திராவிடர் கொடி
திராவிட நாடும், திராவிட சமுதாயமும் இந்திய நாடு, இந்தியச் சமுதாயம் என்பது போன்ற ஒரு கற்பனை நாடும், கற்பனைச் சமுதாயமும் அல்ல; கற்பனைச் சொற்களும் அல்ல. வேத – புராண – இதிகாசங்களுக்கு முன்பிருந்தே திராவிட நாடும், திராவிட சமுதாயமும், திராவிடத் தனி ஆட்சியும் இருந்து வந்திருக்கிறது. வேதத்தில் மீன் கொடியைப் பற்றியும், இராமாயண இதிகாசங்களிலும் மீன் கொடியைப் பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன.
ஆகவே, சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே வெகுகாலமாக இருந்து வந்ததான நம் நாடும், சமுதாயமும், ஆட்சியும் மறைவுபட்டு, அன்னியர் ஆதிக்கத்திற்கும், சுரண்டுதலுக்கும், ஏவல் கொள்வதற்கும் ஆளாகி ஈன நிலையில் இருக்கும் நம் நாடும், சமுதாயமும் அடியோடு மறைந்து அழிந்து போன நம் அரசும் மறுபடியும் புத்துயிர் பெற்று எழ வேண்டுமானால், அவற்றிற்கேற்ற இலட்சியத்தையும், உணர்ச்சியையும், ஊக்கத்தையும் குறிக்கும்படியான சின்னமாக நம் திராவிடக் கொடியை திராவிட மக்கள் யாவரும் கருத வேண்டும்.
(கோபியில் 27.5.1944 அன்று தோழர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கோபி தாலுகா திராவிடர் இளைஞர் மாநாட்டுக் கொடியேற்று விழாவில், அன்னை மணியம்மையார் கொடியேற்றி வைத்து ஆற்றிய சொற்பொழிவு)
– குடிஅரசு (3.6.1944)
அய்யாவைப் போல் உழைக்க உறுதிகொண்டு விட்டேன்
அய்யாவைப் போலவே என் வாழ்நாள் முழுவதும் என் சக்திக்கு இயன்ற அளவு உழைக்கவும், மக்களுக்கு அவர் செய்துவந்த உயிர் நாடிக் கொள்கையை இயன்ற அளவு பரப்பவும், மனிதத் தன்மையோடு, பண்போடு, உண்மையும், ஒழுக்கமும் உயர்வெனக்காட்டிய வழியிலேயே நாமும் இனி வாழ்நாளெல்லாம் வாழவேண்டும் என்று ஓர் உறுதியான எண்ணத்துடன் இன்று முதல் செயல்படத் தொடங்கி விட்டேன். இனி எனக்கு என்று எந்தவித மான சுயநலப்பற்றும், பாசமும் – பந்தமும் இல்லாது மனநிறைவோடு, மனிதப் பற்றோடு வாழ்வை நடத்த வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு என்னை ஆளாக்கிக் கொண்டேன்.
அன்புள்ள தமிழ் மக்களே, தாய்மார்களே! உண்மையாகவே நாம் அய்யாவிடம் அன்பு செலுத்துபவர்களாய் இருந்தால் அவர் கொள்கையை – அவர் நினைவை கருத்தைத் தொடர்ந்து செய்துகொண்டே நம்மை நாமே பக்குவப்படுத்த நல்ல உறுதியான மனங்களைப் பெற்றுத் தொடருவோம் நம் பணியை. அய்யாவின் பணியைக் குறையில்லாமல் செய்து நிறைவு பெறுவோம்; அவர் சிந்தனைக்கு வழிவகுப்போம்.
(அய்யாவின் மறைவுக்குப் பின் அன்னை மணியம்மையார் அவர்கள் தோழர்களுக்கு விடுத்த அறிக்கை)
– விடுதலை (4.1.1974)
பணி தொடர்வோம்
குழந்தையே இல்லாத தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டு சூத்திர பஞ்சமர்கள் அனைவரையும் தம்முடைய சொந்தக் குழந்தைகளாகக் கருதி, தமக் கென்று ஒன்றும் இல்லாமல், தம் தளராத முயற்சியால் ஈட்டிய தனம் – தன் சிக்கன வாழ்க்கையால் சேமித்த பொருள் எல்லாவற்றிற்கும் சூத்திர பஞ்சமக் குழந்தை களையே வாரிசாக்கி வைத்துவிட்டுப் போயிருக் கிறார்கள். தமக்கென வாழா அந்தப் பெருந்தகை யாளரின் பேரன்புக்குப் பாத்தியப்பட்ட பெரியார் தொண்டர்களாகிய நாம், அவர்கள் விட்டுச் சென்றிருக்கிற பணியை, அவர் போட்டுத் தந்திருக்கிற பாதையில் எவ்விதச் சபலங்களுக்கும் ஆளாகாமல், ஒற்றுமையாக, கட்டுப்பாடாக இருந்து செயல்படு வோம் என்ற உறுதியினை எடுத்துக்கொண்டு பணி யினைத் தொடருவோம்.
(அன்னை மணியம்மையார் அவர்கள் எழுதிய அறிக்கை)
– விடுதலை (10.1.1974)
அய்யா அறிவித்த போராட்டம்
அய்யா அவர்கள் வெறும் சொத்துகளை மட்டும் விட்டுச் செல்லவில்லை; காலத்தால் அழிக்க முடியாத கருத்துச் செல்வங்களை – கொள்கைக் கருவூலங்களைச் சேமித்து வைத்துவிட்டுச் சென்று இருக்கிறார்கள்.
அந்தக் கருத்துகள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல – இந்தியாவிற்கு மட்டுமல்ல – மனித சமுதாயத்திற்கே தேவையான கருத்துகள். அந்த கருத்துகளை உலகமெல்லாம் பரப்ப வழிவகை செய்ய வேண்டும்.
பிரச்சாரம் மட்டும் முக்கியமல்ல. இனி நாம் மேற்கொள்ள வேண்டியதெல்லாம் அவற்றைச் செம்மையாகச் செயல்படுத்துவதேயாகும்.
கழகத் தோழர்களிடையே புதிய வேகம் கிளம்பி இருக்கிறது. பொதுமக்களிடத்தே நிரம்ப ஆதரவு பெருகி இருக்கிறது. அய்யா இன்று இல்லையே; நாட்டிற்கு நாதி இல்லையே என்று அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அய்யா அவர்கள் அறிவித்துச் சென்ற போராட்டத்தை நாம் தொடங்கி வெற்றிகரமாக முடிக்க வேண்டும்.
(காஞ்சி, தர்மபுரி, சேலம், தஞ்சை, காரைக்குடி ஆகிய ஊர்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் அன்னை மணியம்மையார் அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்).
– விடுதலை (27.01.1974)
பொறுப்பை உணர்ந்தே இருக்கிறேன்
தந்தைக்குப் பிறகு அன்னை இருக்கிறார்கள் என்று நம் தோழர்கள் கூறினார்கள். அன்னை இருப்பது உண்மைதான்; அந்த அன்னை யாரை நம்பி இருக்கிறார்கள் என்றால், அய்யா அவர்கள் தயாரித்து உருவாக்கி விட்டிருக்கிற எண்ணற்ற எஃகு உள்ளம் கொண்ட தன்னலமற்ற தனயர்களை நம்பித்தான் இருக்கிறார். அந்தத் தனயர்களின் ஒத்துழைப்பு அய்யா காலத்தில் இருந்ததுபோல் நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கைதான் இந்தப் பொறுப்பை ஏற்கும் தைரியத்தை எனக்குக் கொடுத்திருக்கிறது. அய்யா அவர்களது இடத்தை யாரும் பூர்த்தி செய்ய முடியாது. ஆனால், அவர் இலட்சியத்தைப் பூர்த்தி செய்ய நம்மால் முடியும்.
இந்தப் பொறுப்பை ஏற்பதில் இருக்கிற ஆழமான கருத்தை உணர்ந்தே இருக்கிறேன்.
இதை நான் பெருமையாகக் கருதிவிடுவே னேயானால், அந்தப் பெருமையே காரியங்கள் நடை பெறுவதில் குந்தகத்தை ஏற்படுத்தி விடும் என்று நல்லவண்ணம் உணர்ந்தே இருக்கிறேன்.
(காஞ்சி, தருமபுரி, சேலம், தஞ்சை, காரைக்குடி ஆகிய ஊர்களில் நடந்த திராவிடர் கழக மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டங்களில் அன்னை மணியம்மையார் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து)
– விடுதலை (29.1.1974)
பயிற்சிதான்
எல்லாத் துறைகளிலுமே அய்யா அவர்கள் நமக்கு நல்ல பயிற்சியை அளித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
அய்யா அவர்களின் மறைவுக்குப் பிறகு நம் மிடையே குழப்பம் தலைதூக்காமல் கட்டுப்பாடும், ஒற்றுமையும் நிலவுகிறது என்றால், அதற்குக் காரணம் என்ன? அது அய்யா அவர்கள் நமக்குத் தந்துவிட்டுப் போயிருக்கிற பயிற்சிதான்.
(இராசபாளையம், மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய ஊர்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்த உறுதிநாள் கூட்டங்களில் அன்னை மணியம்மையார் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து)
– விடுதலை (2.2.1974)
சுதந்திரத்தின் பேரால்…
நம் ஆட்சி நமது நாட்டுக் குடிமக்களால் ஆளப்படு மானால், நம் நாட்டு மக்களுடைய ஆட்சியாக இருக் குமானால் – நம் நாட்டு மக்களுக்காக ஆளப்படும் ஆட்சியாக நடைபெற்று வருமானால், இந்த மாதிரி யான ஒரு போராட்டத்திற்கு அவசியமே ஏற்பட்டி ருக்காது.
ஆனால், அதற்கு மாறாக நமது நாடு, நமக்குச் சிறிதும் சம்பந்தமேயில்லாத, நம்முடைய வாழ்வைப் பற்றிக் கவலைப்படாத, நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வருகிற ஜாதியின் கையில் சிக்கிக்கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருப்பதால், நம்முடைய இழிதன்மை இந்த இருபதாம் நூற் றாண்டிலும்கூட ஒழிக்கப்பட முடியாத நிலையிலே இருந்து வருகிறது. நம் அருமை தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி எடுத்துக்காட்டி வந்தது போல சண்டையிலே ஜெயித்த மக்கள் தோற்றுப் போன மக்களை எவ்வளவு கேவலமாக நடத்துவார்களோ, அந்தப்படிதான் இன்றைக்கு சுதந்திரத்தின் பேரால், ஜனநாயகத்தின் பேரால், ஆட்சி, சட்டம் என்கிற அமைப்பின் பேரால் இன்றைய ஆட்சியாளர்களான பார்ப்பனர்களும், வடநாட்டுக்காரர்களும் நம்மை நடத்தி வருகிறார்கள்.
(அன்னை மணியம்மையார் அவர்கள் எழுதிய தலையங்கம்)
– விடுதலை 9.3.1974
கட்டுப்பாடு
நம்முடைய எண்ணமெல்லாம் நம்முடைய கொள்கைகள் நாட்டிலே வேகமாகப் பரவ வேண்டும் என்பதுதான். அதற்கான கொள்கை விளக்கங்களை எல்லாம் அய்யா அவர்களே புத்தகங்களாகத் தந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். நேரத்தைச் சிறிதும் வீணாக்காமல் அவற்றையெல்லாம் நன்கு படித்துப் பயன் பெறவேண்டும். மேடையில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் பேசினோம் என்று எண்ணாமல், இன்று என்ன புதிய செய்தி சொன்னோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்; அதற்கான புத்தகங்களை நிறையப் படிக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் கருஞ்சட்டை அணியாமல் எந்த நிகழ்ச்சிக்கும் போகக் கூடாது. அய்யா அவர்கள் கடைசி வரை வெயிலின் காரணமாக எவ்வளவு புழுக்கமாக இருந்தாலும் யாராவது பார்க்க வருகிறார்கள் என்றால் உடனே கறுப்புச் சட்டையை அணிந்து கொள்வார்கள். ஒவ்வொரு கட்சிக்கும் பல சின்னங்கள் இருப்பதைப் போல், காங்கிரசுக்கு கதர் என்று இருப்பதைப் போல் மதவாதிகளுக்கும் பல சின்னங்கள் உள்ளன.
நாம் அணியும் கருஞ்சட்டை நம்மைப் பார்த்த வுடன் இவர்கள் சமுதாயத் தொண்டு செய்பவர்கள், மூடநம்பிக்கையை ஒழிப்பவர்கள், சாதியை ஒழிப்ப வர்கள் என்பதோடு, இவர்கள் எல்லாம் பெரியாரின் தொண்டர்கள் என்கிற வகையில் பாராட்டுவார்கள்.
(சென்னை பிரச்சாரப் பயிற்சிப் பள்ளியை முடித்து வைத்த கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்கள் மாணவர்களிடையே ஆற்றிய உரை)
– விடுதலை (28.5.1974)
இராவண லீலா
இராமனைக் கொளுத்துவது என்பது வெறும் விளம்பரத்திற்காகவோ, நம் பெருமையைத் தம் பட்டம் அடித்துக் கொள்வதற்காகவோ அல்ல மற்றும் வடநாட்டு வறட்டுப் பிடிவாதத்திற்கு எதிர் நடவ டிக்கை என்று மட்டுமே எவரும் கருதிவிடக் கூடாது. சாதியை ஒழிக்க வேண்டும் என்று உண்மையாக நம்புகிறவர்கள் எவரானாலும் செய்து தீர வேண்டிய ஒரு முக்கிய மானம் காப்பாற்றும் முயற்சியும் ஆகும். பார்ப்பனர்கள் எப்போதும் மரத்திற்குப் பின் மறைந்து நின்று செயல்படும் இராமனைப் போல், எதற்கும் பின்னால்தான் இருப்பார்கள். நமது சுக்ரீவர்களும், அனுமார்களும், விபீஷணர்களும்தான் குதியாட்ட மும், கும்மாளமும் போடுவார்கள். இது அன்றைய இராமாயணக் காலம் தொட்டு இன்றைய இராணவ லீலா காலம் வரை பளிங்குபோல் தெரியும் சரித்திர உண்மையாகும். இதுகுறித்து நாம் அதிசயப்படவோ, அதிர்ச்சி யடையவோ தேவையில்லை எனலாம்.
(இராவண லீலா குறித்து அன்னை மணியம்மையார் அவர்கள் எழுதிய அறிக்கை)
– விடுதலை (22.12.1974)
இன எதிரிகளுக்கு எச்சரிக்கை
நாம் நடத்திக் காட்டிய இராவண லீலா நிகழ்ச்சி இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டுமல்ல; உலகம் முழுவதுமே ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. நாம் இராமனையும், சீதையையும், இலட்சுமணனையும் எரித்தது ஏதோ ஒரு பரபரப்புக்காக அல்ல; போட்டிக் காகவும் அல்ல! நம்மை வெறுப்பவர்களை நாம் வெறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படை யில்தான். வருடாவருடம் இராம லீலா அங்கு நடக்குமானால், வருடாவருடம் இராவண லீலாவும் வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி தமிழகத்தில் நடந்தே தீரும். தந்தை பெரியார் அவர்கள் நமக்கு ஊட்டிச் சென்றிருக்கிற தன்மான உணர்வு எத்தகையது என்பதை அளவிட அது ஒரு வாய்ப்பாகவே நிச்சயம் அமையும் என்பதை இன எதிரிகளுக்கு எச்சரிக்கை யாகக் கூற விரும்புகிறேன்.
நம் இன எதிரிகள் நினைக்கக் கூடும், இந்தியாவின் ஆட்சிதான் நம் இனத்தவர் இந்திராவின் கையிலே இருக்கிறதே, மத்திய அமைச்சர்கள் எல்லோருமே நம் இனத்தவர்களாகத்தானே இருக்கிறார்கள், அரசமைப்புச் சட்டமும் நமக்குச் சாதகமாகத் தானே இருக்கிறது. இவர்கள் என்ன செய்துவிட முடியும் என்று நம்மை ஏளனமாகக் கருதக் கூடும். நம் உரிமைக் குரலை மதிக்க மறுக்கவும் கூடும். ஆனால், அதன் விளைவு எங்கு கொண்டு போய் முடியும் என்பதை எண்ணிப் பார்க்கும்படி வேண்டுகிறேன்.
(தென் மாவட்டங்களில் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்கள் மேற்கொண்ட சிறப்பான சுற்றுப்பயணத்தின்போது பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு ஆற்றிய உரைகளின் தொகுப்பு)
– விடுதலை (7.4.1975)
ஆடம்பரம் அற்ற வாழ்வு
நான் முன்பு குறிப்பிட்டதுபோல் 50 சதவிகிதம் நமக்குப் பதவிகளிலே, உத்தியோகங்களிலே அரசாங்கம் ரிசர்வேஷன் செய்ய வேண்டும். மற்றும் பெண்கள் இன்றைக்கு ஆடம்பரத்தில் ரொம்பவும் மோகமாக இருக்கின்றார்கள். அதனைத் தவிர்க்க வேண்டும். உடுக்கும் துணி, அணியும் நகை முதலிய வற்றில் பெண்கள் பைத்தியமாக இருக்கின்றார்கள். இங்கு அவை கொஞ்சம் குறைவு. நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை பல உள்ளன. உங்களது உணவு, உடை முதலியவற்றை மற்ற நாட்டு மக்கள் மிகவும் பின்பற்ற வேண்டும். உங்கள் உணவு மிகவும் எளிய உணவு; உங்களுடைய உடை மிகவும் ஆடம்பரம் இல்லாத சாதாரண உடை. அதே நேரத்தில் மிகவும் சுத்தமான உடை. ஆடம்பரம் அற்ற வாழ்வு. இத்தகைய பழக்கங்களை மற்றப் பகுதி மக்களும் பின்பற்றினால்கூட நாம் ஓரளவுக்கு முன்னேறி விடலாம்.
(கேரள மாநிலம் வைக்கத்தில் நடந்த வைக்கம் சத்தியாக்கிரகப் பொன் விழாவில், 26.4.1975 அன்று பெண்கள் மாநாட்டைத் திறந்து வைத்து அன்னை மணியம்மையார் அவர்கள் ஆற்றிய உரை)
– விடுதலை (23.5.1975)