– வீ.குமரேசன்
நேற்றைய (16.3.2024) தொடர்ச்சி…
அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த திராவிடர் இயக்கம் பாடுபட்டு வருகிறது. ஜாதி முறை என்பது பவுதீக கட்டமைப்பு (Physical Structure) அல்ல; அது ஒரு மனநிலை – மனப்போக்கு. ஆனால் பவுதீக கட்டமைப்பை விட பலமுடன், பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவி வருவது. அதை ஒழித்திட, ஆதிக்க முழுமைத் தன்மையை அறியாத பல முற்போக்காளர்கள் அமைப்பு தொடங்கி – இடையில் விட்டவர்கள் பலர்; அமைப்பு தொடங்கியவர்களின் காலத்திற்கு பின்னர் தொடராதவை சில; ஆனால் நூற்றாண்டுகள் ஆகியும் தொடர் நிலையை விட இன்றைய நிலையில் வேகமாக, முழு வீச்சுடன், சமூகப் பிரச்சினையின் முழுப் பரிமாணத்தையும், முழுமை யாக உணர்ந்து, அறிந்து, செயல்பட்டு வருகிறது திராவிடர் இயக்கம்.
உலக மக்கள் சமத்துவமான வாழ்க்கை வாழ்ந்திட ‘பார்வையற்றவர்களாக’ இருக்க வேண்டும்; ஆம் நிறப் பாகுபாட்டை பார்க்க முடியாத பார்வையற்றவர்களாக’ – பாலினப் பாகுபாட்டைக் கருதாத பார்வையற்றவர் களாக’ – நிறப் பாகுபாடு என்பதே தெரியாத பார்வை யற்றவர்களாக’ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மானுடம் உண்மையான மானுடமாக மாறும். இன் றைக்கு மனிதர்களானவர்கள் மனிதர்களாக நடத்தப்பட வில்லை. அமனிதர்கள் என்ற நிலையில் தான் உள்ளனர். அமனிதர்கள், விழிப்புணர்வு ஊட்டப்பட்டு மனிதர்களாக மாற வேண்டும். அந்தப் பணியைச் செய்வது, மனித நேயர்களான நமக்கெல்லாம் இருக் கிறது. மாநிலம் விட்டு எல்லைகளைத் தாண்டி ‘மனிதர்’ என்ற நிலையில் அனைவரும் அந்த லட்சிய எல் லையை அடைந்திட, வென்றெடுக்க அயராது பாடுபட வேண்டும்.
கேள்வி: அண்மையில் ஊடக வாயிலாகப் படிக்க நேர்ந்தது. இங்குள்ள ஒரு கோயிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் அங்குள்ள கொடி மரத்தினை தாண்டி கோயிலுக்குள் செல்ல உரிமை இல்லை என நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளதாக அறிகிறோம். மனிதநேய அமைப் பினரான நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஒரு கோயில் – அந்தக் கோயிலுக்கு செல்லும் மக்கள் ஒரு மதத்தைச் சார்ந்தோர் என கருதப்படுகிறது. அந்த மதம் மனிதரைப் பாகுபடுத்திப் பார்ப்பது. அதே மதத்தைச் சார்ந்த மற்ற கோயில்களில் எல்லாம் இப்படிப்பட்ட பழக்கம் உள்ளதா? கடவுள் என்பவர் உலகத்தைப் படைத்தவர், உலக மக்களைப் படைத்தார் எனக் கருதும் மதம், அனைத்து வகை மக்களும் தங்கு தடையின்றி வழிபாட்டுத் தலத்திற்கு செல்லலாம் என்பதே நியாயமானது. ஆனால் பாகுபாடு, பிரிவினை, உயர்வு – தாழ்வு ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது மதம் என்பதே உண்மை நிலை.
‘கடவுள் எங்கும் நிறைந்தவர், கடவுள் சர்வ வல்லமை பெற்றவர், கடவுள் எல்லாம் அறிந்தவர்’ என்பது உண்மையானால், அதை மறுக்கின்ற வகையில் ஒரு குறிப்பிட்ட எல்லையில் தான் கடவுள் உள்ளார் என வரையறைப்படுத்துவது; சர்வசக்தி பெற்ற கடவுள், மதம் சாராத மக்கள் உள்ளே சென்றால் தீட்டுப்பட்டு விடுவார்; கடவுள் என்று சொன்னால் கடவுள் சக்தி மிக்கவரா? உள்ளே நுழைய விரும்பும் மக்கள் சக்தி மிக்கவர்களா?
முரண்பாடுகளின் மொத்தக் கூட்டே ‘மதம்‘ என்ப தற்கு இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும்? ‘கடவுளர்களால் கைவிடப்பட்ட இடம்‘ (god forsaken place) என்பதுவும் ஓர் முரண்பட்ட எடுத்துக்காட்டு.
சட்டம் என்பது விளக்கம் அளிப்பவரின வியாக்கி யானம் விளக்கத்தைப் பொறுத்த ஒன்றாக கொடுக்கப் பட்டது சரியான சட்ட விளக்கம் அல்ல. (Law is nothing but interpretaption, it is not good interpretaption)
கேள்வி: திராவிடர் என்பவர் யார்?
நல்ல கேள்வி, திராவிடர் என்பது இனவாதப் பிரிவினை அடிப்படையிலானது அல்ல; ரத்தப் பரிசோதனைகளால் அல்ல; புறத்தோற்றத்தினானதும் அல்ல; மரபணு அடிப்படையிலும் அல்ல; எதன் அடிப்படையிலானது?
பண்பாட்டு அடிப்படையிலானது ‘திராவிடர்’ அடையாளம், யாரையும் பாகுபடுத்தி, பிரித்து, தள்ளி வைத்திடும் பண்பாடு அல்ல அது. அனைவரையும் உள்ளடக்க வேண்டும் எனும் சமத்துவநிலைப் பண் பாடு. “மனிதர் அனைவரும் சமம், அனைத்தும் அனை வருக்கும்“ என்பதே அந்த பண்பாடு.
‘பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்‘ என்பது குறள் கூறும் பண்பாடு. அதுதான் திராவிடர் பண்பாடு. பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு கிடையாது.
சமத்துவ நிலை மட்டுமல்ல; அனைவருக்கும் சம வாய்ப்பு கிட்ட வேண்டும். பொருளியல் மேம்பாடு மட்டும் போதாது. மனிதரின் தன்மானம் – சுயமரியா தையை மதித்துப் போற்றும் நிலை வர வேண்டும்.
நாடு, எல்லைகளைக் கடந்தது இந்தப் பண்பாடு. ‘திராவிடர்’ என்பது மனிதநேயம் சார்ந்தது. இந்தப் பண்பாடு மனிதர் அனைவருக்கும் சொந்தமானது. இந்தப் பண்பாட்டை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் அனை வரும் திராவிடரே.
கேள்வி: (பேராசிரியர்) என்னை நான் ‘திராவிடர்’ என அழைத்துக் கொள்ளலாமா?
ஏன் கூடாது (Why Not)? அனைவரும் சமம்; அனைத்தும் அனைவருக்கும் என்ற பண்பாட்டை ஏற்றுக் கொண்டால் அனைவரும் திராவிடரே.
நீங்கள் அமெரிக்காவில் வாழும் ‘திராவிடர்’, நாங்கள் இந்தியாவில் வாழும் ‘திராவிடர்’ – அதற்கு மானிடப்பற்றே அடிப்படை.
வாழும் இடங்கள்தான் வேறு; பண்பாடு ஒன்றுதான். பண்பாட்டு அடிப்படையில் அனைவரும் திராவிடர் கள். அனைவரும் திராவிடர்கள் அனைவரும் மனி தர்கள் என்ற நிலை வரவேண்டும். அந்த நிலைதான் தந்தை பெரியார் காண விரும்பியது, தான் 95 ஆண்டு காலம் வாழ்ந்து பாடுபட்டது. தனது காலத்திற்குப் பின் தனது இயக்கம் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட வேண்டும் என நினைத்தது. பெரியார் செயல் முடிப்போம். மனிதர்களாக வாழ்வோம்.
அனைவருக்கும் நன்றி…
தென் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினருக்கு நினைவுப் பரிசாக இயக்க வெளி யீடுகளை தமிழர் தலைவர் வழங்கினார். புத்தகங்களை வழங்கிடும்பொழுது, புத்தகத்தில் உள்ள கருத்துகள் பற்றியோ, இயக்கம் குறித்து மேலும் அறிந்திட விரும் பினாலோ, தயக்கமின்றி பெரியார் திடலைத் தொடர்பு கொள்ளலாம் என தமிழர் தலைவர் தெரிவித்தார்.
நிகழ்வு முடியும் வேளையில் தமிழர் தலைவர், வருகை தந்த பேராசிரியரிடமும், மாணவர்களிடமும் தனது வயது (91) காரணமாக கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றை செவித்திறன் குறைபாடு காரணமாக மீண்டும் கேட்கப் (repeat) பணித்தது குறித்து தெரிவித்தார்.
குழுவின் தலைவர் பேராசிரியர் டியான் வின்ஸ்டன், “உங்களுக்கு 91 வயது ஆனதாகத் தெரியவில்லை; 20 வயது இளைஞரைப் போல பதில் அளித்தீர்கள்.”(You do not look 91 years old. You responded to our queries as a 20 – year old youth) என சிரித்துக் கொண்டே செல்ல அனைவரும் பேராசிரியரின் கருத் தினைக் கைதட்டி வரவேற்றனர்.
(உங்கள் தலைவருக்கு 91 வயது என சொன்னீர்கள். ‘எப்படி எங்களுடன் உரையாடுவார்? கேட்கும் கேள்விகளைப் புரிந்து கொள்ள அவரால் முடியுமா?’ என நிகழ்ச்சிக்கு முன்பாக அந்தக் குழுவின் தலை வரான பேராசிரியர் எங்களிடம் கேட்டார். சமுதாயத்தில் தடைகள் பலவற்றை தகர்த்த தலைவருக்கு வயது ஒரு தடையே அல்ல; நீங்கள் நேரிலேயே நிகழ்ச்சியின் பொழுது பார்க்கலாம் என கூறியிருந்தோம் – நாங்கள் கூறியபடியே நிகழ்ந்தது)
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்
நிகழ்ச்சியில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலா ளர்கள் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடே சன் ஆகியோர் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.
தமிழர் தலைவரிடம் நேர்காணல் நடத்திட வருகை தந்த குழுவினர் முன்னரே திராவிடர் இயக்கம் பற்றிய பல செய்திகளை படித்துத் தெரிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மகிழ்ச்சியாக தமிழர் தலைவரிடம் நன்றி தெரிவித்து விடைபெற்றனர். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் போனி தாமஸ் அவர்கள் நேர்காணல் 30 நிமிடங்களில் முடிந்துவிடும் என நினைத்திருந்தோம், 90 நிமிடங்கள் நேர்காணல் நடந்தது; நேரம் கடந்தது தெரியவில்லை. தலைவர் அளித்த கருத்துகளும், செய்திகளும் நடந்த நிகழ் வினை ஒரு முடிவாகக் கருதாமல் தங்களுக்கு ஒரு அருமையான தொடக்கமாக இருந்தது எனக்கூறி விடைபெற்றுச் சென்றார். தொடர்ந்து திராவிடர் கழகத் துடன் தொடர்பில் இருப்போம் என்று மகிழ்ச்சியுடன் கூறிச் சென்றார்.
– நிறைவு