்நூலின் பெயரும் SEBASTIAN & SONS : A BRIEF HISTORY OF MRDANGAM என்றே அமைந்துள்ளது.
மிருதங்கம் தயாரிப்பவருக்கும். வாசிப்பவருக்கும் – இடையே இருந்த ஜாதிய முரண்பாடுகளை, பிற்காலத்தில் நகர மயமாதலாலும், நவீன மயத்தின் காரணமாகவும் அது எவ்வாறு மாற்றம் அடைந்தது என்பதையும் செபாஸ்ட்டியன் குடும்பத்தின் கதையோடு பிணைத்துள்ளார் நூலாசிரியர் ‘சங்கீத கலாநிதி” டி.எம், கிருஷ்ணா. இந்த உற்பத்தி உறவு முறையில் பெரியார் கண்ட திராவிட இயக்கத்தின் தாக்கத்தையும் அவர் ஓர் இடத்தில் பதிவுசெய்கிறார்.
மிருதங்கத்தின் தயாரிப்பு முறை மிகவும் கடினமானது. மனித உழைப்பை உறிஞ்சி எடுக்கக் கூடியது. அதே சமயத்தில் கலை வேலைப்பாடுகளால் ஆனது. தரமான பலா மரக்கட்டைகளைச் சேகரித்தல், மாட்டுத்தோல் மற்றும் ஆட்டுத்தோல் பதப்படுத்தல், அவற்றை தோல் கயிற்றின் மூலம் இணைத்தல், பிறகு சத்தத்துக்கு ஏற்ப முறைப்படுத்துதல் எனச் சிக்கலான தயாரிப்பு முறையை வேண்டி நிற்கும் வாத்தியம் மிருதங்கம். இதைப் பற்றி மிக விரிவாகவும் ஆய்வுகளுடனும், துறைசார் நிபுணர்களுடைய நேர்காணல்களுடனும் இந்நூலில் கிருஷ்ணா பதிவு செய்துள்ளார்.
இந்நூலின் மூலம் மிருதங்கம் தயாரிக்கும் குடும் பங்களின் வரலாறும், அவர்கள் இந்தத் தொழிலில் அடைந்த சரிவுகளும், அவற்றிலிருந்து கற்ற பாடங்களும், அதேநேரத்தில் கர்நாடக சங்கீதத்தில் இருந்து இவர்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளதையும் அறியலாம். குறிப்பாக, மிருதங்கம் தயாரிக்கும் தாழ்த்தப்பட்ட சமூக கிறித்துவர்களின் வாழ்க்கைத் தரம் ஜாதி என்ற ஒற்றைக் காரணத்தால் பெரிய அளவில் பொருளாதார ரீதியில் மேன்மை பெறவில்லை.
‘மிருதங்க வித்வான் என கொடுக்கப்படும் அங்கீகாரம் அதனை வடிவமைக்கும் தயாரிப்பாள னுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்பதை வருத்த மாகப் பதிவு செய்கிறார் நூல் ஆசிரியர் டி.எம்.கிருஷ்ணா.
பிறப்பால் ஒரு பிராமணரான டி.எம்.கிருஷ்ணா, சொந்த சமூகத்தை விமர்சனபூர்வமாகவும் அணுகி யுள்ளார். அவர் கொண்டுள்ள இந்தப் பக்குவம்தான் ஜாதி-மத ஆதிக்க சக்திகளால் அவர் எதிர்க்கப் படுவதற்கும் காரணமாக இருக்கிறது. இந்த நூல் காலச்சுவடு பதிப்பகத்தால் “செபாஸ்டியன் குடும்பக் கலை’ என்ற தலைப்பில் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
பெரியாரைப் பற்றி கிருஷ்ணா பாடியதால் “கர்நாடக சங்கீதத்தின் புனிதம் கெட்டுவிட்டது” என்று சொல்பவர்கள், மிருகத் தோலால் செய்யப்படும் மிருதங்கத்தை வாசிப்பதால், கர்நாடக சங்கீதம் தீட்டாகிவிட்டதா என்பதையும் சொல்ல வேண்டும் சொல்வார்களா?
நன்றி: ‘முரசொலி’, 26.3.2024