திராவிட இயக்கமும் தந்தை பெரியாரும் தமிழுக்கு எதிரிகள் என்று கூச்சலிடும் கூட்டங்களுக்குத் “தமிழ் மறவர்” பொன்னம்பலனார் யார் என்று தெரியுமா? அரியலூர் மாவட்டம் கீழ மாளிகையில் பிறந்த அரிமா. “குடிஅரசு” ஏடு கொளுத்திய பகுத்தறிவு சுடர் பொன்னம்பலனார் .
” தந்தை பெரியாரும் மறைமலை அடிகளும் இணைந்த உருவமே பொன்னம்பலனார் ” என்று தனது கவிதையால் புகழ்ந்தவர் திராவிடமொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர். எப்போதும் கருஞ்சட்டையோடு பள்ளிக்குச் சென்ற கலகக்கார ஆசிரியர் பொன்னம்பலனார்.தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்புவதிலும் மாணவர்களின் வடமொழி பெயர்களை தமிழில் பெயர் மாற்றம் செய்வதையும் வாடிக்கையாக கொண்டவர் . அதனால் பணி மாறுதல்கள் பல கண்ட போதிலும் களைத்ததில்லை. சளைத்ததில்லை – உழைப்பை நிறுத்தியதில்லை.
செல்லும் இடமெல்லாம் தந்தை பெரியாரின் கருத்துக்களை விதைக்காத நாட்களே இல்லை ஆரிய எதிர்ப்பை மொழியிலும் காட்ட வேண்டும் என்று தனித்தமிழுக்கு புரட்சி கவிஞர் பாரதிதாசனுக்கே பாதை போட்டு தந்தவர் பொன்னம்பலனார் என்பது வரலாறு .
சேலத்தில் விழா எடுத்து தந்தை பெரியார் கொடுத்த பட்டம் தான் “தமிழ் மறவர்”. பாவலரேறு பெருஞ்சித்திரனார் ,சிலம்பொலி செல்லப்பன் போன்ற தமிழறிஞர்களை மட்டுமல்ல.. ஏராளமான பெரியாரியப் போராளிகளை உருவாக்கிய பட்டறை தான் பொன்னம்பலனார் . எதையும் எவரையும் நேருக்கு நேர் நின்று சந்திக்கும் துணிச்சல்காரர்.
சமரசம் இல்லாத போராளி பொன்னம்பலனார். அவருக்குத்தான் தொண்டறப் பாராட்டு விழா உடையார்பாளையத்தில் …
“தியாகம் என்பது சிறை தண்டனை அனுபவிப்பது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் – அல்ல – தியாகம் என்பது தன்னலம் மறுப்பு .தன்னல மறுப்பு என்பது தனது உயிரையும் பலி கொடுப்பது என்றார் பெரியார்.
சுயமரியாதைக் கொள்கைகளை பரப்பியதற்காக. தந்தை பெரியாரின் தன்மானக் கருத்துக்களை வெகு மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காக ஆதிக்கத்தை அழிக்க போராடியதற்காக அனைவருக்கும் அனைத்தும் என்றதற்காக – ஜாதி கூடாது – பெண்ணடிமை ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியதற்காக
படு கொலை செய்யப்பட்ட திராவிட இயக்க வீரர் தான் உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம்.
தந்தை பெரியாரின் கருத்துகளுக்கு செயல் வடிவம் காட்டும் வகையில் புராண இதிகாச புரட்டுகளை புட்டு புட்டு வைத்தார். சுயமரியாதை திருமணங்களையும் கைம்பெண் திருமணங்களையும் நடத்தினார். மாணவர்களை கல்விக் கூடங்களில் கட்டாயப்படுத்தி சேர்த்தார். தன் மகள் மங்கையர்க்கரசியை 13 வயதிலேயே மேடைகளிலே பெண்ணுரிமை பற்றி பேச வைத்தார் .சுரண்டல்வாதிகளை அம்பலப்படுத்தினார். ஆரியம் நடுநடுங்கியது ,ஆதிக்கவாதிகள் அச்சம் கொண்டனர்
அதிகார வர்க்கத்தோடு இணைந்து சதித்திட்டம் தீட்டி தீர்த்து கட்டினார்கள். நிர்வாணமாக தூக்கிலிட்ட அந்தக் கொடுமையை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது.. அந்த தியாக மறவனுக்குத் தான் அந்த தொண்டறச் செம்மலுக்கு தான் உடையார் பாளையத்திலே பாராட்டு விழா …
அன்னை மணியம்மையார்
தொண்டறத் தாயின் 105ஆவது பிறந்தநாள் விழா உடையார் பாளையத்தில்…
ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக ஏச்சுகளையும் பேச்சுகளையும் சுமந்தவர்.. தனித்தன்மையான தன்னல மறுப்பு கொண்டவர். இவர் தந்தை பெரியாரை மட்டும் பாதுகாக்கவில்லை
தலைவரை பாதுகாத்ததால் தமிழ் இனத்தையும் பாதுகாத்தவர் நெருக்கடி நிலைகளை நேர்கொண்ட அச்சமறியாப் போராளி .
வீர மரணம் அடைந்த ஜாதி ஒழிப்பு – சட்ட எரிப்பு போராளிகள் பட்டுக்கோட்டை ராமசாமி மணல்மேடு வெள்ளைச்சாமி உடல்களை சிறையிலிருந்து போராடி பெற்று ஊர்வலமாக சென்று அடக்கம் செய்த வீராங்கனை. இராவண லீலா நடத்திக் காட்டி இந்திய துணைக் கண்டத்தை திகைக்கச் செய்த நாத்திக இயக்கத்தின் தலைவர்.
தேர்தல் நேரத்திலே எதற்கு முப்பெரும் விழா? திராவிடம் இருக்காது – தி.மு.க இருக்காது
பாசிசம் நம்மை மிரட்டி பார்க்கும் காலம் இது.
போராடி பெற்ற உரிமைகளை பறித்துக் கொண்டு நம்மை படுகுழியில் தள்ளப் பார்க்கும் பாஜக அரசு.அதிகாரம் கையில் இருப்பதற்காக ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் கூட்டம். ஸநாதனம் சட்ட மாக்கப்பட வேண்டும் என்கிற கூட்டத்தை வீழ்த்திட வேண்டாமா?
மறுக்கப்படும் கல்வியை . பறிக்கப்படும் வேலைவாய்ப்பை பெற.. மத வெறியை ஒழித்திட மனிதநேயம் காத்திட ஜனநாயகத்தை பாதுகாக்க எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காவி கூட்டத்தை விரட்டி அடிக்க ,.தேர்தல் பாதையில் அவர்களை வீழ்த்திட,
அன்னை மணியம்மையார், வீரர் வேலாயுதம், தமிழ் மறவர் பொன்னம்பலனார் போன்ற தன்னல மறுப்பும், துணிவும் போர்க் குணமும் கொண்ட போர் வீரர்களாக நாம் மாற வேண்டாமா? பாசிசத்தை வீழ்த்த வேண்டாமா? ஆம் அவர்கள் தனி மனிதர்கள் அல்ல.
பாசிசத்தை வீழ்த்தும் ஆயுதங்கள். இந்த ஆயுதங்களை உயர்த்திப் பிடிப்போம். ஆதிக்கத்தைத் தகர்ப்போம். உடையார் பாளையம் வாருங்கள் உறுதியேற்போம். “திராவிட இந்தியாவை ” உருவாக்குவோம். வெற்றி நமதே!