தந்தையென வாழ்ந்திட்ட பெரியாருக்கு
தலைப்பிள்ளை பெண்மகவாய் உம்மை அல்லால்
எவருமில்லை எமதருமை மணியே அம்மா
ஈடில்லா அன்பரசி பள்ளி நாளில்
சந்தித்த பெரியாரை பின்னர் ஒருநாள்
சமநீதித் தன்மானத் தலைவ ராக
சந்திப்போம் என்றுணரா நீங்கள் எங்கள்
சமத்துவப்போர்த் தலைவருக்குத் துணையாய் வந்தார்.
இன்றைக்கும் எத்தனையோ விமர்சனங்கள்
எதிர்ப்பாளர் மாற்றாரின் எதிர்க்கருத்து
அன்றைக்கு எப்படித்தான் எதிர்கொண்டாரோ
அத்தனையும் அலட்சியமாய் புறத்தே தள்ளி
ஒன்றுக்கும் உதவாதோர் சொற்கள் தம்மை
ஒருநாளும் பொருட்டாகக் கருதிடாமல்
என்றைக்கும் போல்அம்மா இதயம் வைத்தார்
இயக்கத்தின் கொள்கைக்கு முதன்மை தந்தார்.
தன்னலமே கருதாத பெண்மை தந்தை
பெரியாரைப் பிள்ளையெனக் காத்த அன்னை
புன்முறுவல் மாறாத செவிலி சுடர்ப்
பகுத்தறிவுச் சூரியனின் கொள்கை வீச்சு
மென்மேலும் பரவுதற்கு தன்னைத் தூயத்
தொண்டரென அர்ப்பணித்த தியாகச் செம்மல்
பெண்ணுரிமைப் போராளி இதயமெல்லாம்
பெரியாரின் சிந்தனையில் சொல்லில் தொண்டில்
பிறழாத இயக்கத்தின் வீர மங்கை.
– முனைவர் எழில்வேந்தன்
உம்மை அல்லால் எவருமில்லை
Leave a Comment