இளம் வயதிலேயே சிலர் பார்ப்பதற்கு வயதான தோற்றமாக காட்சியளிக்கிறார்கள். இதற்கான காரணங்களைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.
சிலர் இளம் வயதிலேயே பார்ப்பதற்கு வயதான தோற்றமளிப்பார்கள். சிலர் வயதானாலும் இளமையாக இருப்பார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. குறிப்பாக உணவில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்ட்ஸ் இளமை சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு முக்கிய பங்களிக்கிறது. மேலும் ‘ஸ்கின் மைக்ரோப்ஸ்’ உடலெங்கும் பரவி இருக்கிறது அவையும் ஒரு காரணமாகும். ஸ்கின் மைக்ரோப்ஸ் என்பது நமது உடலில் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பல்வேறு வகை நுண்ணுயிரிகள் தோலில் மேல் உள்ளது. அவற்றை எப்போதும் சமநிலையில் வைத்துக் கொண்டால் நாம் இளமையாக இருப்போம்.
ஸ்கின் மைக்ரோப்ஸை தொந்தரவு செய்யும் அளவிற்கு நச்சுத்தன்மை மிக்க பொருட்களை தோலின் மீது பயன்படுத்தும் போது அவை உயிரற்ற தன்மையாகி தோலிற்கு பாதுகாப்பு அளிக்காமல் போய் விடுகிறது. இதனால் தோல் இளமைத்தன்மையற்று காட்சியளிக்கிறது. நாம் உடலுக்கு பயன்படுத்துகிற கிரீம்கள், சோப்புகள், ஆகியவற்றினை தோல் மருத்துவர் பரிந்துரையின் பேரில் தான் வாங்கி பயன்படுத்த வேண்டும். ஆனால், நாம் அப்படி பயன்படுத்துவதில்லை. இதனாலும் இளமைத் தோற்றம் இல்லாமல் ஆகிவிடுகிறது.
ஆயில் ஸ்கின், டிரை ஸ்கின் என ஒவ்வொருவருக்கும் ஸ்கின் வித்தியாசப்படும். உடலுக்குள் நடக்கும் வேதியியல் மாற்றங்கள் உடலுக்கு வெளியே தோலிலும் வெளிப்படும். அதை முறையாக ஸ்கின் ஸ்பெசலிஸ்ட்டுகளிடம் காண்பித்து நாம் சரி செய்துகொள்வதில்லை. உடனடியாக நச்சுத்தன்மையின் அளவோ, வீரியமோ தெரியாத கிரீம்களையோ, சோப்பையோ பயன்படுத்தி சரியாக்கி விட்டதாக நினைத்துக் கொள்கிறோம்.
பச்சைப்பயிறு மாவு கரைத்து உடலில் பூசுங்கள் என்றோ இயற்கைக்கு சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துங்கள் என்றோ இன்றைய அவசர காலகட்டத்தில் சொல்ல முடியாது, மாடர்ன் என்னவோ அதற்கு தகுந்தாற்போல் நாம் மாறிக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் அதிகப்படியான நச்சுத்தன்மை வாய்ந்த கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்த்தே ஆக வேண்டும். குறிப்பாக வெயிலில் போனால் சன் ஸ்கிரீன் லோசன் என்று தடவுகிறார்கள். வெயில் தோலுக்கு உணவாகும், அதிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி உடலுக்கு நன்மையை உண்டாக்கக் கூடியது.
அப்படியானால் எப்படித்தான் தோலினை பராமரிப்பது என்றால், ‘மைக்ரோப்ஸ் ப்ரண்ட்லி ஸ்கின் கேர்’ முறைக்கு நாம் மாற வேண்டும். அவை தயிர், பால் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், நிறைய தண்ணீர் குடித்தல், நார்ச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் போன்ற சிறு சிறு விசயங்களில் கவனம் செலுத்தும் போது தோல் இளமையாக காட்சியளிக்கும்.