மணிப்பூர் பக்கம் போகாத பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டு பக்கமே வந்துகொண்டிருக்கிறார் – இதுவரை 5, 6 முறை வந்துவிட்டார்; இனியும் வருவார்!
தமிழ்நாட்டிற்கே அவர் குடிவந்தாலும், ஒருபோதும் காவிகளுக்கு இந்தப் பெரியார் மண்ணில் இடமில்லை!
சென்னை புதுவண்ணையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டட திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!
சென்னை , மார்ச் 20 இதுவரை மணிப்பூர் பக்கம் போகாத பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டு பக்கமே வந்துகொண்டிருக்கிறார். இதுவரை 5, 6 முறை வந்துவிட்டார்; இனியும் வருவார். தமிழ்நாட்டிற்கே அவர் குடிவந்தாலும், ஒருபோதும் காவிகளுக்கு இந்த பெரியார் மண்ணில், திராவிட மண்ணில் இடமில்லை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தி.மு.க. அலுவலகம்- முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டடம் திறப்பு விழா
கடந்த 15-3-2024 அன்று மாலை சென்னை, பழைய வண்ணையில், சென்னை வடக்கு மாவட்டம், ஆர்.கே.நகர் கிழக்குப் பகுதி தி.மு.க., 42-அ வட்ட தி.மு.க. அலுவலகம்- முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டடம் திறப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய சாதனைகளை விளக்குகின்ற திருவிழா- பெருவிழா என்ற முப்பெரும் விழா!
சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் கிழக்குப் பகுதி தி.மு.க. 42 வட்ட திராவிட முன் னேற்றக் கழக அலுவலகம் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரால், நூற்றாண்டு விழா கட்டடம் – தந்தை பெரியார் அவர்கள் பெயரால் ஒரு படிப்பகம் ஆகியவற்றை சிறப்பாக இந்தப் பகுதியில் அமைத்து, நல்ல அளவிற்கு இன்றைக்கு ஒரு பிரச்சார திருவிழா – அறிவுத் திருவிழா என்று சொல்லவேண்டும் – அதுமட்டுமல்ல, ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய சாதனைகளை விளக்கு கின்ற திருவிழா- பெருவிழா என்ற முப்பெரும் விழாவிற்கு வருகை தந்து எனக்கு முன் இங்கே சிறப்பாக உரையாற்றிய நம்முடைய தி.மு.க. தலை மைக் கழகத்தின் பொறுப்பாளர், அமைப்பாளர், பாராட்டுதலுக்கும், பெருமைக்கும் உரிய கொள்கை வீரர் அன்பிற்குரிய மூத்த வழக்குரைஞர் அருமைச் சகோதரர் மானமிகு ஆர்.எஸ்.பாரதி அவர்களே, சிறப்பான இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப் பினரும், மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப் பாளருமான அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய செயல்வீரர் ஜே.ஜே.எபினேசர் அவர்களே, மற்றும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர்களே, அனைத் துக் கட்சிப் பொறுப்பாளர்களே, பெரியோர்களே, தாய்மார்களே சான்றோர்களே, ஊடகவியலாளர் களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன் பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படிப்பகம் எப்படி நடக்கவேண்டும்?
எப்படி ஒவ்வொருவரும் கடமையாற்றவேண்டும்?
இங்கே நம்முடைய சகோதரர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் உரையாற்றும்பொழுது, படிப்பகம் எப்படி நடக்கவேண்டும்? எப்படி ஒவ்வொரு வரும் கடமையாற்றவேண்டும்? என்பதைப்பற்றியெல் லாம் சொன்னார்.
ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகமான நன்றி உணர்ச்சி உண்டு!
முன்பெல்லாம் பொதுக்கூட்டம் நடக்கும் பொழுது, தலைவர் அவர்களே, தோழர்களே, அவர்களே, இவர்களே என்று சொல்லிவிட்டு, ‘‘தாய்மார்களே” என்று சொல்வோம், அங்கே ஒருவர்கூட இருக்கமாட்டார்கள். ஆனாலும், அந்த வார்த்தையைச் சொல்லி சொல்லிப் பழக்கம். ஆனால், இன்றைக்கு அழைக்காமலே வரக்கூடிய அளவிற்குத் தாய்மார்கள், சகோதரிகள் எங்கு போனாலும் இருக்கிறார்கள். காரணம், அவர் களைப் போன்று நன்றி உணர்ச்சி உள்ளவர்களை வேறு யாரையும் பார்க்க முடியாது. ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகமான நன்றி உணர்ச்சி உண்டு.
மகளிருக்குக் கொள்கையை ஏற்றுக்கொள் வதற்கு முதலில் கொஞ்சம் கடினமாகத்தான் இருக் கும். ஆனால், ஏற்றுக்கொண்டார்கள் என்றால், அவர்களைப் போன்று உறுதியாக இருக்கக்கூடிய வர்கள் ஆண்களைவிட, மகளிர் இருப்பார்கள்.
சுயமரியாதைச் சுடரொளி சற்குணபாண்டியன் ஆர்.கே.நகர் என்று சொன்னால், மறைந்தும் மறை யாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கக்கூடிய சுயமரி யாதைச் சுடரொளி சற்குணபாண்டியன் அவர்களை மறந்துவிட முடியாது. அவர் ஒரு கொள்கை தீபம். பாரம்பரியமாக திராவிட இயக்கம்- சுயமரியாதை இயக்கம் என்று வளர்ந்து, இந்தப் பகுதியில் நாம் எங்கே சென்றாலும், ‘அண்ணன்’ என்று அற்புதமான ஒரு மகிழ்ச்சியோடு அழைக்கக் கூடியவர். குழந்தையாக இருந்தபொழுது, அவருடைய தந்தையார் வளர்த்து, பெரிய அளவில், கலைஞர் அவர்கள் அடையாளப் படுத்தி, அவரை சட்டமன்ற உறுப்பினராக்கினார், அமைச்சராக்கினார்.
ஆகவே, யாரை, எப்படி அடையாளம் காண வேண்டும் என்பதில், நம்முடைய தலைவர்களுக்கு ஈடு யாருமே இருக்க முடியாது.
ஆகவே, அப்படிப்பட்டவர் வாழ்ந்த இந்தப் பகுதிக்கு வரும்பொழுது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.
இங்கே சொன்னார்கள், என்னுடைய வயதைப்பற்றி. வயதை நாங்கள் ஒரு பொருட்டாக நினைப்பதே இல்லை. உங்களுடைய உற்சாகத்தைப் பார்க்கும் பொழுது, எங்களுடைய வயது குறைந்துகொண்டே இருக்கிறது.
கட்டடங்களைத் திறந்து வைத்தால் போதும் என்றனர்!
இங்கே எபினேசரும், மற்றவர்களும் சொன்னார்கள்; தி.மு.க. அலுவலகம், பெரியார் பெயரில் படிப்பகம், முத் தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டடம் போன்றவற்றை சிறப்பாக கட்டியிருக்கின்றோம்; அதனை நீங்கள் திறந்து வைத்தால் போதும் என்று சொன்னார்கள்.
இவ்வளவு தூரம் வந்து, அவற்றைத் திறந்து வைத்துவிட்டுப் போவதற்காக மட்டுமா இங்கே வரவேண்டும்? நம்முடைய ஆட்சியின் சாதனைகளைச் சொல்லவேண்டாமா? ஒவ்வொரு நாளும் சாதனைகள் பெருகி வர வர, பிரதமரையே ஒரு கலக்குக்
கலக்கிறது.
ஒருபோதும் காவிகளுக்கு இந்த மண்ணில் இடமில்லை!
இதுவரையில் மணிப்பூர் பக்கம் போகாத பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டு பக்கமே வந்துகொண்டிருக்கிறார். இதுவரை 5, 6 முறை வந்துவிட்டார்; இனியும் வருவார்.
தமிழ்நாட்டிற்கே அவர் குடிவந்தாலும், ஒருபோதும் காவிகளுக்கு இந்தப் பெரியார் மண்ணில், திராவிட மண்ணில் இடமில்லை என்று காட்டக்கூடிய முடிவு வரவிருக்கிறது.
ஆகவே, இங்கே காவிகளுக்கும் இடமில்லை; காலிகளுக்கும் இடமில்லை. இங்கே பொறுப்பான வர்களுக்குத்தான் தமிழ் மண் இடம் கொடுக்கும். ஏனென்றால், இது பகுத்தறிவு மண்; சுயமரியாதை மண்.
14 வயதிலேயே கொடி பிடித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!
நம்முடைய நூற்றாண்டு விழா நாயகர் கலைஞரின் அவர்களின் தொண்டு என்பது 80 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. 14 வயதிலேயே கொடி பிடித்தவர் அவர்.
‘‘ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்!
நீ தேடி வந்த நாடு இதுவல்லவே!”
என்று பாடிக்கொண்டு, பெரியார் முழக்கத்தை முழங்கிக்கொண்டு, அண்ணா வழியிலே மாணவப் பருவத்திலே இயக்கத்திற்கு வந்தவர் அவர். நாங்கள் எல்லாம் மாணவர்களாக இருந்த காலகட்டத்திலேயே இயக்கத்திற்கு வந்தவர்கள்.
கலைஞர் அவர்கள் தமது 94 வயதிலும், தந்தை பெரியாரைப் போலவே, கடுமையாக உழைத்தார்.
அதனால், தோழர்கள் என்னுடைய வயதை ஞாபகப் படுத்தி, உழைப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்; ஓய் வெடுங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், பாரம்பரிய மாக இந்த இயக்கத்தில்,
‘‘உழைப்பு, உழைப்பு, உழைப்பு”தான்!
நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சருக்கு
17 வயது – எனக்கு 19 வயது!
இன்றைக்கு எல்லோருடைய உழைப்பையும் தூக்கித் தள்ளக்கூடிய அளவிற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் 71 வயதில் ஓயாமல் உழைத்துக் கொண் டிருக்கிறார். 71 வயது என்று சொன்னார்கள்; அதை அப்படியே திருப்பிப் போடவேண்டும்; 71 வயது என்றால், 17 வயது. எனக்கு 91 வயது என்றால், 19 வயது என்றுதான் பார்க்கவேண்டும். காரணம் என்னவென்றால், உங்களுடைய உற்சாகம்தான்.
உங்களுடைய உற்சாகத்தைவிட, இன எதிரிகளு டைய வேகத்தைப் பார்க்கும்பொழுது, இந்த எதிரிகளை முறியடிப்பதுதான் நம்முடைய வேகம் என்று நினைத்தால், முதுமை ஓடிப் போகும்; இளமையும், வீரமும் தானாகவே வந்து நிற்கும்.
திராவிட இயக்கம் வளர்ந்தது பதவியால் அல்ல; கொள்கையால்!
இந்த இயக்கம் பதவியால் வளர்ந்தது அல்ல; கொள்கையால் வளர்ந்தது. பதவி என்பது, இந்தக் கொள்கையை நிறைவேற்றுவதற்கு ஒரு வாய்ப்பு, ஒரு வழிமுறை.
படிப்பகம் தொடங்கியதைப்பற்றி சொன்னார்களே, அப்பொழுது யாராவது நினைத்திருப்பார்களா, சட்டமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ, முதலமைச்சராகவோ ஆவோம் என்று யாராவது நினைத்திருப்பார்களா என்றால், கிடையவே கிடையாது.
அதனால்தான் அண்ணா அவர்கள், பொறுப்பிற்கு வருபவர்களுக்குக்கூட பதவியைப்பற்றிச் சொல்லும் போது ஓர் அற்புதமான கொள்கையைச் சொன்னார். திராவிட இயக்கத்தைத் தவிர வேறு எந்த இயக்கத்திலும் இதுபோன்ற ஒரு கொள்கை இல்லை.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இன்றைக்கு உழைப்பின் உருவமாக இருக் கின்ற இந்தியாவின் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொல்லக்கூடிய நம்முடைய முதலமைச்சர்.
அவரையும் தாண்டி வேலை செய்யக்கூடிய 5-ஜி இன்றைக்கு இருக்கிறது. அவர்தான் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.
5-ஜி என்றால் என்ன பொருள் தெரியுமா? 5 ஆவது தலைமுறை. கொள்கை ரீதியாக இருப்பதுதான்.
அப்பாவின் கொள்கையை மகன் பின்பற்றுவது தவறா? குற்றமா?
‘‘வாரிசு அரசியல்”, ‘‘வாரிசு அரசியல்” என்று சிலர் புரியாமல் சொல்கிறார்கள். அப்பாவின் கொள்கையை மகன் பின்பற்றுவது தவறா? குற்றமா?
வேறொரு கொள்கையைப் பின்பற்றினால்தான் தவறு. இது பதவியை வைத்து அல்ல; இது கொள்கை ரீதியானதாகும்.
நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் அவர்கள், தந்தை பெரியாரைப் பின்பற்றி இந்த இயக்கத்திற்கு வந்தார்.
பெரியார் பார்த்து அனுப்பினார்; இவ்வளவு பெரிய நிலைக்கு வருவார் என்றும், இன்றைக்கு உலகமே பாராட்டக்கூடிய அளவிற்கு, அவருக்கு நினைவிடம் அமைத்திருக்கிறார்கள் பாருங்கள்; வரலாற்றில் இதுபோன்று உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது என்ற அளவிற்கு அந்நினைவிடம் இருக்கிறது.
ஏனென்றால், அவ்வளவு சாதனைகளை செய்திருக் கிறார் நம்முடைய நூற்றாண்டு விழா நாயகர் முத்தமி ழறிஞர் கலைஞர் அவர்கள்.
‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்!’’ – கலைஞர்
அப்படிப்பட்டவரிடம் செய்தியாளர் ஒரு கேள்வி கேட்கிறார்.
80 ஆண்டுகால பொதுவாழ்க்கையில், இவ்வளவு சாதனைகளை செய்திருக்கிறீர்கள். நீங்கள் எழுதாத வசனங்கள் இல்லை; புதினங்கள் இல்லை; எதிர்ப்புகளைத் தாண்டி நிற்பது; சட்டமன்றத் தேர்தலில் தோல்வியே காணாத தலைவர் என்ற பெருமைக்குரியவர். இவ்வளவு சாதனைகளை படைத்திருக்கின்ற உங்களை, ஒரு வரி யில் உங்களை நீங்களே விமர்சனம் செய்துகொள்ளுங் களேன்? என்றார்.
உடனே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தன்னை ஒரு வரியில் விமர்சனப்படுத்தி சொல்கிறார், ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்” என்றார்.
மாண்புமிகு வரும், போகும்; ஆனால், மானமிகு ஒருமுறை வந்தால், அது போகவே போகாது என்றார்.
‘‘மானமும், அறிவும் மனிதருக்கு அழகு” என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்.
இந்த இயக்கம் கொள்கைக்காக வந்தது. அண்ணா அவர்கள் ஒருமுறை சொன்னார். ‘‘பதவி என்பது எல்லோருக்கும் கொடுக்க முடியாதது. பதவி என்பது குறைவாகத்தான் இருக்கும். பதவி என்பது ஒரு பெருமையல்ல; நம்முடைய திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரையில் – அது ஒரு பொறுப்பு. அந்தப் பொறுப்புகள் மாறி, மாறி வரும்” என்றார்.
இப்பொழுதுகூட நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் சொன்னார், ‘‘தமிழ்நாடும், புதுச்சேரியும் சேர்ந்து 40 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அந்தத் தொகுதிகளில், அவர் நிற்கிறார், இவர் நிற்கிறார் என்றெல்லாம் பார்க்கக் கூடாது. அத்தனை இடங்களிலும் ஸ்டாலினாகிய நான்தான் வேட்பாளர்” என்றார்.
(தொடரும்)