தூத்துக்குடி, மார்ச் 24: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் மக்களவை உறுப்பினர் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:- தமிழ்நாட்டில் ஒரு பிடி அளவு மண் கூட பா.ஜ.க. விற்கு சொந்தம் இல்லை என்கிற நிலையை உருவாக்கி காட்ட வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் வாரத்திற்கு 3, 4 நாட்கள் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். ஆனால் இதுவரை தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடர் சம்பவங்களின் போது எந்த நிவாரண உதவிகளையும் வழங்கவில்லை. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. அரசு தங்களை எதிர்த்தவர்களை கைது செய்து மிரட்டி வருகிறது. தமிழ்நாட்டு மக்களை அவர்க ளால் ஏமாற்ற முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். நீங்கள் போடுகிற ஒவ்வொரு ஓட்டும் பா.ஜ.க.விற்கு போடக்கூடிய வெடி என்பதை நினைத்து இந்த தேர்தலில் களப்பணியாற்ற வேண்டும். இந்த மண்ணில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. 2-ஆவது இடத்திற்கு வந்து விடக்கூடாது என்பதனை மனதில் வைத்து கொண்டு நாம் தேர்தலில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு தொகுதியில்கூட பிஜேபி இரண்டாம் இடத்திற்கு வந்து விடக்கூடாது : கனிமொழி எம்.பி. பேச்சு

Leave a Comment