ஒரு குழந்தை பிறந்து, தவழ்ந்து, அமர்ந்து, எழுந்து, நடந்து, விழுந்து எழுந்து என்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, தானாக தந்தை தாயின் உதவியின்றி நடக்கத் தொடங்குகிறது. மனித வாழ்வும் அப்படித்தான். சிறிது சிறிதாக முன் னேற்றம் இருக்க வேண்டும். கிணற்றில் போட்ட கல் போல அப்படியே இருந்தால் அந்த வாழ்வு சிறக்காது. முன்னேற்றம் ஒன்றுதான் வாழ்வின் அடுத்த நிலை. தானாக ஒருவர் தன்னை உயர்த்திக் கொண்டு முன்னேறலாம். அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தெளிவான இலக்குகளை அமைத்தல்
தனக்கு என்ன வேண்டும் என்பதில் ஒருவர் தெளிவாக இருக்க வேண்டும். தான் என்னவாக ஆக விரும்புகிறோம்? தன்னுடைய இலக்கு மற்றும் ஆசை பற்றி தெளிவாக அறிந்திருக்க வேண்டும் . தனது துறை என்ன என்பதைத் தேர்ந் தெடுக்க வேண்டும். சுய தொழில் வியாபாரம் அல்லது அலுவலகப் பணி, எழுத்து, விளையாட்டு அரசியல், நடிப்பு போன்றவற்றில் எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறோம் என்பதில் ஒரு நிச்சயத் தன்மை வேண்டும் அதுவே ஒரு மனிதனை சரியான பாதையில் அழைத்துச் சென்று ஊக்கம் தரும்.
திட்டமிடுங்கள்
தன்னுடைய இலக்கு என்ன என்று தீர்மானித்த பின்பு அதை அடைவது எப்படி என்று யோசிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை பற்றி சிந்திக்க வேண்டும். திட்டங்கள் தீட்ட வேண்டும். அவற்றை நோக்கி பயணப்பட ஏதுவாக இலக்கை சிறுசிறு பகுதிகளாக பிரித்துக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் செயல்பட வேண்டும்.
தொடர்ந்து கற்றுக் கொள்ளுதல்
”கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு’’. வாழ்க்கை என்பது ஒரு நெடிய பயணம். அதில் பயணம் செய்ய ஏதுவாக தன்னுடைய திறமை களை வளர்த்துக் கொள்ள வேண்டும். தன்னுடைய லட்சியத்தை அடைய தேவையான வழி முறைகளை கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல புத்தகங்கள், சிறப்பு வகுப்பு, பயிற்சி பட்டறைகள் போன்றவற்றில் கலந்து கொண்டு தன்னுடைய திறமைகளை பட்டை தீட்டிக்கொள்ள வேண்டும்.
தோல்வியிலிருந்து மீண்டு எழுதல்
தனது லட்சியத்தை அடைய நினைக்கும் ஒவ் வொருவருக்கும் இருக்கவேண்டிய முக்கியமான குணம் இது. சவால்களை சாதிக்க கிடைத்திருக்கும் வாய்ப்புகளாக நினைத்து அவற்றை எதிர்கொள்ள வேண்டும். இது ஒருவருடைய தனிப்பட்ட வளர்ச் சிக்கும் தோல்வியிலிருந்து மீண்டு எழுவதற்கும் உதவும். முயற்சியில் தடங்கல்கள் தடைகள் வந்தால் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும். அவ்வப்போது மனம் சோர்வடையும்போது தனக்குத்தானே உற்சாக மூட்டிக் கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை சமாளிக்க கற்றுக் கொண்டு புத்துணர்ச்சியுடன் செயல்பட வேண்டும்.
உடல் – மனநலம்
உடல் நலனை பேணி பாதுகாப்பதில் தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். சத்துள்ள உணவு, நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி, போதுமான அளவு தூக்கம், மன அழுத்தத்திலிருந்து விடுபடும் பயிற்சிகள் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந்தாலே உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். இவை தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும்.