கருஞ்சட்டை
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் இருந்த மீன்கள், கடந்த நவம்பர் மாத இறுதியில் செத்து மிதந்தன.
இதற்கு கார்த்திகை தீபத்தின்போது விளக்கேற்ற பக்தர்கள் பயன்படுத்திய எண்ணெய், தெப்பக்குளத்தில் கலந்து, எண்ணெய்ப் படலமாக மாறியதே காரணம் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து, வழக்குப் பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், இது தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்குமாறு, கபாலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை ஆகியவற்றுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
மீன்வளத்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம், கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் பெருமளவு மீன்கள் உயிரிழந்தன. அதில் ஒரு வகை குறிப்பிட்ட மீன்கள் அதிகம் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது’ என, கூறியுள்ளார்.
தெப்பக்குளத்தில் மீன்கள் உயிரிழந்ததற்கு கார்த்திகை தீபத்தின்போது பக்தர்கள் விளக்கேற்ற பயன்படுத்திய எண்ணெய் குளத்தில் அதிக அளவு கலந்ததே காரணம் எனக் கூறப்படுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும் அந்த உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும்.
கோவில்கள், கோவில் குளங்களுக்கு பொறுப்பான இந்து சமய அறநிலையத்துறையுடன் கலந்தாலோசித்து, பக்தர்களின் உணர்வுகளை பாதிக்காத வகையில், மீன்களை பாதுகாக்க தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
இது தொடர்பாக வழக்கின் அடுத்த விசாரணை தேதியான வரும் மே 2க்குள், மீன்வளத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது
(‘தினமலர்’ 12.3.2024)
இந்தச் செய்தியைப் படிக்கும்போது – பக்தி என்பது புத்திக்கு அப்பாற்பட்டது என்பது எளிதாகவே விளங்கும்.
கார்த்திகைத் தீபத்தின்போது, விளக்கேற்ற பக்தர்கள் பயன்படுத்திய எண்ணெய் தெப்பக் குளத்தில் கலந்து படலமாக மாறியதே மீன்கள் இறந்ததற்குக் காரணம் என்பது அறிவியலின் பாடமும் கண்டுபிடிப்புமாகும். கண்மூடித்தனமான பக்திக்கு முன் அறிவியல் மனப்பான்மையை எதிர்பார்க்க முடியாதுதான்.
இது ஒருபுறம் இருக்கட்டும்; கபாலீஸ்வரன் மீது அபார பக்தி கொண்ட பக்தர்கள் இப்பொழுதாவது ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கோயில் தெப்பக் குளத்து மீன்களையே காப்பாற்ற முடியாத கபாலீஸ்வரன் பக்தர்களைக் காப்பாற்றப் போகிறாரா என்று. குறைந்தபட்சம் சிந்திக்க வேண்டாமா?
மகாவிஷ்ணு மச்சவதாரம் எடுத்ததாகக் கூறுகிறார்களே. அந்த சக்தி என்னாயிற்று என்ற கேள்வி எழாதா?
அதுவும் மகாவிஷ்ணு எடுத்த முதல் அவதாரமே மச்சாவதாரம்தான். (அதாவது மீன் உருவம்) எதற்காக எடுத்தாராம்?
பிரமனுடைய ரிக், யஜூர், சாம, அதர்வண மென்று சொல்லப்பட்ட நான்கு வேதங்களையும், சோமுகாசுரன் என்ற அசுரன் திருடிக்கொண்டு போய் கடலில் ஒளிந்து கொண்டான். உடனே, விஷ்ணு மச்சாவதாரம் (மீன்) ரூபமெடுத்து, அசுரனை சங்காரம் (அழித்து) கொன்றுவிட்டு வேதங்களை மீட்டதாக விஷ்ணு புராணம் கூறுவது எல்லாம் வெறும் அளப்புதானா? மீன் என்றால் சாதாரணமா? மகாவிஷ்ணு அவதாரமாயிற்றே.அது கபாலீஸ்வரனின் தெப்பக் குளத்தில் செத்து மடிந்தால் என்ன அர்த்தம்?
குளத்தில் எண்ணெய் கலந்ததால் மீன்கள் செத்தன என்பது அறிவியல் – மீன் விஷ்ணுவின் அவதாரம் என்பது மதப் பார்வை!
அய்யோ மீன் செத்துப் போச்சே – என்ன பதில்?