பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்யாத
ஆளுநர் ஆர்.என்.இரவிமீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி:
“சன் நியூஸ்’’ தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அளித்த பேட்டி
சென்னை, மார்ச் 22 பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்யாத ஆளுநர் ஆர்.என்.இரவிமீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித் திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகும் ஆளுநர் ஆர்.என்.இரவி பதவியில் நீடிப்பது நியாயப்படியும் சரியில்லை; அரசமைப்புச் சட்டப்படியும் சரியில்லை; அவர் பதவி விலகவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
க.பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிர மாணம் செய்யாத ஆளுநர் ஆர்.என்.இரவிமீது உச்சநீதி மன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது குறித்து நேற்று (21-3-2024) மாலை ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அளித்த பேட்டி
வருமாறு:
இவ்வளவு உச்சக்கட்ட கண்டனத்தை இதுவரை எந்த ஆளுநரும் பெற்றதே கிடையாது!
நெறியாளர்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு, பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது. இன்றைக்கோ (21-3-2024) அல்லது நாளைக்குள்ளோ முடிவு எடுக்காவிட்டால், நாங்கள் உத்தரவிட நேரிடும் என்று கடுமையான எச் சரிக்கையை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு பதிவு செய்திருக்கிறது. அதுகுறித்து உங்களுடைய முதற்கட்டப் பார்வை?
தமிழர் தலைவர் பதில்: அரசமைப்புச் சட்டத்தின் படி பொன்முடி அவர்களுக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவேண்டும் என்கிற முதல மைச்சருடைய பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுத்தது முழுக்க முழுக்க அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மான நடவடிக்கை என்பதை தலைமை நீதிபதி உள்பட உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
இதுபோன்று இவர், இப்போது முதல் முறையாக நடந்துகொள்ளவில்லை. இந்தக் கண்டனம் அவருக்குப் பலமுறை தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இவ்வளவு உச்சக்கட்ட கண்டனத்தை இதுவரை யாரும், எந்த ஆளுநரும் பெற்றதே கிடையாது.
எனவேதான், நாளைக்குப் பதவிப் பிரமாணத்தை செய்து வைப்பதைத் தவிர, அவருக்கு வேறு வழி கிடையாது.
என்றாலும்கூட, அதற்குப் பிறகும், அரசியல் நாகரிகத்தையும், அரசியல் பண்பாட்டையும் கருதி, இனிமேலும் அவர் தமிழ்நாடு ஆளுநராக நீடிப்பதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும், அரசமைப்புச் சட்டப்படி கிடையாது.
அவர் உடனடியாக அந்தப் பதவியிலிருந்து வெளியேறவேண்டும். இன்னுங்கேட்டால், இதற்குப் பொறுப்பேற்கவேண்டியது ஒன்றிய உள்துறைதான். அவருடைய நியமனத்திற்குக் காரணமானவர்கள், உடனடியாக அவரைத் திரும்பப் பெறவேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகும் அவர் அந்தப் பதவியில் நீடிப்பது என்பது நியாயப்படியும் சரியில்லை; அரசமைப்புச் சட்டப்படியும் சரியில்லை!
அப்படித் திரும்பப் பெறவில்லையானால், அவர் களும் சேர்ந்து இந்த நிலைமைக்குக் காரணமாக இருக் கிறார்கள் என்கிற செய்தி, வெளியுலகத்திற்கு மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்திற்கும் புரியவேண்டிய, புரிந்துவைத்துக்கொள்ளவேண்டியகட்டாயம் ஏற்படும்.
எனவேதான், உடனடியாக அவர் நாளைக்குப்
(22-3-2024) பதவிப் பிரமாணம் செய்து வைத்தாலும்கூட, கடமை தவறிய அதிகாரி- அரசமைப்புச் சட்டத்தின்மீது அவர் எடுத்த பதவிப் பிரமாணத்திற்கு விரோதமாக – பலமுறை – இது முதல்முறையல்ல – பலமுறை தவறு செய்து, இன்றைக்கு உச்சக்கட்டத்தை அடைந் திருக்கின்ற காரணத்தினால்தான், தலைமை நீதிபதி உள்பட மற்ற நீதிபதிகளும் இவ்வளவு கடுமையான சொற் பிரயோகத்தை செய்துள்ளார்கள். இதுபோன்று இது வரையில் வேறு எவருக்கும் செய்ததில்லை.
எனவே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு பொறுப்பு இருக்குமேயானால், உச்சநீதிமன்றத்தின் கண் டனத்திற்குப் பிறகும் அவர் அந்தப் பதவியில் நீடிப்பது என்பது நியாயப்படியும் சரியில்லை; அரசமைப்புச் சட்டப்படியும் சரியில்லை.
அவர் வெளியேறவேண்டும்; அல்லது வெளியேற் றப்படவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது.
76 ஆண்டுகால அரசியல் வரலாற்றில்…
நெறியாளர்: நீங்கள் ஒரு முதுபெரும் தலைவர்; இந்த 76 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், தமிழ்நாட்டில், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படக்கூடிய ஓர் ஆளுநரை, இதுவரை தமிழ்நாடு அரசு கண்ட துண்டா?
தமிழர் தலைவர் பதில்: அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை என்கிறபொழுது ஒன்றை நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
பிரதமர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட, அரசமைப்புச் சட்டத்தில், பிரமாண வாசகங்கள் தனித்தனியாக இருக்கின்றன.
ஆனால், ஆளுநருடைய பதவிப் பிரமாண வாசகங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எப்படி அமைக்கப்பட்டு இருக்கின்றன – 159 ஆவது பிரிவுப்படி எப்படி இருக்கின்றன என்று சொன்னால்,
”பொதுமக்களுடைய நன்மைக்காக நான் உழைக்கக் கடமைப்பட்டு இருக்கின்றேன்” என்கின்ற வாசகங்கள் இருக்கின்றன.
ஆனால், இவர் பதவிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து, பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்ற ஓர் ஆட்சி- இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறுகின்ற ஆட்சி- அந்த ஆட்சி நிறைவேற்றுகின்ற சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். அதை அவர் மதிக்கத் தயாராக இல்லை. உச்சநீதிமன்றத்திலும் அதுகுறித்து வழக்கும் நிலுவையில் இருக்கின்றது.
இதற்கு முன்பு பேரறிவாளன் வழக்கிலேயேஉச்ச நீதி மன்றத்தின் கண்டனத்திற்கு உரியவராக ஆளாகி யிருக்கிறார்.
இவ்வளவு நடந்தும் அவர், ஆளுநர் பதவியில் நீடிப்பது என்பது அரசமைப்புச் சட்டத்தின்படியும் சரி, மக்கள் விருப்பத்தின்படியும் சரி, அது நியாயமல்ல!
இந்த ஆளுநர் எங்கே சென்றாலும், கருப்புக் கொடியை சந்திக்காமல் வருவதில்லை.
சட்டமன்றத்தின் மரபையே உடைத்து, இதுவரையில் இல்லாத கொடுமைகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்!
வேண்டுமென்றே சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுவது – அதன்மூலம் பத்திரிகை விளம்பரம் தேடு வது – சட்டமன்றத்திற்குப் போனால், எதிரிக்கட்சித் தலைவர்போல் நடந்துகொண்டு, சட்டமன்றத்தின் மரபையே உடைத்து, இதுவரையில் இல்லாத கொடுமை களை, மரபு மீறல்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்.
ஆகவேதான், இந்த ஆளுநரை, நியாயப்படி, நீதியுள்ள ஓர் ஒன்றிய அரசாக இருந்தால், அவரைத் திரும்பப் பெற வேண்டும்; அல்லது இந்த ஆளுநரை, குடியரசுத் தலைவர் டிஸ்மிஸ் செய்யவேண்டும்.
அப்படியில்லையானால், உச்சநீதிமன்றத்தினுடைய கண்டனம் ஆளுநருக்கு மட்டுமல்ல; அவர்களை யும் சுற்றிவரக் கூடிய நிலையை மக்கள் உணர்ந் திருக்கிறார்கள்.
இவ்வளவு அசிங்கப்பட்டு, அரசியல் அநாகரிகமான ஆளுநரை வேறு எங்கும் பார்க்கவே முடியாது!
எனவேதான், மிகமுக்கியமான இந்த 76 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில், தமிழ்நாட்டிற்குக் கிடைத்தது மாதிரி, இப்படி ஓர் ஆளுநர் கிடைத்ததில்லை. வேறு எந்த இடத்திலும், இவ்வளவு அசிங்கப்பட்டதில்லை; அரசியல் அநாகரிகமான ஆளுநரை வேறு எங்கும் பார்க்கவே முடியாது.
எனவே, இதற்கு ஒரு விடை, ஒரு முடிவு இதன் மூலமாவது ஏற்படவேண்டும். இல்லையானால், மக்கள் தேர்தல்மூலம் அந்த முடிவைக் காட்டுவார்கள்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார்.