தமிழ்நாட்டில் 2018இல் அமைந்த திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியிலும், இன்று தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அமைத்திருக்கும் “இண்டியா” கூட்டணியிலும் உறுதியான கொள்கைக் கூட் டாளியாகத் திகழ்ந்து வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
2024 மக்களவைத் தேர்தலில் “இந்தியா” கூட்டணியின் சார்பாகத் தமிழ்நாட்டில் அக்கட்சிக்கு ஒதுக்கப் பட்டுள்ள மதுரை, திண்டுக்கல் தொகுதி களில் போட்டியிடப்போகும் வேட்பா ளர்கள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலை யில், தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். அக்கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
அவருடனான உரையாடலில் இருந்து:
கேள்வி: பாஜகவுக்கு எதிராகப் பல எதிர்க்கட்சிகள் இணைந்து இண்டியா கூட்டணி அமைத்திருக்கும் நிலையில், 370 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று பாஜக அறிவித்துள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: “இப்படித் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் இல்லாத ஒன்றைக் கட்டமைக்க பாஜக விரும்புகிறது. 2019 தேர்தலில் 303 தொகுதிகளில் அக்கட்சி வென்றது, அதன் சொந்த பலத்தினால் அல்ல. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்ததால்தான்.
இப்போது பாஜகவுக்கு எதிராகக் கட்சிகள் ஒருமுகப்படுத்தப்படுவதால் பாஜக வெற்றிபெறுவது என்பது _- குறிப்பாக, முந்தைய தேர்தலைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறு வது – வெறும் கனவுதான். தவிர, கடந்த பத்தாண்டு ஆட்சி குறித்து மக்களி டையே மிகுந்த அதிருப்தி நிலவுகிறது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வில்லை. விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை அதிகரித்துள்ளன.
பெரியளவில் தொழில் வளர்ச்சியோ, விவசாய வளர்ச்சியோ இல்லை. ஜன நாயகம், பத்திரிகைச் சுதந்திரம், மதச் சார்பின்மை போன்ற கோட்பாடுகள் மீது நம்பிக்கை வைத்திருக்கக்கூடிய நடுநிலைச் சிந்தனையாளர்கள் பாஜக ஆட்சியைத் தீவிரமாக எதிர்க்கிறார்கள். எந்தத் தரப்பு மக்களையும் திருப்திப் படுத்தாத பாஜக இந்தத் தேர்தலில் தோல்வியடையப் போகிறது.”
கேள்வி: மேற்கு வங்கம், பஞ்சாப், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் தனித் தனியாகப் போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டன. தேர்தலுக்குப் பின்பு இவை ஒரே அணியில் இணை யுமா?
பதில்: “உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம் போன்ற பல மாநிலங் களிலும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் தொகுதி உடன்பாடு நல்ல முறையில் ஏற்பட்டுள்ளது.
பஞ்சாபில் இண்டியா கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவடைய வில்லை. திரிபுராவில் சிபிஎம் ஒரு தொகுதி, காங்கிரஸ் ஒரு தொகுதி என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் எல்லாம் தேர் தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது.
தமிழ்நாடு மாதிரி நெருக்கத்தில் இல்லை. எனவே, தேர்தல் நெருங்கி வரும்போது இன்னும் கூடுதலான மாநிலங்களில் தொகுதி உடன்பாடுகள் நிறைவடையும்.
பாஜக வலுவாக இருக்கிற பெரும் பகுதியான மாநிலங்களில் எதிர்க் கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்றன. பாஜக பலவீனமாக இருக்கிற கேரளம் போன்ற ஒரு சில மாநிலங்களில் எங் களுக்குள் போட்டி இருக்கலாம். அதை விதிவிலக்காகத்தான் பார்க்க வேண் டுமே தவிர, தேசிய அளவிலான விதி என்று பார்க்க முடியாது.
“இந்தியா” கூட்டணியுடைய நோக் கமே பாஜகவை அப்புறப்படுத்தி ஒரு மதச்சார்பற்ற ஆட்சியை அமைப்பது தான். எனவே, சில மாநிலங்களில் கட்சிகளுக்கிடையே உடன்பாடு வரா விட்டால்கூட, “இந்தியா” கூட்டணியில் எந்த மாநிலத்தில் யார் வெற்றி பெற்றாலும் தேர்தலுக்குப் பிறகு இந்தக் கூட்டணி நிச்சயமாக வலுவடையும். மேலும், சில கட்சிகளும் இணைய வாய்ப்புள்ளது.”
கேள்வி: கேரளத்தில் காங்கிரஸுட னும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுடனும் சிபிஎம் எதிரும் புதிருமாக உள்ளது. திருவனந்தபுரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு வரை ஒருவர் எதிர்த்துப் பிரச்சாரம் செய்வார்கள். அருகில் உள்ள கன்னி யாகுமரியில் ஆதரித்துப் பிரச்சாரம் செய்வார்கள். வாக்காளர்களிடம் இது குழப்பத்தை விளைவிக்காதா?
பதில்: “கடந்த பல தேர்தல்களில் இப்படித்தான் நடந்திருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலிலும், 2021இல் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்தபோதும் இதே நிலைமைதான்.
கன்னியாகுமரி மாவட்ட எல்லை யில் காங்கிரஸும் நாங்களும் சேர்ந்து தான் பிரச்சாரம் செய்தோம். ஒரே சாலையின் வலதுபுறம் நாங்கள் ஒன் றாக இருப்போம், இடதுபுறம் தனித் தனியாகப் பிரச்சாரம் செய்வோம்.
இதனால் கேரளத்திலும் குழப்பம் வரவில்லை. கன்னியாகுமரியிலும் குழப் பம் வரவில்லை. கேரள அரசியல் சூழல் பற்றிக் கேரள மக்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டு அரசியல் சூழலைப் பற்றி தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்.”
கேள்வி: பாஜகவை எதிர்ப்பது என்பதைத் தவிர, இண்டியா கூட்டணிக் கட்சிகளுக்குப் பொதுவான அம்சம் எதுவும் இல்லை, யார் பிரதமராவார் என்பது குறித்த தெளிவில்லை என்கிற விமர்சனங்கள் இருக்கின்றனவே?
பதில்: “பாஜகவின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு மாறான கோட் பாடுகளை முன்னிறுத்தும் கூட்டணி தான் இண்டியா கூட்டணி. மதச் சார்பின்மை, அரசமைப்புச் சட்ட விழு மியங்கள், நாடாளுமன்ற ஜனநாயகம், மாநில சுயாட்சி உள்ளிட்ட கூட்டாட் சித் தத்துவங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பது, சமூகநீதிக் கோட்பாடு களை அமலாக்குவது… இப்படி இந்தி யாவுடைய தலைசிறந்த, பாரம்பரிய மான கோட்பாடுகளைத் தவிடு பொடியாக்கி வருகிறது பாஜக.
இந்தக் கோட்பாடுகளைப் பாது காப்பதற்காக ஒரு கொள்கைரீதியான லட்சியத்தோடு உருவாகியிருக்கிறது “இந்தியா” கூட்டணி.
எங்களைப் பொறுத்தவரை ஒரு நபரை முன்னிறுத்தி வாக்கு சேகரிப் பதைவிட, இந்தக் கோட்பாடுகளை முன்னிறுத்தி மக்களிடம் வாக்கு சேகரிக்கிறோம். அதுவே சிறந்தது என்று நம்புகிறோம். நாளைக்கு இந்தக் கோட்பாடுகள் வெற்றிபெறுமானால், கோட்பாடுகளைப் பாதுகாக்கக்கூடிய ஒரு பொருத்தமான நபரைத் தலைவ ராகத் தேர்ந்தெடுப்பது சாதாரண விஷயம்.”
கேள்வி: 2019இல் மத்தியில் மோடி அரசு, மாநிலத்தில் அதிமுக அரசு. இரண்டும் ஒரே கூட்டணியில் இருந்த தால் சுலபமாக திமுக கூட்டணியால் பிரச்சாரம் செய்ய முடிந்தது. இந்த முறை மத்தியில் 10 ஆண்டுகள் மோடி அரசு, மாநிலத்தில் மூன்று ஆண்டுகள் ஸ்டாலின் அரசு இருந்திருக்கின்றன. பொதுவாக, இரண்டு அரசுகளுக்கு எதிராகவும் வாக்குகள் இருக்கக்கூடும். இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
பதில்: “இது நாடாளுமன்றத் தேர் தல். இதில் மோடி அரசின் செயல் பாடுகள், கொள்கைகள்தான் மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருக்கும். ஆகவே, மோடி அரசின் மோசமான நடவடிக்கைகளை மய்யப்படுத்திய தாகத்தான் எங்களுடைய பிரச்சாரமும் அமையும். அதே நேரம், மாநிலத்தில் திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் அதன் ஆட்சி குறித்தும் பேச்சு வரும்.
ஆனால், கடந்த மூன்றாண்டுகளில் திமுக ஆட்சி ஒன்றிய அரசின் கடுமை யான நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் வெள்ள நிவாரணம் போன்ற விஷயங் களை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறது. தமிழ்நாடு அரசு கேட்ட நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு அளிக்காதது ஏன் என்கிற கேள்வி மக்கள் மத்தியில் வரத்தான் செய்யும். நிதிப் பங்கீடாக இருக்கட்டும், ஜிஎஸ்டி இழப்பீடாகட்டும், எய்ம்ஸ் உள்ளிட்ட மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட திட்டங் களாகட்டும் – இவற்றை எல்லாம் ஒன் றிய அரசு புறக்கணிப்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
திமுக அரசு கடந்த மூன்றாண்டுகளில் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது என்பதையும் மறந்துவிட முடியாது. மகளிர் உதவித்தொகை, கல் லூரி செல்லும் மாணவிகளுக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை, தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி போன் றவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற் பைப் பெற்றுள்ளன. எனவே, திமுக ஆட்சியின் இத்தகைய அம்சங்களும் சேர்ந்து எங்கள் கூட்டணிக்குக் கூடுதல் வெற்றிவாய்ப்பை உருவாக்கித் தரும்.”
கேள்வி: இந்த முறை பா.ஜ.க.விட மிருந்து விலகி அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் வருங் காலத்தில் கூட்டணி முடிவுகளில் ஏதேனும் மாற்றங்கள் விளைய வாய்ப் புள்ளதா?
பதில்: “அதிமுக, பாஜக கூட்டணியிலி ருந்து எப்போது வெளியேறியிருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அய்ந்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் வரை இவர்கள் அனைத்து விஷயங்களிலும் பாஜகவை ஆதரித்துவந்தார்கள். இப்போது மோடி ஆட்சியே முடியப் போகிற நேரத் தில், இவர்கள் வெளியே வந்திருக்கிறார்கள்.
மேலும், தனியாகப் பிரிந்திருந்தாலும் தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக இரண் டின் நோக்கமும் திமுக தலைமையிலான கூட்ட ணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பது தான். தேர்தலுக்குப் பிறகு பாஜகவையோ தேசிய ஜனநாயகக் கூட்டணியையோ அதிமுக ஆதரிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
திமுக கூட்டணியை வீழ்த்துவதைவிட பாஜக கூட்டணியை வீழ்த்துவதுதான் எங்கள் முதன்மை நோக்கம் என்று அதிமுக சொல்லுமா? எனவே, பிரிந்திருந்தாலும் பாஜக, அதிமுக இரண்டின் நோக்கமும் ஒன்றுதான். அதை எந்த வகையிலும் ஆதரிக்க முடியாது.”
– ‘இந்து தமிழ்திசை’ (26.3.2024)