* போதைப் பொருள்கள் அதிகம் கடத்தப்படுவது தமிழ்நாட்டில்தான் என்று
சென்னையில் பேசிய பிரதமர் மோடி அவர்களே, அவை எங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வருகின்றன?
* குஜராத்- ராஜஸ்தான் – ம.பி. – ஜார்க்கண்ட் – மணிப்பூர் – உ.பி. – அரியானா மாநிலங்களில்தான்
போதைப் பொருள் கடத்தல் அதிகம்!
பிரதமரின் குற்றச்சாட்டுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியரின் ஆதாரப்பூர்வமான பதிலடி அறிக்கை!
அறிக்கை: 2
தமிழ்நாட்டில்தான் போதைப் பொருள்கள் கடத்தல் அதிகம் என்று சென்னையில் பிரதமர் மோடி பேசியுள்ளார். தமிழ்நாட்டிற்கு இவை எங்கிருந்து வருகின்றன? மாநிலங்களவையில் உள்துறை அமைச்சகம் அளித்த போதைப் பொருள் அதிகமாகக் கடத்தும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இல்லையே! போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகின்றது. உண்மை இவ்வாறு இருக்க, பிரதமர் உண்மைக்கு மாறாகப் பேசலாமா? பிரதமர் மோடி அவர்களே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
சென்னையில் பிரதமர் மோடி பேசியது என்ன?
4-3-2024 அன்று சென்னையில் தரம் தாழ்ந்து பேசிய பிரதமர் மோடி,
‘‘தி.மு.க. அரசின் ஆதரவால் தான் தமிழகத்தில் போதைப் பொருள்கள் வியாபாரம் செழித்து வருகிறது.
என் மனதை அரிக்கும் கவலையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்த பெற்றோர் மனதிலும் ஆழ்ந்த கவலை உள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் ஆதரவில், தமிழகத்தில் போதைப் பொருள்கள் தடையின்றி, அனைத்து இடங்களிலும் புழங்கி வருகிறது என்பதுதான் என் மனதை உருக்கும் கவலை….
இது அபாயத்தின் அறிகுறி, தமிழகத்தின் எதிரிகள்மீதான நடவடிக்கை, மேலும் விரைவுபடுத்தப்படும்.
இது மோடி அளிக்கும் ‘‘கியாரண்டீ”
தமிழ்நாட்டிற்குப் போதைப் பொருள்கள் எங்கிருந்து வந்தன?
நன்றி! பிரதமர் மோடி அவர்களே, இந்தக் கொடுமையான போதைப் பொருள்கள் தமிழ்நாட்டிற்கு எங்கிருந்து வந்தன – வருகின்றன என்பதை அறிந்துகொள்ள, அனைத்து மாநிலங்களையும் ஆளும் பிரதமர், உள்துறை அமைச்சர் போன்ற ஒன்றியப் பொறுப்பிலிருக்கும் உங்களைப் போன்ற ‘‘மனதை உருக்கும் கவலை” – எங்களுக்கும், தமிழ்நாட்டவருக்கும் இருப்பதால் பதில் கூறுங்கள்.
விமான நிலையங்கள், கப்பல் துறைமுகங்களில் யாருடைய அதிகாரங்கள் உள்ளன என்றாலும், போதைப் பொருள்கள் தமிழ்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றனவா? தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றனவா?
வெளிநாட்டு, பன்னாட்டு மாஃபியாக்கள்மூலம்தானே கோடி கோடியாக உள்ளே நுழைகின்றன!
பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் தங்களது ‘‘டபுள் எஞ்ஜின்” நிர்வாகம் நடத்தும் குஜராத்திலிருந்துதான் இந்திய நாட்டின் மாநிலங் களுக்குள் நுழைந்து மக்களை சீரழிக்கின்றன என்ற தகவல்கள் பொய்யா, மெய்யா?
மாநிலங்களவையில் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் – ஒப்புக்கொண்ட உண்மைகள் என்ன?
1. 2023 டிசம்பர் 13 அன்று மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்த விவரங்களின் அடிப்படையில்,
குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மணிப்பூர், உத்தரப்பிர தேசம், அரியானா ஆகிய மாநிலங்கள் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதில் முதன்மை இடத்தில் உள்ளன. இந்த மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் குறைவானதே! என்றாலும், அதை ஒழிக்கத் தமிழ்நாடு தி.மு.க. அரசு இடையறாத முயற்சியை மேற்கொள்ளத் தவறியது உண்டா?
பெரிதும் போதைப் பொருள்கள் இந்தியாவிற்குள் ஊடுருவுவது குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் வழியாகத்தான் என்று ஊடகங்களில் வந்த செய்தித் தொகுப்புகள் – தரவுகள் அருகில் தரப்பட்டுள்ளன.
குஜராத் முந்த்ரா துறைமுகம் யாருடையது?
இந்தியாவின் ‘‘பிரபல ஏழையான” அதானியின் துறைமுகம்!
அந்த அதானி யார்?
நம்முடைய பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவர்; அவருடன் சேர்ந்து அவரது விமானத்திலேயே செல்லும் அரிய வாய்ப்புப் பெற்றவர்!
‘நடவடிக்கை’ எடுக்கவில்லையா? நாங்கள், எடுத்தது செய்திதானே என்று பதில் கூறலாம்!
அதே பதில் உங்களுக்கு மட்டும்தானா?
தமிழ்நாடு அரசு ஆக்க ரீதியாக செயல்படவில்லையா?
தமிழ்நாட்டு தி.மு.க. அரசும், முதலமைச்சரும், காவல்துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கவில்லையே!
இதுபற்றி தமிழ்நாடு (தி.மு.க.) அரசின் சட்ட அமைச்சர் ரகுபதி அவர்கள் தெளிவான விளக்கம் தந்துள்ளாரே!
‘‘1. போதைப் பொருள்களைத் தடுப்பதற்காக 10.8.2023 அன்று மாநில அளவிலான காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி, இத்தகைய போதைப் பொருள்கள் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது என்பதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்தார்.
2. கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அமைச்சரே குட்கா வியாபாரத்தில் உடந்தையாக இருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டது. அமைச்சராக இருந்தவர்மீதும், மற்ற அதிகாரிகள்மீதும் வழக்குத் தொடருவதற்கான கோப்பு நீண்ட நாள் தமிழ்நாடு ஆளுநரிடமிருந்தது – பிறகு, அவர் (சில காலம் முன்புதான்) வழக்குத் தொடர அனுமதி அளித்துள்ளார்!
அதுமட்டுமா?
கஞ்சா கடத்தியவர்களை சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்பது பா.ஜ.க.தானே!
தி.மு.க.வில் இருந்த ஒருவர் சம்பந்தப்பட்டதாக விசாரணை நடப்பதாலேயே அக்கட்சிமீது பழி சுமத்தி விடுவது நியாயமா?
அவரை உடனே கட்சியிலிருந்து விலக்கி, நடவடிக்கை எடுக்க தி.மு.க. தலைமை தயங்கவில்லையே!
தமிழ்நாட்டில் கஞ்சா கடத்தல், போதைப் பொருள் விற்பனைத் தொழில்களில் ஈடுபட்டவர்களை சிவப்புக் கம்பளம் விரித்து, பா.ஜ.க. தனது கட்சியில் சேர்த்துக்கொண்டது.
இப்படி தி.மு.க.மீது பழிபோட்டு, தேர்தல் வாக்குகளை வாங்க குறுக்குவழி தேடலாமா?
தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி உடைந்தது மட்டுமல்லாமல், புதிதாக எவரும் அக்கூட்டணிக்கு வரவும் தயாராக இல்லை; பிரதமர் மோடி நான்கு முறை தமிழ்நாட்டிற்கு வந்தும் இந்நிலையே என்கிற கோபத்தாலும், தேர்தல் தோல்வி என்ற பயத்தாலும் இப்படி ஜன்னி கண்டவர்போல் பிதற்றுவது, அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கு அழகா?
யோசிக்கவேண்டும்!
மருத்துவரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்!
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு – தனது குஜராத் நடப்புகளை மறந்துவிட்டு, இப்படி தமிழ்நாட்டைப் பார்க்கிற பிரதமர் மோடியிடம், ‘‘மருத்துவரே உங்கள் நோயைக் முதலில் குணப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றுதான் தமிழ்நாட்டவர் கூறுவர்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
7-3-2024