சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா

viduthalai
6 Min Read

தஞ்சாவூரில் கூடிய திராவிடர் கழகப் பொதுக் குழுவில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடுவதுபற்றி கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா!

“அறிவாசான் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா 2024 நவம்பரில் தொடங்குகிறது. 2025 ஆம் ஆண்டு நிறைவடைகிறது.
தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளும், கோட்பாடுகளும் உலகம் தழுவிய அளவில் இன்றைய நாளில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுயமரியாதை, சமூகநீதி, இனநலம், மொழி மானம், மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு, பாலியல் உரிமை, ஜாதி ஒழிப்பு, சமத்துவம், சமதர்ம சிந்தனைகளின் செழித்த விளைச்சல் நிலமாகவும், இந்தியத் துணைக் கண்டத்திலேயே தனித்துவம் மிக்கதாகவும், ‘‘திராவிட பூமி, பெரியார் மண்” என்று கட்சிகளைக் கடந்து பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும், அரசியலிலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியாகவும், பார்ப்பன வல்லாண்மையை வேரடி மண்ணோடு வீழ்த்தும் போராயுதமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்றால், அதற்கு வலுவான அடித்தளம் இட்டது தந்தை பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கமே!
சுயமரியாதை இயக்கம் நடத்திய மாநாடுகள் – நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வரலாற்றுத் திருப்பங்களாகவும், ஆட்சிகள்மூலம் செயல்படுத்தப்படும் உயரத்தை எட்டின என்பதும் வரலாறு!

ஒரே நேரத்தில் சுயமரியாதை இயக்கத்திற்கும், ‘‘நீதிக்கட்சி” என்றழைக்கப்பட்ட திராவிடர் இயக்கத்திற்கும் தலைவராக விளங்கி, பிறகு, ‘‘திராவிடர் கழகமாக” பரிணமித்து, இன்றுவரை உயிர்த் துடிப்போடு – தேர்தலில் பங்கேற்காத சமூகப் புரட்சி இயக்கமாக, நாட்டின் அரசியல், சமூக கலங்கரை வெளிச்சமாகவும் செயல்பட்டு வருகிறது.
பிரச்சாரம் – போராட்டம் என்ற இரு விசைகளுடன் சுழன்று சுழன்று தொண்டறம் புரியும் மக்கள் இயக்கமாகவும், அனைத்துத் திராவிட கட்சிகளுக்கும் தாய் என்று சொல்லும் அளவுக்கும், பிற கட்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் பெரும் சக்தியாகவும், வரலாறு படைத்த சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா தொடக்கம் இவ்வாண்டு நவம்பரில் வருகிறது.
இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை இவ்வாண்டு இறுதியில் கொண்டாடுவது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
அதற்குள் இயக்கம் இல்லாத பட்டி, தொட்டி, நாடு, நகரங்கள் எல்லாவற்றிலும் நமது கிளைகள் அமைக்கும் பணியை முடித்தாகவேண்டும் என்று கழகத் தோழர்களை, பொறுப்பாளர்களை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது” என்பதுதான் தஞ்சைத் தீர்மானம்.

சுயமரியாதை என்ற சொல்லை தந்தை பெரியார் ஏன் தேர்ந்தெடுத்தார்? உலகத்தில் எந்த அகராதியைக் கொண்டு புரட்டினாலும், இதற்கு ஈடான பொருளுடைய ஒரு சொல் கிடைக்காது என்கிறார் தந்தை பெரியார்.

இந்த சுயமரியாதை உணர்வு என்பது சிறு வயது முதற் கொண்டே தந்தை பெரியாரை ஆட் கொண்டது.
காஞ்சிபுரத்தில் 1925 நவம்பர் 21, 22இல் திரு.வி.க. தலைமையில் நடைபெற்ற 31ஆவது மாநில காங்கிரஸ் மாநாட்டில் இரண்டாவது நாளில் தந்தை பெரியார் வகுப்புரிமை கோரும் இரு தீர்மானங்களைக் கொண்டு வந்தார். பார்ப்பனர்கள் அழுத்தத்தில் ‘பொது நன்மைக்காக இத்தீர்மானங்களை அங்கீகரிக்க முடியாது’ என்று தீர்மானங்களுக்கு அனுமதி மறுத்தார் – மாநாட்டுத் தலைவர் திரு.வி.க.. “காங்கிரசால் பார்ப்பனரல்லாதார் நன்மை பெற முடியாது! காங்கிரசை ஒழிப்பதே இனி எனது வேலை” என்று மாநாட்டிலேயே எழுந்து கூறிவிட்டு தந்தை பெரியார் வெளியேறினார்.

தந்தை பெரியார் வெளியேறிய அந்த நாளே சுயமரியாதை இயக்கம் பிறந்த நாளாக வரலாற்றில் பதிவாகி விட்டது.
காங்கிரசில் இருந்தபோது அதே ஆண்டு (1925) மே மாதம் இரண்டாம் தேதி ‘குடிஅரசு’ என்ற இதழைத் தொடங்கி தனது சுயமரியாதைப் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார் தந்தை பெரியார்.
காங்கிரசை விட்டு தந்தை பெரியார் வெளியேறினார். அந்தத் தருணத்திலேயே ஒரு பெருங் கூட்டம் தந்தை பெரியாரோடு வெளியேறியது என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
நீதிக்கட்சி முன்னணி தலைவர்களான டாக்டர் ஏ. இராமசாமி (முதலியார்) ‘திராவிடன்’, ஆசிரியர் ஜே.எஸ். கண்ணப்பன், ஆர்.கே. சண்முகம் (செட்டியார்), டி.ஏ. இராமலிங்கம் (செட்டியார்) ஆகியோரும் அப்படி வெளியேறியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

பார்ப்பனரல்லாத தலைவர்களின் கூட்டம் தனியே நடந்தது; அதற்கு டி.ஏ. இராமலிங்கம் (செட்டியார்) தலைமை வகித்தார். அக்கூட்டத்தில் பார்ப்பனரல்லாதாருக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்க வற்புறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் நாடெங்கும் சூறாவளியாகச் சுழன்றடித்தது. தந்தை பெரியாரின் போர் வாளான ‘குடிஅரசு’ மக்கள் மத்தியில் சுயமரியாதை பகுத்தறிவு உணர்ச்சியை ஊட்டியது.

எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், சிருங்கேரி சங்கராச்சாரியார் தந்தை பெரியாரையும், அவரது பாரியாள் (மனைவி) நாகம்மையாரையும் தமது மடத்துக்கு வருமாறு அழைத்து ஸ்ரீமுகம் (கடிதம்) விடுக்கும் அளவுக்கு இருந்தது.

அந்தக் கடிதத்திலே “ஸநாதன தர்மத்தைக் கெடுக்காமல் கரும காண்டத்தில் உள்ள அவரவர்கள் கடமையைச் செய்து சாஸ்திரங்கள் இடம் கொடுக்கும் வரையில்” என்ற நிபந்தனைகள் கண்டு, அதற்கு விரோதமில்லாமல் சில சுவதந்தரங்கள் அளிக்கப்படும் என்ற வாசகங்கள் காணப்படுகின்றபடியால் தாம் அங்கு செல்வதால் எந்தப் பயனுமில்லை என்ற முடிவுக்குத் தந்தை பெரியார் வந்தது கவனிக்கதக்கது.

சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் தந்தை பெரியாரால் நடத்தப்பட்ட மாநாடுகளும், அவற்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் அதுவரை எங்கும் சிந்திக்கப்படாதவை – செயலாக்கத்துக்கும் கொண்டு வரப்படாதவை என்பது நினைவில் இருக்கட்டும்!

எடுத்துக்காட்டுக்கு ஒரு தீர்மானம்: (1929இல் செங்கற்பட்டில் நடத்தப்பட்ட முதல் சுயமரியாதை மாநில மாநாட்டுத் தீர்மானம்)

“பெண்களின் கலியாண வயது 16க்கு மேற்பட்டிருக்க வேண்டும் என்றும், மனைவி புருஷன் இருவரில் ஒருவருக்கொருவர் ஒத்து வாழ இஷ்டமில்லாதபோது தமது கலியாண ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்வதற்கு உதவி செய்ய வேண்டுமென்றும், விதவைகள் மறுவிவாகம் செய்து கொள்வதற்கு உதவி செய்ய வேண்டுமென்றும் கலியாணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்களும், பெண்களும், ஜாதி, மத பேதமின்றித் தங்கள் தங்கள் மனைவி புருடர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள பூரண உரிமையளிக்கப்பட வேண்டுமென்றும், அதற்கேற்றவாறு கலியாண சடங்குகள் திருத்தப்பட வேண்டுமென்றும், கலியாணம் முதலிய சடங்குகள் சொற்ப பணச் செலவில் நடத்தப்பட வேண்டுமென்றும், எக்காரணத்தை முன்னிட்டும் ஒரு நாளைக்கு மேலாவது, ஒரு விருந்துக்கு மேலாவது நடக்கக் கூடாதென்றும் தீர்மானிக்கிறது.”

இன்றைக்கு 95 ஆண்டுகளுக்குமுன் இத்தகைய புரட்சிகரமானவற்றை யாராலும் நினைத்துப் பார்க்க முடியுமா?
அன்றைக்கு சுயமரியாதை இயக்க மாநாட்டுத் தீர்மானங்கள், முடிவுகள் எல்லாம் இன்றைக்கு ஒன்றிய – மாநில அரசுகளின் சட்டங்களாகப் பிறப்பெடுத்துள்ளன என்றால் சுயமரியாதை இயக்கத்தின் அருமையையும், பெருமையையும் வருணிக்க வார்த்தைகள் ஏது?

இன்றைக்கும் ஸநாதனம் பேசும் கூட்டமும், ஒரே மதம் பேசும், ராமராஜ்ஜியம் பற்றிக் கதைக்கும் சக்திகளும் – சங்கிகளும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றன என்றால், சுயமரியாதை இயக்கத்தின் தேவை எத்தகையது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

தென் மாநிலம் குறிப்பாக தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து ஒளி வீசிடுவதற்கும், வடமாநிலங்கள் பிற்போக்குச் சகதியில் பெரும்பாலும் கிடந்து உழல்வதற்குமான காரணம் சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் வேர் கொண்டதுதானே!
1977 செப்டம்பரில் தமிழ்நாட்டுக்கு வந்த பொருளாதார மேதை அசோக் மேத்தா அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்ன முத்தான கருத்தும், கணிப்பும் முக்கியமானவை.
“தென்னகத்தில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே பிற்படுத்தப்பட்ட மக்களின்மீது உயர் ஜாதிக்காரர்கள் செலுத்திய ஆதிக்கத்தை எதிர்த்து, சுயமரியாதை இயக்கம் அறை கூவல் விடுத்தது; பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிலே வெற்றி கண்டு அரசியலையும் கைப்பற்றினார்கள். தமிழ்நாட்டில் நடந்துள்ள இத்தகைய மாற்றத்தின் எதிரொலியை அண்மையில் சில மாதங்களாக வடமாநிலங்களில் காண முடிகிறது” (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ 16.9.1977) என்ற அசோக் மேத்தாவின் கூற்றை எண்ணிப் பார்த்தால் சுயமரியாதை இயக்கத்தின் இன்றியமையாமை, சாதனை எத்தகையது என்பது எளிதில் விளங்கும்.

அதன் நூற்றாண்டு விழாவை இந்தியாவே திரும்பப் பார்க்கச் செய்யும் வகையில் இவ்வாண்டு இறுதியில் கொண்டாடுவது என்று தஞ்சை – திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் காலத்தின் வைர வரிகளாகும்.

நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் – மதவாத சக்திகளை வீழ்த்தும் வலிமையான ஆயுதமே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *