பேலியோ டயட், வீகன் டயட், கீட்டோ ஜெனிக் டயட் என சமீபகாலமாக பலவித டயட்கள் பிரபல மாக தொடங்கியுள்ளன. அந்தவகையில் ஒன்றுதான் காலிஃப்ளவர் டயட். உண வுப் பிரியர்கள் பலரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் எப்போதும் காலிஃபிளவருக்கு தனி இடம் உண்டு. எனவேதான், நவீன உணவு வகைகளிலும் பாரம்பரிய உணவு வகைகளிலும் காலிஃபிளவர் சேர்க்கப்படுகிறது. பஜ்ஜி முதல் பீட்சா வரை காலிஃபிளவரில் நம்முடைய விருப்பத்துக்கு ஏற்றபடி எந்த வகையிலும் சமைத்துக் கொள்ளலாம். காலிஃபிளவரின் வறுவல், காய்கறி சமையல், அரிசி சாதத்துடன் கலந்து சாப்பிடும் உணவு என எல்லா உணவு வகையிலும் சேர்த்து சமைக்கப்படுகிறது. இதனாலேயே, பலருக்கும் காலிஃபிளவர் விருப்பமான உணவாகவும் இருந்து வருகிறது.
ஆனால், காலிஃபிளவரை மசாலா சேர்த்தோ, வறுத்தோ சாப்பிடும்போது அதன் முழு சத்துக்களையும் பலரும் இழந்து விடுகிறார்கள். காலிஃபிளவரை சரியான முறையில் சமைத்து உண்ணும்போது, அது உடல் பருமனை வேகமாகக் குறைக்கும் தன்மை கொண்டது. அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம். காலிஃபிளவர் டயட் என்றதும் வெறும் காலிஃபிளவர் மட்டுமே சாப்பிட வேண்டுமா என்று நினைக்க வேண்டாம்.
அதிக கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் நிறைந்த உணவுக்கு பதிலாக காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக் கொள்வதை காலிஃபிளவர் டயட் பரிந்துரை செய்கிறது. ஆனால் அந்த காய்கறிகளில் பிரதானமானதாகவும் அதிக அளவிலும் காலிஃப்ளவர் இருக்க வேண்டியது அவசியம். இந்த அடிப்படையில்தான் சமீப காலமாக மிகவும் பிரபலமாகி வரும் கீட்டோஜெனிக் டயட்டிலும் காலிஃபிளவர் முக்கியப் பங்கு வகிக்கிறது.
காலிஃபிளவரை ஏன் அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அது குறைந்த கார்போஹைட்ரேட், அதிக நார்ச்சத்துகள் கொண்டது. எனவே, காலிஃபிளவரை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ளும்போது, அதில் உள்ள அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் மற்றும் பிற சத்துகள் அன்றாட உணவை சிறந்த டயட் உணவாக ஆக்குகிறது. ராதா தாமஸ் என்பவரால் இந்த காலிஃபிளவர் டயட் பிரபலமாக்கப்பட்டது. இவர் காலிஃபிளவர் டயட் என்ற தலைப்பில் 2016இல் ஒரு புத்தகமும் எழுதியுள்ளார்.
காலிஃபிளவரில் உடலால் எளிதாக உறிஞ்சக்கூடிய மற்றும் உறிஞ்ச முடியாத நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன. அதனால் இது எளிதில் ஜீரணமாகிவிடும். நமது உடல் ஆரோக்கியமாக இருக்கவும், உடல் எடை குறையவும் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படுவது மிக அவசியம்.100 கிராம் காலிஃபிளவரில் 48 மி.கிராம் விட்டமின் சி அல்லது அஸ்கோர்பிக் அமிலம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய விட்டமின் சி மிகவும் அவசியம். எதிர்ப்புத் திறன் என்பது, உடல் எடை குறைக்கவும், ஆரோக்கியமான உடல்நிலைக்கும் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதனால் அடிக்கடி உணவில் காலிஃபிளவரை சேர்த்துக் கொள்ள, உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.