தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் பணிபுரியும் ரேசன் கடையில் உயர்ஜாதியினர் ரேசன் பொருள்கள் வாங்க மறுப்பு.
ஊர்க்காரர்களின் ரேசன் கார்டை வேறு கடைக்கு மாற்றினார் மாவட்ட ஆட்சியர்.
குஜராத் படான் மாவட்டத்தில் உள்ள கனோசன் கிராமத்தை சேர்ந்த 436 குடும்ப அட்டைதாரர்கள், அக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த நபர் பணி புரியும் ரேஷன் கடையில் பொருட்களை வாங்க மறுப்பு தெரிவித்ததால், அருகில் உள்ள எட்லா என்ற கிராமத்தில் செயல்படும் ரேஷன் கடைகளில், இவர்கள் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று படான் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அரவிந்த் விஜயன் கனோசன் கிராமத்தை சேர்ந்த 436 குடும்பத்தினரின் ரேஷன் அட்டைகளை, அருகில் உள்ள எல்டா கிராமத்தின், ரேஷன் கடைகளுக்கு இடமாற்றம் செய்து, அதற்கான உத்தரவை செப்டம்பர் 12ஆம் தேதி வெளியிட்டார்.
கனோசன் கிராமத்தில் அதிகப்படியான குடும்பத்தினர் தாகூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் தாகூர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கன்டி பர்மர் என்ற தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த நபர் நடத்தும் ரேஷன் கடையில் பொருட்களை வாங்குவதில்லை.
இந்நிலையில் கன்டி பர்மர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் அளிப்பேன் என்று மிரட்டியதாக தாகூர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் கன்டி பர்மர் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த புகார் உண்மையில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவில் குறிப்பிட்டுள்ள தகவலில், கனோசன் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கன்டி பர்மர் ரேஷன் கடையில் பொருட்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாங்கவில்லை. இதற்கு பதிலாக எட்லா, வக்டோட், நயட் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குகிறார்கள். சரியான நேரத்தில் பொருட்கள் கிடைப்பதில்லை என்றும், கோவிட் காலத்தில் அரசு வழங்கிய ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும் தாகூர் சமூகத்தை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர், இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தை சேர்ந்தவர்களை வைத்து நடத்தப்பட்ட கூட்டத்தில், 300 குடும்பத்தினர், கன்டி பணிபுரியும் ரேஷன் கடையில் பொருட்களை வாங்க மறுப்பதாகவும், அருகில் உள்ள கிராமத்தில் ரேஷன் பொருட்களை வாங்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதனால் கன்டி நடத்தும் ரேஷன் கடையில் பொருட்களின் வழங்கல் குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் 36.84% இருந்த பொருட்களின் விநியோகம், ஏப்ரல் மாதத்தில் 30.14% ஆகவும், மே மாதத்தில் 9.18% ஆகவும், ஜூன் மாதத்தில் 8.18% ஆகவும் குறைந்துள்ளது.
இந்நிலையில் கன்டி இது தொடர்பாக பேசுகையில், “3 ஆண்டுகளுக்கு முன்பு, தாகூர் சமூகத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் ரேஷன் பொருட்களை வாங்க வந்திருந்தார். அவரின் ரேஷன் அட்டை பொருட்களை பெறுவதற்கான தகுதி பெறவில்லை. இதனால் அவருக்கு ரேஷன் பொருட்களை வழங்கவில்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவரும் மற்ற தாகூர் சமூகத்து தலைவர்களும், எனது கடையில் பொருட்களை வாங்க வேண்டாம் என்றும் எனது கடையை புறக்கணிக்க முடிவு செய்தனர். நான் 30 ஆண்டுகளாக இந்த கடையை நடத்தி வருகிறேன். ஆனால் சில ஆண்டுகளாகத்தான் இந்த பிரச்சினை உள்ளது” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் எங்கள் சமூகத்திற்கு எதிராக கொடுமைகள் நடந்துள்ளது என்றும் அதில் சில வழக்குகள் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
5 முதல் 6 வழக்குகள் தாகூர் சமூகத்திற்கு எதிராக காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அதில் ஒரு வழக்கு மட்டுமே விசாரணையில் இருப்பதாகவும், மற்ற வழக்குகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று முடித்து வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தொடர் புறக்கணிப்பால், கன்டி ஒரு முறை தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவர் சாப்பிட்ட விஷத்தால், அவர் உயிர் பிழைத்தாலும், காலை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கன்டியின் மகன் முகேஷ் காவல்நிலையத்தில் தாகூர் சமூகத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சம்ந்தப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் படான் நீதிமன்றத்தில் சில காலத்திற்கு பிறகு 4 பேருக்கும் பிணை வழங்கப்பட்டது.
மேலும் முகேஷ் கூறுகையில், “ நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்றே ஆகவேண்டும். இந்த கிராமத்தின் எல்லா ரேஷன் அட்டைகளும் மற்ற கிராமத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டால், நாங்கள் நடத்தும் ரேஷன் கடையை மூடத்தான் வேண்டும். எங்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வோம்” என்று அவர் கூறினார்.
தமிழ்நாடு
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பள்ளி ஒன்றில் ஜாதியப் பாகுபாடு காரணமாக காலை உணவு சாப்பிடுவதை பிள்ளைகளின் பெற்றோர்கள் விரும்பவில்லை. இது நாளிதழ்களில் செய்தியாக வெளிவருகிறது. உடனடியாக சென்னையில் இருந்து சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவனும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மாவட்ட கல்வித்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியாளர் அனைவரும் சென்று அப்பள்ளியில் மாணவர்களோடு அமர்ந்து உணவு உண்கின்றனர்.
உடனடியாக சூழல் மாறுகிறது, ஜாதிய ரீதியில் பேசிய பெற்றோரும் அவர்கள் பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். சமத்துவம் குறித்து பேசுகின்றனர். தாங்கள் செய்ததை தவறு என்று உணர்ந்ததாக கூறுகின்றனர்.
இதுதான் தமிழ்நாடு – தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் காட்டும் சமூகநீதி ஆகும்.