சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில், 4.3.2024 தேதியில் கோடை சூட்டுடன், அரசியல் களத்தில், சூடான விவாதப் பொருளாக உள்ள ‘தேர்தல் பத்திரம் குறித்து ‘தேர்தல் பத்திரமும் – உச்சநீதிமன்ற தீர்ப்பும்’ என்ற தலைப்பில், தமிழர் தலைவரின் சிறப் புரையும், மற்றய அரசியல், சட்ட நிபுணர்களின் கருத்துரையும் கேட்டார்ப் பிணிக்கும் வகையில் இருந்ததை ‘விடுதலை’ இதழ் வழி படித்தேன்.
மூத்த வழக்குரைஞர் இரா. விடுதலை அவர்களின் உரையில், ஒரு வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த செய்தியை கோடிட்டு பேசியது என்னை மிகவும் ஈர்த்தது.
“கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் மேலாகியும், பல்வேறு இனத்தவர், பல்வேறு நாட்டவர், பல் வேறு மொழியினர் இருந்தாலும்கூட அமெரிக் காவில் இன்றும் ஜனநாயகம் தழைத்து வருகிறது. “இந்தக் கூற்று மூலம், நம் நாட்டில் ஜனநாயகம் தழைக்கவில்லையே என்பதை கூறாமல் கூறுவ தாகத்தானே நாம் கருத வேண்டும். ஜனநாயக தத்துவம் இந்திய நாட்டில், குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக உள்ளதைக் கண்டு ஆதங்கப்படுவதாகவும் எண்ணத் தோன்றுகிறது.
அடுத்து, வழக்குரைஞர் விடுதலை ஜன நாயகத் தத்துவத்தின் தோற்றுவாயை நினைவுப் படுத்துகிறார். 1863ஆம் ஆண்டில், அமெரிக் காவின் அன்றைய குடியரசுத் தலைவர் ஆபிர காம் லிங்கன், கெட்டீஸ்பர்க் என்ற இடத்தில் உரை ஒன்றை நிகழ்த்தினார். அந்த உரையில், ஊழி உள்ள வரையில் நிலைத்திருக்கும் வகையில், ஜனநாயகம் என்ற சொல்லுக்கு விளக்கம் அளித்தார். (Everlasting Definition)
“மக்களுக்காக, மக்களால் மக்களே நடத்துவது, இந்த மக்களாட்சி, இந்த மண்ணில் அழிந்து போகக் கூடாது”(Government of the People, by the People, for the people shall not perish from the earth).
ஊராட்சி மன்றத்திலிருந்து, உச்சநீதிமன்றம் வரை, கோலோச்சக் கூடிய சொல் ஜனநாயகம் என்பதில் அய்யமில்லை.
இந்த ‘ஜனநாயகம்’ என்ற சொல் நம் நாட்டில் எந்த அளவுக்கு உயிரோட்டத்துடன் உள்ளது என்பது குறித்து தரவுகள் கூறுவன:
1. “அடியே! அனார்கலி உனக்குப் பிறகு எம் நாட்டில் எரிக்கப்பட்டது. ஜனநாயகம்” கவிப் பேரரசு வைரமுத்துவின், வைரவரிகள் இவை.
2. பிப்ரவரி மாதம் காலமான புகழ் பெற்ற சட்ட வல்லுநரும், வழக்குரைஞருமான ஃபாலி நாரிமன் அவர்கள், “ஆபிரகாம் லிங்கன், ஜனநாயகம் பற்றி கூறிய விளக்கத்தில் உள்ள ‘மக்களே நடத்துகின்ற என்ற கருத்தை மறந்து வருகிறோம்” என்றார். (We keep forgetting ‘of’ part in the of the people).
3. இருபதாம் நூற்றாண்டின், அரசியல் இயல், சட்டத்துறை பேராசிரியர் டுவார்கின் (Dworkin) “பெரும்பான்மை படைத் தோர் என்பதால் கொள்கை முடிவெடுப்பது என்பது ஜனநாயகக் கோட்பாடாகாது. கொள்கை முடிவுகள் ஜனநாயக அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்” என்று கூறுகிறார்.
4. குஜராத் மாநிலத்தில் இரட்டை இன்ஜின் ஆட்சியின் அலங்கோல ஜனநாயக நெறியை ‘தி இந்து’ (13.3.2024) விளக்குகிறது. அரசியலில் ஈடுபட்டுள்ள எந்தத் தலைவரும் பி.ஜே.பி.யில் சேராமல் காலந்தள்ள முடியாத கெடுபிடி சூழ் நிலை உள்ளதாம். நாள்தோறும் மேனாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் பஞ்சாயத்துத் தலைவர்கள், கூட்டுறவு அமைப்புத் தலைவர்கள், ஆளுங் கட்சியில் புகுத்தப்படும் விழா நடந்து கொண்டே இருக்குமாம். பி.ஜே.பி. ஆட்சியில், எதிர்க்கட்சிகள் இருக்கக் கூடாது என்ற அகங்காரத்தில் அவர் களால் தோற்கடிக்கப்படாத சட்டமன்ற உறுப் பினர்களை, பணத்தின் மூலமாகவோ அல்லது மிரட்டல் மூலமாகவோ அல்லது இந்த இரண்டும் சேர்ந்த ஆயுதங்கள் மூலம் பி.ஜே.பி. வலைக்குள் இழுப்பர். குஜராத்தில் உள்ள பெரும்பாலான அர சியல்வாதிகள் தொழிலதிபர்களாகவோ அல்லது தொழிலாளராகவோ உள்ளனர். அவர்களின் பாதுகாப்புக் கருதி ஆளும் பிஜேபியுடன் உடன் படிக்கை செய்வது நடைமுறை – இது குஜராத் மாடல்.
5. ‘ஜனநாயகம் கருத்தாய்வு சிறப்புக் கூட்டம் 2024’ என்ற தலைப்பை வைத்து பிப்ரவரி 10, 2024இல் புதுடில்லியில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் நாடறிந்த ரோமிலாதாபர், கீதாஅரிஅரன், அபூர்வானந் போன்ற சிறந்த வரலாற்றறிஞர்களும், ஜே.என்.யு. பேராசிரியர்களும் கலந்து கொண்டு பதிவு செய்த கருத்துக்கள் கவனத்தை ஈர்ப்பனவாகும்.
ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற ஏற்பாடு இந்திய நாட்டின் அரசியல் கூட்டமைப்பின் (Federal Structure) அடித்தளத்தைத் தகர்க்கும். வாக் காளர்கள், ஒன்றிய அரசு, மாநில அரசுத் தேர்தல்களில் தேவைகளின் அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கும் வாய்ப்பை இழப்பர். கடந்த சில ஆண்டுகளாக, ஒன்றிய அரசு ஜன நாயக முறையை மதிக்காமல், அரசு கொள்கை அறிவிப்புகளை, தன் எண்ணிக்கைப் பலத்தில் மாநில அரசுகளையோ அரசியல் எதிர்க் கட்சி களையோ கலக்காமல் அறிவித்து வருகின்றது. புலனாய்வுத் துறை, அமலாக்கத்துறைகளின் மூலம், எதிர்க் கட்சிகளையும், அக்கட்சி ஆளும் மாநிலங்களையும் பலவீனப்படுத்துகிறது. பி.ஜே.பி. ஆட்சி அல்லாத மாநிலங்களில் நியமிக் கப்பட்ட ஆளுநர்கள், மாநில அரசுடன் ஒத்து ழைக்காமல் பகைப் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர்.
ஜே.என்.யு. பல்கலைக் கழகத் துணை வேந்தரும் பேராசிரியருமான பல்வீர் அரோரா, தான் எழுதிய நூலொன்றில், பிரதமர் மோடியின் முதல் ஆட்சிக் காலத்தில், ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையேயான கூட்டமைப்பு ஒத் துழைப்பு, தூரத்தில் உள்ள இலக்கு என்று எழுதியதைத் தற்போது, அந்த ஒத்துழைப்பு நடைமுறைக்கு வராத கனவு என்று கூற வேண்டியுள்ளது என்று – நாட்டின் நலம் நசிந்து வருவதை படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
நாட்டில் இன்று நிலவும், ஆதிக்க, அதிகார போதை வெறுப்பு, கடுகு உள்ளம் கொண்ட ஆட்சி நடப்பை – லிங்கன் வகுத்த ஜனநாயக இலக்கணத்தில் காண்பதா, அல்லது ஆட்சி அரசு என்னும் மருத்துவ அவசரப் பிரிவில் காண்பதா அல்லது ஜனநாயக தத்துவத்தை கல்லறையில் காண்பதா? காலம் பதில் சொல்லும். ‘தேர்தல் திருவிழாவில்’ கடமையாற்றுவோம்.