தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம்
சென்னை, மார்ச். 4- மக்களவை தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலையும் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
100 சதவீத வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் ‘ஓட்டு, ஓட்டுக்காக ஓட்டு’ என்ற தலைப்பில் மிதிவண்டி விழிப்புணர்வுப் பேரணி 2.3.2024 அன்று நடைபெற்றது. இந்தப் பேரணியைத் தொடங்கி வைத்த பின்னர், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழ்நாட்டில் 70 சதவீதம் வரை மட்டுமே வாக்குகள் பதிவாகி வருவதால், அவற்றை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் ஆகியோரிடையே வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மிதிவண்டி பேரணி நடத்தப்பட்டது.
திருக்கோவிலூர் தொகுதி: மேனாள் அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதியை காலியாக அறிவிப்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி, பாஜகவில் சேர்ந்ததால் அவர் தனது சட்டப்பேரவை உறுபிப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இதனால் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு மக்களவை தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்யும்.
சட்டப்படி நடவடிக்கை: மத வழிப்பாட்டுத் தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யும் கட்சியினர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்களவை தேர்தலை முன்னிட்டு, சென்னையில் 2 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என்றார் அவர்.
பேரணியில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.