வாழ்வியல் சிந்தனைகள் – கி.வீரமணி
அவர் தன் படிப்பை முடித்தவுடன் மாதம் 14,000 ரூபாய் சம்பளத்தில் அவருக்கு ஒரு வேலை கிடைத்தது. அவர் தன்னுடைய முதல் மாதச் சம்பளத்தைத் தன் அப்பாவிடம் கொடுத்தபோது, அதைப் பார்த்து அவர் மலைத்துவிட்டார். அவர் தன் மகனிடம், “இது என்னுடைய ஓராண்டு ஊதியமடா!” என்று வியந்து கூறினார்.
பின்னர் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் அய்க்கிய இராச்சியத்திற்கும் சென்ற முஸ்தபா, இறுதியில் இந்தியாவிற்குத் திரும்பி வந்து, சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற இலக்குடன் பெங்களூரிலுள்ள இந்திய மேலாண் மைக் கழகத்தில் வணிக மேலாண்மை முதுகலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அச்சமயத்தில், சிறிய பலசரக்குக் கடை ஒன்றை நடத்திக் கொண்டிருந்த அவருடைய நெருங்கிய சொந்தக்காரர்கள், அந்தக் கடையில் தோசை மாவை விற்பனை செய்து வந்தனர். தோசை மாவு தயாரிப்பாளர் ஒருவர் அவர்களுக்கு அதைத் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் அந்தத் தோசை மாவை ஒரு நெகிழிப் பாக்கெட்டில் போட்டு அதன் முனையை ஒரு ரப்பர்பேன்டால் கட்டியிருந்தார். அதன் தரம் குறித்தும், அது புளித்துப் போய்விடு கிறது என்றும் கடைக்குத் தினந்தோறும் புகார்கள் வந்தன. ஆனால், அந்தத் தயாரிப்பாளர் அது குறித்து எதுவும் செய்ய முன்வரவில்லை. முஸ்தபா தனக்கு முன்பிருந்த எண்ணற்றத் தொழில்முனை வோரைப்போலவே, தன்னால் அதைவிடச் சிறப் பாகச் செய்ய முடியும் என்று நம்பினார்.
அவர் தன்னுடைய சேமிப்பிலிருந்து 50,000 ரூபாயை மூலதனமாகப் போட்டு, அதே உறவினர் களின் உதவியுடன், தோசை மாவு தயாரிக்கும் தொழிலில் இறங்கினார். அதை அவர் ஒரு கொட் டகையில், ஒரே ஒரு மாவரைக்கும் இயந்திரம், எடை பார்ப்பதற்கான ஒரு கருவி, நெகிழிப் பாக்கெட்டை மூடுகின்ற ஓர் இயந்திரம் ஆகிய வற்றுடன் மட்டும் தொடங்கினார். கிட்டத்தட்ட ஓராண்டு காலம், அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றின் அளவுகளைக் கூட்டிக் குறைத்து, பலவிதமான பரிசோதனைகளைச் செய்து, சரியான பதத்தில் தோசை மாவைத் தயாரிக்க அவர் கற்றுக் கொண்டார். ஒருவழியாக, 2006 இல் அவர்கள் ‘அய்டி ஃபிரெஷ் ஃபுட்’ என்ற வணிக முத்திரையின் கீழ் தோசை மாவு விற்பனையைத் தொடங்கினர். (இதிலுள்ள ‘அய்’, ‘டி’ ஆகிய எழுத்துகள், இட்லி, தோசை என்பதன் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துகள்) முதலில் தினமும் 100 ஒரு – கிலோ பாக்கெட்டுகளை அவர்கள் தயாரித்தனர். அவற்றில் 90 பாக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. ஆனா லும், அவர்கள் மனம் தளராமல் தங்களுடைய உற்பத்தியைத் தொடர்ந்தனர். இரண்டு ஆண்டு களில், தினமும் 300 கடைகளுக்கு, 2,000 பாக் கெட்டுகளை விற்பனை செய்கின்ற அளவுக்கு அவர்கள் உயர்ந்தனர். அப்போதும் 300 பாக்கெட்டுகள் விற்பனையாகாமல் இருந்தன.
அப்போது, முஸ்தபா, விற்பனை குறித்தத் தரவுகளை இன்னும் நவீன முறையில் அலச வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். ஒவ்வொரு கடையாலும் எத்தனைப் பாக்கெட்டுகளை விற்க முடியும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட அவர் முயன்றார். அவருடைய வணிக மேலாண்மைக் கல்வி அவருடைய உதவிக்கு வந்தது. விரைவில், தரவுகளைச் சேகரிப்பதிலும் அவற்றை அலசு வதிலும் அவர் வெற்றி கண்டார். ஒரு கடையால் எத்தனைப் பாக்கெட்டுகளை விற்க முடியும் என்பதை அவரால் இப்போது ஓரளவு துல்லியமாகக் கணிக்க முடிந்ததால், மாவு வீணாதல் கணிசமாகக் குறைந்தது.
இன்று, அவருடைய நிறுவனத்தின் வீணாகும் விகிதம் பெங்களூரில் 1 சதவீதமாகவும், ஒட்டுமொத்தத்தில் 4 சதவீதமாகவும் உள்ளது. மீத முள்ளவை உணவகங்களுக்கு விற்கப்படுகின்றன. அதற்குப் பிறகும் மீதமிருப்பவை தொண்டு நிறு வனங்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன. உற்பத்தியின்போது வீணாகும் பொருட்கள் கால் நடைகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றன. உடனடித் தேவைகளைக் கணிப்பது எளிதாக இருப்பதால், குறைவான பொருட்களை இருப்பு வைத்துக் கொண்டு அவர்களால் தொழிலை நடத்த முடிகிறது.
முஸ்தபா இத்தொழிலைத் தொடங்கிய புதிதில், பல கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டார். சில சமயங்களில், ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கக்கூட அவரிடம் பணம் இருக்காது. ஆனால், அவர் ஓர் ஏழ்மையான பின்புலத்திலிருந்து வந்திருந்ததால், அவர் அதிகமாகக் கடன் வாங்காமல், தொழிலில் கிடைத்த இலாபத்தை வெளியே எடுக்காமல் அதை மீண்டும் தன் தொழிலிலேயே முதலீடு செய்து செயல்பட்டு வந்தார். இன்று அந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக 5 தொழிற்சாலைகள் இருக்கின்றன. அவற்றில் 2,500 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அந்நிறு வனத்திற்குச் சொந்தமாக 650 வாகனங்கள் இருக்கின்றன.
அங்குள்ள தொழிலாளர்களில் பலர் சிற்றூர் களைச் சேர்ந்தவர்கள். தானே ஒரு சிற்றூரிலிருந்து வந்தவர் என்ற முறையில், முஸ்தபா அவர்களிடம் அனுதாபத்துடன் நடந்து கொள்கிறார். தோசை மாவைப் பொறுத்தவரை தன்னுடைய சந்தையை நிலைப்படுத்திக் கொண்ட பிறகு, அந்நிறுவனம் இப்போது சப்பாத்தி, பரோட்டா, பன்னீர், தயிர், காபி, ரொட்டி போன்ற புதிய பொருட்களின் உற்பத்தியில் இறங்கி, தன் தொழிலை விரிவுபடுத்தியுள்ளது.
எப்போதும் புத்தம்புதியதாக தங்களுடைய பொருட்கள் இருப்பதற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தாங்கள் பயன்படுத்துகின்ற கச்சாப் பொருட்கள் இயற்கையான பொருட்களாக இருப்பதை அவர்கள் உறுதி செய்து கொள்கின்றனர். மொத்த உற்பத்தியும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதில் அவர்கள் குறியாக இருக்கின்றனர்.
இன்னும் சொல்லப் போனால், அவர்கள் தங்க ளுடைய தொழிற்சாலைகளில் கேமராக்களை நிறுவி, அவற்றைத் தங்களுடைய வலைத்தளத் துடன் இணைத்துள்ளனர். அதன் மூலம், எந்த வொரு வாடிக்கையாளராலும் உற்பத்திச் செயல் முறையை நேரடியாகப் பார்க்க முடியும். இப்போது அவர்கள் வெளிநாட்டிற்கும் தங்களுடைய வணி கத்தை விரிவுபடுத்தியுள்ளனர். அய்க்கிய அரபு அமீரகத்திலுள்ள அஜ்மான் அமீரகத்தின் தலைநகரமான அஜ்மான் நகரத்தில் அவர்கள் ஒரு தொழிற்சாலையை நிறுவியுள்ளனர். இப்போது, அவர்களுடைய மொத்த விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு மத்தியக் கிழக்கிலிருந்து அவர்களுக்குக் கிடைத்து வருகிறது.
முஸ்தபா இதுவரையிலான தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கின்றபோது, தன் வாழ்க்கையில் கல்வியின் முக்கியத்துவத்தையும், ஒரே ஒரு குழந்தைக்கு மேத்யூ போன்ற ஆசிரியர்கள் அளிக்கின்ற ஊக்குவிப்பு இந்தச் சமூகத்தில் எவ்வளவு பெரிய தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதையும் நினைவுகூர்கிறார். தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக, தினமும் ஒரு வேளை பட்டினி கிடந்த தன் அப்பாவின் தியாகங் களையும் அவர் நினைவுகூர்கிறார். தீர்க்கப்படக் கூடிய சிறிய பிரச்சினைகளை, வேறு யாரேனும் அவற்றுக்குத் தீர்வு காண்பர் என்ற எண்ணத்துடன், நாம் கண்டுகொள்ளாமல் கடந்து போய்விடக்கூடாது என்று புதிய தொழில்முனைவோருக்கு அவர் அறிவுறுத்துகிறார்.
எவரும் நம்முடைய பிரச் சினைகளைத் தீர்க்கப் போவதில்லை என்றும், அவற்றை உதாசீனப்படுத்துவதன் மூலம் நல்ல வாய்ப்புகளை நாம் இழக்கக்கூடும் என்றும் முஸ்தபா அவர்களை எச்சரிக்கிறார். அதேபோல, பத்தோடு பதினொன்றாக இருக்கின்ற பொருட் களைத் தயாரிக்க முனையாமல், புதுமையான தீர்வுகளை உள்ளடக்கிய தொழில்களைத் தொடங் கினால் வெற்றி வாய்ப்பும் அதிகரிக்கும், அதிக மனநிறைவும் கிடைக்கும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.”
வேலை தேடிடும் இளைஞர்கள் ‘முஸ்த பாக்களாக’ நீங்கள் முயன்று முடி சூடுங்கள்.
தொழில் அதிபர்களாக – வெறும் ஊதியக்காரராக இல்லாமல் – மற்றவருக்கு வேலை கொடுக்கும் ‘வள்ளலாக’ மாற முயற்சியுங்கள்.