மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், சிந்தியா ஆதரவாளர்கள் வரிசையாக பாஜகவில் இருந்து காங்கிரசுக்கு திரும்புவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் இப்போது சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு நடந்து வருகிறது. கடந்த தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மையைப் பெறவில்லை என்ற போதிலும், அங்கிருந்த காங்கிரஸ் ஆட்சி கவிழவே பாஜக ஆட்சியைப் பிடித்தது.
இதற்கிடையே அங்கே இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கே பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நேரடியாகப் போட்டி இருப்பதால் மத்தியப் பிரதேச தேர்தல் முக்கியமானதாக மாறி இருக்கிறது.
சிந்தியா ஆதரவாளர்கள்: இதற்கிடையே ஜோதிராதித்ய சிந்தியா உடன் நெருக்கமாக இருந்த தலைவர்களில் ஒருவரான பிரமோத் டாண்டன் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் அய்க்கியமானார். மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல்நாத் முன்னிலையில், அவர் காங்கிரஸில் இணைந்தார். பிரமோத் டாண்டன் உடன் ராம்கிஷோர் சுக்லா மற்றும் தினேஷ் மல்ஹர் ஆகியோர் இந்தூரில் நடைபெற்ற நிகழ்வில் காங்கிரஸில் இணைந்தனர்.
கடந்த 2020இல் மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வந்தது. அப்போது திடீரென கமல்நாத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சிந்தியா, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அப்போது மேலும் சில எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் அப்போது இருந்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.
காங்கிரஸில் அய்க்கியம்: அப்போது சிந்தியாவுடன் பாஜகவுக்குச் சென்றவர்களில் இந்த பிரமோத் டாண்டனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. டாண்டன் மாநில பாஜகவின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், எந்தவொரு காரணமும் சொல்லாமல் சமீபத்தில் தான் அவர் தனது பதவியிலிருந்து விலகினார். டாண்டன் ஜோதிராதித்ய சிந்தியாவின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர். அவரே இப்போது திடீரென காங்கிரஸில் அய்க்கியமாகி இருக்கிறார்.
மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நெருங்க நெருங்க பல்வேறு பாஜகவில் இருந்து பலரும் காங்கிரசுக்கு திரும்பி வருகின்றனர். முன்னதாக கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி பாஜக செயற்குழு உறுப்பினரான சமந்தர் படேல், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸில் இணைந்திருந்தார். பொதுவாக பாஜக இந்தி பேசும் மாநிலங்களில் வலுவாக இருக்கும். அப்படியிருக்கும் மத்திய பிரதேசத்திலேயே வரிசையாக அக்கட்சியில் இருந்து தலைவர்கள் விலகுவது பரபரப்பை கிளப்பியுள்ளது.
உற்சாகம்: அதேபோல மற்றொரு மாநில பாஜக செயற்குழு உறுப்பினரான பைஜ்நாத் சிங் யாதவ் ஜூலை மாதம் காங்கிரஸில் மீண்டும் இணைந்தார். இப்படி சிந்தியாவுடன் சென்ற தலைவர்கள் பலரும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பி வருகின்றனர். இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய உற்சாகத்தைத் தருவதாக இருக்கிறது.
சிவராஜ் சிங் சவுகான் அரசு: மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை அங்கே இப்போது சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு தான் நடந்து வருகிறது. அப்படியிருக்கும் போதும் அதில் இருந்து விலகி காங்கிரசுக்கு தலைவர்கள் திரும்புகின்றனர். இது ஆளும் சவுகான் அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதையே காட்டுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அதற்கேற்ப தேர்தல் குறித்து வந்த சர்வேக்களிலும் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவாக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
இந்தாண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம் மட்டுமின்றி தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக காங்கிரஸ் இடையே நேரடியாகப் போட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.