சென்னை,மார்ச் 9- ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியாக 5 உத்தரவாதம் கொடுத்துள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் விவரித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை கூட்டாக செய்தியாளர் சந்தித் தனர். அப்போது பேசிய அவர்; ராகுல்காந்தி தேர்தல் வாக் குறுதியாக 5 உத்தரவாதம் கொடுத்துள்ளார். ராகுல்காந்தி அளித் துள்ள 5 வாக்குறுதிகளையும் தேர்தல் அறிக்கையில் சேர்க்க உள்ளோம். அதில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒன்றிய அரசு மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களில் உள்ள 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பயிற்சி பெறுவோரை நியமித்துக் கொள்ளலாம் என்று சட்டம் உள்ளது. படித்தவர்கள் தாங்கள் பயிற்சி பெறுவது எனது உரிமை என சட்டத்தை மாற்ற உள்ளோம். பயிற்சி பெறுவோருக்கு மாதம் ரூ.8 ஆயிரம் கிடைக்கும். தேர்வு வினாத்தாளை கசிய விடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, விரைவு நீதிமன்றம் மூலமாக தண்டனை பெற்று தரப்படும். ஆன்லைனில் ஆர்டர் பெற்று பொருட்களை விநியோகிக்கும் பணிகளில் பல லட்சம் பேர் உள்ளனர். ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு சட்டப் பாதுகாப்பு, சமுதாய பாதுகாப்பு ஏற்படுத்தி தரப்படும்.
புதிய தொழில் தொடங்குவோருக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க உள்ளோம். அதில் ஒரு தொகுதிக்கு ரூ.10 கோடி வழங்கப் படும். தற்போது வங்கிக் கடன் மேட்டுக்குடி மக்களுக்குத்தான் செல்கிறது. சாதாரண மக்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது. 42% பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.
தேர்தல் நெருங்கும்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்துள்ளனர். தேர்தலுக்கு பின்னர் மீண்டும் விலையை உயர்த்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். 21,000-க்கும் மேற்பட்ட தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதை யார் வாங்கினார்கள் என்பது பாரத ஸ்டேட் வங்கிக்கு தெரியும். அந்த விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் கேட்கின்றனர். உண்மையில் அவற்றை வெளியிட 24 மணி நேரமே போதும் என்று அவர் கூறியுள்ளார்.