இந்தியாவைக் காக்கும் வெற்றிப் பயணத்தை திருப்புமுனை தரும் திருச்சியிலிருந்து தொடங்குகின்றேன்!
இந்தியாவிற்கே ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குங்கள்!
“இந்தியா” கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிப்பீர்!
திருச்சியில் முதலமைச்சரின் தேர்தல் பிரச்சார முதல் முழக்கம்!
திருச்சி, மார்ச் 23 எதிர்காலத்தில் ஒளிமயமாகத் திகழ ‘இந்தியா’ கூட்டணிக்கே வாக்களிப்பீர் – திருப்புமுனை தரும் திருச்சியிலிருந்து முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங் குகிறேன் என்று முழங்கினார் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள், நேற்று (22-03-2024) திருச்சியில் நடைபெற்ற ‘திருச்சி, பெரம்பலூர்’ மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு ஆற்றிய எழுச்சி யுரையின் விவரம் வருமாறு:
டில்லி செங்கோட்டையை யார் கைப்பற்ற வேண்டும் என்று தீர்மானிக்க இந்த மலைக்கோட்டை மாநகரில் கடல்போல் திரண்டிருக்கும் தமிழ்ச் சொந்தங்களே! திருச்சி என்றாலே திருப்புமுனை! இப்போது இந்தியாவுக்கே திருப்புமுனை ஏற்படுத்த நாம் திரண்டிருக்கிறோம்! பல திருப்புமுனைகளை தமிழ்நாட்டுக்கு கொடுத்து, தமிழினத்தின் முன்னேற்றத்துக்காக தன்னுடைய வாழ்நாளெல்லாம் உழைத்த தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டுப் பரிசாக, ஒரு மகத்தான வெற்றியை கொடுப்பதற்கான துவக்கமாக இங்கு திரண்டிருக்கிறோம்!
தந்தை பெரியாரையும் – பேரறிஞர் அண்ணாவையும் – தலைவர் கலைஞரையும் வணங்கி, இந்தப் பயணத்தைத் தொடங்குகிறேன்!
வெற்றி என்றால் எப்படிப்பட்ட வெற்றி? நாற்பதுக்கு, நாற்பது! நாற்பதுக்கு, நாற்பது! நாம் எழுதப் போகும் புதிய வரலாற்றுக்கு முன், தந்தை பெரியாரையும் – பேரறிஞர் அண்ணாவையும் – தலைவர் கலைஞரையும் வணங்கி, இந்தப் பயணத்தைத் தொடங்குகிறேன். மாநாடுபோல இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள்.
எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருப்பது இந்தத் திருச்சிதான்! திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் நிற்க வேண்டும் என்று 1956 ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது திருச்சி மாநாட்டில்தான்! திருச்சி பாதை எப்போதுமே வெற்றிப் பாதை! அதன் அடையாளமாகத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆறு முறை ஆட்சிப் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்!
இந்தியாவே பாராட்டும் நல்லாட்சியை நடத்தி வருகிறேன்!
நேரு அவர்கள் சொன்னதுபோல், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, ‘தமிழ்நாட்டின் விடியலுக்கான முழக்கம்’ என்ற எழுச்சிமிகு கூட்டத்தை ஏற்பாடு செய்து, இங்கு அழைத்து வந்தார் ஆருயிர் சகோதரர் கே.என்.நேரு. அதுதான் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி கோட்டையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை அமர வைத்தது! உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். அன்று முதல், இந்தியாவே பாராட்டும் நல்லாட்சியை நடத்தி வருகிறேன்.
பாசிச பா.ஜ.க.வை வீழ்த்தி, இந்தியா கூட்டணியின் ஆட்சியை ஒன்றியத்தில் ஏற்படுத்துவதற்காக நடப்பதுதான், இந்த நாடாளுமன்றத் தேர்தல்!
பிரதமர் மோடிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி பயம், அவரின் முகத்திலும் – கண்ணிலும் நன்றாகத் தெரிகிறது!
தேர்தல் என்பதால் பிரதமர், இப்போது இந்தியாவில் இருக்கிறார்; அதனால் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். இல்லை என்றால், பெரும்பாலும் வெளிநாட்டில்தான் இருப்பார். அண்மையில் சேலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள், “தமிழ்நாட்டில் அவருக்கு செல்வாக்கு அதிகமாகிவிட்டதால், தி.மு.க.வினருக்குத் தூக்கம் வர வில்லை” என்று பேசியிருக்கிறார். உண்மையில், தன்னுடைய ஆட்சி முடியப் போகிறது என்று, பிரதமர் மோடிக்குத்தான் தூக்கம் வரவில்லை! அவருக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி பயம், அவரின் முகத்திலும் – கண்ணிலும் நன்றாகத் தெரிகிறது!
சரி, தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்தாரே, அவரிடம் நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். அதற்கு ஒருமுறையாவது பதில் சொன்னாரா? வாரா வாரம் வந்தாலும் அவர் பதில் சொல்லவில்லை! இனி வந்தாலும், சொல்லவும் முடியாது! பத்தாண்டு காலம் ஆட்சி செய்த ஒரு பிரதமரால், தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டம் என்று ஒன்றே ஒன்றைக்கூட சொல்ல முடியுமா! இவர் நம்மை விமர்சிக்கிறார்!