சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முழுமையாக விசாரித்து தீர்ப்பு வழங்கவில்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி,மார்ச் 12- சொத்துக்குவிப்பு வழக்கில் மேனாள் அமைச்சர் க.பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் க.பொன்முடி. இவர் கடந்த 2006-2011ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தாக அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த
2011-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், க.பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது.
3 ஆண்டு சிறை
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி ரத்து செய்தது மேலும் பொன்முடிக்கும், விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50 லட்சம் அபராத மும் விதித்து தீர்ப்பு கூறியது. இதற்கிடையே க.பொன்முடி அமைச்சர் பதவியையும், சட்டமன்ற உறுப்பினர் பதவி யையும் இழந்தார்.
மேல்முறையீடு
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, விசா லாட்சி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கடந்த 4-ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த நீதிபதி அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் தீர்ப்புகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வருகிற 15-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
தொகுதி காலியானதாக அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திருக்கோவிலூர் சட்டப்பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்து கடந்த 5ஆம் தேதி அரசாணை வெளியிட்டு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைத்தது.
இதைத்தொடர்ந்து க.பொன்முடி சார்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, ‘குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை நிறுத்தி வைக்க கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா. உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் முறையிட்டார். இதனையடுத்து இந்த மனு நேற்று (11.3.2024) விசாரணைக்கு வந்தது.
அப்போது க.பொன்முடி, விசாலாட்சி சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, சித்தார்த் லூத்ரா, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைசார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே. வழக்குரைஞர் குமணன் ஆகியோர் ஆஜரானார்கள்.
ராகுல் காந்தி உத்தரவு பொருந்துமா?
மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி வாதாடும்போது. ‘மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து முடிக்க சில ஆண்டுகளாகும். மேல்முறையீட்டு மனுவை விசாரித்து மனுதாரரை விடுதலை செய்ய நேரிட்டால் வாய்ப்புகள் பறிபோகும். குற்றவியல் வழக்கு களில் 2 ஆண்டுகள். அதற்கு மேல் தண்டனை பெறும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி தானாகவே பறிபோகிறது’ என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள்,அப்படி என்றால் குற்றவாளி என்ற தீர்ப்பை எந்திரத்தனமாக நிறுத்திவைக்க வேண் டுமா? ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதில் பொருந்துமா? என கேட்டனர்.
பகுஜன் சமாஜ் எம்.பி.
இதற்கு வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி, இந்த வழக்கிலும் பொருந்தும். கேங்ஸ்டர் வழக்கில் குற்றவாளி என தண்டிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட் சியின் எம்.பி., அப்சல் அன்சாரி மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் விசாரித்து குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்திவைத்துள்ளது. அதேசமயம் குற்றவாளி என்ற தீர்ப்பை அபூர்வமான வழக்குகளில் மட்டுமே நிறுத்தி வைக்க வேண்டும் என ரவிகாந்த் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குற்றவாளி என்ற தீர்ப்பு மாற்றி அமைக்க முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும் பட்சத்தில், பணத்தைக் கொண்டு இழப்பீடு செய்ய முடியாது என்பதையும் உச்சநீதி மன்றம் சுட்டிக் காட்டி உள்ளது. சட்டமன்ற தொகுதி பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பது தொகுதி வாக்காளர் களின் உரிமையை பறிப்பது போல் ஆகும் என்பதையும் உச்சநீதிமன்றம் பதிவு செய்துள்ளது’ என வாதிட்டார்.
தண்டனை நிறுத்திவைப்பு
அப்போது நீதிபதிகள் விடுதலைக்கு எதிரான மேல் முறையீடு என்பதை உயர்நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். முழுமையாக பரிசீலித்து தீர்ப்பு கூறியிருந்தால் அதில் தலையிட முடியாது ஆனால், விடுதலைக்கு எதிரான மேல்முறையீடு என்பதை உயர்நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டது. அதே சமயம் மனுதாரருக்கு விதிக்கப்படும் தண்டனையால் தகுதி நீக்கம் அடைந்து அதனால் ஏற்படும் விளைவுகளை மாற்றி அமைக்க முடியாது என்பதையும் பரிசீலித்திருக்க வேண்டும்’ என கருத்து தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “அப்சல் அன்சாரி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இந்த வழக்கில் பொருந்துவதாக உள்ளது. எனவே மனுதாரரை குற்றவாளி என தீர்மானித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. 3 ஆண்டுகள் சிறை, ரூ.50 லட்சம் அப ராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
மனைவிக்கு பிணை
அதேசமயம் மனுதாரரின் மனைவியை குற்றவாளி என தீர்மானித்த உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்கிறோம். ஒரு மாதத்திற்குள் விசாரணை நீதிமன்றத்தை அணுகி பிணை பெற்றுக் கொள்ளவும் அவகாசம் அளிக்கப்படுகிறது’ என்று கூறியுள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கு : பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை
Leave a Comment