சென்னை, மார்ச். 4- தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது இத்தேர்வினை 7,534 பள்ளிகளில் இருந்து சுமார் 8,20,000 மாணவர்கள் எழுதுகின்றனர்.
இதுதவிர 5000 தனித் தேர்வர்களும் 187 சிறைவாசிகளும் தேர்வு எழுதவுள்ளனர்.
சுமார் 3,300 தேர்வு மய்யங்களில் மார்ச் 25ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும்.
———————————————-
தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி – தமிழ்நாடு அரசு
சென்னை, மார்ச் 4- பெற்றோரை இழந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, நிதியுதவி அளிக்கும் திட்டத்துக்கு நிகழாண்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் நிலுவையில் உள்ள 671 விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்படும் செலவினத் தொகை ரூ. 4.98 கோடியை, அரசு நிதி நிறுவனமான தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் 56 லட்சம் பேருக்கு போலியோ சொட்டு மருந்து
சுகாதாரத்துறை தகவல்
சென்னை,மார்ச்4- போலியோ சொட்டு மருந்து முகாம் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நேற்று (3.3.2024) நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மய்யங்கள், சத்துணவு மய்யங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43 ஆயிரத்து 51 மய்யங்களில் முகாம்கள் நடத்தப் பட்டன.
இந்த மய்யங்களில் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சொட்டு மருந்து வழங்கும் மய்யங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டது. 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தை களுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சொட்டு மருந்து செலுத்தும் முகாம்களில் ஏராளமான தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுக் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 56.34 லட்சம் குழந்தை களுக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 57.84 லட்சம் என இலக்கு இருந்த நிலையில், 98.18% குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.