தோல்வியை ஏற்கக் கற்றுக் கொடுங்கள் (1)
நமக்கு சிறுபிள்ளையாக வளரும் போதி லிருந்தே ஒரு சமச்சீர் மனநிலையை, பெற் றோர்களும் ஆசிரியர்களும், மாணவர்களுக்கு வகுப்பில் கற்றுக் கொடுக்கும்போது – வெற்றி, தோல்வி எது ஏற்பட்டாலும் அதனை ஏற்று, மீண்டும் நம்பிக்கையுடன் உழைத்து தோல்வியை வெற்றியாக மாற்றும் மனத் தெளிவை, துணிவினை இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு, வாலிபர்களுக்கு நாம் உருவாக்கி, அவர்களை சிறப்புடன் வாழ்க்கை நெறிக்குப் பக்குவப்படுத்த வேண்டும்!
கல்வியை வெறும் ‘ஏட்டுச் சுரைக்காயாக’ மட்டும் பயன்படுத்தி, வெறும் ‘நெட்டுரு’ மனப்பாடம் – பிறகு அதைத் தேர்வில் அப்படியே கொண்டு கொட்டி, எதிர்பார்த்த கேள்வி, தயாரிப்புடன் இருந்த உரிமைகளால் – இவற்றால் வெற்றி என்ற வெளிச்சம். ஒரே மகிழ்ச்சி – கொண்டாட்டம்! – இப்படியே பழகி விட்டதனால், உள்ளத் தெளிவு, துணிவு இல்லாத, தோல்வியை அல்லது குறைந்த மதிப்பெண் களைக்கூட ஏற்க மனத் துணிவின்றி, ஏதோ வாழ்க்கையே அதோடு முடிந்து விட்டதுபோல – எங்கும் இருள் சூழ்ந்து விட்டது; இனிமேல் நமக்கு ‘வெளிச்சம்’ கிடைக்காது என்பது போல, தன்னம்பிக்கை இழந்தவர்களாகி, தற்கொலை செய்து கொள்ளும் கோழை நெஞ்சத்தை – அவர்களிடம் உருவாக்கி விடுவதற்கு மூல காரணம் எது? யார் என்பதை விருப்பு, வெறுப்பு இன்றி பொது நிலையில் நின்று ஆராய்ந்து தெளிந்து நாமே முதலில் உணர்ந்து – இளை ஞர்களை விட, மாணவர்களைவிட, பெற்றோர் களையும், ஆசிரியப் பெரு மக்களையும் மாற்றுவது இன்றைய சமூகத் தேவை; தற்கொலை நோய்க்கான தடுப்பு சிகிச்சைகளில் – முதலில் ‘நோய் முதல் நாடல்’ முக்கிய தேவை ஆகும்!
வாழ்க்கையின் எந்தப் பிரச்சினைகள் – அவை எவ்வளவு கடினமானதாகவும், நெருடல் உள்ளதாகவும் அமைந்தாலும், அவற்றை நிதானத்துடன் எதிர் கொண்டு அவற்றிற்குரிய நிவாரணத்தை, தீர்வைத் தேடிக் கண்டுபிடிக்க மனித ஆற்றலால் முடியும் என்ற தன்னம் பிக்கைப் பாடத்தை – எல்லா நிலைகளிலும் எல்லோருக்கும் பாடம் போல் கற்பித்து பதிய வைத்து, மனதளவில் பழக்க வேண்டும்.
குறைந்த மதிப்பெண் வாங்கிடும் பிள்ளைகளை பெற்றோர்களே வசைபாடுதல், அளவுக்கு அதிகமாக, கண்டித்து பிள்ளைகளின் பக்குவம் அற்ற உள்ளத்தை – கண்ணாடி ஜன்னல் மேல் கல்லெறிந்து உடைத்து சுக்குநூறாக்குவதுபோல – ஆக்கவே கூடாது!
“குறைந்த மதிப்பெண் பெற்றால் மறுமுறை உழைத்து அதிக மதிப்பெண் பெற வாய்ப்புகள் மீண்டும் உண்டு. அதுபற்றி சிறிதும் கவலை வேண்டாம்” என்று அந்த சோர்வடைந்த மாணவன், மாணவிக்கு ஆசிரியப் பெருமக்கள் இதமான ஆறுதல் மொழி மூலம் தன்னம் பிக்கையின் சிகரத்திற்குக் கொண்டு போய் நிறுத்த – தொடர் முயற்சிகளை ஒரு உற்ற நண் பனைப் போல உணர்த்தி உயர்த்த வேண்டும்!
தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டு; அதனால் மனமுடைந்து போக வேண்டாம்! என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
தோல்விக்கு, பாதிக்கப்பட்டவர் மட்டும் காரணமாக இருக்க முடியாது; பல நேரங்களில் திருத்தியவர்கள்கூட அலட்சியம் காரணமாக குறைந்த மதிப்பெண் போட்டிருக்கலாம் என்பது போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
தேர்வுத் தோல்வி செய்தி அறிந்து தற்கொலை செய்து கொண்ட பின் – அந்த மாணவியின் எண் தவறாக தோல்விப் பட்டியலில் வந்து விட்டது; அச்சுப் பிழை, டைப் ஆனபோது அலட்சியத்தால் ஏற்பட்ட தவறு அது என்று விளக்கம் திருத்தத்துடன் வந்தபோது அவசரப்பட்டு தற்கொலை செய்து கொண்ட அந்த மாணவியின் உடல் – உடற்கூராய்வு அறையில் இருந்தது என்ற செய்தியைவிட மிகக் கொடுமையான வேதனை வழியும் செய்தி வேறு உண்டா?
எனவே தோல்விகளை எதிர் கொண்டு, அவற்றைத் தாங்கி, அதிலிருந்து மீண்டு, வெற்றிப் படிக்கட்டு ஏறினாலும், ஏறா விட்டாலும்கூட, வாழ்க்கை அதனால் காணாமற் போய் விடாது என்பதை வாலிபர்கள், இளை ஞர்கள், மாணவர்களை உணர வைத்து ஒருவித பக்குவத்தை (Maturity Mindfulness) என்பதை நாளும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வெற்றியை மட்டும் இலக்காக்கி சொல்லி வருவதை கைவிட்டு ஒரு வகையான ‘சமன் செய்து சீர் தூக்கிடும் கோல்போல’ கற்றுக் கொடுக்க முன் வர வேண்டும்.
இன்னும் இதுபற்றி, தொடர்ந்து தற்கொலை மனப்பான்மையை அழித்து – தன்னம்பிக்கை ஒளி தகத்தாய ஒளியாக பரவ – பல செய்திகளை அறிவோம் நாளை.
(தொடரும்)