♦ மோடி மிரட்டினால் அடிபணிவதற்கு இது வெறும் அண்ணா தி.மு.க. அல்ல;
இது ‘‘அண்ணாவின் தி.மு.க.’’
♦ நீங்கள் நினைப்பதுபோன்று, இது வேறு நாடல்ல; எங்கள் அண்ணா உருவாக்கிய தமிழ்நாடு!
உங்களுடைய மிரட்டல்கள் எல்லாம் செல்லுபடியாகாது!
மணப்பாறையில் கலைஞர் சிலைத் திறப்பு விழாவில்
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மணப்பாறை, மார்ச் 4 மோடி மிரட்டினால் அடிபணி வதற்கு இது வெறும் அண்ணா தி.மு.க. அல்ல; இது ‘‘அண்ணாவின் தி.மு.க.” என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. நீங்கள் நினைப்பதுபோன்று, இது வேறு நாடல்ல; எங்கள் அண்ணா உருவாக்கிய தமிழ்நாடு – இங்கே உங்களு டைய பாச்சா, உங்களுடைய மிரட்டல்கள் எல்லாம் செல்லுபடியாகாது என்றார் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.
நூற்றாண்டு விழா நாயகர்
முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு!
கடந்த 1-3-2024 அன்று மாலை மணப்பாறையில் நூற்றாண்டு விழா நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் சிலைத் திறப்பு விழாவில் முன்னிலை வகித்த தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
சாதாரண துப்பாக்கியல்ல –
திராவிடத் துப்பாக்கி
முழு உருவச் சிலையைத் திறந்து வைக்க இங்கே வருகை தந்திருக்கின்றது ஏ.கே.47 துப்பாக்கி. துப்பாக்கி என்றால், அது சாதாரண துப்பாக்கி அல்ல. இது திராவிடத் துப்பாக்கி.
தந்தை பெரியாரோடு, அறிஞர் அண்ணா, முத் தமிழறிஞர் கலைஞர் ஆகியரோடு பழகிய அந்தப் பழக்கம், அங்கே இருந்து பகிரப்பட்டு இருக்கின்ற அந்தக் கருத்துகள் – அதன்மூலமாக உருவாக்கப்பட்ட ஏ.கே.47 என்று சொல்லலாம் ஆசிரியர் அவர்களை.
ஏ.கே. என்று சொன்னால், அண்ணா, கலைஞர் என்பதற்காக அப்படி நான் சொல்கின்றேன். அப்படிப்பட்டவர் இன்றைக்கு இந்த சிலை திறப்பு விழாவிற்காக இங்கே வருகை தந்திருக்கின்றார்.
ஒரு பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக எனக்கு இருக்கின்ற ஒரு பெருமை என்பது, இன்றைக்கு இவரை நாம், ‘‘ஆசிரியர், ஆசிரியர்” என்று அழைக்கின்றோம் என்று சொன்னாலும், இவர் மாணவராக இருந்து, திராவிட இயக்கத்தினுடைய அடிப்படைக் கருத்துகளை யெல்லாம் இவருக்குச் சொல்லித் தந்தது, கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக இருந்த அய்யா திராவிடமணி அவர்கள்.
நம்முடைய ஆசிரியரை வரவேற்பதில்
நான் மகிழ்ச்சியடைகின்றேன்
ஆக, அப்படிப்பட்ட ஓர் ஆசிரியரால் அன்றைக்குப் பண்படுத்தப்பட்ட மாணவர் இன்றைக்கு ஓர் ஆசிரியராக நம்முடைய கலைஞருடைய சிலையைத் திறப்பதற்காக இங்கே வருகை தந்திருக்கின்றார்.
அவரை, திருச்சி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற் றக் கழகத்தின் சார்பாகவும், நம் அனைவரின் சார்பாகவும் வருக! வருக!! வருக!!! என்று வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கக் கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளான உங்கள் அனை வரையும் திருச்சி தெற்கு மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் வரவேற்கக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.
இந்த நாள் என்பது வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக் கூடிய ஒரு நாள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இயக்கத் தலைவர், நம்மை நாளும் இயக்குகின்ற தலைவர்
நம்முடைய மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இயக்கத் தலைவர், நம்மை நாளும் இயக்குகின்ற தலைவர் அவர்களுடைய பிறந்த நாள் இன்று.
இன்று பிறந்த நாள் காணும் தலைவர் அவர்களை சந்தித்து, வாழ்த்துகளைப் பெற்றுவிட்டு, இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டும் என்பதற்காக நானும், நம் முடைய ஆசிரியர் அய்யா அவர்களும் இங்கே வருகை தந்திருக்கின்றோம்.
தந்தை பெரியாரின் சூளுரை
1926 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், ‘‘பொதுமக்களுடைய சுயமரியாதைக்கும், உரிமைக்கும், சமூக விடுதலைக்கும் ஆபத்து விளை விக்கின்ற அது எந்த இயக்கமாக இருந்தாலும் சரி, ஜனநாயக ரீதியாக அதனை அடியோடு அழித்து விட்டுத்தான் நான் திரும்புவேன்; அதிலிருந்து நான் பின்வாங்கமாட்டேன்” என்றார்.
அதே ஜனநாயக ரீதியில்தான், தந்தை பெரியார் அவர்கள் நமக்குச் சொல்லித்தந்த அந்த நாகரிகம், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், அந்த வழியில் நடைபோடுகின்ற இன்றைய நம்முடைய மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களுடைய வழியில், ஜனநாயக ரீதியில் நம்மை யார், அழிப்போம், ஒழிப்போம் என்று சொல்கிறார்களோ, முதலில் அவர் களை ஒழிக்கக் கூடியதுதான் – எங்கள் இயக்கத் தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணி அதனை செய்துகாட்டும் என்பதை இந்த நேரத்தில் சொல்ல நான் கடமைப்பட்டு இருக்கின்றேன்.
ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல;
அது ஓர் இயக்கம்!
இன்றைக்கு நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல; அது ஓர் இயக்கம்.
நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தனக்கு மகன் பிறந்தால், ‘‘அய்யாதுரை” என்றுதான் பெயர் வைக்க ஆசைப்பட்டார்.
அய்யா என்றால், தந்தை பெரியார்; துரை என்றால், நம்முடைய அறிஞர் அண்ணா.
இதை மனதில் வைத்துத்தான் தனக்கு மகன் பிறந்தால், ‘‘அய்யாதுரை” என்று பெயர் வைக்கவேண்டும் என்று எண்ணியிருந்தார். அன்றைக்கு ரஷ்ய புரட்சி யாளர் ஸ்டாலின் அவர்கள் மறைந்த பிறகு, அதற்கான இரங்கல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த இரங்கல் கூட்டத்தில் கலைஞர் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கின்றபொழுது, ஒரு துண்டுச் சீட்டு வருகிறது. அதில், ‘‘உங்களுக்கு மகன் பிறந்திருக்கின்றான்” என்கிற செய்தி அதில் இருக்கிறது.
என்னுடைய மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைக்கின்றேன்: முத்தமிழறிஞர் கலைஞர்!
அதே மேடையில் நின்று முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னார், ‘‘இன்றைக்கு எனக்கு மகன் பிறந்திருப்பதாகச் செய்தி வந்திருக்கின்றது. இதே மேடையில் நின்று சொல்கின்றேன், என்னுடைய மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைக்கின்றேன் என்று.
காரணம், புரட்சியாளர் மார்க்ஸ் அவர்களால் பரப்பப் பட்ட கருத்துகள்; புரட்சியாளர் ஏங்கெல்சு அவர்களால் நிறைவேற்றப்பட்ட கருத்துகள்; புரட்சியாளர் லெனின் அவர்களால் நிலைநாட்டப்பட்ட கருத்துகள் என்று இப்படிப்பட்ட பண்பட்ட கருத்துகளையெல்லாம் ரஷ்யா வில் புரட்சியாளராக இருந்த ஸ்டாலின் அவர்கள் நிலை நாட்டினார் என்பதுதான் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு, ஸ்டாலின்மீது இருந்த மதிப்பீடு.
பெரியார் – அண்ணா – கலைஞர் ஆகியோரால் பண்படுத்தப்பட்டவர் நம்முடைய முதலமைச்சர்!
அதே வழியில்தான், சமூகப் புரட்சியாளரான தந்தை பெரியார் அவர்களால் தரப்பட்ட கருத்துகள், அறிஞர் அண்ணா அவர்களால் நிறை வேற்றப்பட்ட கருத்துகள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பண்படுத்தப்பட்ட கருத்துகள் – இவை அனைத்தையும் இன்றைக்குத் தமிழ்நாட்டில் நிலைநாட்டுகின்ற தலைவராக இருப்பவர் தான் நம்முடைய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.
இந்தக் கருத்துகள் தமிழ்நாட்டில் இருந்தால் மட்டும் போதாது; ஒட்டுமொத்த இந்தியா முழு மைக்கும் வரவேண்டும் என்று சொன்னால், ‘திராவிட மாடல்’ அரசை ஒன்றியத்திலும் கொண்டு வரவேண்டும் என்பதற்காக உறுதியேற்கக் கூடிய நாளாக நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருடைய பிறந்த நாளில் உறுதியேற்கக் கூடிய கூட்டமாகவும் நாம் இதனைப் பார்க்க வேண்டும்.
அந்த வகையில்தான், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிரதமர் மோடி, அவ்வப்பொழுது தமிழ்நாட்டிற்கு வந்து போகிறார்.
புயல் தாக்கியபொழுது வராத பிரதமர் மோடி,
வெள்ளம் தாக்கியபொழுது வராத பிரதமர் மோடி,
மீனவர்கள் கொல்லப்பட்டபொழுது வராத பிரதமர் மோடி,
அவர் கொண்டு வந்த நீட் தேர்வினால், 22-க்கும் மேற்பட்ட நம் வீட்டுப் பிள்ளைகள் இறந்தபொழுது வராத பிரதமர் மோடி,
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது வராத பிரதமர் மோடி,
பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு இப்பொழுது அடிக்கடி வருவதற்கு காரணம் என்ன?
இப்படி எதற்குமே வராத மோடி – ஏன் இங்கே இருக்கக்கூடிய ஓர் ஆளுநர் நம்முடைய அரசிற்குக் கொடுக்கின்ற குடைச்சலைப் பார்க்கக் கூட வராத பிரதமர் மோடி – இன்றைக்குத் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகிறார் என்றால், ஏன்?
தேர்தல் வருகிறது என்பதற்காகத்தான்!
முதலமைச்சர் எழுதிய கடிதம்!
ஆகவே, இன்றைக்குத் தமிழ்நாட்டை சார்ந்திருக் கின்ற நம்முடைய மக்கள் சார்பில், மோடி அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், ‘‘தி.மு.க.வை ஒழிப்பேன், அழிப்பேன்” என்று எதேச்சதி காரத்தோடு பேசுகிறீர்களே, இன்றைக்கு எங்களுடைய மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் மிக அழகாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர், ‘‘நீங்கள் சொல்வதுபோன்று அழிப்போம், ஒழிப்போம் என்று நாங்கள் சொல்லமாட்டோம். ஒன்றியத்தில் ஆளுங்கட்சியாக கடந்த 10 ஆண்டுகளாக இருந்த பா.ஜ.க. தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. எதிர்க் கட்சியாக இருக்கும்பொழுதாவது ஏதாவது நல்லது செய்யுங்கள்” என்று எழுதியிருந்தார்.
ஏனென்றால், இது ஜனநாயக நாடு – ஒருவரை அழிப்போம், ஒழிப்போம் என்றெல்லாம் பேசக்கூடாது. ஆனால், இன்றைக்கு மோடி அப்படி பேசுகிறார் என்றால், அவர் முகத்தில் அந்தப் பயம் தெரிகிறது என்றுதான் அர்த்தம்.
அதனை நம்முடைய முதலமைச்சர் அவர்கள், மிக அழகாகவும், மிகத் தெளிவாகவும் ஒரு கடிதமாக எழுதியிருக்கின்றார்.
நம்மைப் பொறுத்தவரையில், இன்றைக்கு இங்கே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய சிலையைத் திறந்து வைத்திருக்கின்றோம்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும்
கலைஞர் உருவச் சிலை!
ஏற்கெனவே நம்முடைய தலைமைக் கழகம் நமக்கு அறிவித்துள்ளதுபோன்று – ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கின்ற ஒவ்வொரு தொகுதிகளிலும் நம்முடைய கலைஞர் அவர்களின் உருவச் சிலையைத் திறக்க வேண்டும் என்று சொல்லியிருந்தது. நம்முடைய திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக, கிழக்குச் சட்டமன்றத் தொகுதியில் கலைஞர் உருவச் சிலையைத் திறந்தோம். இன்றைக்கு இந்த மணப்பாறை தொகுதியில் கலைஞர் உருவச் சிலையை திறந்து வைக்கின்றோம்.
மகத்தான ஆளுமைகொண்ட
ஒருவரை வைத்து திறக்கவேண்டும்!
ஜூன் மாதம் திருவரங்கம் தொகுதியில் கலைஞர் சிலையைத் திறக்கவிருக்கின்றோம். ஒவ்வொரு சிலை யையும், மகத்தான ஆளுமைகொண்ட ஒருவரை வைத்து திறக்கவேண்டும் என்கிற ஆசையில்தான், இன்றைக்கு நமது பெருமதிப்பிற்குரிய மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களை இங்கே வரவழைத்திருக் கின்றோம்.
அந்த வகையில், இந்தப் பகுதியைச் சார்ந்த நாம் அனைவரும், மீண்டும் ஒருமுறை நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நாம் அனைவரும் கரவொலி எழுப்பி, வருக! வருக!! வருக!!! என வரவேற்கிறோம்.
எங்கள் அண்ணா உருவாக்கிய தமிழ்நாடு!
மோடி நினைப்பதுபோன்று, மோடி மிரட்டினால் அடிபணிவதற்கு இது வெறும் அண்ணா தி.மு.க. அல்ல; இது அண்ணாவின் தி.மு.க. என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
நீங்கள் நினைப்பதுபோன்று, இது வேறு நாடல்ல; எங்கள் அண்ணா உருவாக்கிய தமிழ்நாடு என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி!
உங்களுடைய பாச்சா, உங்களுடைய மிரட்டல்கள் எல்லாம் இங்கே செல்லுபடியாகாது என்பதை இங்கே இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொண்டு, மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும், குறிப்பாக இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்த நம்முடைய கழகத் தோழர்களுக்கும், குறிப்பாக இந்த இடத்தினைப் பெற்றுத் தருவதற்குக் காரணமாக இருந்த ஒன்றிய செயலாளர் நம்முடைய இராமசாமி அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து, என்னுரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உரையாற்றினார்.