கரன்சி நோட்டாக இருந்தாலும் அல்லது அரசாங்கப் பத்திரமாக இருந்தாலும் அதனை வெளியிடும் உரிமை ரிசர்வ் வங்கிக்கு மட்டும்தான் உள்ளது!
அதனை பாரத ஸ்டேட் வங்கிக்குக் கொடுக்கக் கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்தது தேர்தல் ஆணையம்!
சிறப்புப் பொதுக் கூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறை தலைவரும், மூத்த வழக்குரைஞருமான இரா.விடுதலை விளக்கவுரை
சென்னை, மார்ச் 9 தேர்தல் பத்திரத் திட்டம்இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 110 ஆம் பிரிவிற்கு முரணா னது! அதனைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பும் பொழுது, தேர்தல் ஆணையம் சொன்னது, ‘‘இது மிகவும் மோசமானத் திட்டம். இது ஊழலுக்கு வழிவகுக்கிறது. பத்திரம் என்பது கிட்டத்தட்ட கரன்சி நோட்டு போன்றது. கரன்சி நோட்டாக இருந்தாலும் சரி அல்லது அரசாங்கப் பத்திரமாக இருந்தாலும் சரி, அதனை வெளியிடும் உரிமை ரிசர்வ் வங்கிக்கு மட்டும்தான் உள்ளது. அதனை பாரத ஸ்டேட் வங்கிக்குக் கொடுக்கக் கூடாது” என்று ஆட்சேபனை தெரிவித்தது என்றார் தி.மு.க. சட்டத்துறை தலைவரும், மூத்த வழக்குரைஞருமான இரா.விடுதலை அவர்கள்.
‘‘தேர்தல் பத்திரமும் –
உச்சநீதிமன்றத் தீர்ப்பும்!’’
கடந்த 4.3.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘தேர்தல் பத்திரமும் – உச்சநீதிமன்றத் தீர்ப்பும்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்தில் தி.மு.க சட்டத்துறை தலைவரும், மூத்த வழக்குரைஞ ருமான இரா.விடுதலை அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய மானமிகு ஆசிரியர் அவர்களே,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எழுச்சி வீரருமான தொல்.திருமாவளவன் அவர்களே,
நண்பர் ஜவாஹிருல்லா அவர்களே,
‘‘தேர்தல் பத்திரமும் – உச்சநீதிமன்றத் தீர்ப்பும்” என்கின்ற தலைப்பில் ஒரு சிறப்புப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்ற திராவிடர் கழகத்தவர்களே, இங்கே குழுமியிருக்கின்ற பொதுமக்களே, வழக்குரை ஞர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக் கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, எங்களுடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள், இங்கு வந்து உங்கள்முன் உரையாற்றுவதாக இருந்தது. ஆனால், வெளியூரில் ஒரு முக்கியமான கூட்டத்திற்குச் செல்லவேண்டும் என்று எங்கள் தலைவர் பணித்த காரணத்தினால், என்னை இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்படி சொன் னார். இந்த வாய்ப்பை ஒரு நல்வாய்ப்பாக எடுத்து, இங்கே நான் உங்கள்முன் உரையாட வந்திருக்கின்றேன்.
‘‘தேர்தல் பத்திரமும் – உச்சநீதிமன்றத் தீர்ப்பும்” என்பதைப்பற்றி அரசியல் தெரிந்தவர்கள் அனைவரும், ஒரு கோணத்திலே உங்கள்முன் உரையாடவிருக்கின் றார்கள்.
எனக்குத் தெரிந்த சட்ட நுணுக்கங்களை உங்கள்முன் வைக்கிறேன்!
ஆனால், வழக்குரைஞர் என்ற முறையிலே, எனக்குத் தெரிந்த சட்ட நுணுக்கங்களை உங்கள்முன் வைக்கவே நான் இங்கு வந்திருக்கின்றேன்.
1863 ஆம் ஆண்டு கெட்டிஸ்பர்க் தேசிய கல்லறைக் கூட்டத்தில், அன்றைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன், ‘‘மக்களுக்காக, மக்களால், மக்களே நடத்தி வருகின்ற மக்களாட்சி மண்ணிலே மறைந்துவிடக் கூடாது” என்று சூளுரைத்தார்.
அவர் அவ்வாறு உரைத்தது, 1863 ஆம் ஆண்டு. ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்குமுன். 1865 ஆம் ஆண்டு, அவர் அமெரிக்கன்ஸ்களால் கொல்லப்பட்டு உயிரிழந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். இதை ஏன் உங்களுக்குச் சொல்கிறேன் என்றால், மக்களாட்சிக்காகத் தன் உயிரையே கொடுத்தவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன்.
அமெரிக்காவில் இன்றும்
ஜனநாயகம் தழைத்து வருகிறது
அதனால்தானோ என்னவோ, கிட்டத்தட்ட 250 ஆண்டுகளுக்கு மேலாகியும், பல்வேறு இனத்தவர், பல்வேறு நாட்டவர், பல்வேறு மொழியினர் என்று இருந் தாலும்கூட, அமெரிக்காவில் இன்றும் ஜனநாயகம் தழைத்து வருகிறது.
‘‘மக்கள் குரலே, மகேசன் குரல்” என்று சொன்னார் அறிஞர் அண்ணா அவர்கள்.
மக்களின் குரல்,
மோடியின் காதுகளுக்குக் கேட்பதில்லை!
ஆனால், இப்பொழுது இருக்கின்ற நமது பிரதமர் மோடி அவர்களும், ‘‘மனதின் குரல்” (மங்கி ஃபாத்) என் கின்ற ஓர் உரையை அடிக்கடி நிகழ்த்தி வருகிறார். அத னாலோ என்னவோ மக்களின் குரல், அவரின் காதுகளுக்குக் கேட்பதில்லை. அவருடைய குரல் மட்டுமே அவருக்குக் கேட்கிறது.
மனதின் குரல் என்றால் என்ன?
அவர் மனதில் இருப்பது, கார்ப்பரேட் நிறுவனங் களும், பெருமுதலாளிகளும், பணத்தை பாரதீய ஜனதா கட்சிக்குக் கொடுக்கக் கூடியவர்களும்தான் என்பதை எடுத்துக்காட்டும் முகமாகத்தான் இந்தத் தேசிய தேர்தல் பத்திரத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால், இந்தியப் பொருளாதாரம் 2004 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டுவரை கிட்டத்தட்ட 8 விழுக்காட்டிற்குமேல் பொருளாதார வளர்ச்சியைக் கண்டது.
பொருளாதார வளர்ச்சி என்பது 7 சதவிகிதத்திற்கும்
குறைவாகவே இருக்கின்றது
கடந்த 10 ஆண்டுகளில்!
மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில், நாடு வெகுவாக பொருளாதார முன் னேற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஆனால், 2014 ஆம் ஆண்டு, மோடி அவர்கள் பிரதமராக வந்தார், இன்று கிட்டத்தட்ட 10 ஆண்டு கள் முடியப் போகிறது; இந்த 10 ஆண்டுகளில் இந்திய தேசிய பொருளாதார வளர்ச்சி என்பது 7 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கின்றது என்பது மறுக்க முடியாத புள்ளிவிவரமாகும்.
உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம், 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி, அன்றைக்குப் புழக்கத் திலிருந்த 500 ரூபாய் நோட்டு மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது.
பணமதிப்பிழப்பை எதிர்த்தார்கள்!
2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டுவரை ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தவர், பொருளாதார நிபுணரான அனைத்து உலகமே பாராட்டக்கூடிய ரகுராம் ராஜன் அவர்கள்.
அவர் சொன்னார், இந்தப் பணமதிப்பிழப்புத் திட்டத் தைக் கைவிடவேண்டும்; அறிமுகப்படுத்தக் கூடாது என்று சொன்னார். ஆனால், பிரதமர் மோடி அதைக் கேட்கவில்லை. அன்றைக்கு இருந்த ஒன்றிய நிதியமைச் சர் அருண்ஜெட்லி அவர்களும் கேட்கவில்லை.
பணமதிப்பிழப்பு ஒரு பெரிய பொருளாதாரப் பிழை: மேனாள் பிரதமர் மன்மோகன்சிங்!
பணமதிப்பிழப்பு அறிமுகப்படுத்தப்பட்டது; பின்னர் அதைப்பற்றி பேசும்பொழுது, மேனாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் சொன்னார், ‘‘இது ஒரு பெரிய பொருளாதாரப் பிழை” என்று சொன்னார்.
இதை ஏன் நான் இப்பொழுது சொல்கிறேன் என்றால், அந்தப் பணமதிப்பிழப்பின் காரணமாக, இந்தியப் பொருளாதாரம் பெரிய வீழ்ச்சியைக் கண்டது என்பது உண்மை. ஆனால், அதையும் தாண்டி, இந்தப் பணமதிப்பிழப்பிற்கு எதிராக இருந்தார் என்பதற்காக, ரகுராம் ராஜன் அவர்களுக்கு, இரண்டாவது முறை பதவி நீட்டிக்கப்படாமல், உர்ஜித் பட்டேல் அவர்கள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றார்.
இவர் பொறுப்பேற்றது 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். அவர் பொறுப்பேற்றவுடன் ஒன்றிய அரசு சொல்கிறது, ‘‘நாங்கள் தேர்தல் பத்திரத் திட்டம் என்கிற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தப் போகிறோம்” என்று.
ரிசர்வ் வங்கியிடமிருந்து எடுக்கப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கியிடம் கொடுக்கப்படுகிறது!
தேர்தல் பத்திரத் திட்டம் என்றால் என்ன?
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்க விரும் புபவர்கள், அது வர்த்தக நிறுவனங்களாக இருந்தாலும் சரி, முதலாளிகளாக இருந்தாலும் சரி, மற்றவர்களாக இருந்தாலும் சரி, பாரத ஸ்டேட் வங்கியை அணுகி, ஒரு பத்திரத்தை வாங்கலாம். அதாவது, முதன்முதலாக, அரசு பத்திரத்தை வெளியிடும் உரிமை – ரிசர்வ் வங்கியிட மிருந்து எடுக்கப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கியிடம் கொடுக்கப்படுகிறது.
இதை நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல் சொன்னார்.
இந்தத் திட்டத்தைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பும்பொழுது, தேர்தல் ஆணையம் சொன்னது, ‘‘இது மிகவும் மோசமானத் திட்டம். இது ஊழலுக்கு வழி வகுக்கிறது. பத்திரம் என்பது கிட்டத்தட்ட கரன்சி நோட்டு போன்றது. கரன்சி நோட்டாக இருந்தாலும் சரி அல்லது அரசாங்கப் பத்திரமாக இருந்தாலும் சரி, அதனை வெளியிடும் உரிமை ரிசர்வ் வங்கிக்கு மட்டும்தான் உள்ளது. அதனை பாரத ஸ்டேட் வங்கிக்குக் கொடுக்கக் கூடாது என்பது முதல் ஆட்சேபனை.
இரண்டாவது, இந்தப் பத்திரம் ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம், ஒரு லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய், ஒரு கோடி ரூபாய் என்று டினாமினேசன் வெளியிடப்படும்.
இதை யார் வாங்குகிறார்கள்? என்பது தெரியாது; நம்பகமானது.
யாரிடம் கொடுக்கப் போகிறார்கள் என்பதும் தெரி யாது; ஆனால், அது ஓர் அரசியல் கட்சியாக இருக்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தேர்தல் பத்திரத் திட்டம் கருப்புப் பணப் புழக்கத்தை அதிகரிக்கிறது!
இது எப்படி நடக்கிறது என்றால், உதாரணமாக – நான் ஒரு கோடி ரூபாய் ஓர் அரசியல் கட்சிக்குக் கொடுக்கவேண்டும் என்றால், பாரத ஸ்டேட் வங்கியை அணுகி, பணத்தைக் கட்டி, பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அந்தப் பத்திரத்தில், கொடுக்கப்படுபவரின் பெயர் இருக்காது. ஆனால், வாங்கியவரான என்னுடைய பெயர் இருக்கும். யாருக்காகக் கொடுக்கப் போகிறோம் என்பதை வங்கிக்கு மட்டும் தெரிவிக்கவேண்டும். வழக்கமாக வங்கியில் கொடுக்கப்படும் ‘‘டிமாண்ட் டிராப்ட்டில்”, யாருக்காக எடுக்கப்படுகின்றது என்ற தகவல் இருக்கும். ஆனால், இந்தப் பத்திரத்தில் அப்படி இருக்காது. இது நான் உழைத்து ஒரு கோடி ரூபாய் கொடுக்க விரும்புகிறேன் என்றாலும், நான் நேரி டையாகக் கொடுக்கவேண்டாம்; அதை இன் னொருவரிடம் கொடுக்கலாம். அவர் அந்தப் பத்திரத்திற்குப் பதில், ஒரு கோடி ரூபாய் கருப்புப் பணத்தை என்னிடம் கொடுத்துவிடலாம்; நான் வாங்கிக் கொண்டு போய்விடுவேன். அந்தப் பத்திரம், இவருடைய கைக்கு வந்துவிடுகிறது. இப்படியாக அந்தப் பத்திரம், ஒன்று, இரண்டு, மூன்று, என்று நான்காவது நபரின் கைகளுக்கு மாறிவிடுகிறது. இது எல்லாமே கருப்புப் பணப் புழக்கத்தை அதிகரிக்கிறது. கடைசியில் வாங்கும் நபர், அதை ஏதாவது ஓர் அரசியல் கட்சிக்குக் கொடுக்கலாம்.
இப்படி கொடுத்தால், அதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பது மட்டுமல்ல; கருப்புப் பணப் புழக்கம் அதிகமாகிவிடும். தேர்தலில் கருப்புப் பணப் புழக்கம் அதிகமாகிவிடும் என்று நான் சொல்லவில்லை, தேர்தல் ஆணையம் சொன்னது.
தேர்தல் ஆணையமாக இருந்தாலும் சரி, ரிசர்வ் வங்கியாக இருந்தாலும் சரி அவையெல்லாம் தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தில் ‘ஞானம்’மிக்கவர்கள்.
ஆனாலும், அவர்கள் மறுப்பையும் மீறி, 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதிமுதல் இந்தத் தேர்தல் பத்திரத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
எப்படி வருகிறது?
2017 ஆம் ஆண்டில், நிதிநிலை அறிக்கையில் ஓர் அங்கமாக வருகிறது.
ஏன் வருகிறது?
இது நிதிநிலை அறிக்கையின் அங்கமா?
இல்லை.
இது தேர்தல் பத்திரத் திட்டம்!
நிதிநிலை அறிக்கை என்றால் என்ன?
ஒரு நாட்டின், ஓராண்டில் வருகின்ற வரவு- செலவுத் திட்டங்களைப்பற்றி சொல்வது. வரவு எவ்வளவு? செலவினங்கள் எவ்வளவு? அந்த செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்படும் வரி எவ்வளவு? இதர வருமானங்கள் எவ்வளவு? என்பதைப்பற்றிக் கொடுப்பதுதான் நிதிநிலை அறிக்கையாகும்.
ஆனால், அந்த நிதிநிலை அறிக்கையோடு சேர்த்து இந்தத் தேர்தல் பத்திரத் திட்டத்தைக் கொண்டு வருவதற் கான காரணம் என்ன? அங்கேயும் தவறுதான்.
பாரதீய ஜனதா கட்சிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை கிடையாது!
ஏனென்றால், பாரதீய ஜனதா கட்சிக்கு மாநிலங் களவையில் பெரும்பான்மை கிடையாது. ‘மனு’ பில்லாக இருந்தால், மக்களவையில் நிறைவேற்றினால் மட்டுமே போதுமானது. மாநிலங்களவை அதனை நிராகரித்தால் கூட, நிதி மசோதா என்கின்ற மனுவில் அது நடை முறைக்கு வந்துவிடும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்
110 ஆம் பிரிவிற்கு முரணானது!
எனவே, மாநிலங்களவையில் பெருவாரியான உறுப்பினர்கள் தங்களுக்கு இல்லாதபொழுதுகூட, அதனை மனு பில்லாகக் கொண்டு வந்து, இந்தத் திட்டத்தை நிறைவேற்றியது- இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 110 ஆம் பிரிவிற்கு முரணானது. இது நிதி மசோதாவே அல்ல. இது தேர்தல் சம்பந்தப்பட்ட மசோதா என்கின்ற வாதமும், உச்சநீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டது.
ஆனால், நிதி மசோதா குறித்த வழக்கு, ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் அமர்வுக்கு ஏற்கெனவே பரிந்துரை செய்யப்பட்டுவிட்டதால், அங்கே நிலுவையில் வழக்கு இருப்பதால், அந்த வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்பதால், அந்தக் குறிப்பிட்ட சட்டப் பிரச்சினையை மட்டும் இந்தத் தீர்ப்பில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை.
ஆனால், என்ன சொன்னார்கள், அதை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்மானிக்கும் என்றார்கள். இது ஒரு பக்கம்.
இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தவுடன் என் னானது?
நான்கு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்தால்தான்….
இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்து, நான்கு சட்டத் தில் திருத்தங்கள் கொண்டு வந்தால்தான் இந்தத் திட் டத்தை அமல்படுத்த முடியும்.
உதாரணமாகச் சொல்லவேண்டுமானால், கம்பெனிச் சட்டம் பிரிவு 152. அதில் வர்த்தக நிறுவனங்கள் அல்லது கம்பெனிகள் அரசியல் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கொடுக்கலாம்? எதற்கு மேல் நன்கொடை கொடுக்கக் கூடாது? என்கின்ற ஒரு வரையறை இருந்தது.
நிகர லாபத்தில் 7.5 விழுக்காட்டிற்குமேல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்கக் கூடாது!
அதாவது, லாபம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்கள், தங்களுடைய நிகர லாபத்தில் 7.5 விழுக்காட்டிற்குமேல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்கக் கூடாது. அதற்குள்தான் கொடுக்கவேண்டும்.
அந்த 7.5 விழுக்காடு என்பது எப்படி கணக் கிடப்படும்?
கடந்த மூன்றாண்டுகளில் உள்ள சராசரி லாபத்தில், 7.5 விழுக்காடு.
ஒரு கம்பெனி குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் வர்த்தகத்தில் இருந்திருக்கவேண்டும். அப்பொழுதுதான் அந்தக் கம்பெனியின் லாப – நட்டக் கணக்குகள் தெரியும். மூன்றாண்டுகளுக்குமேல் வர்த்தகத் தொழிலில் இருந்து, அதில் லாபம் ஈட்டி, மூன்றாண்டு சராசரி லாபத்தில் 7.5 விழுக்காடு வரையில் அரசியல் கட்சிக்கு நீங்கள் நன்கொடை கொடுக்கலாம். இதுதான் இந்தத் திட்டம் வருவதற்கு முன்பிருந்த சட்டத்தின் நிலை.
லாபத்திற்கும், நன்கொடைக்கும்
சம்பந்தமில்லை!
இதை அறவே ரத்து செய்துவிட்டார்கள்.
யார் வேண்டுமானாலும் நன்கொடை கொடுக்கலாம், கம்பெனிச் சட்டத்தில்.
அப்படி என்றால் என்ன?
நேற்று வந்த சிறு கம்பெனிகூட, இன்று ஒரு கோடி ரூபாய் அல்ல; நூறு கோடி ரூபாய் கொடுக்கலாம்; லாபத்திற்கும், நன்கொடைக்கும் சம்பந்தமில்லை.
(தொடரும்)