வீ.குமரேசன்
தென் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரி யரும் – மாணவர்களும் 9.3.2024 அன்று சென்னை – பெரியார் திடலுக்கு வருகை தந்திருந்தனர். 10 ஆய்வு மாணவர்களை உள்ளடக்கி ஒரு பேராசிரியர் தலை மையில் வந்திருந்தனர். அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் & இதழியல் அன்னன்பெர்க் பள்ளியைச் (Annenberg School for Communication and Journalism) சார்ந்தவர்கள் அவர்கள். மாணவர்களை வழிநடத்தி வந்தவர் “ஊடகம் மற்றும் மதங்கள்” பற்றிய அமர்வின் தலைவர் (Knignt Chair in Media and Religion) பேராசிரியர் டியான் வின்ஸ்டன் (Diane Winsson) ஆவார். இவர்களை ஒருங்கிணைத்து பெரியார் திடலை முன்னமே தொடர்பு கொண்டு, அனுமதி பெற்று அழைத்து வந்தவர் கேரளாவைச் சார்ந்த இதழியலாளர் போனி தாமஸ். – வருகை தந்தோரில் பேராசிரியர் உள்பட பெண் மாணவர்கள் பெரும்பான்மையினராக இருந்தனர்.
வருகை தந்த குழுவினரை வரவேற்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் சற்று நேரம் அவர்களிடம் உரையாடிய பின்னர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலா ளர்கள் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், ச.இன்பக்கனி ஆகியோர் குழுவினருக்கு பெரியார் திடலைச் சுற்றிக் காண்பித்தனர்.
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்கள், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் காட்சியகம், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், ‘விடுதலை’ அச்சகம், பெரியார்- மணியம்மை மருத்துவமனை, பெரியார் நூல் நிலையம் ஆகியவற்றை 30 நிமிடங்களில் சுற்றிப் பார்த்தனர். பார்த்த இடங்கள் பற்றிய சில செய்திகளை அவர்களிடம் கூறியபொழுது அமைதியாக கேட்டுக் கொண்டனர். அதிகமான விளக்கங்களைக் கேட்கவில்லை. அந்த அமைதியாகக் கேட்டுக்கொள்ளும் முறை ஓர் ஆழ மான அணுகுமுறை என்பது பேராசிரியரும், ஆய்வு மாணவர்களும் பின்னர் தமிழர் தலைவரிடம் கேட்ட கேள்விகள் மற்றும் தமிழர் தலைவர் அளித்த பதிலுக்கு, கூடுதல் விளக்கங்களைக் கேட்டுப் பெற்ற பொழுதுதான் அறிய நேர்ந்தது. புதிய இடமானாலும், திராவிடர் கழகம் குறித்தும், திராவிட இயக்கம் பற்றியும் ஏற் கெனவே படித்து அறிந்திருந்த தன்மை அவர்கள் தமிழர் தலைவரிடம் கேட்ட கேள்விகள் மூலம் வெளிப் பட்டது.
தமிழர் தலைவருடன்
சந்திப்பு – உரையாடல்
பெரியார் திடலைச் சுற்றிப் பார்த்த பின்னர் அன்னை மணியம்மையார் அரங்கிற்கு வந்து அமர்ந்தனர். வருகை தந்த தமிழர் தலைவரை முதன் முறையாக குழுவைச் சார்ந்தோர் சந்தித்தனர்.
வந்திருந்த அனைவரையும் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வரவேற்று, கழகம் பற்றிய வரலாறு, இன்றைய நிலை, எதிர்கொள் ளும் அறைகூவல்கள் பற்றிய சிறிய உரையினை வழங்கினார்.
தமிழர் தலைவரின் முன்னோட்ட உரை
தமிழர் தலைவர் தனது உரையின் தொடக்கத்தில், “இது பெரியார் மண்; பெண்களை அதிகாரப்படுத்தும் மண்” அவர்களை வரவேற்கிறது என்றார். நேர்காண லில் பேராசிரியரும், மாணவர்களும் எந்த வகையான கேள்விகளையும் தயக்கமின்றி, தவிர்த்தலின்றி கேட்கலாம் என்ற முன்னுரையோடு செய்திகளைக் குறிப்பிட்டார்.
“திராவிடர் கழகம் என்பது சமூகத்தில் உரிமை மறுக் கப்பட்டோருக்கு, அடித்தள மக்களுக்குமான இயக்க மாகும். அவர்களுக்கு மறுக்கப்பட்டதை பெற்றுத் தரு வதில் தொடர்ந்து போராடி வெற்றிகளை பெற்றுவரும் இயக்கமாகும். போராட்டமும் தொடர்கிறது; பெற வேண்டியவையும் ஏராளம் உள்ளன.
மறுக்கப்பட்டதை பெற்றுத் தருவதோடு நிறைவடை கிற இயக்கம் திராவிடர் கழகம் அல்ல; எடுத்துக்காட்டாக உழைக்கும் அடித்தள மக்களுக்கு ஆண்டாண்டு காலமாக கல்வி கற்பது மறுக்கப்பட்டு வந்தது – மறுக்கப்பட்ட கல்வியை வழங்குவதோடு மட்டுமல்லா மல் அந்த உரிமை மறுக்கப்பட்ட மக்களை அதிகாரத் தளத்தில் அமர வைத்துப் பார்க்கும் இயக்கமாகும். மறுக்கப்பட்ட வகுப்பினருக்கு கல்வி கற்பதில் இட ஒதுக்கீடு, கல்வி கற்றபின் உரிய பணியில் சேர்வதற்கும் இடஒதுக்கீடு என தொடர்நிலை போராடும் அமைப் பாகவே திராவிடர் கழகம் பாடுபட்டு வருகிறது. சமூக அநீதி மேலோங்கிய நிலை மாறி சமூகநீதி நிலவிவரும் நிலை உருவாகியுள்ளது.
சமூகநீதி என்பது மனித சமத்துவம் சார்ந்தது. மனித சமத்துவம் என்பது பாலின சமத்துவத்தையும் உள்ள டக்கியது. பாலின சமத்துவம் நிழலல்ல; நிஜம் என்கிற நிலைமைகளை கடந்த காலங்களில் நிலைநாட் டப்பட்டு வந்துள்ளது. 100 ஆண்டு கால வரலாற்றில் போராட்டங்கள், சாதனைகளைக் கண்டுள்ள அமைப்பு இது.
தேர்தலில் நேரடியாக பங்கேற்காத – போட்டியிடாத அமைப்பு திராவிடர் கழகம். கழகத்தின் பொறுப்பா ளர்களும், உறுப்பினர்களும் ஆட்சி அதிகாரம் மிக்க பொறுப்பிற்கு வர விருப்பப்படாதவர்கள். இது ஒரு சமூக இயக்கமாகும்; இதனுடைய பணி கருத்துப் பிரச்சாரம் செய்து மக்களை விழிப்படையச் செய்வது மட்டுமே. அதற்காக, மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காகக் களப் போராட்டங்கள், மறியல் போராட்டங்கள் என சட்டத்திற்கு உட்பட்ட போராட்டங்ளை நடத்தி வருகிறது. தேவைப்பட்டால் சட்ட மீறலின்போது கைது செய்யப்படுவதற்கும் – சிறைத் தண்டனை பெறுவதற்கும் இயக்கத்தின் மூலம் ஆயத்தமாக இருப்பவர்கள் இந்த இயக்கத்தின் தோழர்கள். இவையனைத்திலும் வன்முறை என்பது சிறிதளவும் இல்லாமல் சட்டத்திற்கு மதிப்பளித்து (ஏற்றுக் கொள்வது என்பது வேறு) நடந்து கொள்ளும் இயக்கமாகும் திராவிடர் கழகம். தந்தை பெரியார் காலம் தொடங்கி, அன்னை மணியம்மயார் காலம் தொடர்ந்து எம்முடைய தலைமையில் இயக்கம் செயல்பட்டு வரும் காலத்திலும் இந்த அணுகுமுறையில் எள்ளளவும் மாற்றம் இல்லை. நூறாண்டுகளுக்கும் மேலாக சமுதாயப் பணி ஆற்றிவரும் எங்கள் இயக்கம் இன்றைக்கு நாட்டிற்கே சமூக நீதித் தளத்திலும், பிற சமுதாயப் பணிகளிலும் ஓர் எடுத்துக்காட்டு இயக்கமாக இருந்து வருகிறது.
மனிதநேயம், மனித சமத்துவம் என்பதே பெரியார் கொள்கையின் மய்யப் புள்ளி. இன்றைக்கு இந்தியாவை யும் தாண்டி உலகளாவிய அளவில் தந்தை பெரியாரு டைய மனிதநேயக் கொள்கைகளை எடுத்துச்சென்று பரப்பிடும் பணியிலும் திராவிடர் கழகம் ஈடுபட்டு வருகிறது.
இத்தகைய சமூகப் பணிகளை ஆற்றிட தேவைப் பட்ட நிதியினை தந்தை பெரியார் தனது சொத்துகளைக் கொண்டு அறக்கட்டளை அமைத்து அதன்மூலம் பயன்படுத்தி வந்தார். பெரியாரின் மறைவிற்குப் பின்னரும் அடுத்து வழிநடத்திய அன்னை மணியம் மையார், பெரியாரின் துணைவியார் என்ற நிலையில் தனக்குக் கிடைத்த சொத்தினையும் சேர்த்து தனியாக ஒரு அறக்கட்டளை அமைத்தார். இன்றைக்கும் அந்த அறக்கட்டளை மூலம் – பொது மக்களின் நன்கொடை யினையும் கொண்டு தொடக்க நிலை கல்வி நிலையங்களிலிருந்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிக் கல்வி, உயர் கல்வி, பல்கலைக்கழகம் என அனைத்து நிலைகளிலும் கல்விக் கூடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கல்விக் கூடங்களில் பெண்கள் கல்வி என்பது முன்னுரிமை கொடுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.”
கேள்வி – பதில் – விளக்கம்
தமிழர் தலைவரின் இந்த முன்னோட்ட உரையினை அடுத்து போராசிரியர்களும், மாணவர்களும் கேள்வி கேட்க மற்றும் விளக்கங்கள் வேண்டிய அத்துணைக் கும் சுருக்கமாகவும், கொள்கை விளக்கமாகவும் தமிழர் தலைவர் பதிலிறுத்தார். கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்குரிய விளக்கங்களின் சுருக்கமும் பின்வருமாறு:
கேள்வி: சமுதாயத் தளத்தில் அமெரிக்க நாட்டிற்கும், இந்திய நாட்டுச் சூழலுக்கும் உள்ள நிலைமைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அமெரிக்காவில் மனித சமத்துவம் சட்ட ரீதியாக நிலவுகிறது. இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் சமத் துவ உரிமையினை வலியுறுத்தினாலும் நடைமுறையில் ஏற்றத் தாழ்வினை தூக்கிப் பிடிக்கின்ற வகையில் ஜாதிக் கட்டமைப்பு நிலவி வருகிறது. அதை எதிர்த்து மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்திட – பகுத்தறிவு சுயமரியாதை உணர்வினை தட்டி எழுப்பிட எங்களைப் போன்றவர்கள் பணியாற்றி வருகிறோம். அமெரிக்க நாட்டைப் பொறுத்த அளவில் பகுத்தறி வாளர் அமைப்புகள் என்பன ஒரு சிறிய அளவிலே செயல்பட்டு வருகின்றன. காரணம் ‘ஜாதி கட்டமைப்பு’ என்பது அமெரிக்காவில் இல்லை.
மத அடிப்படை யிலானது இந்த ஜாதி கட்டமைப்பு. மத உணர்வுகள் ஆழமாக சமுதாயத்தில் வேரூன்றியுள்ள நி¬லையில் அந்த ஜாதி கட்டமைப்பினை தகர்த்திட சிறிய அளவிலான இயக்கங்கள் பயன் தராது. எனவேதான் எங்களின் பகுத்தறிவு இயக்கம் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. எங்களது இடை விடாத பணிகளின் மூலம் கடந்த நூறாண்டில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்னும் செய்ய வேண்டிய பணிகளும் ஏராளமாக உள்ளன. பெரும் பான்மை மக்கள் கல்வி கற்கவே தடை இருந்த நிலை யில் அறிவியல், தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் கண்டுள்ளோம்.
அமெரிக்காவில் இத்தகைய வளர்ச்சிக்கான தடைகள் இல்லாத நிலையில் முன்னேற்றம் என்பது பல மடங்கு நடைபெற்றுள்ளது.
கேள்வி: ‘மதம்‘ என்பது ஒரு பெரிய பிரச்சினையா?
ஆம். மதம் என்பது ஒரு மாபெரும் பிரச்சினைதான். முன்னேற்றம் காண்பதற்கு ஒரு பெரும் தடையாக மதம் நீடிக்கிறது. மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது. கேள்வி கேட்கும் உரிமை அதில் கிடையாது. மத உணர்வுகள் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. ஆனால், அனைத்து மதங்களும் பெண்களை சமமாக நடத்தாததில் ஒரே விதமாக உள்ளன. சமத்துவமற்ற நிலையில் நாடுகளுக்கிடையில் வேறுபாடு இருக்கலாம். எந்த மதமும் ஆண்களுக்கு இணையாக பெண்களை நடத்துவதில்லை என்பதுதான் உண்மை நிலை.
எதையும் பகுத்தறிவு சார்ந்து வாழும் நிலையினை வரலாற்றுக் குறிப்புகளின் அடிப்படையில் மக்கள் இயக்கமாக தொடங்கியவர் புத்தர். புத்தர் கற்பித்தது ஒரு வாழ்க்கை நெறி; அதனை அவர் மதமாக நடத்திட வில்லை. ஆனால், பின்னாளில் புத்தரின் கருத்துகளும் மத வலையில் மாட்டிக் கொண்டு மத அடையாளத் துடன் இருந்து வருகிறது. இந்தியாவில் மதம் என்பது தொடக்கத்தில் “வேத மதமே”. தொடர்ந்து “பிராமண மதமாக” அறியப் பட்டது. 1863இல் அமெரிக்க நாட்டில் சிகாகோவில் நடைபெற்ற மதங்கள் பற்றிய மாநாட்டில் “பிராமண மதத்தின் பிரதிநிதியாகவே விவேகானந்தர்” கலந்து கொண்டார்.
மனிதரிடையே பாகுபாட்டை ஏற்படுத்தி அந்த பாகுபாட்டிற்கே ஒருவித ‘புனிதத் தன்மையையும்‘ இந்த மண்ணில் ஏற்படுத்திவிட்டார்கள். மதப் போர்வை யுடன் உள்ள பாகுபாட்டை அவ்வளவு எளிதில் யாரும் கேள்வி கேட்டுவிட முடியாது. பெண்களின் சமத்துவம் மதத்தில் இல்லை. கடவுளரில் பெண் கடவுளர்கள் உள்ளனர். ஆனால், பெண்களானவர்கள் கோயில் களில் – பெண் கடவுளரின் கோயிலில் கூட பெண்கள் அர்ச்சகராகும் நிலைமை இல்லை! கர்ப்பக் கிரகத்திற்கு வெளியே துதிபாடல் பாடும் ஓதுவாராக பணியமர்த் திடும் நிலைமை அண்மையில் தான் தொடங்கப்பட்டு உள்ளது. அதற்கு அடித்தளமிட்ட ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு தந்து இந்த இயக்கம் சமுதாயப் பணியாற்றி வருகிறது.
(தொடரும்)