தேர்தல் ஆணையரின் திடீர் பதவி விலகல், அவசர அவசரமாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் – மக்கள் மத்தியில் அய்யப்பாடும் – அதிர்ச்சியும்!
ஜனநாயக விரோத மோடி தலைமையிலான ஒன்றிய அரசை மாற்ற வாக்குச் சீட்டை அரசியல் மாற்று ஆயுதமாகப் பயன்படுத்துவீர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பி.ஜே.பி. அரசில் வெளிப்படைத்தன்மை என்பது அறவேயில்லை. தேர்தல் ஆணையரின் திடீர் வில கலும், அவசர ஒப்புதலும் மக்கள் மத்தியிலும், அறிஞர்கள் மத்தியிலும் பெரும் அய்யப்பாட்டையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சூழலில் ஜனநாயகத்தையும், வெளிப்படைத்தன்மையையும் பாதுகாக்க வாக்குச் சீட்டை ஆட்சி மாற்றத்துக்கான ஆயுதமாக மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
இந்தியாவின் மூன்று தேர்தல் ஆணையர்களில் ஒருவர் வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்றுவிட்டார்!
மற்ற இரண்டு பேர்தான் இருந்தார்கள். அவர்களில் ஒருவரான அருண்கோயல் என்பவர் திடீரென்று எந்தக் காரணமும் கூறாமல், சொந்தக் காரணமாக பதவியி லிருந்து நேற்றுமுன்தினம் (9-3-2024) தனது பதவி விலகல் கடிதத்தை, நேரே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, அவரும் உடனடியாக பதவி விலகலை ஏற்றுக்கொண்டு, அரசிதழில் வெளியிட்டு விட்டார்!
பொதுமக்கள் கேட்கும் கேள்விகள்
2024 பொதுத் தேர்தல் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெறவிருக்கும் இந்தத் தருணத்தில் இப்படிப்பட்ட தொடர் நிகழ்வுகள், குடிமக்களான வாக்காளர்கள் மத்தியிலும் பெரும் அய்யங்களையும், ஊகங்களையும் ஏற்படுத்தி வருகிறது!
மேலும், மக்கள் கேட்கும் சில கேள்விகள்:
1. திட்டமிட்டபடி 2024 இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுமா? அல்லது தேர்தல் தள்ளிப் போகுமா?
2. மூன்று தேர்தல் ஆணையர்களைக் கொண்டு, இந்திய நாடு முழுவதும் நடைபெறவேண்டிய தேர்தலை, ஒரே ஒரு தேர்தல் ஆணையரைக் கொண்டே நடத்தி விடுவதற்கான திட்டமிட்ட ஏற்பாட்டிற்கு இது வழி வகுக்கப் போகிறதா? அல்லது உடனடி இரண்டு நியமனங்களை பிரதமர், அவரது அமைச்சர் மற்றும் உறுப்பினர்களை வைத்து, தங்களது விருப்பப்படி ஓய்வு பெற்ற அல்லது வேறு பணியில் உள்ள அதிகாரிகளை நியமிக்கப் போகிறார்களா? என்பதும் நாடு தழுவிய விவாதமாக உள்ளது – செய்தி ஊடகங்களில்!
அப்படி இந்தக் காலகட்டத்தில் அவசர அவசர நிய மனங்கள்மூலம் வருகிறவர், ஆளும் கட்சிக்குத் ‘‘தலையாட்டித் தம்பிரான்களாக” இருக்கக் கூடாது என்ற சுதந்திர நிலை இருக்குமா?
அல்லது உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், ‘‘ஒன்றிய அரசு Selective appointments தாங்கள் விரும்புவோருக்கு மட்டும் உடனடியாக நியமனங்கள்; மற்ற பெயர்கள் கிடப்பில் போடப்பட்டும் உள்ள நிலைமையா” என்று முன்பு உச்சநீதிமன்றம் கேட்ட கேள்வி, விரைவில் நிரப்பப்படவிருக்கும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில்கூட அதே நடைமுறைக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தரப்படுமா?
அப்படி நடந்தால், அது – சுதந்திரத் தேர்தல் ஆணை யத்தை நாட்டு மக்கள், வாக்காளர்கள் பெறுவது எளி தாகுமா? என்ற கேள்வியும் மக்கள்முன் எழும்பியுள்ளது!
தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன?
அரசமைப்புச் சட்டம், தேர்தல் ஆணையம் என்று ஒரு சுதந்திரமாக செயல்படவேண்டிய அமைப்பினை உருவாக்கியதன் நோக்கமே இப்படிப்பட்ட ஆளுங் கட்சிக்கு அவர்களின் ‘‘கண்ஜாடைக்கு” இடந்தந்துவிடக் கூடாது. சுதந்திர செயல்பாட்டைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்ற தத்துவமே விடைபெற்றுவிடக் கூடிய ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது.
‘‘உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்”(Largest Democracy in the World) என்று கூறப்படுகிறது!
வெளிநாட்டில் பேசும்போது, நமது பிரதமர் மோடி அவர்கள், ‘‘உலக நாடுகளில் பலவற்றிற்கும் தாய் எங்கள் ஜனநாயகம்” என்று பேசினார்!
அப்படியானால், சுதந்திரமான தேர்தல்தானே அதற்குரிய ‘‘திராவகப் பரிசோதனை” (Acid Test)?
ஆனால், இப்போது வரும் பல செய்திகள் – அதற்கு நேர்மாறான போக்கு அல்லவா நிலவுகிறது என்று கட்சிகளுக்கு அப்பாற்பட்ட சான்றோர்கள், ஒய்வு பெற்ற நீதிபதிகள், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள், மூதறி ஞர்கள் மத்தியில் பெருத்த சந்தேகங்களை அல்லவா விதைத்துள்ளன?
அவசர அவசரமாக காய்கள் நகர்த்தப்படுவது ஏன்?
முதலாவது அருண்கோயல் போன்றவர்கள் திடீர் பதவி விலகல், அதைவிட வேகமாக அதனைக் குடியரசுத் தலைவர் ஏற்று, அரசிதழில் அறிவிப்பு, உண்மைக் காரணத்தை அவரைப் போன்றவர்களாவது முன்வந்து விளக்கிச் சொல்லாதது – முரணான செயல். வெளிப்படைத்தன்மை Transparency இதில் அவசியம் தேவை – அது இருசாராருக்குமே நல்லது!
தேர்தல் ஆணையக் கூட்டம் நடந்துகொண்டிருந்த நேரத்தில், அவர் திடீரென்று வெளியேறினார் என்ற ஒரு செய்தியும், உடல்நிலை காரணம் என்று ஒரு பொருந்தாத காரணம் கூறப்பட்டதை பொதுவாக அரசியல் வட்டாரங்களும், பொது அறிஞர்களும் ஏற்கவில்லை.
2014 மக்களவைத் தேர்தலின்போது மோடி வெளியிட்ட இரு பிரகடனங்கள் என்னாயிற்று?
தேர்தல் அறிவிப்பு இதனால் தாமதமாவது தவிர்க்க இயலாததுதான்.
சுதந்திர ஜனநாயகம் காப்பது நாட்டு மக்கள் அனைவரது கடமையும், பொறுப்பும்.
பிரதமர் மோடி பதவிக்கு வந்தபோது 2014 இல் இரண்டு முக்கிய பிரகடனங்களைச் செய்தார்.
எனது அரசாங்கத்தின் செயல்பாடு வெளிப்படைத் தன்மை (Transparency) யோடு எதிலும் இருக்கும் என்ற உத்தரவாதம் (கியாரண்டி) தந்தார்.
‘‘குறைந்த பங்கு அரசு – மிகுந்த அரசு ஆளுமை” (‘‘Minimum Government Maximum Governance”) இது பின்பற்றப்படவே இல்லை என்பதுதான் மோடி அரசின் 10 ஆண்டுகால ‘சாதனை!’
அதற்குரிய தருணம் இதுவே. எனவே, வெளிப் படைத்தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாமா?
வாக்குச் சீட்டை அரசியல் மாற்று ஆயுதமாகப் பயன்படுத்துவீர்!
இந்திய ஜனநாயகம் இப்படி முட்டுச்சந்தில் மாட்ட வைக்கப்பட்டு, சிக்கலான ஒரு சூழ்நிலையில் அகப்பட்டுள்ளதை வாக்காளர்கள் கவனத்தில் கொண்டு, தங்களது வாக்குச் சீட்டை அறிவாயுதமாக அரசியல் மாற்று ஆயுதமாக ஆக்கிக் கொண்டால் மட்டும், உண்மை ஜனநாயகம் உயிரோடு உலாவரும். இன்றேல் எதிர்விளைவாகும்.
கவனம்! கவனம்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
11-3-2024